Home தேசிய national tamil தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் எப்போது? வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட முழு விவரம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் எப்போது? வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட முழு விவரம்

4
0

SOURCE :- BBC NEWS

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி

பட மூலாதாரம், ANI

15 மார்ச் 2026, 05:42 GMT

புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன. இன்று (15-03-2026) மாலை 4 மணிக்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் தேதிகளை அறிவித்தார்.

இதையடுத்து, தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி,

  • தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடக்கிறது.
  • அசாமில் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  • கேரளாவிலும் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  • புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  • மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23, ஏப்ரல் 29 என இரண்டுகட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
  • நான்கு மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்படுகின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026

  • வேட்புமனுத் தாக்கல் தொடக்கம் : 30-03-2026
  • வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் : 06-04-2026
  • வேட்புமனு பரிசீலனை : 07-04-2026
  • வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் : 09-04-2026
  • வாக்குப் பதிவு நாள் : 23-04-2026
  • வாக்கு எண்ணிக்கை : 04-05-2026

தமிழ்நாட்டில் 2021ல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அதன் ஐந்தாண்டு கால ஆட்சிக் காலம் மே மாதம் முடிவுக்கு வருகிறது.

அதேபோன்று, புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக ஆட்சி, கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சியின் 5 ஆண்டு பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது.

செய்தியாளர் சந்திப்பில் கூறியது என்ன?

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

“இந்தியாவின் கலாசார செறிவையும் பன்முகத்தன்மையையும் தேர்தல்கள் பிரதிபலிக்கின்றன. இதை நோக்கமாகக் கொண்டே எஸ்.ஐ.ஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டன, தகுதியான நபர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். தகுதிவாய்ந்த ஒரு நபர் கூட விடுபடக் கூடாது என்ற நோக்கில் இந்த பணிகள் நடத்தப்பட்டன. பிஎல்ஓ உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வாழ்த்துகள்.” என்றார்.

மேலும், இந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்ட சில முக்கியமான விஷயங்கள்:

  • முதன்முறை வாக்காளர்களுக்கு இது மிக முக்கியமான உரிமை – வாக்களிக்கும் உரிமை. அதில் ஆர்வமாக ஈடுபட வேண்டும்.
  • அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தமாக 17.4 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
  • 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
  • 25 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
  • 8.5 லட்சம் பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவர்.
  • ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்கு சதவிகிதம் தெரிவிக்கபடும்.
  • அனைத்து பிஎல்ஓக்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும்.
  • அனைத்துக் கட்சிகளுடனும் ஏற்கெனவே பலமுறை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
  • தமிழ்நாட்டில் சுமார் 75032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.
  • வாக்குச்சாவடிகளில் கழிவறை, குடிநீர், சாய்வுதளம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் நிலவரம்?

திமுக, 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை அமைத்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றது.

இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் ஏற்கெனவே உள்ள கட்சிகளுடன் புதிதாக சில கட்சிகளும் இணைந்துள்ளன. தேமுதிக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் சமீபத்தில் இணைந்தார்.

இந்தத் தேர்தலில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடமும் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் (மூன்றில் திமுக சின்னத்தில் போட்டியிடும்), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு தலா 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதேசமயம், அதிமுக கூட்டணியில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 2021 தேர்தலில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 2024 மக்களவை தேர்தலில் பாஜக-அதிமுக இரு கட்சிகளும் பிரிந்து இருவேறு கூட்டணிகளாக களம்கண்டன. ஆனால் இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் இணைந்து எதிர்கொள்கின்றன.

அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் அதே கூட்டணியில் நீடிக்கிறது. கடந்த தேர்தலில் தேமுதிகவுடன் இணைந்து களம்கண்ட அமமுக இம்முறை அதிமுக கூட்டணியிலேயே இணைந்துள்ளது.

இதுதவிர, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வழக்கம் போலவே தனித்து போட்டியிடுகிறது.

புதிதாக உருவாகியுள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் இந்த தேர்தலில் களம் காண தயாராகி வருகிறது.

‘அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் தொண்டர் உருவாக்கிய கட்சியில் தான் இணைந்துள்ளதாக ஜெயலலிதாவின் தோழி சசிகலா கூறியுள்ளார்.

புதுச்சேரியில் நிலவரம் என்ன?

புதுச்சேரியைப் பொறுத்தவரையிலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு பகுதியாக என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இணைந்து போட்டியிட்டு ஆட்சியை அமைத்தன. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 16 தொகுதிகளில் இந்த கூட்டணி வெற்றி பெற்றது. என்ஆர் காங்கிரசின் ரங்கசாமி முதலமைச்சரானார்.

இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கட்சிகளாக செயல்பட்டு வருகின்றன.

2026 தேர்தலை முன்னிட்டு கூட்டணி அரசியல் மீண்டும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

கடந்த தேர்தலைப் போன்றே தற்போதும் பாஜக , என்ஆர் காங்கிரஸ் கூட்டணி அமைத்து களம் காண்பதாக அறிவித்துள்ளன. தொகுதிப்பங்கீடு குறித்த இறுதியான முடிவு வெளியாகவில்லை.

மறுபுறம், காங்கிரஸ், திமுக இடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU