Home Latest news tamil சமீபத்திய செய்தி ஜப்பானின் நாகசாகி நகரில் இந்திய மத போதகருடன் 25 பேர் சிலுவையில் அறையப்பட்டது ஏன்?

ஜப்பானின் நாகசாகி நகரில் இந்திய மத போதகருடன் 25 பேர் சிலுவையில் அறையப்பட்டது ஏன்?

2
0

SOURCE :- BBC NEWS

கொன்சால்வ்ஸ் கார்சியா: ஜப்பானில் சிலுவையில் அறையப்பட்ட இந்திய மதபோதகர்

பட மூலாதாரம், SHARAD BADHE/BBC

இந்தச் சம்பவம் நடந்து 400 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. போர்த்துகீசியர்கள் இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் கால் பதித்துப் பல ஆண்டுகள் கடந்திருந்தன.

கடந்த 1498இல் வாஸ்கோடகாமா கோழிக்கோடு வந்த பிறகு, போர்த்துகீசியர்கள் வர்த்தகம் மற்றும் மத பிரசாரத்திற்கான முக்கியமான இடங்களை இந்திய நிலப்பரப்பில் தேடத் தொடங்கினர்.

கடந்த 1510இல் அல்போன்சோ டி அல்புகெர்க் கோவாவுக்கு வந்து வடக்குப் பகுதிகளின் மீது தனது கவனத்தைத் திருப்பினார்.

விரைவில் போர்த்துகீசியர்களின் விருப்பம் நிறைவேறியது. 1513ஆம் ஆண்டில், போர்த்துகீசியர்கள் ரெவ்தண்டாவில் ஒரு சிறிய கோட்டையைக் கட்ட அனுமதிக்கப்பட்டனர். பிறகு அவர்கள் தானே, கல்யாண், தாராபூர் போன்ற கிராமங்களின் மீது தங்கள் பார்வையைப் பதித்தனர். அவர்களின் பார்வை அடுத்தபடியாக வசாய் நகரில் ஏற்கெனவே இருந்த சிறிய கோட்டை தளத்தில் பதிந்தது.

குறுகிய காலகட்டத்தில், 1533-இல் போர்த்துகீசியர்கள் வசாய் கோட்டைப் பகுதியைக் கைப்பற்றி, அடுத்த 200 ஆண்டுகளுக்குத் தங்கள் காலடியை அங்கு உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டனர்.

இப்படியாக வேரூன்றிய அவர்கள் மகாராஷ்டிராவின் வரலாற்றையும் நிலவியலையும் மாற்றியது மட்டுமின்றி, அதன் மதம் மற்றும் கலாசாரத்திலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தினர்.

பன்முக கலாசாரத்தைக் கொண்ட மகாராஷ்டிராவின் அடையாளத்தில் மற்றுமொரு புதிய மதம், கலாசாரம் மற்றும் மொழி சேர்க்கப்பட்டது. போர், மிரட்டல், வற்புறுத்தல் ஆகிய நிகழ்வுகளுக்கும் இதில் பங்கு இருந்தது என்பதை மறுக்க முடியாது.

வசாய் முக்கியத்துவம் பெற்றது ஏன்?

வசாய் மும்பைக்கு வடக்கே சுமார் 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு நகரம். ஒரு காலத்தில் தானே மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்நகரம், இப்போது பால்கர் மாவட்டத்தில் ஒரு முக்கியமான நகரமாக உள்ளது. இது பிரிட்டிஷ் காலத்தில் பேசின் என்றும் அழைக்கப்பட்டது.

போர்த்துகீசியர்கள் இங்கு எவ்வாறு தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர் என்பதை அறிந்துகொள்வது அவசியம். வட இந்தியாவில் போர்த்துகீசிய மாகாணத்தின் பெயர் ப்ரோவின்சியா டோ நோர்டே.

வடக்கில் டாமனில் இருந்து தெற்கில் கரஞ்சா வரை சுமார் 200கி.மீ பரப்பளவு கொண்ட ஒரு பகுதி இதில் அடங்கும். இதில் டையு தீவு, சவுல் ஆகியவையும் அடங்கும்.

வசாய் அவர்களுடைய மாகாணத்தின் தலைநகராக இருந்தது. குஜராத் சுல்தான், முகலாயர்களை எதிர்த்துப் போராட உதவி கோரி, வசாய் நகரின் கட்டுப்பாட்டை போர்த்துகீசியர்களுக்கு வழங்கினார். இங்கு போர்த்துகீசியர்கள் நீண்டகாலம் தங்கள் கட்டுப்பாட்டைத் தக்கவைத்தனர்.

வசாய் கோட்டை கைப்பற்றப்பட்ட ஆண்டைக் குறிக்கும் கல்வெட்டு

பட மூலாதாரம், SHARAD BADHE/BBC

இருப்பினும், அறிஞர் ஸ்ரீதத்தா ரவுத் கூற்றுப்படி, இந்தக் கோட்டை குஜராத் சுல்தானுடன் நேரடித் தொடர்பைக் கொண்டிருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை.

“இந்தக் கோட்டை 12ஆம் நூற்றாண்டில் போங்காலே மன்னர்களால் கட்டப்பட்டதற்கான குறிப்புகளும் ஆதாரங்களும் உள்ளன. அந்த நேரத்தில், ஒரு கோட்டையும் சில கட்டுமானங்களும் கட்டப்பட்டன. அவை இன்றும் காணப்படுகின்றன” என்கிறார் அவர்.

போர்த்துகீசியர் காலத்தில் குஜராத் சுல்தானகத்தின் போது செய்யப்பட்ட மிதமான கட்டுமானப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. கோட்டைக்கு உள்ளேயும் வெளியேயும் பெரிய அளவிலான கட்டுமானப் பணிகள் புதிய தோற்றத்தைக் கொடுக்கத் தொடங்கின.

போர்த்துகீசியர்கள் விரைவாக கோட்டைகள், தேவாலயங்கள், கட்டடங்கள், குடியிருப்புகள் மற்றும் வெளிப்புறத்தில் கோபுரங்களைக் கொண்ட ஒரு பெரிய கோட்டையை கட்டத் தொடங்கினர்.

வசாய் கோட்டைப் பிரதேசம் ஒரு தீவு போன்றது. மேற்கில் அரபிக் கடல் உள்ளது. தெற்கிலும் தென்மேற்கிலும் உல்ஹாஸ் நதி உள்ளது. இது வசாய் விரிகுடா என்றும் அழைக்கப்படுகிறது. இப்படியாக, போர்த்துகீசியர்கள் இந்தக் கோட்டையில் ஒரு நகரம் போன்ற அமைப்பை உருவாக்கினர். அதாவது நிலத்துடன் இணைக்கப்பட்ட, ஆனால் நீரால் சூழப்பட்ட ஒரு நகரம்.

அவர்கள் 1536 முதல் 1739 வரை கோட்டையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருந்தனர். அதன் பிறகு அது மராட்டிய பேரரசில் இணைக்கப்பட்டது.

வசாய் கோட்டையின் பழைய வரைபடம்

பட மூலாதாரம், SHRIDUTT RAUT

வசாய் கோட்டை

கடந்த 1536ஆம் ஆண்டு போர்த்துகீசியர்கள் இந்த நகரத்தை நிறுவி இங்குள்ள அனைத்து கட்டடங்களையும் கட்டினார்கள். மகாராஷ்டிராவில் வசிப்போருக்கும், இந்தியாவில் கோட்டைகளை விரும்பும் நபர்களுக்கும் வசாய் என்ற பெயர் தெரியாமல் இருப்பது அரிது. மகாராஷ்டிராவின் கடற்கரையில் அமைந்துள்ள வசாய் கோட்டை, கடந்த நானூறு ஆண்டுக்கால வரலாற்றுக்கு சாட்சியாக விளங்குகிறது.

போர்த்துகீசியர்கள் வர்த்தகத்தின் பெயரால் இந்தியாவில் எவ்வளவு வலுவாகக் காலூன்றினார்கள் என்பதற்கும், மராட்டிய அரசாங்கம் அவர்களை அங்கிருந்து வேருடன் பிடுங்குவதில் எந்த அளவுக்குச் சமமான சக்தியைக் கொண்டிருந்தது என்பதற்கும் வசாய் கோட்டை ஓர் எடுத்துக்காட்டு.

போர்த்துகீசியர்களுக்கு எதிராக சிமாஜி அப்பாவின் நடவடிக்கை காரணமாக வசாய் கோட்டை வரலாற்றில் பிரபலமானது. இது வசாய் நடவடிக்கை மற்றும் வசாய் போர் என்ற பெயர்களில் சிறப்பு இடத்தைப் பிடித்தது.

வசாய் கோட்டையின் மிக முக்கியமான அம்சம், அது பல கோபுரங்களைக் கொண்ட வலுவான கோட்டை என்பதுதான். இந்தக் கோட்டைக்கு இரண்டு வாயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்று பிரதான நிலப்பகுதியை நோக்கியும் மற்றொன்று விரிகுடாவை நோக்கியும் இருந்தன. இந்தக் கோட்டையின் சுவர்களில் சாவோ செபாஸ்டியாவோ, சாவோ பாலோ, சாவோ பெட்ரோ, புனித பிரான்சிஸ் சேவியர் போன்ற பல கோபுரங்கள் உள்ளன.

இந்தக் கோட்டையில் மூன்று தேவாலயங்கள் மற்றும் கத்தோலிக்க படிப்புகளுக்கான கல்லூரிகள் இருந்தன. அதனுள்ளே இருக்கும் சாலைகள் மற்றும் குடியிருப்புகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தன. கோட்டையிலேயே ஒரு சிறைச்சாலையும் ஒரு நீதிமன்றமும் இருந்தன.

வசாய் கோட்டை

பட மூலாதாரம், Getty Images

இந்தக் கோட்டையில் ஒரு சந்தை, ஒரு வஜ்ரேஸ்வரி கோவில் இருந்தது. பேஷ்வாக்கள் கோட்டையைக் கைப்பற்றிய பிறகு, கோபுரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டன.

கோபுரங்களுக்கு யஷ்வந்த், கல்யாண், பவானி மார்டண்ட், வேடல், தர்யா என்று பெயரிடப்பட்டன. வசாய் கோட்டையைச் சுற்றி ஒரு நகரம் உருவெடுக்கத் தொடங்கியது.

போர்த்துகீசியர் காலத்தில், கோட்டை ‘ஃபோர்டே டி சாவோ செபாஸ்டியானோ’ என்று அழைக்கப்பட்டது. சுமார் 3 கி.மீ நீளமுள்ள ஓர் அரணைக் கொண்டிருந்த கோட்டை 10 கோபுரங்களால் பாதுகாக்கப்பட்டது.

மராட்டியர்கள் 1739 முதல் மராட்டிய பேரரசு வரை, அதாவது 1818 வரை அதை ஆட்சி செய்தனர். அதன் பிறகு, பிரிட்டிஷ் காலத்தில் அதன் மீது அதிக கவனம் செலுத்தப்படவில்லை. ஆங்கிலேயர்கள் கோட்டையை ஒரு தொழிற்சாலைக்காக வாடகைக்கு எடுத்தனர். இருப்பினும், இந்தக் காலகட்டத்தில் அதன் சரிவு தொடர்ந்தது. போர்த்துகீசிய காலத்தில் அங்கு பெரியளவிலான கட்டுமானப் பணிகள் நடந்ததால், சரிவுகளைக் கடந்தும் அந்தக் கட்டடங்களின் எச்சங்களைக் காணலாம்.

பிரிட்டிஷார் இந்தக் கோட்டையை சர்க்கரை ஆலைக்காக லிட்டில்வுட் என்ற நபருக்குக் கொடுத்தனர். இருப்பினும், எதிர்பார்த்த வருமானம் கிடைக்காததால் கடனில் இருந்த லிட்டில்வுட், கோட்டையில் இருந்த கற்களை விற்று பணம் திரட்டத் தொடங்கினார். பிரிட்டிஷ் காலத்தில், மும்பையில் பெரிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்தக் கட்டுமானங்களுக்கு கோட்டையில் இருந்து வந்த கற்களும் பயன்படுத்தப்பட்டன.

வசாய் போன்ற ஒரு பெரிய கோட்டையை போர்த்துகீசிய ஆட்சியாளர்கள் கையகப்படுத்திய போது, அதற்கு ஒரு நகரம் என்ற அந்தஸ்தை வழங்கினர். அவர்கள் கோட்டையில் ஒரு நகராட்சி, குடியிருப்புகள், மருத்துவமனை, பள்ளிகள், கல்லூரிகள், தேவாலயங்களைக் கட்டினார்கள்.

போர்த்துகீசிய காலனியின் செல்வந்தர்கள் ஃபிடல்கோ டி வசாய், அதாவது வசாய் பிரபுக்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தை நிறுவியவுடன், மதத்தைப் பரப்புவதற்கான நடவடிக்கைகளை தொடங்கினர்.

பிரான்சிஸ்கன்கள், ஜேசுயிட்கள், டொமினிகன்கள், அகஸ்டினியர்கள் மற்றும் ஹாஸ்பிடல்லர்ஸ் போன்ற மதப் பிரிவுகள் கோட்டையில் தங்கள் தேவாலயங்களை நிறுவின. இது பல உள்ளூர்வாசிகள் கிறிஸ்தவர்களாகவோ அல்லது போர்த்துகீசியர்களாகவோ மாறுவதற்கும், உள்ளூர் பெண்களை அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கும் வழிவகுத்தது.

வசாய் கோட்டை

பட மூலாதாரம், Getty Images

கொன்சால்வ்ஸ் கார்சியா

போர்த்துகீசிய வீரர்களுக்கும் உள்ளூர் பெண்களுக்கும் இடையிலான இந்தத் திருமணம் கொன்சால்வ்ஸ் கார்சியா உள்படப் பல புதிய குடிமக்களின் பிறப்புக்கு வழிவகுத்தது.

கொன்சால்வ்ஸ் கார்சியா 1557இல் வசாய்க்கு அருகிலுள்ள அகாஷியில் பிறந்தார். அவரது தந்தையின் பெயர் கார்சியா மற்றும் தாயாரின் பெயர் கனரினா அல்லது கனரைஸ் என்று அழைக்கப்பட்டதாக முனைவர் ராஜின் டி’சில்வா தனது ‘தி டேல் ஆஃப் தி சன் ஆஃப் வசாய்’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

முனைவர் டி’சில்வா ஒரு வரலாற்று ஆசிரியர் மற்றும் வசாய், கொன்சால்வ்ஸ் கார்சியா கல்லூரியின் முன்னாள் முதல்வரும் ஆவார்.

முனைவர் ராஜினின் கூற்றுப்படி, அந்த நேரத்தில் போர்த்துகீசியர்கள் தங்கள் வீரர்களை உள்ளூர் பெண்களைத் திருமணம் செய்துகொள்ள ஊக்குவித்தனர். எனவே, போர்த்துகீசிய ஆட்சியின் ஆரம்பக் காலத்தில் கோவா, சால், வசாய், டையு, டாமன் காலனிகளில் இதுபோன்ற திருமணங்கள் நடந்தன.

இந்தத் திருமணம் அவர்களின் பெற்றோர் கோட்டைக்குள் வாழவும், தங்கள் ராணுவ வாழ்க்கையை விட்டுவிட்டு பிற தொழில்களை மேற்கொள்ளவும் அவர்களை அனுமதித்தது. இதன் விளைவாக, கொன்சால்வ்ஸ் கார்சியா தனது குழந்தைப் பருவத்தைக் கோட்டையில் கழித்தார்.

அவர் விரைவில் தனது பெற்றோரின் ஆதரவை இழந்தாலும், அவருக்கு ஒரு ஜேசுயிட் மடாலயத்தில் வசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இங்குதான் அவர் செபாஸ்டியன் கொன்சால்வ்ஸ் போன்ற வழிகாட்டிகளைக் கண்டறிந்து தேவாலயத்தில் சேவை புரியும் சிறுவனாக வேலை செய்யத் தொடங்கினார்.

வசாய் கோட்டை

பட மூலாதாரம், SHARAD BADHE/BBC

ஜப்பான் செல்ல கிடைத்த வாய்ப்பு

இதனால் ஜேசுயிட்களிடம் தனது மத கல்வியைத் தொடங்கிய கொன்சால்வ்ஸ் கார்சியா, பல்வேறு மொழிகளைக் கற்கும் வாய்ப்பைப் பெற்றார்.

அவர் மராத்தி, கொங்கனி, போர்த்துகீசியம், லத்தீன் ஆகிய மொழிகளைக் கற்றுக்கொண்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, மிஷனரிகள் ஜப்பான் மற்றும் கிழக்கு ஆசியாவுக்கு மதத்தைப் பரப்ப முடிவு செய்தன. அப்போது, கொன்சால்வ்ஸ் கார்சியா மிக இளம் வயதிலேயே ஜப்பானுக்கு செல்லும் வாய்ப்பைப் பெற்றார். இதன் விளைவாக அவர் ஜப்பானிய மொழியையும் கற்றுக்கொண்டார்.

ஜப்பான் சென்ற பிறகு, ஏழைகளுக்கு உதவும் பணியைத் தொடர்ந்து செய்தார். இருப்பினும், அங்கு ஒரு மதபோதராகப் பணியாற்றும் போது, அவர் ஒரு மதகுருவாக மாற விரும்பினார்.

ஆனால், அவர் ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்தவர் இல்லை என்பதால், அவருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. இது திடீரென கொன்சால்வ்ஸின் உற்சாகத்தைக் குறைத்தது. அவர் ஜேசுயிட்டில் இருந்து விடைபெற்று ஒரு தொழிலதிபர் ஆனார். பிலிப்பின்ஸில் ஒரு தொழிலைத் தொடங்குவதன் மூலம் தன்னைத் திருப்திப்படுத்திக் கொள்ள அவர் முயன்றார்.

இருப்பினும், சிறிது காலத்திற்குள், அப்போதைய ஜப்பானின் பேரரசர் ஹிடேயோஷி, கொன்சால்வ்ஸ் உள்ளிட்ட மிஷனரிகளை ஜப்பானுக்கு அழைத்தார்.

ஆரம்ப நாட்களில், ஹிடேயோஷி அவர்கள் அனைவரையும் நன்றாக ஆதரித்தார். எனவே, ஜப்பானுக்கு திரும்பிய பிறகு கொன்சால்வ்ஸ் தொழுநோயாளிகளுக்கு உதவுவதிலும், ஆதரவற்றோர் இல்லங்களில் பணியாற்றுவதிலும் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார்.

அதேபோல, அவர் தனது மிஷனரி பணியையும் விரைவாகத் தொடங்கினார். இந்த நேரத்தில், அவர் ஒரு பிரான்சிஸ்கன் மடத்தில் பணிபுரிந்து வந்தார். ஜப்பானில் மிஷனரியாக பணியாற்றிய முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் என்ற பெயரை அவர் பெற்றார்.

கொன்சால்வ்ஸ் கார்சியா

பட மூலாதாரம், SHARAD BADHE/BBC

இளமையில் தண்டனை

இருப்பினும், இந்த ஆதரவு நீண்ட காலம் நீடிக்கவில்லை. வெளியாட்களின் வருகை ஜப்பானுக்கு சிக்கலை ஏற்படுத்துவதாகக் கூறுவதற்கு உள்ளூர் மதத்தைப் பின்பற்றும் மக்களும் அவர்களின் மதபோதகர்களும் காரணங்களைக் கண்டறியத் தொடங்கினர்.

ஜப்பானில், தூசி மற்றும் செந்நிறத்திலான மழை பெய்து, பூகம்பம் ஏற்பட்ட போது, இந்த மிஷனரிகள் மீது அவர்கள் குற்றம் சாட்டத் தொடங்கினர். படிப்படியாக, மிஷனரிகளுக்கு எதிரான சூழல் உருவாக்கப்பட்டது. இந்தப் புகார்கள் ஹிடேயோஷியின் காதுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டன. இவர்கள் தங்கள் மத நடவடிக்கைகளுக்காக மக்களைத் துன்புறுத்துகிறார்கள் என்று ஹிடேயோஷி நம்பினார். இதன் விளைவாக, அவர் இறுதியாக மிஷனரிகளை எதிரிகளாகக் கருதி அவர்களைக் கொல்வதற்கு உத்தரவிட்டார்.

இதனால், கொன்சால்வ்ஸும் அவரது 25 தோழர்களும் பிப்ரவரி 5, 1597 அன்று சிலுவையில் அறையப்பட்டனர். இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்ட நாகசாகியில் உள்ள மலை அப்போதிருந்து புனித தலமாக மாறியுள்ளது.

கொன்சால்வ்ஸ் கார்சியா தேவாலயம், வசாய்

பட மூலாதாரம், Getty Images

புனிதர் பட்டம்

1597இல் சிலுவையில் அறையப்பட்ட கொன்சால்வ்ஸ் கார்சியாவை ஒரு துறவியாக அறிவிக்க இருநூறு ஆண்டுகள் ஆனது. 1862இல், பதினான்காம் போப் பையஸ், கொன்சால்வ்ஸையும் அவரது 25 தோழர்களையும் புனிதர்களாக அறிவித்தார்.

பிபிசி மராத்தியிடம் பேசிய வரலாற்று ஆசிரியர் பிரசாந்த் கரட், “புனித கொன்சால்வ்ஸ் கார்சியாவின் வரலாறு, நம்பிக்கை, நிலவியல் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் அரிதான ஒன்று” என்று கூறினார்.

“புனித கொன்சால்வ்ஸ் கார்சியா இந்திய கிறிஸ்தவ வரலாற்றில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். ஏனெனில் அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் துறவியாகக் கருதப்படுகிறார். இந்தியாவில் கிறிஸ்தவம் அந்த நேரத்தில் ஐரோப்பிய சக்திகளுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டு இருந்தாலும், அவரது வாழ்க்கை மதம் உள்ளூரிலும் வேரூன்றி இருந்ததைக் காட்டுகிறது.

பின்னர் அவர் பிரான்சிஸ்கன் பிரிவில் சேர்ந்தார். ஜப்பானில் தியாகியாக உயிரிழந்தார். இது அவரது கதைக்கு ஒரு பரந்த உலகளாவிய பரிமாணத்தைக் கொடுத்தது. அவர் 16ஆம் நூற்றாண்டில் இறந்தாலும், அவருக்கு புனிதர் பட்டம் மிகவும் தாமதமாகவே வந்தது. இது அவரது வாழ்க்கையின் நீண்டகால தாக்கத்தைப் பற்றிய ஒரு கருத்தைப் பிரதிபலிக்கிறது,” என்றும் அவர் விளக்கினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

நினைவுகளைப் பாதுகாக்கும் வசாய்

ஜப்பானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட வசாய் துறவியின் அடையாளம் இன்றும் வசாய் மக்களால் பாதுகாக்கப்படுகிறது. வசாய், கொன்சால்வ்ஸ் கார்சியா கல்லூரியின் வரலாற்றுப் பேராசிரியர் டிரிசா பெரேரோ, இதுகுறித்த கூடுதல் தகவல்களை வழங்கினார்.

பிபிசி மராத்தியிடம் பேசிய அவர், “1549ஆம் ஆண்டு வசாய் கோட்டையில் ஒரு பெரிய தேவாலயம் கட்டப்பட்டது. இந்த தேவாலயம் பின்னர் கொன்சால்வ்ஸ் கார்சியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. கொன்சால்வ்ஸ் தனது வாழ்நாளில் எட்டு ஆண்டுகளை இங்கு கழித்தார். இந்த தேவாலயம் இன்னும் அவரது பெயரிலேயே உள்ளது. இதேபோல, பெர்ஹாம்பூர், காஸ் போன்ற வசாய்க்கு அருகிலுள்ள கிராமங்களில் அவரது பெயரில் தேவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன.

அதோடு, ஓர் ஆதரவற்றோர் இல்லம் மற்றும் ஒரு பள்ளியும் நடத்தப்படுகின்றன. இன்று, கொன்சால்வ்ஸ் கார்சியா கல்லூரி வசாய் நகரில் அவரது பெயரிலுள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். அவர்கள் கொன்சால்வ்ஸின் நினைவைப் பாதுகாத்து வருகின்றனர். அகாஷியில் உள்ள கொன்சால்வ்ஸின் அசல் வீட்டை ஒரு நினைவுச் சின்னமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்று அவர் விளக்கினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC