Home தேசிய national tamil இரான் போருக்கு மத்தியில் பாலத்தீன கிராமங்களை இஸ்ரேலிய குடியேறிகள் தாக்கியது ஏன்?

இரான் போருக்கு மத்தியில் பாலத்தீன கிராமங்களை இஸ்ரேலிய குடியேறிகள் தாக்கியது ஏன்?

9
0

SOURCE :- BBC NEWS

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலத்தீனக்   கிராமங்கள் மீது தீவிரவாத யூதக் குடியேறிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி, வீடுகள், வாகனங்கள் மற்றும் விவசாய வயல்களுக்குத் தீ வைத்துள்ளனர்.

பட மூலாதாரம், AFP via Getty Images

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலத்தீனக் கிராமங்கள் மீது கடும்போக்கு யூதக் குடியேறிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி, வீடுகள், வாகனங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு தீ வைத்துள்ளனர்.

சனிக்கிழமையன்று 18 வயதான யூதா ஷெர்மன் என்ற இளம் குடியேறி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த வன்முறை தொடங்கியது.

அவர் தனது குவாட் பைக்கில் சென்றபோது, பாலத்தீனர் ஒருவர் ஓட்டி வந்த வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்து திட்டமிடப்பட்டதா அல்லது தற்செயலானதா என்பது குறித்து தாங்கள் விசாரித்து வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து, குடியேறிகளால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் குழுக்கள் அவரது மரணத்திற்கு “பழிவாங்கும் நடவடிக்கைக்கு” அழைப்பு விடுத்தன.

இஸ்ரேலிய ஊடகங்கள் மேற்கோள் காட்டிய பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, ஒரே இரவில் 20-க்கும் மேற்பட்ட குடியேறிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

பட மூலாதாரம், AFP via Getty Images

இரான் போருக்கு பிறகு..

அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து குடியேறிகளின் வன்முறை அதிகரித்துள்ளது என்றும், மார்ச் 1 முதல் குடியேறிகளால் ஆறு பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) தெரிவித்துள்ளது.

இஸ்ரேலியப் பொதுமக்கள் “கட்டடங்கள் மற்றும் சொத்துக்களுக்குத் தீ வைப்புச் செயல்களில் ஈடுபடுவதாகவும், அப்பகுதியில் கலவரத்தில் ஈடுபடுவதாகவும்” புகார்கள் வந்ததையடுத்து, சனிக்கிழமை இரவு பல பாலத்தீனக் கிராமங்களுக்குத் தங்களது துருப்புக்கள் மற்றும் எல்லைக் காவல் பிரிவுகள் அனுப்பப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜலூத், கார்யுத் , அல்-ஃபுந்துமியா மற்றும் சிலத் அல்-தா ஆகிய கிராமங்கள் இலக்கு வைக்கப்பட்டவற்றில் அடங்கும்.


இரான் போருக்கு மத்தியில் பாலத்தீன கிராமங்களை இஸ்ரேலிய குடியேறிகள் தாக்கியது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

இணையத்தில் பகிரப்பட்ட ஒரு காணொளியில், கருப்பு நிற உடை அணிந்த 90-க்கும் மேற்பட்ட நபர்கள் காணப்பட்டனர். அவர்களில் பலர் முகமூடி அணிந்திருந்தனர். அவர்கள் ஜலூத் கிராமத்திற்குள் ஓடுவதைக் காண முடிந்தது. இருப்பினும், இந்தக் காணொளியை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

அந்தக் கிராமத்திலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் மற்றொரு காணொளி, பல வாகனங்கள் தீப்பற்றி எரிவதையும், ஜன்னல்கள் உடைக்கப்பட்ட கட்டடங்களையும், ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வருவதையும் காட்டுகிறது.

ஒரு புகைப்படத்தில், ஒரு கட்டடத்தின் மீது “யூதாவுக்காகப் பழிவாங்கு” என்று ஸ்ப்ரே பெயிண்டால் எழுதப்பட்டிருந்தது.

ஜலூத் கிராமத்தில் தாக்குதல் நடத்தியவர்களை எதிர்த்தபோது குறைந்தது மூன்று பாலத்தீனர்களுக்குத் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பாலஸ்தீன செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர்களில் சிலரும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.


இரான் போருக்கு மத்தியில் பாலத்தீன கிராமங்களை இஸ்ரேலிய குடியேறிகள் தாக்கியது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

‘ஓர் இனப்படுகொலை இரவு’

குடியேறிகளால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் குழுவின் ஒரு பதிவில், “சிந்தப்பட்ட யூத இரத்தத்திற்காக யூதர்கள் மௌனமாக இருக்க மாட்டார்கள்” என்று இருந்ததாகவும், மற்றொரு பதிவில், “நாங்கள் பழிவாங்கலையும் எதிரியை வெளியேற்றுவதையும் கோருகிறோம்” என்று இருந்ததாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.

“ஈத் பண்டிகையின் போது வீடுகள் மற்றும் சொத்துக்களை எரிப்பது, பொதுமக்களைப் பயமுறுத்துவது மற்றும் கொல்வது, அத்துடன் முக்கியச் சாலைகள், சந்திப்புகள் மற்றும் பிரதான வீதிகளைக் குறிவைப்பது” போன்ற முறைகளில் இந்தத் தாக்குதல் நடத்தபட்டதாகக் கூறி பாலத்தீன வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

டேர் அல்-ஹதாப் கிராமத்திற்கு அருகே ஐந்து நபர்களை எல்லைக் காவலர்கள் கைது செய்துள்ளதாக இஸ்ரேலிய காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இடாமர் குடியேற்றத்திற்கு அருகே பல இஸ்ரேலிய பொதுமக்கள் பாதுகாப்புப் படையினரை தாக்கியதில் ஒரு அதிகாரி காயமடைந்ததாகவும், ” கடும்போக்கு வன்முறையாளர்களிடம் சற்றும் சகிப்புத்தன்மையின்றி” காவல்துறை செயல்பட்டு வருவதாகவும் அது கூறியது.

பாலத்தீனர்களின் உரிமைகளைப் பாதுகாக்கப் பணியாற்றும் ‘யெஷ் தின்’ என்ற இஸ்ரேலிய மனித உரிமைகள் குழு, இந்தத் தாக்குதல்களை “ஓர் இனப்படுகொலை இரவு” என்று விவரித்துள்ளது.

“தாக்குதல்கள் திட்டமிடப்பட்டது குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தும், படைகள் மீண்டும் அதற்கேற்பத் தயாராகத் தவறிவிட்டன. இந்த வன்முறைகளை நிறுத்த எந்தத் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை,” என்று அந்த அமைப்பு ஞாயிற்றுக்கிழமை மாலை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இரான் போருக்கு மத்தியில் பாலத்தீன கிராமங்களை இஸ்ரேலிய குடியேறிகள் தாக்கியது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

இஸ்ரேலிய ஊடகங்களின்படி, ஞாயிற்றுக்கிழமை மதியம் நடந்த யூதா ஷெர்மனின் இறுதிச் சடங்கில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் பாலத்தீனர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டியதற்காக பிரிட்டன் மற்றும் பிற நாடுகளால் தடை விதிக்கப்பட்ட இஸ்ரேலின் தீவிர வலதுசாரி நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் என்பவரும் கலந்துகொண்டார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை, யூதக் குடியேறிகள் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடியேற்றக் குழுக்கள் மீண்டும் சில பாலத்தீனக் கிராமங்களுக்கு வெளியே கூடத் தொடங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாப்லஸின் வடமேற்கே உள்ள ஒரு கார் கழுவும் நிலையத்திற்கு அவர்கள் தீ வைத்ததாக உள்ளூர் செய்தி நிறுவனமான ‘வாஃபா’ செய்தி வெளியிட்டுள்ளது.


இரான் போருக்கு மத்தியில் பாலத்தீன கிராமங்களை இஸ்ரேலிய குடியேறிகள் தாக்கியது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

சுமார் 160 குடியேற்றங்கள்

பிப்ரவரி 28 அன்று இரான் போர் தொடங்கியதிலிருந்து பாலத்தீனர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறையை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று இந்த மாத தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் பிரிட்டனும் கோரிக்கை விடுத்தன.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஏழு பாலத்தீனர்கள் இஸ்ரேலியக் குடியேறிகளாலும், 18 பேர் இஸ்ரேலியப் படைகளாலும் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 15 கொலைகள் இரான் போர் தொடங்கிய பிறகு நடந்துள்ளன.

இஸ்ரேலின் மைய – இடதுசாரி கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் யாயர் கோலன் சமீபத்திய தாக்குதல்களைக் கண்டித்ததுடன், இஸ்ரேலிய அரசாங்கம் இத்தாக்குதல்கள் நடக்க அனுமதிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

“கடும்போக்கு அமைச்சர்களின் ஆதரவுடனும், பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் ஆபத்தான ஊக்கத்துடனும், போரைப் பயன்படுத்திக் கொண்டு யூதப் பயங்கரவாதம் பரவி வருகிறது. இது இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான பொறுப்பில் ஏற்பட்ட தோல்வியாகும்,” என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் நடந்த வேறொரு தாக்குதலுக்குப் பிறகு, மேற்குக் கரையில் குடியேறிகளால் நிகழ்த்தப்படும் வன்முறை “தார்மீக ரீதியாகவும் அற ரீதியாகவும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று இஸ்ரேல் ராணுவத்தின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இயல் ஜமீர் கூறியிருந்தார்.

1967 மத்திய கிழக்கு போரின் போது மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் நிலங்களை ஆக்கிரமித்ததிலிருந்து, இஸ்ரேல் சுமார் 160 குடியேற்றங்களை அமைத்து 7,00,000 யூதர்களைக் குடியமர்த்தியுள்ளது.

இந்த நிலத்தை காஸாவுடன் சேர்த்து பாலத்தீனர்கள் ஒரு எதிர்கால நாட்டை அமைக்க விரும்புகிறார்கள்.

அவர்களுடன் சேர்த்து சுமார் 3.3 மில்லியன் பாலத்தீனர்களும் வாழ்கின்றனர்.

இந்தக் குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்தின்படி சட்டவிரோதமானவை.

பிபிசி தமிழின் ‘பிரச்னைகளைப் பேசுவோம்’

உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா?

கடந்த 5 ஆண்டுகளில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான நிலைமை மேம்பட்டிருக்கிறதா, மோசமடைந்திருக்கிறதா?

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU