SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Jakub Porzycki/NurPhoto via Getty Images
மரியே ஜெபம் என்பது மிகவும் எளிமையான அமைப்பைக் கொண்ட ஒரு ஜெபமாகும். இதை ஏறக்குறைய ஒவ்வொரு கத்தோலிக்கரும் மனப்பாடமாக அறிந்திருக்கிறார்கள். இன்று பயன்படுத்தப்படும் வடிவம் சுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் இந்த ஜெபம் இடைக்காலத்தைச் சேர்ந்தது எனக் கூறப்படுகிறது.
இது பிரபலம் அடைந்ததற்கு முக்கியக் காரணம், அக்காலத்தில் பெரும்பாலான மக்கள் கல்வியறிவு பெறாதவர்களாகவும், சமய நூல்களில் பயன்படுத்தப்பட்ட லத்தீன் மொழியைப் புரிந்துகொள்ள முடியாதவர்களாகவும் இருந்ததுதான். இதன் காரணமாக, மக்கள் பைபிள் வாசிப்புகளைப் பின்பற்றுவது கடினமாக இருந்தது. எனவே, மரியே ஜெபம் போன்ற எளிய ஜெபங்கள் மிகவும் முக்கியமானவையாக மாறின.
பைபிளில் இருந்து எடுக்கப்பட்ட பகுதிகளையும், சாதாரண மக்களின் நம்பிக்கை மற்றும் பக்தியில் இருந்து வந்த மற்றொரு பகுதியையும் இணைத்து இந்த ஜெபம் உருவாக்கப்பட்டது. காலப்போக்கில், சமயத் தலைவர்கள் இதன் பயன்பாட்டை ஊக்குவித்தனர். இது குறிப்பாக ஐரோப்பாவில் பரவலாகப் பரவியது. இறுதியாக, 1568இல் போப் ஐந்தாம் பயஸ் (1504-1572) கையெழுத்திட்ட ஓர் ஆவணத்தின் மூலம் கத்தோலிக்க திருச்சபையால் இது அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
“மரியே வாழ்க ஜெபம் திடீரெனத் தோன்றவில்லை. அது திருச்சபைக்குள் படிப்படியாக உருவாக்கப்பட்டது” என்று பாதிரியாரும் ‘செயின்ட் சார்லஸ் அகுடிஸ்: எ பாத் டு சால்வேஷன்’ என்ற நூலின் ஆசிரியருமான ரோட்ரிகோ நடால் பிபிசி பிரேசிலிடம் விளக்கினார்.
பிரேசிலிய புனிதர் ஆய்வு அகாடெமியின் நிறுவனரும், சியாராவில் உள்ள வாலே டோ அகராவ் மாகாணப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஜோஸ் லூயிஸ் லிராவின் கூற்றுப்படி, ‘மரியே வாழ்க’ ஜெபம் என்பது “கிறிஸ்தவ பக்தியின் மிகவும் பரவலான சூத்திரங்களில் ஒன்றாகும்.” அதன் வளர்ச்சி ஒரேயொரு படியில் நிகழவில்லை, மாறாக திருச்சபையின் நடைமுறைகள் மற்றும் மக்களின் பக்தியின் மூலம் மெதுவாக நிகழ்ந்தது என்று அவர் கூறுகிறார்.
“மரியே வாழ்க’ ஜெபமானது, புனித வேதாகமத்தில் தோன்றி, திருவழிப்பாட்டில் வளர்ந்து, இறையியலில் முதிர்ச்சியடைந்து, மக்கள் பக்தியில் வலுப்பெற்ற ஒரு கிறிஸ்தவ மரபுக்கான உதாரணம் என்று நாம் கூறலாம்,” என்று அவர் விளக்குகிறார்.
இந்த ஜெபத்தில் இரண்டு தெளிவான பகுதிகள் உள்ளன. மரியாளியல் நிபுணரும், அப்பரேசிடாவின் மரியன்னை அகாடெமியின் உறுப்பினருமான வினிசியஸ் பைவா, “முதலாவது வேதாகமத்தைச் சார்ந்தது, அதற்கு ஒரு வரையறுக்கப்பட்ட தோற்றம் உண்டு. இரண்டாவது, திருச்சபை சார்ந்தது. அதாவது திருச்சபையுடன் தொடர்புடையது,” என்று விளக்கினார்.
முதல் பகுதி நேரடியாக பைபிளில் இருந்து எடுக்கப்பட்டதுடன், கிறிஸ்தவத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது, கி.பி முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்டிருக்கக் கூடிய லூக்கா நற்செய்தி நூலில் இருந்து எடுக்கப்பட்ட, இயேசுவின் அன்னையான மரியாவை போற்றும் இரண்டு வாழ்த்துகளை ஒன்றிணைக்கிறது.
இந்த ஜெபம், ‘மங்கள அறிவிப்பு’ (Annunciation) எனப்படும் நிகழ்வில், வான தூதர் கபிரியேல் கூறிய பின்வரும் வரியுடன் தொடங்குகிறது: “வாழ்க மரியே, அருளால் நிறைந்தவரே, ஆண்டவர் உம்முடன் இருக்கிறார்.”
அதைத் தொடர்ந்து, அதே நற்செய்தி நூலில் இடம்பெற்றுள்ள மற்றொரு வாழ்த்து வருகிறது. இது மரியா தம் உறவினரான எலிசபெத்தை சந்திக்கச் சென்றபோது எலிசபெத் கூறியதாகும்: “பெண்களுக்குள் நீர் ஆசீர்வதிக்கப்பட்டவர்; உம்முடைய கருவின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டதே.”
“இந்த ஜெபத்தின் முதல் பாதி முழுமையாகவே விவிலியத்தைச் சார்ந்ததாகும். விவிலியத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வசனங்கள், மிகத் தொடக்க காலத்தில் இருந்தே, குறிப்பாக கீழைத்தேய கிறிஸ்தவ சமூகங்களில், திருப்பலி சார்ந்த வாழ்த்துரைகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன,” என்று நடால் விளக்குகிறார்.
பட மூலாதாரம், Getty Images
மரியே ஜெபம் எப்படிப் பரவியது?
இந்த ஜெபம் ‘அருள் நிறைந்த மரியே’ என்று அழைக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதி ‘தேவதூதர்களின் வாழ்த்து’ என அறியப்படுகிறது. இந்த ஜெபம் ஒரு நீண்ட மரபில் இருந்து, குறிப்பாக இடைக்காலத்தில் இருந்து உருவானதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அந்தக் காலகட்டத்தில் மக்கள் பைபிளில் இருந்து வரிகளைப் பயன்படுத்தி ஜெபங்களை உருவாக்கினர்.
பண்டைய சமய நூல்களை ஆய்வு செய்பவரும், அமெரிக்காவின் புனிதர் வரலாற்றுச் சங்கத்தின் உறுப்பினராக இருப்பவருமான ஆய்வாளர் தியாகோ மேர்க்கி இதை எளிய முறையில் விளக்கினார். “இது சாதாரண மக்களிடையே மிகவும் பொதுவான ஒன்றாக இருந்தது. அவர்கள் தேவாலய ஆராதனைகளில் இருந்து ஜெபங்களின் சிறு பகுதிகளையோ அல்லது பைபிள் வரிகளையோ, பெரும்பாலும் லத்தீன் மொழியில், நினைவில் வைத்துக்கொண்டு, பின்னர் அந்த வரிகளைப் பயன்படுத்தி தங்கள் சொந்த ஜெபங்களை உருவாக்குவார்கள். இவ்வாறுதான் ‘அருள் நிறைந்த மரியே’ ஜெபம் மெதுவாக வடிவம் பெற்றது.”
மற்றோர் ஆய்வாளரான வில்மா ஸ்டீகல் டி டொமாசோ, கிறிஸ்தவத்தின் ஆரம்ப நாட்களில் இருந்தே, இயேசுவின் தாயான மரியா, ‘கடவுளின் புனிதத் தாய்’ என்று மதிக்கப்பட்டுப் போற்றப்பட்டதாக விளக்குகிறார். மரியா மீதான இந்த மரியாதையே இந்த ஜெபம் இவ்வளவு பிரபலம் அடைந்ததற்கு ஒரு முக்கியக் காரணமாகும்.
‘அருள் நிறைந்த மரியே’ ஜெபத்தின் முதல் பகுதி, மரியாவை போற்றும் இரண்டு வாக்கியங்களைக் கொண்டுள்ளது. இந்த வாக்கியங்கள், கிழக்கு கிறிஸ்தவ மரபைச் சேர்ந்த பைசாந்திய வழிபாட்டு முறை எனப்படும் ஒரு வகை கிறிஸ்தவ வழிபாட்டில் தொடக்கத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வந்தன.
பின்னர், இந்த ஜெபம் மேற்கத்திய திருச்சபையிலும் பரவத் தொடங்கியது. டி டொமாசோவின் கூற்றுப்படி, லத்தீன் திருச்சபை 6ஆம் நூற்றாண்டிலேயே, போப் முதலாம் கிரிகோரியின் (540-604) காலத்தில் இந்த ஜெபத்தை பயன்படுத்தத் தொடங்கியது.
மத்திய காலத்தில், இந்த ஜெபம் ‘தேவதூத வாழ்த்து’ என்று அறியப்பட்டது. அந்தக் காலகட்டத்தில், பலருக்கு எழுதவோ படிக்கவோ தெரியாத காரணத்தால், அவர்களால் சங்கீதங்கள் போன்ற நீண்ட ஜெபங்களை நூல்களில் இருந்து படிக்க முடியவில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் ‘மரியே வாழ்க’ ஜெபத்தில் உள்ளதைப் போன்ற சிறிய மற்றும் எளிமையான வரிகளை மனப்பாடம் செய்து அவற்றை மீண்டும் மீண்டும் ஓதினர்.
இந்த வழக்கம் தேவாலயங்களில், குறிப்பாக எழுத்தறிவில்லாத மத நம்பிக்கையாளர்களிடையே பரவலாக இருந்தது. மெதுவாக, இது சாதாரண மக்களிடமும் பரவியது. அதாவது, தேவாலயத்திற்குச் சென்ற, ஆனால் அக்காலத்தில் மத வழிபாடுகளில் பயன்படுத்தப்பட்ட மொழியான லத்தீன் புரியாதவர்களிடம் இது பரவியது.
பட மூலாதாரம், Getty Images
மரியே ஜெபத்திற்கு திருச்சபை அங்கீகாரம்
ஆனால், அதுவரை ஜெபத்தில் வேண்டுகோள் இடம்பெற்றிருக்கவில்லை. அது மரியாளுக்கு ஒரு வாழ்த்தாக மட்டுமே இருந்தது. ஆனால் பாரம்பரியமாக, ஒரு ஜெபத்தில் வேண்டுகோள் அல்லது மன்றாடல் இடம்பெற வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில், ‘ஜெபம்’ என்ற சொல்லே ஒரு புனித உருவத்திடம் கேட்பது அல்லது மன்றாடுவது என்றே பொருள்படுகிறது.
எனவே, காலப்போக்கில், கிறிஸ்தவ சமூகங்கள் மரியே ஜெபத்தில் மெதுவாக ஓர் இரண்டாம் பகுதியைச் சேர்த்தன. இந்தப் பகுதி ஒரு வேண்டுகோளை உள்ளடக்கியிருந்தது. 11ஆம் நூற்றாண்டுக்கும் 16ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் இந்த இரண்டாம் பகுதியின் பல வேறுபட்ட வடிவங்கள் இருந்தன. இருப்பினும் அவை மிகவும் ஒத்திருந்தன. ஆய்வாளர் தியாகோ மேர்க்கியின் கூற்றுப்படி, மரியே ஜெபத்தின் ஆரம்பக்கால முழுமையான வடிவம், 15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரான்சிஸ்கன் துறவியான அன்டோனியோ டா ஸ்ட்ரோன்கோன் (1391-1461) என்பவரால் எழுதப்பட்டது.
இன்றைய மரியே ஜெபத்தில், இந்த இரண்டாம் பகுதியில்தான் மக்கள் இயேசுவின் தாயான மரியாளிடம் தங்கள் வேண்டுகோளை முன்வைக்கின்றனர். பாதிரியார் ரோட்ரிகோ நடால் அதுகுறித்து விளக்கியபோது, “இந்த இரண்டாம் பகுதி பைபிளில் இல்லை. ஆனால் துறவற வாழ்க்கையிலும் மக்கள் பக்தியிலும் செழித்து வளர்ந்த கிறிஸ்தவ மக்களின் ஜெபத்தில் இருந்து இது உருவானது,” என்றார்.
மேலும் அவர், “இது 16ஆம் நூற்றாண்டில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படும் வரை படிப்படியாக வடிவமைக்கப்பட்டது. எனவே, ஈவா மரியா என்பது புனித வேதம் மற்றும் திருச்சபையின் வாழும் பாரம்பரியம் ஆகிய இரண்டின் விளைவாகும்,” என்றார். அதாவது அவரது கூற்றுப்படி, இந்த ஜெபமானது காலப்போக்கில் விசுவாசிகளால் உருவாக்கப்பட்ட பைபிள் வசனங்கள் மற்றும் மரபுகளின் கலவையாகும்.

ஆராய்ச்சியாளர் வில்மா ஸ்டீகல் டி டொமாசோ, இந்த இரண்டாவது பகுதி, “விசுவாசிகளிடம் இருந்து வரும் ஒரு மன்றாடுதல்” என்று விளக்குகிறார். அதாவது, மக்கள் உதவி அல்லது ஆசீர்வாதங்களைக் கேட்கும் இடம் இது.
இறுதியில், ஒரு வடிவம் மிகவும் பிரபலமானது. புராட்டஸ்டன்ட் சீர்திருத்தத்திற்குப் பதிலளிக்கும் வகையில் நடைபெற்ற ஒரு முக்கியக் கூட்டமான டிரென்ட் கவுன்சிலின்போது, இது கத்தோலிக்க திருச்சபையால் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கடந்த 1568ஆம் ஆண்டில், போப் ஐந்தாம் பயஸ், ரோமன் பிரெவியரி எனப்படும் அதிகாரப்பூர்வ திருச்சபை புத்தகத்தில் இந்த ஜெபத்தின் இறுதி வடிவத்தைச் சேர்ந்தார். அதன் இரண்டாவது பகுதி இவ்வாறு கூறுகிறது” “புனித மரியே, கடவுளின் தாயே, பாவிகளான எங்களுக்காக, இப்போதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.”
இறையியலாளர் ரெய்ல்சன் அரூஜோவின் கூற்றுப்படி, இந்த அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அந்த ஜெபத்தின் “புனிதப்படுத்தல்” போன்றது. அதாவது, திருச்சபை அதை முறைப்படி ஏற்றுக்கொண்டு தரப்படுத்தியது.
அந்த நேரத்தில் இருந்து, மதகுருமார்களும் துறவிகளும் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ ஜெப நூல்களில் ‘மரியே வாழ்க’ ஜெபம் தொடர்ந்து இடம்பெறத் தொடங்கியது. போப் ஐந்தாம் பயஸ் மற்றொரு முக்கிய முடிவையும் எடுத்தார். அது, படிக்க இயலாத மக்களும் எளிதாக ஜெபிக்க வேண்டும் என்பதற்காக, ‘கர்த்தர் ஜெபம்’, ‘மரியே வாழ்க’ ஆகியவற்றை எளிய மாற்று ஜெபங்களாக அவர் அறிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
ஜெபமாலை உருவானது எப்படி?
‘மரியே வாழ்க’ ஜெபத்துடன் சேர்த்து, ஜெபமாலை எனப்படும் மற்றொரு முக்கியமான கத்தோலிக்க பழக்கமும் பரவியது. ஜெபமாலையின் பின்னணியில் இருந்த எண்ணம் எளிமையானது. முந்தைய காலகட்டத்தில் பலரால் வாசிக்க முடியாததால், அவர்களால் பைபிளில் உள்ள 150 சங்கீதங்களையும் வாசிக்க முடியவில்லை. எனவே ஜெபத்தை எளிதாக்குவதற்காக, அவர்கள் ‘மரியே வாழ்க’ ஜெபத்தை 150 முறை திரும்பத் திரும்பச் சொல்லத் தொடங்கினர்.
மக்கள் எண்ணிக்கையைத் தெரிந்துகொள்ள உதவும் வகையில், ஜெபமாலை எனப்படும் ஒரு கருவி உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில், அது மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் 50 ‘மரியே வாழ்க’ ஜெபங்களும், அவற்றுக்கு இடையில் ‘பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே’ மற்றும் பிற ஜெபங்களும் இருந்ததால், அது ‘ஜெபமாலை’ என்று அழைக்கப்படுகிறது. பின்னர், 2002இல் போப் இரண்டாம் ஜான் பால் அதிகாரப்பூர்வமாக ஜெபமாலையில் நான்காவது பகுதியைச் சேர்ந்த்தார்.
பாரம்பரியமாக, டொமினிக்கன் சபையை நிறுவிய துறவியான டொமினிக்கால் ஜெபமாலை உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. டொமினிக்கன் துறவிகளின், குறிப்பாக ஆலன் டி லா ரோஷின் முயற்சிகளால் இந்தப் பழக்கம் பரவலாகப் பரவியது. பின்னர், போப் ஐந்தாம் பயஸின் காலகட்டத்தில் கத்தோலிக்க திருச்சபை இந்த ஜெப முறையை அதிகாரபூர்வமாக அங்கீகரித்தது.
ஜெபமாலையும் திடீரெனத் தோன்றிவிடவில்லை என்று பாதிரியார் ரோட்ரிகோ நடால் விளக்குகிறார். “அது திருச்சபை வரலாற்றில், காலப்போக்கில் மெதுவாக வளர்ச்சியடைந்தது.”
ஜெபமாலையின் காரணமாக, விவிலியத்தின்படி இயேசுவே போதித்த பரலோக ஜெபத்தை விடவும் மரியே வாழ்க ஜெபம் அடிக்கடி சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம், ஜெபமாலையில், ஒவ்வொரு பரலோக ஜெபத்திற்கும் மக்கள் பத்து மரியே ஜெபங்களை சொல்கிறார்கள்.
மரியே ஜெபம் இவ்வளவு பிரபலம் அடைந்ததற்கு சில முக்கியக் காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இறையியலாளர் வினிசியஸ் பைவா, “இது நினைவில் வைத்துக்கொள்ள எளிதானது. விவிலியத்தில் வேரூன்றியுள்ளது. இதுவொரு முழுமையான பக்தி வடிவமாக மாறியுள்ளது. திருச்சபையின் பிரதான வழிபாட்டிற்குப் பிறகு மிக முக்கியமான ஜெபங்களில் ஒன்றாக உள்ளது,” என்று கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
இந்த ஜெபம் எளிமையானது ஆனால் ஆழமான அர்த்தம் கொண்டது என்பதை ரோட்ரிகோ நடால் வலியுறுத்துகிறார். “இதுவொரு சிறிய ஜெபம், நினைவில் வைத்துக்கொள்ள எளிதானது. இது சாதாரண மக்களுடன் வலுவாக இணைந்தது,” என்று அவர் கூறுகிறார்.
துறவிகள் இதைத் தங்கள் தினசரி ஜெபங்களில் தவறாமல் பயன்படுத்தியதும், இது பரவியதற்கான மற்றொரு காரணம். அவர்கள் ‘மரியே வாழ்க’ ஜெபத்தை தொடர்ந்து ஓதியதால், அந்த ஜெபம் மேலும் பிரபலமானது. தேவாலயங்களில், படித்த துறவிகள் சங்கீதங்களை வாசிப்பார்கள் எனவும், படிக்கத் தெரியாதவர்கள் ‘மரியே வாழ்க’ ஜெபத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பார்கள் எனவும் ஆய்வாளர் தியாகோ மெர்க்கி விளக்குகிறார்.
பலருக்கு லத்தீன் மொழி புரியாததாலும், படிக்கத் தெரியாததாலும், சங்கீதங்களுக்குப் பதிலாக 150 ‘மரியே வாழ்க’ ஜெபங்களை ஜெபிக்குமாறு திருச்சபை அவர்களை ஊக்குவித்தது. இது ஜெபத்தை அனைவரும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றியது.
இறுதியாக, 13ஆம் நூற்றாண்டு முதல், ‘மரியே வாழ்க’ ஜெபம் ஜெபமாலையின் முக்கியப் பகுதியாக, ‘முதுகெலும்பாக’ மாறியது என்று நடால் கூறுகிறார். இதன் காரணமாக, இந்த வழக்கம் கிறிஸ்தவ உலகம் முழுவதும் வேகமாகப் பரவி, கிறிஸ்தவத்தில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஜெபங்களில் ஒன்றாக மாறியது.
திருச்சபையால் உருவாக்கப்பட்ட ‘அருள் நிறைந்த மரியே’ ஜெபத்தின் இரண்டாம் பகுதி, உண்மையில் மரியாவை பற்றிய பல முக்கியமான கத்தோலிக்க நம்பிக்கைகளைத் தொகுத்துரைக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்.
உதாரணமாக, மரியாவை, “கடவுளின் தாய்” என்று அழைப்பது, கி.பி.431ஆம் ஆண்டில் எபேசு சங்கத்தில் எடுக்கப்பட்ட ஒரு பழைய திருச்சபை முடிவில் இருந்து வருகிறது. இது, இந்த ஜெபம் தற்செயலானது அல்ல, மாறாக நீண்டகால நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்தது என்பதைக் காட்டுகிறது.
“இது திருமறையையும் மரபையும், ஒரு திடமான இறையியல் அடித்தளத்துடன் இணைக்கும் ஒரு ஜெபம்” என்று கூறுகிறார் பாதிரியார் ரோட்ரிகோ நடால். எளிதாகக் கூறுவதெனில், இந்த ஜெபம் விவிலியத்தின் போதனைகளையும் திருச்சபையின் மரபுகளையும் ஒன்றிணைக்கிறது. மேலும் இவையிரண்டும் சமயக் கருத்துகளால் வலுவாக ஆதரிக்கப்படுகின்றன.
பட மூலாதாரம், Getty Images
இறையியலாளர் வினிசியஸ் பைவா, இந்த ஜெபம் மரியாவை பற்றிய முக்கியமான நம்பிக்கைகளை உறுதி செய்வதாகக் கூறுகிறார். “திருச்சபையின் மரியன்னை விசுவாசத்தின் உண்மைகளான மரியாளியல் கோட்பாடுகளில் சிலவற்றை இது உறுதிப்படுத்துவதாக” அவர் கூறுகிறார்.
“எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்” என்ற வார்த்தைகளும் மிகவும் முக்கியமானவை. மக்களின் சார்பாக மரியாள் கடவுளிடம் பேச முடியும் என்று கத்தோலிக்கர்கள் நம்புகிறார்கள் என்பதை அவை காட்டுகின்றன. இது பரிந்துரை என்று அழைக்கப்படுகிறது.
“இப்போதும் எங்கள் மரண நேரத்திலும்” என்ற இறுதி வரி, இந்த நம்பிக்கையை இன்னும் வலுப்படுத்துவதாக பைவா விளக்குகிறார். “இது, மகிமையில் நமக்கு முன்னால் செல்லும், தன் பிள்ளைகளுடன் செல்லும், மரியாளின் இந்தத் தாய்வழிப் பரிந்துரையைப் பற்றிச் சுருக்கமாகப் பேசும் பரிந்துரைக்கும் தாயாக இந்த உருவத்தை முன்வைக்கிறது.” அவரது கூற்றுப்படி, மரணத் தருணத்தில்கூட, விசுவாசிகளுடன் எப்போதும் இருந்து அவர்களுக்கு உதவும் ஓர் அக்கறையுள்ள தாயாக மரியாள் பார்க்கப்படுகிறார் என்பதே இதன் பொருள்.
இந்த அர்த்தங்கள் அனைத்தும், மரியே ஜெபம் ஏன் இவ்வளவு பிரபலமானது என்பதை விளக்குகின்றன. “இது மிகவும் எளிமையான உரையாக இருந்தாலும், அர்த்தம் நிறைந்தது என்பதால் பிரபலமானது. இந்த ஜெபத்தின் பின்னால் ஓர் இறையியல் சிந்தனை உள்ளது. ஆனால் அடிப்படையில் இது மிகவும் எளிமையான சூத்திரம், மனப்பாடம் செய்வதற்கும் ஓதுவதற்கும் மிகவும் எளிமையானது,” என்று விளக்குகிறார் ஆய்வாளர் தியாகோ மெர்க்கி.
“இதுவொரு வேதாகம நினைவில் இருந்து தொடங்கி, அதனுடன் ஒரு மன்றாடுதல் சேர்க்கப்பட்டு, மிகவும் எளியவர்கள் உள்பட, இறைமக்களின் பக்திமிக்க பழக்கவழக்கங்களால் முதிர்ச்சியடைந்த ஒன்று,” என்கிறார் பேராசிரியர் பைவா.
அருள் நிறைந்த மரியே ஜெபம் ஓர் “அன்பான” ஜெபமாக மாறியது என்றும் அவர் கூறுகிறார். மேரி ஒரு தாய் உருவமாகப் பார்க்கப்படுவதும், மக்கள் அவரிடம் பிரார்த்தனை செய்யும்போது, ஆறுதலையும் பாசத்தையும் உணர்கிறார்கள் என்பதுமே இதற்குக் காரணம்.

மரியாவுக்கான பழங்கால ஜெபம்
இயேசுவின் தாயான மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட, அறியப்பட்டதிலேயே மிகவும் பழமையான ஜெபம் 1927இல் கண்டுபிடிக்கப்பட்டது. அதுவொரு பண்டைய எகிப்திய பாப்பிரஸ் தாளில் (பண்டைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட ஒரு வகையான காகிதம்) எழுதப்பட்டிருந்தது.
முதலில், இந்த ஆவணம் 3 அல்லது 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று வல்லுநர்கள் நம்பினர். ஆனால் பிற்கால ஆய்வுகள் இது குறித்துச் சில சந்தேகங்களை ஏற்படுத்தின. இப்போது அதன் சரியான வயது குறித்துத் தெளிவான உடன்பாடு இல்லை. சில ஆய்வாளர்கள், இது உண்மையில் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.
அது எப்போது எழுதப்பட்டது என்பதில் குழப்பம் இருந்தாலும், வில்மா ஸ்டீகல் டி டொமாசோ, தியாகோ மெர்க்கி போன்ற ஆய்வாளர்கள், இந்த ஜெபத்தின் வார்த்தைகள் இன்றைய ‘அருள் நிறைந்த மரியே’ ஜெபத்தை போலவே இருப்பதாகக் கூறுகின்றனர்.
அந்தப் பண்டைய ஜெபத்தின் வாசகம் இவ்வாறு கூறுகிறது: “கடவுளின் புனித அன்னையே, உமது பாதுகாப்புக்கு நாங்கள் தஞ்சம் புகுகிறோம். எங்கள் தேவைகளில் எங்கள் விண்ணப்பங்களைப் புறக்கணிக்காதீர், எல்லா ஆபத்துகளில் இருந்தும் எங்களை எப்போதும் விடுவித்தருளும், ஓ மாட்சிமை பொருந்திய, ஆசீர்வதிக்கப்பட்ட கன்னியே.”
எளிதாகக் கூறுவதெனில், மக்கள் தங்களைப் பாதுகாக்கவும், தங்கள் பிரச்னைகளைக் கேட்கவும், ஆபத்தில் இருந்து தங்களைக் காக்கவும் மரியாவிடம் வேண்டிக்கொண்டனர் என்பதே இதன் பொருள்.
இவற்றுக்கு இடையிலான ஒற்றுமையின் காரணமாக, “இது ஈவா மரியா ஜெபத்தின் ஒரு ஆரம்பக்கால வடிவமாக இருக்கலாம்” என்று மெர்க்கி கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



