Home தேசிய national tamil எல்பிஜி நெருக்கடியை தீர்க்க மண்ணெண்ணெய் – முக்கிய சவால் என்ன?

எல்பிஜி நெருக்கடியை தீர்க்க மண்ணெண்ணெய் – முக்கிய சவால் என்ன?

25
0

SOURCE :- BBC NEWS

எல்பிஜி

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில், இரான் மற்றும் இஸ்ரேல் – அமெரிக்கா இடையிலான போரின் தாக்கம் இப்போது மறைக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்படும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மத்திய அரசும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) தட்டுப்பாடு இருப்பதை ஒப்புக்கொள்கிறது. ஆனால் அதே நேரத்தில், மக்கள் பீதியடைந்து முன்கூட்டியே சிலிண்டர்களை முன்பதிவு செய்வதால்தான் இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.

இதற்கிடையில், எல்பிஜி தட்டுப்பாட்டைச் சமாளிக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறுகிறது. அரசின் கூற்றுப்படி, சமையல் மற்றும் விளக்கு ஏற்றுவதற்கு 48,000 கிலோ லிட்டருக்கும் அதிகமான மண்ணெண்ணெய் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் கேள்வி என்னவென்றால், இந்த மண்ணெண்ணெய் மக்களை எப்படிச் சென்றடையும்? 2020-ஆம் ஆண்டில் மண்ணெண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்ட பிறகு, அதன் விநியோகக் கட்டமைப்பு முற்றிலும் அழிந்துவிட்டது.

இது குறித்து மண்ணெண்ணெய் விநியோகத்தில் தொடர்புடைய சில பழைய வியாபாரிகள் பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், “அந்த கட்டமைப்பை மீண்டும் உருவாக்குவது எளிதல்ல” என்றும், “இந்த குறுகிய கால ஏற்பாட்டுடன் யார் இணைய விரும்புவார்கள்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எனினும், மாவட்டங்களில் அவற்றை விநியோகிக்க ஒன்று அல்லது இரண்டு இடங்களைக் கண்டறியுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இந்த மண்ணெண்ணெய் வழங்கப்படும் என்று ஓர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலை என்ன?

பட மூலாதாரம், Arshad Afzaal Khan

தற்போதைய நிலை என்ன?

அரசு இத்தனை முயற்சிகளை மேற்கொண்டாலும், இந்த மண்ணெண்ணெய் மக்களிடம் எவ்வாறு சேரும் என்ற பெரிய கேள்வி இப்போதும் நீடிக்கிறது.

தற்போது செயல்படாமல் இருக்கும் உத்தரப்பிரதேச மண்ணெண்ணெய் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சந்திர சேகர் சிங் கூறுகையில், “சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைச் சமாளிக்க மண்ணெண்ணெயை அரசு எவ்வாறு வழங்கும்? ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எந்தவொரு முறையான விடைபெறுதலும் இன்றி கலைக்கப்பட்ட ஒரு விநியோக முறையை மீண்டும் உருவாக்குவது சாத்தியமற்றது என்பது கொள்கைகளை வகுக்கும் அதிகாரிகளுக்குத் தெரியாதா?” எனக் கேள்வி எழுப்பினார்.

மண்ணெண்ணெய் என்பது அமைச்சகம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களால் நியமிக்கப்படும் வியாபாரிகளின் சங்கிலி மூலம் விநியோகிக்கப்பட்டு வந்தது.

மண்ணெண்ணெய் விநியோகத்திற்காக வியாபாரிகள் தீயணைப்புத் துறை சான்றிதழ், மாவட்ட ஆட்சியரின் தடையின்மை சான்றிதழ் (NOC), தொழிலாளர் உரிமம் எனப் பலவற்றை வைத்திருக்க வேண்டும். மேலும், மண்ணெண்ணெயைச் சேமிக்க நிலத்தடி டாங்கிகள் மற்றும் அளவீட்டுத் துறையால் சீல் வைக்கப்பட்ட இயந்திரங்கள் தேவை.

கடந்த ஆறு ஆண்டுகளில் இந்த உரிமங்கள் அனைத்தும் காலாவதியாகிவிட்டன. பராமரிப்பு இல்லாததால் டாங்கிகளும் இயந்திரங்களும் சிதிலமடைந்துள்ளன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், எத்தனை முன்னாள் டீலர்கள் இந்த மண்ணெண்ணெய் விநியோக முறையில் சேர விரும்புவார்கள் என்கிற கேள்வியும் உள்ளது.

எல்பிஜி

பட மூலாதாரம், Getty Images

எல்பிஜி

பட மூலாதாரம், Arshad Afzaal Khan

கள யதார்த்தம் என்ன?

மேற்கு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் டீலர் புவேஷ் சந்திரா , “அரசு இரண்டு மூன்று மாதங்களுக்கு மட்டுமே இந்த தற்காலிக ஏற்பாட்டைச் செய்துள்ளது. எவ்வித லாபமும் இல்லாத இந்த அமைப்பில் யார் இணைய முன்வருவார்கள்?” என்கிறார்.

பீகாரைச் சேர்ந்த முன்னாள் மண்ணெண்ணெய் வியாபாரி மயங்க் குப்தா கூறுகையில், “நிலத்தடி டாங்கிகளைச் சரிசெய்யவே லட்சக்கணக்கில் செலவாகும். எண்ணெய் நிறுவனத்திடமிருந்து எண்ணெயைப் பெற மேலும் 10 முதல் 12 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும். எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை.”

“இத்தகைய செயற்கையான முடிவில் ஆர்வம் காட்டும் வியாபாரிகளை நீங்கள் பார்க்க முடியாது. கள யதார்த்தம் தெரியாத குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்திருக்கும் அதிகாரிகளால் இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.” என்கிறார்.

இதனால் வியாபாரிகள், விநியோகஸ்தர்கள் மட்டுமல்ல நுகர்வோரும் அரசாங்கத்தின் நகர்வை கேள்வி எழுப்புகின்றனர். மண்ணெண்ணெய் பெறுவதால் கிடைக்கும் பலன் என்ன என்பது பற்றி அவர்களும் குழப்பத்தில் உள்ளனர்.

லக்னௌவைச் சேர்ந்த லக்ஷ்மி நாராயண், “இப்போது மண்ணெண்ணெய் அடுப்புகளோ அல்லது விளக்குகளோ சந்தையிலும் இல்லை, வீடுகளிலும் இல்லை. அப்படி இருக்கும்போது இந்த எரிபொருளை மக்கள் எப்படிப் பயன்படுத்துவார்கள்?” என்றார்.

எல்பிஜி

பட மூலாதாரம், @PIB_India

அரசின் வாதம் என்ன?

மத்திய கிழக்கின் தற்போதைய நிலை குறித்து சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பெட்ரோலிய அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா கூறுகையில், “புவிசார் அரசியல் சூழலைக் கருத்தில் கொண் எல்பிஜி விநியோகம் கவலைக்குரியதாகவே உள்ளது. 75 லட்சமாக இருந்த முன்பதிவு ஒரே 88 லட்சமாக உயர்ந்துள்ளது. இது முழுக்க முழுக்க பீதியால் செய்யப்படும் முன்பதிவு,” என்றார்.

முன்னதாக வெள்ளிக்கிழமை அவர் பேசுகையில், “வழக்கமான ஒதுக்கீட்டைத் தவிர கூடுதலாக 48,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், ரேஷன் கடைகள் மூலம் இவை விநியோகிக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் 2026 மார்ச் 12 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, 2025-26 காலகட்டத்திற்காக இந்த தற்காலிக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உலகளாவிய எரிசக்தி விநியோகப் பாதிப்பைக் குறைக்க, சமையல் மற்றும் ஒளி தேவைகளுக்காக மாநிலங்களுக்கு இந்த உதவி வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டை 45 நாட்களுக்குள் விநியோகிப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU