Home தேசிய national tamil குஜராத்: பொது சிவில் சட்டத்தை இஸ்லாமிய பெண்கள் எவ்வாறு பார்க்கிறார்கள்?

குஜராத்: பொது சிவில் சட்டத்தை இஸ்லாமிய பெண்கள் எவ்வாறு பார்க்கிறார்கள்?

18
0

SOURCE :- BBC NEWS

குஜராத் சட்டசபையில் இந்த வாரம் பொது சிவில் சட்ட மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் உத்தரகாண்டிற்கு அடுத்தபடியாக பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றிய இரண்டாவது மாநிலமாக குஜராத் உருவெடுத்துள்ளது.

பட மூலாதாரம், BBC/Zakia Soman/Getty Images

குஜராத் சட்டப்பேரவையில் கடந்த வாரம் பொது சிவில் சட்ட மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் உத்தரகாண்ட்டுக்கு அடுத்தபடியாக பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றிய இரண்டாவது மாநிலமாக குஜராத் உருவெடுத்துள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, பாஜக இதை ‘நீதியை நோக்கிய ஒரு படி’ என்று அழைக்கிறது.

அதே நேரத்தில், இந்த மசோதா ‘தேர்தலைக்’ கருத்தில் கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாக இதன் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

திருமணத்தைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்குதல், லிவ்-இன் உறவுகளைப் பதிவு செய்தல், பெண்களுக்குச் சமமான வாரிசு உரிமைகளை வழங்குதல் மற்றும் விவாகரத்துக்கான சீரான விதிகளை உருவாக்குதல் பற்றி இந்த மசோதா பேசுகிறது.

இந்த மசோதாவில் சில அம்சங்கள், இஸ்லாமியர்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இது குறித்து சில இஸ்லாமிய பெண்களிடம் பேசி அவர்களின் கருத்துக்களை அறிய பிபிசி குஜராத்தி முயற்சித்தது.

இஸ்லாமிய பெண்களுக்கு என்ன மாற்றம் ஏற்படும்?

ஜக்கியா சோமன்

பட மூலாதாரம், Zakia Soman

இந்திய இஸ்லாமிய பெண்கள் இயக்கத்தின் நிறுவனரான ஜக்கியா சோமன், நாட்டில் பெண்களின் உரிமைகளுக்காக பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார். முத்தலாக் நடைமுறைக்கு எதிரான சட்டத்தைக் கொண்டு வருவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.

குஜராத்தின் பொது சிவில் சட்ட மசோதா குறித்து பிபிசி குஜராத்தியிடம் பேசிய ஜக்கியா, “பொது சிவில் சட்டம் என்பது உண்மையில் பாலின நீதி மற்றும் சமத்துவத்தைப் பற்றியது. இஸ்லாமிய சமூகத்தின் குடும்பச் சட்டத்தில் எந்தச் சீர்திருத்தங்களும் செய்யப்படவில்லை. இதன் காரணமாக குழந்தை திருமணம், ஒருதலைபட்ச விவாகரத்து, பலதார மணம், சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை கிடைக்காதது, நிக்காஹ்-ஹலாலா போன்ற பிரச்னைகள் உள்ளன,” என்றார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மதத் தலைவர்கள் குடும்பச் சட்டத்தில் சீர்திருத்தங்களை அனுமதிக்காதபோது, பொது சிவில் சட்டமே சிறந்த வழி. ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், இது அளவுக்கு அதிகமாக அரசியல்மயமாக்கப்படுகிறது. ‘லவ் ஜிகாத்தை’ இந்தச் சட்டம் தடுக்கும் என்பது போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. லவ் ஜிகாத் தொடர்பான முழு அரசியலும் இந்துத்துவ அரசியலின் ஒரு பகுதியாகும்,” என்கிறார்.

ஜக்கியா சோமன் கூறுகையில், “1955-56ல் ஜவஹர்லால் நேருவும் அம்பேத்கரும் இந்து திருமணச் சட்டத்தைத் திருத்தியபோது கூட, இந்து மதத் தலைவர்களும் சில பழமைவாத பிரிவினரும் அதை எதிர்த்தனர். ஆனால் நேரு அவர்களைப் புறக்கணித்து, இந்துப் பெண்களின் நலன்களுக்கே முன்னுரிமை அளித்தார்” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “அதன்படி, அவர்கள் இந்து திருமணச் சட்டம், இந்து வாரிசுரிமைச் சட்டம், இந்து பாதுகாவலர் மற்றும் தத்தெடுப்புச் சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வந்தனர். அதன் அடிப்படையில் தான் இன்று இந்துப் பெண்களுக்கு உரிமைகள் கிடைத்துள்ளன. ஆனால் அதற்குப் பிறகு, மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்தியாவில் இஸ்லாமிய பெண்களுக்கான சட்டங்களைத் திருத்த முடியாமல் போய்விட்டது” என்றும் விளக்கினார்.

மதம் அரசியல்மயமாக்கப்படும் விதம் மற்றும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள வகுப்புவாத துருவமுனைப்பு காரணமாக, பல இஸ்லாமியர்கள் இந்தச் சட்டம் குறித்து சந்தேகம் கொண்டுள்ளதை ஜக்கியா சோமன் ஒப்புக்கொள்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “சின்னஞ்சிறு விஷயங்களுக்காக வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கும் ஒரு அரசாங்கம், எப்படி நமது பெண்களின் உரிமைகளில் அக்கறை காட்ட முடியும் என்று சில இஸ்லாமியர்கள் நினைக்கிறார்கள்” என்கிறார்.

இந்தியாவில் பலதார மணம் எந்த அளவுக்குப் பரவலாக உள்ளது?

இந்தக் கணக்கெடுப்பின்படி, 85 சதவீத இஸ்லாமிய பெண்கள் பலதார மண முறையை ஒழிக்க விரும்புகிறார்கள், 79 சதவீத முதல் மனைவிகளுக்கு அவர்களின் கணவரின் இரண்டாவது திருமணம் பற்றித் தெரிவிக்கப்படவில்லை.

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் பலதார மணம் பரவலாக இருப்பது குறித்த சமீபத்திய துல்லியமான புள்ளிவிவரங்கள் ஏதுமில்லை.

ஆனால், பாரதிய முஸ்லிம் மகிளா அந்தோலன் (BMMA) 2025 ஆம் ஆண்டில் குஜராத் உட்பட ஏழு மாநிலங்களில் ஒரு கணக்கெடுப்பை நடத்தியதாக ஜக்கியா சோமன் கூறுகிறார்.

அதில் 2,500 இஸ்லாமிய பெண்கள் முதல் அல்லது இரண்டாவது மனைவிகளாக இருப்பதைக் கண்டறிந்தனர், அதாவது அவர்களின் கணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை திருமணம் செய்துள்ளனர்.

இந்தக் கணக்கெடுப்பின்படி, 85 சதவிகித இஸ்லாமிய பெண்கள் பலதார மண முறையை ஒழிக்க விரும்புகிறார்கள், 79 சதவிகித முதல் மனைவிகளுக்கு அவர்களின் கணவரின் இரண்டாவது திருமணம் பற்றித் தெரிவிக்கப்படவில்லை.

கூடுதலாக, 88 சதவிகித பெண்கள் தங்கள் கணவர்கள் மறுமணம் செய்வதற்கு முன்பு தங்களிடம் அனுமதி பெறவில்லை என்று கூறியுள்ளனர்.

54 சதவிகித முதல் மனைவிகள் அவர்களின் கணவர்களின் இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு கைவிடப்பட்டுள்ளனர். கைவிடப்பட்ட பிறகு 36 சதவிகித பெண்களுக்குத் தங்கள் கணவர்களிடமிருந்து எந்த நிதி உதவியும் கிடைக்கவில்லை. அதேசமயம் இந்த 2,500 பெண்களில் 47 சதவிகிதத்தினர் தங்களின் பெற்றோரின் பாதுகாப்பைத் தேடிச் செல்ல வேண்டியிருந்தது.

மும்பையைத் தளமாகக் கொண்ட சர்வதேச மக்கள் தொகை அறிவியல் நிறுவனத்தின் (ஐஐபிஎஸ்) ஜூன் 2022 தரவுகளை மேற்கோள் காட்டி ‘தி பிரிண்ட்’ பத்திரிக்கை எழுதியுள்ள செய்தியில், அவர்களின் ஆய்வில் 1.4 சதவிகித பெண்கள் தங்கள் கணவர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

இதில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் பிற மதங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். 1.9 சதவிகித இஸ்லாமிய மற்றும் 1.3 சதவிகித இந்து பெண்கள் தங்கள் கணவர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் இருப்பதை ஒப்புக்கொண்டனர்.

மேகாலயாவில் அதிகபட்சமாக 6.1 சதவிகித பெண்கள் தங்கள் கணவர்கள் பலதார மணம் செய்துகொண்டதாகக் கூறியுள்ளனர். கோவாவில் இது மிகக் குறைவாக 0.2 சதவிகிதமாக இருந்தது. குஜராத்தில் இது சராசரியாக 0.5 சதவிகிதமாக இருந்தது.

‘யுசிசி தேவையில்லை, அனைவரின் பிரச்னைகளும் அதிகரிக்கும்’

அசிமா கிராச்

பட மூலாதாரம், Azima Girach

சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான அஸிமா கிராச், குஜராத்தின் பொது சிவில் சட்ட மசோதா தேவையற்றது என்று கருதுகிறார்.

திருமணப் பதிவுக்கு ஏற்கெனவே இரண்டு சட்டங்கள் இருக்கும்போது, புதிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் கூறுகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “பெண்களுக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்க பிரிவு 125, குடும்ப வன்முறைச் சட்டம், விவாகரத்துச் சட்டம், இஸ்லாமியர்களுக்கான பெண்கள் உரிமைச் சட்டம் மற்றும் முத்தலாக் சட்டம் ஆகியவை எங்களிடம் உள்ளன. இவை அனைத்தும் இருக்கும்போது, இந்துக்கள், இஸ்லாமியர்கள், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இடையே பாகுபாட்டை உருவாக்க ஒரு புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார்.

அஸிமா கிராச் மேலும் கூறுகையில், “இஸ்லாமியர்களுக்கு மத்தியில், பெரியப்பா, சித்தப்பா மற்றும் தாய்மாமன் பிள்ளைகளுக்கு இடையே திருமணம் நடைபெறலாம். சில பழங்குடியினர் மற்றும் பல தலித் சமூகத்தினரிடையேயும் இத்தகைய திருமணங்கள் நடைபெறுகின்றன. அப்படியிருக்கையில், இந்தச் சட்டத்தை எப்படி பொது சிவில் சட்டம் என்று அழைக்க முடியும்? இது மக்களைப் பிரிக்கும் ஒரு முயற்சியாகும்” என்றும் குறிப்பிட்டார்.

பொது சிவில் சட்டம் பெண்களுக்கு வாரிசு உரிமைகளை வழங்கும் என்ற அரசாங்கத்தின் வாதத்தை அஸிமா ஏற்கவில்லை.

“இஸ்லாத்தில், முஹம்மது நபி அவர்களின் காலத்திலிருந்தே பெண்களுக்கு வாரிசுரிமை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட சீர்திருத்தம் சமீபத்தில் நிகழ்ந்த ஒன்றாகும்,” என்கிறார் அவர்.

“திருமணம் மற்றும் விவாகரத்துப் பதிவுக்கு ஏற்கெனவே ஒரு நடைமுறை இருக்கும்போது, இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவது மற்றொரு கூடுதல் அமைப்பை உருவாக்குவதாகும்” என்று அவர் கூறுகிறார்.

இஸ்லாமியர்களிடையே தற்போதுள்ள திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான சட்டங்களை அவர் முற்போக்கானதாகக் கருதுகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இஸ்லாமியர்களிடையே திருமணம் என்பது ஏற்கெனவே ஒரு ஒப்பந்தமாகும் , கணவன் மற்றும் மனைவிக்கு ஒருவரை ஒருவர் பிடிக்கவில்லை என்றால், அவர்கள் எளிதாக விவாகரத்து பெறலாம்”என்றார்.

இருப்பினும், இந்த விதியானது தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்பதையும் அவர் ஒப்புக்கொள்கிறார்.

“நீதிமன்றத்தில் விவாகரத்து இறுதி செய்யப்பட்ட பிறகு, பொது சிவில் சட்டத்தின் கீழ் ஒரு விவாகரத்தைப் பதிவு செய்வது என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் இரட்டைச் சுமையாக இருக்கும்,” என்று அவர் கூறுகிறார்.

பொது சிவில் சட்ட மசோதாவிற்கு இஸ்லாமியர்களிடையே நிலவும் எதிர்ப்பு குறித்து ஜக்கியா சோமன் கூறுகையில், “சட்ட சீர்திருத்தங்களைச் சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில், சமூகத்தை ஒன்றிணைத்து நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். ஆனால் இங்கே ஒரு எதிர்ப்பு மனப்பான்மை கடைபிடிக்கப்படுகிறது. உதாரணமாக, ஷ்ரத்தா வாக்கர் அவரது லிவ்-இன் துணையால் கொல்லப்பட்ட உதாரணம் கூறப்படுகிறது. ஆனால் இது எந்தச் சமூகத்திலும் நடக்கக்கூடிய ஒன்றுதான்”என்கிறார்.

‘பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது பாலின சமத்துவத்தைக் கொண்டுவரும்’

 அமன் அன்வர் ஹுசைன் ஷேக்

பட மூலாதாரம், Aman Amwar Shaikh/FB

குஜராத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அமான் அன்வர் ஷேக் பொது சிவில் சட்ட மசோதாவை வரவேற்றுள்ளார். “இது பாலின சமத்துவத்தைக் கொண்டுவரும்” என்று அவர் கூறுகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி சட்டங்கள் இருக்கக்கூடாது, மாறாக மதச்சார்பற்ற சட்டங்கள் இருக்க வேண்டும். இந்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் பொருந்தும். இஸ்லாமியர்களை விட மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, எனவே இது அவர்களுக்கும் பொருந்தும்” என்றார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... 

https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t

அமான் அன்வர் ஷேக் குஜராத் உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் குழுவின் குழு வழக்கறிஞராக உள்ளார். மேலும் அவர் பாஜகவுடன் தொடர்புடையவர்.

தொடர்ந்து பேசிய அவர், “இஸ்லாமிய பெண்களுக்கு வாரிசு உரிமை கிடைப்பதன் மூலம் அவர்கள் பயனடைவார்கள். இதுவரை பெரும்பாலான குடும்பங்களில், ஒரு பெண்ணுக்குத் திருமணம் முடிந்த பிறகு, அவர் உணர்ச்சிவசப்பட்டு தனது சகோதரனுக்கு ஆதரவாகச் சொத்து உரிமையை விட்டுக்கொடுப்பதையே பார்க்க முடிகிறது. இனி சகோதரிக்கும் பங்கு கிடைக்கும்,” என்றார்.

இந்த மசோதாவுக்கு எதிரான வாதங்களை அவர் எதிர்மறையான அரசியல் பிரசாரம் என்று அழைக்கிறார்.

அனைவர் மீதும் இந்து திருமணச் சட்டத்தைத் திணிக்கும் முயற்சி

ஜைனப் ஷேக்

பட மூலாதாரம், Facebook/Shaikh Zainal Corporator

ஆமதாபாத்தில் உள்ள அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி இந்த மசோதாவை எதிர்த்துள்ளது.

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் மகளிர் கவுன்சில் உறுப்பினர் ஜைனப் ஷேக்கின் கூற்றுப்படி, “பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஏற்கெனவே உள்ள குற்றவியல் சட்டங்களே போதுமானவை. அரசாங்கம் உண்மையிலேயே பெண்களின் நலனை விரும்பினால், குற்றவியல் சட்டங்களைத் திருத்தி, பெண்களை நீதிமன்றங்களின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும்” என்றார்.

பொது சிவில் சட்டத்தின் முக்கியமான முன்மொழிவுகள் குறித்து அவர் கூறுகையில், “இந்த மசோதாவிலிருந்து பழங்குடியினர் விலக்கப்பட்டுள்ள நிலையில், இதை எப்படி சமத்துவமானது என்று சொல்ல முடியும்? குஜராத்தில் 14 முதல் 15 சதவிகிதம் வரை பழங்குடியினர் உள்ளனர். எனவே, பாஜக தனது வாக்கு வங்கியைப் பாதுகாப்பதற்காக அவர்களை ஒதுக்கி வைத்துள்ளது,” என்றார்.

“இது ஒரு இந்துச் சட்டம் என்றும், இது இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்தின் மீது திணிப்பதற்கான முயற்சி” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பட மூலாதாரம், Getty Images

ஜைனப் ஷேக் தொடர்ந்து பேசுகையில், “இஸ்லாமியர்களிடையே ஷியா-சன்னி சட்டங்கள் வேறுபட்டவை. எங்களிடையே நான்கு சாட்சிகள் மற்றும் மௌலானா சாஹிப் முன்னிலையில் மட்டுமே இஸ்லாமியர்களுக்குள் திருமணம் செய்யப்படுகிறது. திருமணம் செய்துகொள்ளும் முறை மிகவும் எளிதானது, ஆனால் இப்போது அது மிகவும் கடினமாக்கப்பட்டுள்ளது. அதேபோல், விவாகரத்து பெறுவதும் மிகவும் எளிதானது. சமூகத்தின் நான்கு பெரியவர்கள் இணைந்து சமரசத்தின் மூலம் விவாகரத்தைப் பெற்றுத் தர முடியும். ஆனால் இப்போது இதற்கெல்லாம் நீங்கள் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும்” என்றார்.

பலதார மணம் குறித்து ஜைனப் ஷேக் கூறுகையில், “இந்த விதிக்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். ஒருவருக்கு ஏற்கெனவே ஒரு மனைவி இருந்தாலும், ஆதரவற்ற, கைவிடப்பட்ட அல்லது கணவரை இழந்தவருக்கு ஆதரவளிப்பதற்காக ஒரு ஆண் அவரைத் திருமணம் செய்து கொள்வது எங்கள் சமூகத்தில் ஒரு நல்ல விஷயமாகக் கருதப்படுகிறது”என்றார்.

லிவ்-இன் முறை உறவுகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு ஜைனப் ஷேக் எதிர்ப்பு தெரிவித்தார். இது “இந்திய கலாசாரத்திற்கு எதிரானது. இது சமூகத்தில் பாலியல் தொழிலைப் பரப்பும். இத்தகைய உறவுகளின் மூலம் பிறக்கும் குழந்தைகள் சட்டபூர்வமானவர்களாகக் கருதப்படுவார்கள், ஆனால் அது குழந்தையின் எதிர்காலத்தைப் பாதிக்கும்,” என்று அவர் கூறினார்.

பொது சிவில் சட்ட மசோதாவின் முக்கிய விதிகள்

லிவ்-இன் முறை உறவுகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

பட மூலாதாரம், GUJARAT VIDHANSABHA/YT

பொது சிவில் சட்ட மசோதாவின் சில விதிகள் அனைத்து மதத்தினருக்கும் விரிவான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

அவை பின்வருமாறு:

  • இனி கட்டாயமாக திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
  • லிவ்-இன் உறவுகளையும் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும்.
  • விவாகரத்து பெற அனைவருக்கும் ஒரே மாதிரியான விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • மகள் அல்லது மகன் என யாராக இருந்தாலும், அனைவருக்கும் சமமான வாரிசுரிமை வழங்கப்படும். இந்த விதியைக் கடைப்பிடிப்பதில் அபராதம் மற்றும் தண்டனை உள்ளிட்ட கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • ஒவ்வொரு மதம் மற்றும் பாரம்பரியத்தின் படி நடைபெறும் திருமணங்களைப் பதிவு செய்வது கட்டாயமாகும். பதிவு செய்யத் தவறினால் சட்டப்படி தண்டனை வழங்கப்படும்.
  • திருமணத்தைப் பதிவு செய்யாவிட்டால் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். கட்டாயப்படுத்தியோ அல்லது வற்புறுத்தியோ திருமணம் செய்து வைத்தால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும், ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்தால் ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை வழங்கவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • விவாகரத்திற்குப் பிறகு பதிவு செய்வது கட்டாயமாகும்.
  • நீதிமன்றத்திற்கு வெளியே பெறப்படும் விவாகரத்துகள் செல்லாததாகக் கருதப்படும்.
  • நீதிமன்றத்திற்கு வெளியே விவாகரத்து செய்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்க இதில் இடமுண்டு.
  • லிவ்-இன் உறவுகளைப் பதிவு செய்யத் தவறினால் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
  • மைனர் ஒருவருடன் லிவ்-இன் உறவில் இருந்தால் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்.
  • அனைத்து மதங்கள் மற்றும் சமூகங்களுக்கு விவாகரத்து குறித்து ஒரே மாதிரியான விதிகள் மற்றும் ஜீவனாம்சம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் சீரான விதிகள் கொண்டுவரப்படும்.
  • சிறுபான்மை சமூகங்களில் உறவினர்களுக்குள் திருமணம் செய்துகொள்வது ஒரு பாரம்பரியமாக இருந்தால், இந்த மசோதா சட்டமானாலும் அது செல்லுபடியாகும் எனக் கருதப்படும்.
  • இஸ்லாமிய பெண்களுக்கும் சொத்துரிமையில் ஆண்களுக்கு இணையான உரிமைகள் வழங்கப்படும்.
  • நிக்காஹ்-ஹலாலா போன்ற நடைமுறைகள் நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரப்படும்.

லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழ்வதற்கான விதிகள் என்ன?

இஸ்லாமிய மகள்களுக்கும் சொத்துரிமையில் மகன்களுக்கு இணையான உரிமைகள் வழங்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images

பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ செய்துகொள்ளப்பட்ட எந்தவொரு திருமணத்தையும் பின்வரும் காரணங்களுக்காக மட்டுமே ரத்து செய்ய முடியும் என்று இந்த மசோதா கூறுகிறது:

1. திருமணச் சடங்கிற்குப் பிறகு, விண்ணப்பதாரர் அல்லாத வேறு ஒருவருடன் பரஸ்பர சம்மதத்துடன் உடலுறவு கொண்டிருத்தல்.

2. திருமணச் சடங்கிற்குப் பிறகு, விண்ணப்பதாரர் கொடுமையாக நடத்தப்பட்டிருத்தல்.

3. விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக, தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாத காலத்திற்கு விண்ணப்பதாரர் கைவிடப்பட்டிருத்தல்.

4. விண்ணப்பதாரர் வேறு மதத்திற்கு மாறியிருத்தல்.

5. விண்ணப்பதாரருக்குக் குணப்படுத்த முடியாத மனநோய் இருத்தல்.

பொது சிவில் சட்ட மசோதாவுக்கான அரசியல் எதிர்வினை

முதலமைச்சர் பூபேந்திர படேல்

பட மூலாதாரம், GUJARAT VIDHANSABHA/YT

இந்த மசோதாவை வரவேற்ற குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், “பொது சிவில் சட்டம் என்பது மாநிலத்தில் உள்ள அனைத்து மதங்கள் மற்றும் சமூகங்களுக்கு திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை மற்றும் தத்தெடுப்பு போன்ற விவகாரங்களில் ஒரு சீரான சட்டக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்தும்,” என்று கூறினார்.

பொது சிவில் சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே, “நாம் 1947-இல் சுதந்திரம் பெற்றோம், ஆனால் நாட்டின் சட்டங்கள் சமூகம், சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன, இதில் பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது சிவில் சட்டம் குஜராத்தில் சீரான சட்டங்களைக் கொண்டு வரும்,” என்று துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்வி கூறினார்.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், “உத்தரகாண்ட்டுக்குப் பிறகு, இப்போது குஜராத்திலும் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரே மாதிரியான சட்டம் இருக்க வேண்டும் என்பது பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்டதிலிருந்தே அதன் தீர்மானமாக இருந்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம், குஜராத் பிரதேச காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்தா இந்த மசோதாவை எதிர்த்து, “இந்த மசோதா அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. இது முதலில் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும்” என்று கூறினார்.

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ சைதர் வசாவா கூறுகையில், “ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் அழுத்தத்தின் காரணமாகவே பாஜக பொது சிவில் சட்ட விவகாரத்தில் அவசரம் காட்டுகிறது. தேர்தலை முன்னிட்டு பழங்குடியின சமூகம் இதிலிருந்து வெளியே வைக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்காலத்தில் அவர்களும் இதில் சேர்க்கப்படலாம்” என்றார்.

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி, பொது சிவில் சட்ட மசோதாவிற்கு எதிராக ஆமதாபாத்தில் போராட்டங்களை நடத்தியதோடு, அதனைத் திரும்பப் பெறவும் கோரிக்கை விடுத்தது.

பிரச்னைகளை பேசுவோம்
Get in touch

பிரச்னைகளைப் பேசுவோம் – 2 | பெண்கள் பாதுகாப்பு

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU