Home தேசிய national tamil சிஎஸ்கே அணியில் தோனியின் பங்களிப்பு என்னவாக இருக்கும்? ஓய்வு எப்போது என்பதையும் தாண்டி எழும் கேள்விகள்

சிஎஸ்கே அணியில் தோனியின் பங்களிப்பு என்னவாக இருக்கும்? ஓய்வு எப்போது என்பதையும் தாண்டி எழும் கேள்விகள்

8
0

SOURCE :- BBC NEWS

ஐபிஎல் 2026, சிஎஸ்கே, தோனி, சாம்சன், ருதுராஜ்

பட மூலாதாரம், Getty Images

“இப்போதைக்கு நீங்கள் ஓய்வு பெற்றுவிடாதீர்கள். முன்பு ‘நிச்சயமாக இல்லை’ (Definitely Not) என்று சொன்னதுபோல் இனியும் தொடர்ந்து சொல்லுங்கள். நீங்கள் 60 வயது வரையிலும் கூட விளையாடவேண்டும் என்று நான் விரும்புகிறேன்”

சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடத்திய சிறப்பு நிகழ்ச்சியில் மஹேந்திர சிங் தோனியிடம் இப்படிக் கூறினார் நடிகர் சிவகார்த்திகேயன்.

அதற்கு சிரித்துக்கொண்டே “முயற்சி செய்கிறேன்” என்றார் தோனி.

19-வது ஐபிஎல் தொடரில் விளையாடப்போகும் தோனிக்கு தற்போது 45 வயது ஆகிறது. இதுவரை நடந்த அனைத்து ஐபிஎல் சீசன்களிலும் அவர் விளையாடியுள்ளார். சர்வதேச போட்டிகளில் கடைசியாக ஆறரை ஆண்டுகளுக்கு முன் விளையாடியிருந்தாலும், தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டுவந்தாலும், ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு சீசனுக்கும் முன்பும் ‘அவர் இந்த சீசனில் விளையாடுவாரா?’ என்ற கேள்வி எழுந்துகொண்டிருக்கிறது. சீசன் தொடங்கியபிறகு ‘இதுதான் அவரது கடைசி சீசனாக இருக்குமா?’ என்ற கேள்வியும் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கிறது.

அவரது பல ரசிகர்கள் சிவகார்த்திகேயனைப் போல் தான் நினைக்கிறார்கள். இந்திய கிரிக்கெட்டின் மிகமுக்கிய முகமாக, கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதர்சமாக இருக்கும் தோனி விளையாடுவதைப் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று அவரது ரசிகர்கள் நினைக்கிறார்கள். அதேசமயம், தோனியால் முன்புபோல் விளையாட முடியவில்லை என்றும், அது அணியைப் பாதிக்கிறது என்றும் ஒரு தரப்பினர் கருதுகிறார்கள்.

கடந்த சில சீசன்களாக, தோனியின் ஓய்வையும் தாண்டி, ‘தோனியின் பங்களிப்பு என்ன?’ என்பது தொடர்ந்து விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

2020 முதலே தோனி பேட்டிங் செய்வது வெகுவாகக் குறைந்துகொண்டிருந்தது. 2023 முதலாக அவர் கடைசி 2-3 ஓவர்கள் இருக்கும்போதுதான் களமிறங்குகிறார். 2020 முதல் 2025 வரையிலான 6 சீசன்களில் 72 முறை பேட்டிங் செய்ய களமிறங்கியிருக்கும் தோனி மொத்தமாக சந்தித்ததே 742 பந்துகள் தான். சராசரியாக ஒரு போட்டிக்கு சுமார் 10 பந்துகள் தான் அவர் சந்தித்திருக்கிறார்.

கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெருமளவு தடுமாறிய போதும் கூட ஒருசில போட்டிகளில் ஒன்பதாவது வீரராக தோனி களமிறங்கினார். இதனால் ரசிகர்கள், வல்லுநர்கள் என பலதரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. ‘தோனி முன்பே களமிறங்க வேண்டும்’ என்று பலர் வாதிட, ‘தோனியால் அவ்வளவு தான் பங்களிக்க முடியும்’ என்றும் சிலர் பேசினர்.

இந்நிலையில், தற்போது புதியதொரு சீசன் தொடங்கவுள்ள நிலையில், இந்த சீசன் தோனி களமிறங்குவாரா, அவரின் பங்களிப்பு என்னவாக இருக்கும்? என்று அலசுவோம்.

ஐபிஎல் 2026, சிஎஸ்கே, தோனி, சாம்சன், ருதுராஜ்

பட மூலாதாரம், Getty Images

தோனி ஆடும் லெவனில் இருப்பாரா? இம்பேக்ட் பிளேயராக வருவாரா?

பலருக்கும் தோனி முதலில் விளையாடுவாரா என்ற சந்தேகமே இருக்கிறது. ஒருசிலர் அவர் போட்டிகளில் அதிகம் ஆடமாட்டார் என்கிறார்கள். ஒருசிலர் அவர் இம்பேக்ட் பிளேயராக மட்டுமே ஆடவேண்டும் என்கிறார்கள். தோனியின் ஃபிட்னஸை கருத்தில் கொண்டு அவரை இம்பேக்ட் பிளேயராக மட்டும் பயன்படுத்தலாம் என்றும் ஒருசிலர் கருதுகின்றனர். 20 ஓவர்கள் கீப்பிங் செய்யாதபட்சத்தில் அது அவரது உடல் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் என்பது அவர்களின் வாதமாக இருக்கிறது. சஞ்சு சாம்சன் வழியாக தரமான கீப்பர் இந்த சீசன் கிடைத்துவிட்டதால், இந்தக் கேள்விகள் தற்போது வலுப்பெற்றிருக்கின்றன.

இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் வித்யுத் சிவராமகிருஷ்ணன், “தோனி நிச்சயம் விளையாடுவார். ஆனால், எல்லா போட்டிகளிலும் ஆடுவாரா என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. சாம்சனும் இருப்பதால் அவரும் கீப்பிங் செய்யக்கூடும். இங்குதான், தோனியை கீப்பராகப் பயன்படுத்தப் போகிறார்களா இல்லை அவரை இம்பேக்ட் பிளேயராக பயன்படுத்தப் போகிறார்களா என்று பார்க்கவேண்டும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய வித்யுத், “ஆனால், ஒரு விஷயம் நிச்சயம் – அவர் கண்டிப்பாக விளையாடுவார். இங்கு ‘சிஎஸ்கே ஹை பெர்ஃபாமன்ஸ் மையத்தில்’ நடந்த பயிற்சி முகாமுக்கு முன்னதாக அவர் ராஞ்சியிலேயே பயிற்சியில் ஈடுபட்டார். அங்கு அவர் தீவிரமாகப் பயிற்சி செய்தார். விளையாடப் போவதில்லை என்றால், அவர் அப்படி பயிற்சி செய்ய வேண்டிய அவசியமே இல்லையே! அவர் இந்த சீசன் களமிறங்குவது நிச்சயம்” என்று கூறினார்.

தோனி இம்பேக்ட் பிளேயராக விளையாடக் கூடுமா என்ற கேள்விக்கு, அது கூடாது என்று தென்னாப்பிரிக்கா மற்றும் சிஎஸ்கே முன்னாள் வீரர் ஃபாஃப் டுப்ளெஸி தெரிவித்தார்.

இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ நிகழ்ச்சியில் பேசிய அவர், “என்னைப் பொறுத்தவரை எம்.எஸ்.தோனி கிரிக்கெட் விளையாடும் வரை அவருடைய கிரிக்கெட் அறிவு ஃபீல்டிங்கின் போது களத்தில் இருக்கவேண்டும் என்பேன். அவ்வளவுதான்.” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். அதே நிகழ்ச்சியில் இருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் அபினவ் முகுந்தும் அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டார்.

ஐபிஎல் 2026, சிஎஸ்கே, தோனி, சாம்சன், ருதுராஜ்

பட மூலாதாரம், Getty Images

தோனியோடும், தோனிக்கு எதிராகவும் ஆடிய பலருமே இந்தக் கருத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தோனியின் தலைமைப்பண்பு, அவரது நிலைத்தன்மை, அவர் எடுக்கும் முடிவுகள் எந்த அளவு ஆட்டத்தில் தாக்கம் ஏற்படுத்தும் என்பதைத் தொடர்ந்து பேசியிருக்கிறார்கள். தோனியின் மிகப் பெரிய பலமே அதுதான் என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் டுப்ளெஸி, முகுந்த் போன்றவர்கள் சொல்வது.

ஆனால், மற்றொரு சிஎஸ்கே முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவின் கருத்து இதற்கு சற்று மாறுபட்டதாக இருக்கிறது. ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் பேசிய அவர், அணியின் செயல்பாட்டில் தோனியின் தலையீடு குறைவாகவே இருக்கும் என்று கருதுகிறார்.

“தோனி இந்த முறை அணியின் செயல்பாடுகளில் சற்று தள்ளி இருப்பதை உங்களால் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன். 2026 ஐபிஎல் தொடர் தான் அவர் மஞ்சள் நிற சீருடையில் விளையாடும் கடைசி ஆண்டாக இருக்க வாய்ப்புள்ளது. தான் விடைபெறும் காலம் நெருங்கிவிட்டதை அறிந்து, அணியை தன் பிடியிலிருந்து மெதுவாக விடுவிக்க அவர் விரும்புகிறார். அவர் அதைச் செய்வார் என்றும் நினைக்கிறேன். அப்போதுதான் ருதுராஜ் கெய்க்வாட்டின் உண்மையான கேப்டன்சி திறமையை நம்மால் பார்க்க முடியும்,” என்றார் உத்தப்பா.

இதையுமே கூட கடந்த சில ஆண்டுகளில் தோனியிடமிருந்து பார்க்க முடிந்தது. ருதுராஜ் கேப்டனாக செயல்பட்ட போது, ஓவர்களுக்கு நடுவே பௌலர்களிடம் தோனி அதிகமாகப் பேசவில்லை. முடிவுகளில் தலையிடவில்லை. ரிவ்யூ எடுக்கலாமா என்று பௌலர்கள் கேட்ட போதுகூட அவர் ருதுராஜையே கைகாட்டினார்.

ஐபிஎல் 2026, சிஎஸ்கே, தோனி, சாம்சன், ருதுராஜ்

பட மூலாதாரம், Getty Images

“பேட்டிங்கில் தோனி முன்பே களமிறங்க வேண்டும்”

ஜியோ ஸ்டார் நிகழ்ச்சியொன்றில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டி வில்லியர்ஸிடம் தோனி எங்கு பேட்டிங் செய்யவேண்டும் என்பது பற்றி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த டி வில்லியர்ஸ், “தோனியின் பேட்டிங்கால் என்ன தாக்கம் ஏற்படுத்த முடியும் என்று நமக்குத் தெரியும். ஆனால், அவர் கேப்டனாக அல்லாத நிலையில் மிகவும் கீழே தான் களமிறங்குகிறார் என்றால், அவர் ஒரு இடத்தை எடுத்துக் கொள்கிறார் என்றுதான் நான் சொல்வேன். தனி நபர்கள் கோப்பை வென்றுதர முடியாது. அணியாக செயல்பட வேண்டும். தோனியிடமிருந்து பொறுப்புகளை எடுத்துக்கொள்ள ருதுராஜ் மற்றும் சஞ்சு சரியான ஆட்கள் என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறியிருந்தார்.

தோனி விளையாடினால் அவர் முன்பே களமிறங்கவேண்டும் என்பதே அவருடைய கருத்தாக இருந்தது. இதே கருத்தை பிரதிபலித்த இந்தியா மற்றும் சிஎஸ்கே முன்னாள் வீரர் புஜாரா, “தோனி 8 அல்லது 9-வது இடத்தில் ஆடுவதில் எனக்கு உடன்பாடில்லை” என்று கூறினார்.

கிரிக்பஸ் தளத்தில் தோனியின் பங்களிப்பு பற்றிப் பேசியிருந்த வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, “கடந்த சில ஆண்டுகளாக அவர் பல்வேறு காயங்களை கடந்து வந்தார். அதனால் இப்போது அவர் 10-15 பந்துகள் மட்டுமே சந்திக்கும் பேட்டராக மாறிவிட்டார். அனைத்து விதமான பேட்டர்களுமே தோனிக்கு முன்பு களமிறங்கும் நிலை இருந்தது. ஏனெனில், அவரால் அதுதான் செய்ய முடிந்தது. கடந்த சீசன் இறுதியில் அவரது கீப்பிங்கிலும் சில பிரச்னைகள் தெரியத் தொடங்கின” என்றார்.

ஐபிஎல் 2026, சிஎஸ்கே, தோனி, சாம்சன், ருதுராஜ்

பட மூலாதாரம், Getty Images

மேலும் பேசிய அவர், “இப்போது அறுவை சிகிச்சைக்குப் பிறகு…. தோனியைப் பற்றி நீங்கள் எப்போதுமே உறுதியாகக் கூற முடியும் ஒரு விஷயம் – அவர் நிச்சயம் ஃபிட்டாக, தயாராக வருவார். ஆனால், அவருடைய பேட்டிங் பங்களிப்பு என்ன? இந்த அணியில் அவர் 10 பந்துகள் மட்டும் சந்திக்கும் ஒரு பேட்டராக இருக்க முடியாது. அவர் ஆறாவது வீரராகக் களமிறங்க வேண்டும். இல்லை அதிகபட்சம் ஏழாவது வீரராகக் களமிறங்கி, இன்னிங்ஸின் இரண்டாவது பாதியை அவர் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும்”.

அதுமட்டுமல்லாமல், தோனியிடமிருந்து பெரிய பங்களிப்பு வராத பட்சத்தில் அது பல கேள்விகளை எழுப்பும் என்று ஹர்ஷா போக்ளே கூறினார்: “ஒவ்வொரு ஆண்டும் அவர் ஓய்வு பெறுவது பற்றி கேள்விகள் எழுந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த ஆண்டு அவருடைய கடைசியாக சீசனாக இருக்கலாம். எப்படி இருந்தாலும், அவர் பேட்டிங்கில் பெரிய பங்களிப்பைக் கொடுக்கவேண்டும். இல்லையென்றால் ‘இந்த அணியில் தோனியின் பங்கு என்ன?’ என்ற கேள்வி எழத் தொடங்கும்”

ஐபிஎல் 2026, சிஎஸ்கே, தோனி, சாம்சன், ருதுராஜ்

தோனி முன்பே களமிறங்குவதற்கான சாத்தியக்கூறுகள் என்ன?

2023 முதல் தோனி கடைசி ஓரிரு ஓவர்களுக்கு மட்டும் களமிறங்குவது குறைந்த பந்துகளை சந்திப்பதற்காக மட்டுமல்ல. சரியான பௌலர்களை சந்திக்கவேண்டும் என்பதும் காரணம். டெத் ஓவர்களில் எதிரணி வேகப்பந்துவீச்சுக்கு எதிராகக் களமிறங்கும்போது, அதைப் பயன்படுத்தி நல்ல விதமாக இன்னிங்ஸை முடிக்க முடியும் என்று தோனி கருதுகிறார்.

இது பல அணிகளும் பல வீரர்கள் விஷயத்தில் பயன்படுத்துவதுதான். சூப்பர் கிங்ஸ் அணியே, எதிரணி ஸ்பின்னர்களைப் பயன்படுத்தும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ள ஷிவம் துபேவை அனுப்புவார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ‘ஃபினிஷர்’ ஹிட்மெயரை ஒரு குறிப்பிட்ட ஓவருக்குப் பிறகு தான் களமிறக்கி இருக்கிறார்கள். பல போட்டிகளில் ஆர்.அஷ்வின் முன்னதாகக் களமிறக்கப்பட்டதன் காரணம் அதுவாகவே இருந்தது.

ஐபிஎல் 2026, சிஎஸ்கே, தோனி, சாம்சன், ருதுராஜ்

பட மூலாதாரம், Getty Images

தோனி விஷயத்திலும் திட்டம் இதுபோன்றதுதான். வழக்கமாக டெத் ஓவர்களில் வேகப்பந்துவீச்சாளர்கள் தான் பந்துவீசுவார்கள். சுழலுடன் ஒப்பிடுகையில் வேகப்பந்துவீச்சை தோனி சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. இது 2023, 2024 சீசன்களில் அவருக்கு சாதகமாகச் சென்றது. அந்த இரு சீசன்களில் முறையே 182.46, 220.55 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடினார் தோனி.

ஆனால், தொடர்ந்து பரிணாமம் பெற்றுக்கொண்டே வரும் ஐபிஎல் தொடரில் கடந்த சீசனில் தோனியின் இந்தத் திட்டத்துக்கு எதிரணிகள் எதிர்த் திட்டம் தீட்டியிருந்தன. வழக்கத்துக்கு மாறாக கடைசி கட்டத்துக்கு ஸ்பின்னர்களின் ஓரிரு ஓவர்களை எதிரணி கேப்டன்கள் மீதம் வைத்தனர்.

துபேவுக்கு எதிராக வேகப்பந்துவீச்சைப் பயன்படுத்துவது நல்ல தெரிவு என்பதால் மிடில் ஓவர்களில் வேகப் பந்துவீச்சாளர்களுக்குக் கூடுதல் ஓவர்களைக் கொடுக்கவும், டெத் ஓவர்களில் ஸ்பின்னர்களைப் பயன்படுத்தவும் பல அணிகள் துணிந்து முடிவு எடுத்தன. இது தோனி, சிஎஸ்கே இரு தரப்புக்குமே பாதகமாக அமைந்தது.

2025 சீசனில் இதற்குப் பல உதாரணங்கள் சொல்லலாம். ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற 3 ஓவர்களில் 35 ரன்கள் தேவைப்பட்டன. துணிந்து சுயாஷ் ஷர்மாவுக்கு 18-வது ஓவரைக் கொடுத்தார் ரஜத் பட்டிதார். ஜடேஜா, தோனி இருவரும் இணைந்து அந்த ஓவரில் எடுத்தது வெறும் 6 ரன்களே. இறுதியில் சூப்பர் கிங்ஸ் 2 ரன்களில் தோற்றது.

சேப்பாக்கத்தில் நடந்த போட்டி ஒன்றில் யுஸ்வேந்திர சஹலுக்கு 19-வது ஓவர் கொடுத்தார் ஷ்ரேயஸ் ஐயர். முதல் பந்தில் சிக்ஸர் அடித்தாலும், அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார் தோனி. அந்த ஓவரில் சிஎஸ்கே மொத்தம் 4 விக்கெட்டுகளை இழந்தது.

ஐபிஎல் 2026, சிஎஸ்கே, தோனி, சாம்சன், ருதுராஜ்

பட மூலாதாரம், Getty Images

டெல்லியில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தோனி 14-வது ஓவரிலேயே களமிறங்கினார். ராயல்ஸ் அணியின் அப்போதைய கேப்டன் சஞ்சு சாம்சன், 15 – 17 என மூன்று ஓவர்களுக்கும் ஹசரங்கா, ரியன் பராக், ஹசரங்கா என ஸ்பின்னர்களையே பயன்படுத்தினார். அந்த 3 ஓவர்களில் 10 பந்துகளை சந்தித்த தோனி எடுத்தது 11 ரன்கள் தான். அந்த இடத்தில் விக்கெட் வீழ்ச்சியைத் தடுப்பது முக்கியம் தான் என்றாலும், அவர் அந்த ஓவர்களில் ஸ்டிரைக் ரொடேட் செய்ய அவர் தடுமாறியதையும் பார்க்க முடிந்தது.

இந்த இடத்தில் தான் டி வில்லியர்ஸ், புஜாரா போன்றவர்கள் சொல்வதை கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஒருவேளை தோனி முன்பே களமிறங்கினால், எதிரணிகள் அங்கு ஸ்பின்னர்களைப் பயன்படுத்தி அவருக்கு முட்டுக்கட்டை போட்டுவிட நினைக்கும். அவர் ஸ்டிரைக் ரொடேட் செய்ய நினைத்தாலும் கூட, அவரது முழங்கால் அதற்கு ஒத்துழைக்கவேண்டும். இதுவும் தோனிக்கும் சரி சூப்பர் கிங்ஸுக்கும் சரி கூடுதல் நெருக்கடி தான்.

‘வழிகாட்டி’ தோனி

இந்த சீசனில், தோனி கடைசி கட்டத்தில் விளையாடுவது சரிதான் என்றும் ஒருசில முன்னாள் வீரர்கள் கருதுகின்றனர். பேட்டிங்கை விட ஒரு ‘வழிகாட்டி’ பாத்திரத்தில் தோனியின் பங்கு அதிகமாக இருக்கும் என்பது அவர்களின் பார்வையாக இருக்கிறது.

பிபிசி தமிழிடம் பேசிய வித்யுத், “ஒரு வீரராக களத்துக்குள்ளு உள்ளேயும் வெளியேயும் தோனியின் பங்களிப்பு மிகப் பெரியதாக இருக்கப்போகிறது. அவருக்கு 45 வயது ஆகிறது – இருந்தாலும் 10 பந்துகள் சந்தித்தால் அதில் 3 சிக்ஸர்கள் அடிக்கிறார். இதற்கு மேல் அவரிடமிருந்து என்ன வேண்டும்? ஃபீல்டிங்கின் போதும் அவர் தன்னுடைய புத்திசாலித்தனத்தால் பெரிதாக தாக்கம் ஏற்படுத்துவார். களத்துக்குள் இந்த தாக்கம் போதும்” என்று கூறினார்.

ஐபிஎல் 2026, சிஎஸ்கே, தோனி, சாம்சன், ருதுராஜ்

பட மூலாதாரம், Getty Images

களத்துக்கு வெளியேயான தோனியின் பங்களிப்பு பற்றி பேசிய வித்யுத், “களத்துக்குள் இருப்பதை விட தோனியின் தாக்கம் களத்துக்கு வெளியே தான் இம்முறை அதிகமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். பிரஷாந்த் வீர், கார்த்திக் ஷர்மா, ஆயுஷ் மாத்ரே போன்ற இளம் வீரர்கள் தோனியோடு விளையாடும் போது அது அவர்களுக்கு பெரிய வகையில் உதவும். அவர்களால் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.” என்றார்.

தோனியின் அணுகுமுறை மற்றும் அது ஏற்படுத்தும் தாக்கம் பற்றிப் பேசிய அவர், “தோனியின் தலைமையில் ஐபிஎல் ஆடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அவரைப் போல் இந்த ஆட்டத்தை புரிந்துகொள்ளக்கூடிய, கணிக்கக்கூடிய வீரர் கிடையாது. அவர் அதிகம் பேசமாட்டார். ஆனால், பேசினால் அதில் நிறைய அர்த்தம் இருக்கும். அதனால்தான், ஒரு ‘வழிகாட்டியாக’ இந்த அணியில் தோனி பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நான் நினைக்கிறேன்.

ஏனெனில் அந்த வீரர்கள் நெருக்கடியை உணர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. கடந்த 2 சீசன்களாக சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. இதற்கு முன் இப்படி நடந்ததே இல்லை. அதனால் ரசிகர்களிடமிருந்து அதிக எதிர்பார்ப்பு இருக்கும். இப்படியான சூழ்நிலையில் தோனி பெரும் உதவியாக இருப்பார்.” என்று குறிப்பிட்டார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU