Home தேசிய national tamil ஆசனவாய் புற்றுநோய்: ‘சிகிச்சை முடிந்து 6 ஆண்டாகியும், அந்த வலி என்னை இன்றும் வாட்டுகிறது’

ஆசனவாய் புற்றுநோய்: ‘சிகிச்சை முடிந்து 6 ஆண்டாகியும், அந்த வலி என்னை இன்றும் வாட்டுகிறது’

14
0

SOURCE :- BBC NEWS

ஆசனவாய் புற்றுநோய், மருத்துவம்

பட மூலாதாரம், Trish Prosser

ஆசனவாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், கதிரியக்க சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட தாங்க முடியாத வலியால், தான் இறந்து போய்விடுவோம் என நினைத்ததாக கூறுகிறார்.

57 வயதான திரிஷ் ப்ரோசெரின் தன்னுடைய பெண்ணுறுப்பின் உட்புறச் சுவர்கள் மூடிவிட்டதாகவும் ஆறு ஆண்டுகள் கழித்தும் தான் இன்னும் வலியுடன் போராடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

நான்கு குழந்தைகளின் தாயான அவர், தனக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோயின் வகை குறித்து தன்னுடைய அன்புக்குரியவர்களிடம் கூறுவதற்கு சங்கடப்படுவதாகவும் ஆசனவாய் புற்றுநோயை சுற்றி சமூக ரீதியாக தவறான புரிதல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆசனவாய் புற்றுநோய் அரிதானது, பிரிட்டனில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1,500 பேர் இதனால் பாதிக்கப்படுகின்றனர், இதில் கிட்டத்தட்ட 40-50 பேர் வட அயர்லாந்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

ஆசனவாய் புற்றுநோய், மருத்துவம்

பட மூலாதாரம், Trish Prosser

“உடலின் கீழ்ப்புற பாகங்களில் உள்ள விஷயங்கள் குறித்து பேசுவதற்கு பலரும் சங்கடப்படுகின்றனர். அவை சங்கடமாகவோ அல்லது பேசுவதற்கு சமூக கட்டுப்பாடு கொண்ட விஷயங்களாகவோ இருக்கலாம், ஆனால் அந்த சமூக கட்டுப்பாட்டை உடைக்க உதவ வேண்டும் என விரும்புகிறேன்,” திரிஷ் கூறுகிறார்.

2020-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் ஆரம்ப காலத்தில் அவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது, அதுவொரு தனிமையான பயணமாக இருந்ததாகவும் அந்த அதிர்ச்சி குறித்து தன்னால் சமீபமாகத்தான் பேச முடிந்ததாகவும் கூறுகிறார்த் அவர்.

“நான் என் தலைமுடியை இழக்காததால், நான் வெளியே சாதாரணமாக இருப்பது போன்று தெரியலாம். ஆனால், நான் உள்ளே மிக மோசமான நிலையில் இருந்தேன், மனரீதியாக மிகவும் உடைந்து போனது போன்று இருந்தேன்,” என கூறுகிறார்.

“சோர்வுதான் என்னுடைய மிக மோசமான அறிகுறி; அந்தளவுக்கு நான் சோர்வாக இருந்தேன். ஆசனவாய் பகுதியில் அரிப்பும் ஏற்பட்டது, ஆனால் மலம் கழிக்கும் வழக்கத்தில் எந்தவித மாற்றங்களும் இல்லை. உண்மையில் அந்த அறிகுறிகள் எதுவும் வழக்கமாக புற்றுநோயுடன் தொடர்புடையது அல்ல,” என்கிறார்.

ஆசனவாய் புற்றுநோய்

பட மூலாதாரம், Trish Prosser

பிரிட்டனின் மற்ற பகுதிகளை போன்றல்லாமல், வட அயர்லாந்தில் இடுப்பு வளையப் பகுதியில் (pelvic) கதிரியக்க சிகிச்சை தரக்கூடிய கிளீனிக்கோ அல்லது அதற்கென மையமோ இல்லை.

பெல்ஃபாஸ்டை சேர்ந்த திரிஷ்-ஐ பொறுத்தவரை உயிர்பிழைத்தலுக்கான சிகிச்சை என்பது மீண்டு வருவதில் முதல் கட்டம் மட்டுமே, இது பலருக்கும் பல ஆண்டுகள் எடுக்கும்.

“இந்த கதிரியக்க சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு மலக்குடல், சினைப்பை, கருப்பை வாய் மற்றும் பிறப்புறுப்பு ஆகியவற்றில் காயம் ஏற்படும் என்பதால், அது மிகவும் வலி நிறைந்ததாக இருக்கும்,” என்றார் அவர்.

“இது என்னுடைய உடலின் தனிப்பட்ட பகுதி என்பதால், நான் அனுபவிக்கும் வலி குறித்து மற்றவர்கள் அறியக்கூடாது என நான் விரும்பினேன் – எனவே யாராவது என்னிடம் அதுகுறித்து கேட்டால் நான் நன்றாக இருக்கிறேன் என்றே பதில் கூறுவேன்.”

ஆசனவாய் புற்றுநோய் என்றால் என்ன?

ஆசனவாய் புற்றுநோயானது, முதன்மையாக ஹியூமன் பாப்பிலோமா வைரஸின் (HPV) அதிக ஆபத்துள்ள திரிபுகளால் ஏற்படும் தொடர்ச்சியான தொற்றால் ஏற்படுகிறது; இது 90% வரையிலான பாதிப்புகளுக்குக் காரணமாக அமைகிறது.

ஹெச்.பி.வி. தொற்றானது மலக்குடலில் உள்ள செல்கள் இயல்புக்கு மாறாக வளர்ந்து கட்டிகளை உருவாக்கக் காரணமாகிறது.

பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் அல்லது ஏற்கெனவே வேறு வகையான மகளிர் நோயியல் புற்றுநோய் பாதிப்பு போன்றவையும் மற்ற குறிப்பிடத்தக்க ஆபத்துக் காரணிகளாகும்.

இருப்பினும், ஹெச்.பி.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மிகச் சிறிய விகிதத்தினருக்கு மட்டுமே புற்றுநோய் உருவாகும்.

ஆசனவாய் புற்றுநோய் , மருத்துவம்

பட மூலாதாரம், Trish Prosser

இடுப்புப் பகுதி கதிர்வீச்சு சிகிச்சை துணையுடன் நெருக்கத்தைப் பாதிக்குமா?

ஆசனவாய்ப் புற்றுநோய்க்கான இடுப்புப் பகுதி கதிர்வீச்சு சிகிச்சையானது, சிகிச்சை அளிக்கப்படும் பகுதிக்கு அருகில் பிறப்புறுப்பு திசுக்கள் இருப்பதால், அப்பகுதியில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

கதிர்வீச்சினால் ஏற்படும் பிறப்புறுப்பு சுருக்கம் (vaginal stenosis) என்று பொதுவாக அழைக்கப்படும் இந்த நிலையில், தழும்புத் திசுக்கள் உருவாகி, பிறப்புறுப்பை சிறிதாகவும், குறுகலாகவும், வறண்டதாகவும், நெகிழ்வுத்தன்மை குறைந்ததாகவும் ஆக்குகின்றன. இது திசுக்களில் வெட்டுக்களையும் சேதத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

சிகிச்சையின் போது இது நிகழக்கூடும் என்றாலும், சிகிச்சை முடிவடைந்த பின் மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குப் பிறகு இது பெரும்பாலும் ஒரு நீண்டகாலப் பிரச்னையாக மாறுகிறது.

“என் பிறப்புறுப்பு உண்மையில் ஒட்டிக்கொண்டிருந்தது என்பதும், அதை நான் மீண்டும் திறக்க வேண்டும் என்பதும், அதை ஒரு டைலேட்டர் (உடலின் ஒருபகுதியை விரிவடையச் செய்யும் கருவி) மூலமாகவோ அல்லது துணையுடனான நெருக்கத்தின் மூலமாகவோ செய்ய வேண்டியிருந்தது என்பதும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை – அது மிகவும் வலி நிறைந்ததாக இருந்தது,” என்று திரிஷ் கூறினார்.

“ஆனால் நீங்கள் குணமடையத் தொடங்கும் போது, ​​மீண்டும் நெருக்கமாக இருப்பதைப் பற்றி சிந்திக்கத் தொடங்குவீர்கள். அந்த காலகட்டத்தில் பொறுமையாக இருந்து எனக்கு உதவிய, வலுவான மற்றும் அன்பான ஒரு துணை எனக்குக் கிடைத்தது என் அதிர்ஷ்டம்,” என்று திரிஷ் கூறினார்.

ஆசனவாய் புற்றுநோய் , மருத்துவம்

பட மூலாதாரம், Trish Prosser

சிகிச்சைக்கு அப்பாற்பட்ட கவனிப்பு

மிகவும் குறைவாகப் பேசப்படும் புற்றுநோய்களில் ஒன்றாகக் கருதப்படும் இது குறித்து ஒரு உரையாடலைத் தொடங்க விரும்புவதாக, ரேடியோதெரபி யுகே அமைப்பும், பெல்ஃபாஸ்ட் சுகாதார மற்றும் சமூகப் பராமரிப்பு அறக்கட்டளையின் இரைப்பை குடல் மருத்துவப் புற்றுநோயியல் குழுவும் தெரிவித்துள்ளன.

புற்றுநோயின் போதும் அதற்குப் பின்னரும் ஒரு முழுமையான சிகிச்சை வழிமுறையை உருவாக்குவதே தொண்டு நிறுவனங்கள் மற்றும் மருத்துவர்களின் நோக்கமாகும்.

ரேடியோதெரபி யுகே அமைப்பைச் சேர்ந்த சாரா குயின்லான், “புற்றுநோயின் பிற்கால விளைவுகள், சிகிச்சை முடிந்த பல மாதங்கள் அல்லது பல ஆண்டுகளுக்குப் பிறகும் வெளிப்படலாம். இது ஒருவரின் வாழ்க்கைத் தரம், சுதந்திரம் மற்றும் நல்வாழ்வைக் கணிசமாகப் பாதிக்கக்கூடும்.”

“சிகிச்சை முடிந்த பிறகு நோயாளிகள் புறக்கணிக்கப்பட்டதாக உணரக்கூடாது என்பதற்காக, நல்ல வளங்களைக் கொண்ட, பல்துறை சார்ந்த பிற்காலப் பாதிப்புகளுக்கான சேவை ஒன்றை நாங்கள் விரும்புகிறோம்.”

அதேபோல், இடுப்புப் பகுதி கதிர்வீச்சு சிகிச்சையின் பின்விளைவுகளைக் கையாள்வதற்காக ஒரு கிளீனிக் அமைக்க வேண்டும் என திரிஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

“எனது சிகிச்சையின் போது, ​​என் குடும்ப மருத்துவர் எனக்கு உயிர்நாடியாக இருந்தார்; அவர் அன்பாகவும் உதவத் தயாராகவும் இருந்தார். ஆனால் சிகிச்சை முடிந்த பிறகு, இடுப்புப் பகுதி கதிர்வீச்சு சிகிச்சையுடன் தொடர்புடைய நீண்டகால பக்கவிளைவுகளின் சிக்கலான தன்மையைச் சமாளிக்கும் வகையில் இந்த மருத்துவ அமைப்பு கட்டமைக்கப்படவில்லை என்பது வேதனையுடன் தெளிவானது. அதனால், எல்லாவற்றையும் நான் தனியாகவே சமாளிக்க வேண்டியிருந்தது,” என்று திரிஷ் கூறினார்.

சிறுநீர்க் கசிவுக்கான பேட்கள், டயப்பர்கள் மற்றும் பிறப்புறுப்பு திசுக்களை நீட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட டைலேட்டர்கள் ஆகியவற்றைச் சமாளிப்பது எல்லாம் “கடினமாக” இருந்தது என்று அவர் கூறினார்.

“நாள்பட்ட மலச்சிக்கல் மற்றும் உடல் எடை அதிகரிப்பால் என் வயிறு மிகவும் வீங்கிவிட்டதால், நான் கண்ணாடியில் பார்த்தபோது, ​​எனக்கே அடையாளம் தெரியாத ஒருவரைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்று இருந்தது,” என்று திரிஷ் கூறினார்.

உடல் மற்றும் மன ரீதியிலான காயங்கள்

வடக்கு அயர்லாந்தில் முதல் முறையாக, நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து, ஆசனவாய் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிகழ்வை அண்மையில் நடத்தினர்.

பெல்ஃபாஸ்ட் புற்றுநோய் மையத்தின் மருத்துவ செவிலி நிபுணரான அலிசன் இர்வின், சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகளைத் தொடர்புகொள்ளும் முதல் நபராகப் பொதுவாக இருக்கிறார்.

“ஆசனவாய் புற்றுநோய் குறித்து தங்கள் குடும்பத்தினரிடமும், வேலை செய்யும் நிறுவனங்களிலும் கூறுவது உட்பட, அது தொடர்பான சங்கடங்களை உடைப்பதற்கான வார்த்தைகளையும் கலைச்சொற்களையும் அவர்களுக்கு வழங்குவதே இதன் நோக்கம்,” என்று அவர் கூறினார்.

“நோயாளிகள் எங்களிடம் மனம் திறந்து தங்கள் உடலைப் பற்றிய அனைத்தையும் சொல்ல முடியும் என்று உணர்வது மிகவும் முக்கியம்; நான் இதையெல்லாம் முன்பே கேட்டிருக்கிறேன், எனவே நோயாளியுடனான எனது உறவு முக்கியமானது,” என்று இர்வின் கூறினார்.

பெல்ஃபாஸ்ட் ஹெல்த் டிரஸ்ட்டின் மருத்துவ புற்றுநோய் ஆலோசகர் டாக்டர் கேத்தரின் ஹன்னா

பெல்ஃபாஸ்ட் ஹெல்த் டிரஸ்ட்டின் மருத்துவ புற்றுநோய் ஆலோசகரான டாக்டர் கேத்தரின் ஹன்னா, ஆசனவாய் புற்றுநோய் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், கதிர்வீச்சு சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம் என்று கூறினார்.

“இது ஒரு அரிதான புற்றுநோய், மேலும் பாதிக்கப்பட்ட பகுதியில் கட்டி, அரிப்பு மற்றும் ரத்தப்போக்கு ஏற்படுகிறதா என்பதை மக்கள் கவனிக்க வேண்டும்.

“ஒருவர் தங்கள் உடலில் ஏதேனும் வித்தியாசத்தை உணர்ந்தால், அவர்கள் அதை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU