Home தேசிய national tamil பிரபஞ்சத்தின் முடிவு எவ்வாறு இருக்கும்? மூன்று சாத்தியங்கள்

பிரபஞ்சத்தின் முடிவு எவ்வாறு இருக்கும்? மூன்று சாத்தியங்கள்

9
0

SOURCE :- BBC NEWS

பிரபஞ்சத்தின் முடிவு எவ்வாறு இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images

பிரபஞ்சத்தின் முடிவு பல்வேறு வழிகளில் நிகழக்கூடும். அதுவொரு மெதுவான, குளிர்ந்த, அமைதியான முடிவாக இருக்கலாம். அல்லது அது திடீரெனவும் வன்முறையானதாகவும் நிகழலாம். சிலர், அதுவொரு புதிய தொடக்கத்திற்கு வழிவகுக்கும் முடிவாக இருக்கக்கூடும் எனவும் கருதுகின்றனர்.

எதிர்காலத்தில் ஒருவேளை பிரபஞ்சம் அதன் முடிவைச் சந்தித்தால், அது எவ்வாறு அதன் முடிவைச் சந்திக்கக்கூடும் என்பது குறித்து விஞ்ஞானிகள் கொண்டுள்ள 3 முக்கியக் கருதுகோள்களை இங்கு பார்ப்போம்.

பிரபஞ்சத்தின் எதிர்காலம் அறிவியலில் உள்ள மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாக இன்றளவும் உள்ளது. நிபுணர்களே கூட தங்களிடம் இன்னும் தெளிவான பதில்கள் இல்லையென்று கூறுகின்றனர்.

பிரபஞ்சம் எவ்வாறு அழிவைச் சந்திக்கும் என்பதைப் புரிந்துகொள்ள, அதன் தொடக்கம் எவ்வாறானது என்பதை நாம் முதலில் அறிய வேண்டும்.

எல்லாவற்றுக்குமான தொடக்கம்

பிரபஞ்சம் என்பது அனைத்தையும் குறிக்கிறது. நாசாவின் கூற்றுப்படி, அது அனைத்து வெளி, பருப்பொருள் (எடையுள்ள மற்றும் இடத்தை ஆக்கிரமிக்கும் எதுவும்), ஆற்றல் மற்றும் காலம் என எல்லாவற்றையும் உள்ளடக்கியது.

பெருவெடிப்புக் கோட்பாடு எனப்படும் ஒன்றில் இருந்து பிரபஞ்சம் தொடங்கியதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

இந்தக் கோட்பாட்டின்படி, சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பிரபஞ்சம் மிகவும் சூடாகவும் நெருக்கமாகவும் இருந்தது. பின்னர் அது விரிவடையத் தொடங்கியது. அன்று முதல் அது வளர்ந்துகொண்டே இருக்கிறது.

பிரபஞ்சம் நீண்ட காலமாக விரிவடைந்தபோது, விண்மீன் திரள்கள், நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவை மெதுவாக உருவாயின.

இன்றும்கூட, பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் உண்மை என்னவெனில், அதைப் பற்றி நமக்கு இன்னும் மிகக் குறைவாகவே தெரியும்.

பிரேசிலில் உள்ள சாண்டா கத்தாரினா ஃபெடரல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இயற்பியலாளர் அலெக்சாண்டர் ஸாபோட், “நமது பணி என்பது ஒரு நதியின் வழியே செல்லும் அனைத்து நீர் மூலக்கூறுகளையும் முழுமையாக மதிப்பீடு செய்யாமல், அந்த நதியின் நடத்தையையும் ஓட்டத்தையும் மட்டுமே கவனிப்பதைப் போன்றது.” என்று விளக்குகிறார்.

அதாவது, பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதன் பெரிய சித்திரத்தை விஞ்ஞானிகளால் காண முடிகிறது. ஆனால், அதனுள்ளே இருக்கும் அனைத்து சிறிய விவரங்களையும் அவர்களால் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

பிரபஞ்சம் அதன் அழிவை நெருங்கப் போவது எப்போது? எப்படி?

பட மூலாதாரம், FlashMovie via GettyImages

பெருங்குளிர் உறைவு

பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடைந்தால், ஆற்றல் மென்மேலும் பரவும். இதன் காரணமாக, விண்மீன் திரள்கள் மெதுவாக மேலும் விலகிச் செல்லும். காலப்போக்கில் புதிய நட்சத்திரங்கள் உருவாவது நின்றுவிடும். மேலும், ஏற்கெனவே இருக்கும் நட்சத்திரங்கள் மெதுவாக இறந்துவிடும் என்று ராயல் அப்சர்வேட்டரி கிரீன்விச் விளக்குகிறது.

டிரில்லியன்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபஞ்சம் இருண்டு, குளிராகி, கிட்டத்தட்ட வெறுமையாகிவிடும். இந்தக் கருத்து பெருங்குளிர் உறைவு (Big Freeze) என்று அழைக்கப்படுகிறது. இது வெப்ப மரணம் எனவும் அறியப்படுகிறது.

இதன் பொருள், இறுதியில், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அனைத்து இடங்களிலும் ஒரே வெப்பநிலையை அடையும் என்பதாகும். அது நிகழும்போது, அதன் பிறகு பெரிதாக எதுவும் நடக்காது, எல்லாம் அசைவற்று ஸ்தம்பித்துவிடும் என்று ராயல் இன்ஸ்டிடியூஷன் விவரிக்கிறது.

பிரேசிலில் உள்ள சாவ் பாலோ பல்கலைக் கழகத்தின் இயற்பியல் நிறுவனத்தைச் சேர்ந்த இணை பேராசிரியர் ரவுல் அப்ராமோ, “பிரபஞ்சம் மென்மேலும் வெறுமையாகவும், குளிராகவும், பெரிதாகவும் மாறும் என்பதையே அனைத்தும் சுட்டிக்காட்டுகின்றன” என்று விளக்குகிறார்.

அதாவது, “விண்மீன் திரள்கள் மேலும் மேலும் விலகிச் செல்லும், நட்சத்திரங்கள் வயதாகி இறந்துவிடும். இதுவோர் இறுதி நிலை. இதில் பிரபஞ்சம் அடிப்படையில் ஒரு மயானமாக மாறும்” என்கிறார் அவர்.

எளிதாகக் கூறுவதெனில், பிரபஞ்சம் மெதுவாக மறைந்து, கிட்டத்தட்ட எதுவுமே மிஞ்சாத ஒரு குளிர்ந்த, இருண்ட, அமைதியான இடமாக மாறிவிடும்.

பிரபஞ்சம் அதன் அழிவை நெருங்கப் போவது எப்போது? எப்படி?

பட மூலாதாரம், Arctic Images via Getty Images

பெரும்பிளவு

பெருங்குளிர் உறைவு என்ற கருத்து நம்பும்படியாக இல்லையெனில், மற்றொரு கோட்பாடு உள்ளது. அது மிகவும் தீவிரமானது.

இந்தக் கருதுகோள், பிரபஞ்சம் வெறுமனே விரிவடைவது மட்டுமின்றி, இருண்ட ஆற்றல் எனப்படும் ஒன்றின் காரணமாக மென்மேலும் வேகமாக விரிவடைந்து கொண்டிருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டது. இது தொடர்ந்து நடந்தால், இந்த விரிவாக்கம் மிகவும் வலுவாகி, ஈர்ப்பு விசையால்கூட இனி பொருட்களை ஒன்றாக வைத்திருக்க முடியாத நிலை உருவாகும் என்று ராயல் மியூசியம்ஸ் கிரீன்விச் கூறுகிறது.

இந்தக் கோட்பாடு பெரும்பிளவு என்று அழைக்கப்படுகிறது.

ஈர்ப்பு விசை என்பது பொருட்களை ஒன்றாக இழுக்கும் ஒரு விசையாகும். நாசாவின் கூற்றுப்படி, இது கோள்கள் சூரியனை சுற்றி வர வைக்கிறது. பூமியை ஒன்றாக வைத்திருக்கிறது. நாம் விண்வெளியில் அதன் போக்கில் மிதந்து செல்வதைத் தடுக்கிறது. இது நட்சத்திரங்கள், சூரிய மண்டலங்கள், விண்மீன் திரள்களை ஒன்றாக கட்டி வைத்திருக்கிறது.

இருண்ட ஆற்றல் இதற்கு நேர் எதிராகச் செயல்படுகிறது. அது பொருட்களை வெளியே தள்ளிவிட்டுப் பிரிக்கிறது என்கிறார் அலெக்சாண்டர் ஸாபோட்.

“இருண்ட ஆற்றல் எதனால் ஆனது என்று நமக்கு இன்னும் தெரியவில்லை. ஆனால், அது ஈர்ப்பு விசைக்கு எதிரானதைப் போல, விலக்கு விசையை ஏற்படுத்துகிறது என்பது அறியப்பட்டுள்ளது” என்கிறார் அவர்.

நாசாவின் கூற்றுப்படி, இருண்ட ஆற்றல் பிரபஞ்சத்தை மென்மேலும் விரிவடையச் செய்கிறது. சுமார் 68.3% முதல் 70% வரையிலான பிரபஞ்சம் இருண்ட ஆற்றலால் ஆனது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

கோள்கள், விண்மீன் திரள்கள் போன்ற சிறிய மட்டங்களில் ஈர்ப்பு விசை வலிமையாக இருப்பதால், இது நீண்டகாலமாக கண்டுபிடிக்கப்படாமலே இருந்தது. பின்னர் 1990களின் பிற்பகுதியில்தான் இது கண்டுபிடிக்கப்பட்டது. இருண்ட ஆற்றல் மிகப்பெரிய விண்மீன் திரள்களுக்கு இடையிலான அளவுகளில் மட்டுமே கவனித்தக்கதாக இருக்கிறது.

“பிரபஞ்சம் எவ்வளவு அதிகமாக வளர்ந்து அதன் கன அளவைப் பெறுகிறதோ, அந்த அளவுக்கு இருண்ட ஆற்றலுடன் தொடர்புடைய விலக்கு விசை அதிகரிக்கிறது,” என்று விளக்குகிறார் ஸாபோட்.

“பிரபஞ்சத்தின் அளவு அதிகரிக்கும்போது, இருண்ட ஆற்றல் சிறிய அளவுகளில் அதிக முக்கியத்துவம் பெறக்கூடும்.”

இருண்ட ஆற்றல் நிலையற்றதாக மாறினால், அதுவொரு பெரும்பிளவுக்கு வழிவகுக்கும். இந்தச் சூழ்நிலையில், பிரபஞ்சம் மிகத் தீவிரமாக விரிவடையும். அதன் விளைவாக, நட்சத்திரங்கள், கோள்கள், அவ்வளவு ஏன் அணுக்கள்கூட, நாசா விவரிப்பது போல, முழுவதுமாகப் பிரிக்கப்பட்டுவிடும் அல்லது ‘ஒட்டாமல் விலகிவிடும்.’

“அதனால்தான் இந்தக் கோட்பாட்டிற்கான ஆங்கிலப் பெயர் இரட்டை அர்த்தம் கொண்டுள்ளது. இது ‘பிக் ரிப்’ என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் ஒரு பெரிய பிளவு அல்லது கிழிவு. ஆனால், ரிப் என்பது ரெஸ்ட் இன் பீஸ் (rest in peace) என்பதன் சுருக்கமும் ஆகும்” என்று அலெக்சாண்டர் ஸாபோட் விவரிக்கிறார்.

எளிமையாகக் கூறுவதெனில், ஒரு நாள் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் முற்றிலுமாகக் கிழித்து எறியப்படலாம் என்று இந்தக் கோட்பாடு கூறுகிறது.

பிரபஞ்சம் அதன் அழிவை நெருங்கப் போவது எப்போது? எப்படி?

பட மூலாதாரம், Fotograzia via Getty Images

பெருஞ்சுருக்கம்

பிரபஞ்சத்திற்கு இன்னும் வியத்தகு முடிவுகளைத் தரக்கூடிய பிற சாத்தியக்கூறுகளும் உள்ளன.

இருண்ட ஆற்றல் வலுவிழந்து அதன் விளைவை மாற்றினால், ஈர்ப்பு விசை எல்லாவற்றையும் மீண்டும் ஒன்றாக இழுக்கத் தொடங்கும். இது பிரபஞ்சத்தை ஓர் ஒற்றைப் புள்ளியாகச் சுருங்கச் செய்யலாம். நாசாவின் கூற்றுப்படி, இந்தக் கருத்து ‘பெருஞ்சுருக்கம்’ என்று அழைக்கப்படுகிறது.

மற்றொரு கருத்து ‘பெரும் மீள்வு’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோட்பாட்டில், பிரபஞ்சம் மீண்டும் ஓர் ஒற்றைப் புள்ளியாகச் சுருங்கி, பின்னர் மற்றொரு பெருவெடிப்புடன் மீண்டும் தொடங்குகிறது. இதன் பொருள், பிரபஞ்சம் ஒரு முடிவற்ற சுழற்சியில் மீண்டும் மீண்டும் விரிவடைந்து சுருங்கிக்கொண்டே இருக்கலாம் என்பதாகும்.

“ஆனால், இது முற்றிலும் விசித்திரமான ஒரு மாதிரி. இதற்கு நம்மிடம் எவ்வித தரவுகளோ ஆதாரங்களோ இல்லை” என்கிறார் ரவுல் அப்ராமோ.

அப்படியானால், பிரபஞ்சம் எப்போது அழியக்கூடும் என்பதை விஞ்ஞானிகளால் கணிக்க முடியுமா?

“இல்லை, எதிர்காலத்தில் ஒரு பெரிய பிளவோ அல்லது பெரும் சரிவோ ஏற்படும் என்பதற்கு நம்மிடம் எந்த அறிகுறியும் இல்லை,” என்கிறார் அப்ராமோ.

“இந்த முடிவைப் பற்றிய சில மதிப்பீடுகள் டிரில்லியன்கணக்கான ஆண்டுகளைக் குறிப்பிடுகின்றன. மற்றவை அதைவிட இன்னும் நீண்டகால அளவுகளைப் பற்றி ஊகிக்கின்றன” என்கிறார் அலெக்சாண்டர் ஸாபோட்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

அது எவ்வளவு காலம் என்பதைப் புரிந்துகொள்ள, பிரபஞ்சம் சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். ஒரு டிரில்லியன் ஆண்டுகளை எட்டுவதற்கு மட்டுமே இன்னும் சுமார் 986.2 பில்லியன் ஆண்டுகள் ஆகும்.

நாம் நினைத்ததைவிட பிரபஞ்சம் வேகமாக மங்கி வருவதாக ராட்பவுட் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. எஞ்சியிருக்கும் கடைசி நட்சத்திரங்கள் மறைவதற்கு சுமார் 10⁷⁸ ஆண்டுகள் (அதாவது 1-ஐ தொடர்ந்து 78 பூஜ்ஜியங்கள்) ஆகலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதைக் காண மனித இனம் உயிர்ப்புடன் இருக்காது. பூமிகூட அதற்கும் மிக முன்னதாகவே அழிந்துவிடும். சுமார் ஆறு பில்லியன் ஆண்டுகளில், சூரியன் ஒரு ரெட் ஜெயன்டாக வளர்ந்து அருகிலுள்ள கோள்களை அழிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“உண்மை என்னவெனில், அண்டவியல் பற்றி நமக்கு இன்னும் மிகக் குறைவாகவே தெரியும்” என்கிறார் அப்ராமோ.

பிரபஞ்சத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளவோ அல்லது அளவிடவோ விஞ்ஞானிகளிடம் இன்னும் போதுமான கருவிகள் இல்லை என்று அவர் விளக்குகிறார்.

இதன் காரணமாக, பல கருத்துகள் இன்னும் ஆராயப்பட்டு வருகின்றன. ஒரேயொரு பிரபஞ்சம் மட்டுமே இல்லை, பல பிரபஞ்சங்கள் இருக்கக்கூடும் என்ற கருத்தான பல்பிரபஞ்சம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU