SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையிலான போர், சமூக ஊடகங்களிலும் மூலோபாய ஆய்வாளர்களிடையேயும் ஒரு புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.
அமெரிக்க ராணுவம் மத்திய கிழக்கில் கவனம் செலுத்தி வரும் வேளையில், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சீனா தைவானைக் கைப்பற்றுமா? என்பது தான் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விஷயம்.
1950-களில் அமெரிக்கா மத்திய கிழக்கில் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, சீனா இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டது.
ஆனால் இந்த முறை, சூழல் வித்தியாசமாகத் தெரிகிறது.
இரான் போர் தொடங்கியதில் இருந்து, தைவானைச் சுற்றியுள்ள சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் கணிசமாகக் குறைந்துள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மார்ச் இறுதியில் சீனாவுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பயணத்தைக் கருத்தில் கொண்டு, சீனாவின் இந்த நடவடிக்கை ஒரு ராஜதந்திர சமிக்ஞையாக இருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
டிரம்பின் பயணத்தின் போது தைவான் உள்ளிட்ட பல விஷயங்களில் இணக்கமான சூழலை உருவாக்க சீனா விரும்புவதாக நம்பப்படுகிறது.
இது தவிர, வெனிசுவேலா மற்றும் இரான் போன்ற எண்ணெய் உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் சீனாவின் எரிசக்தி விநியோகத்தையும் பாதித்துள்ளன.
இது தைவானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதைக் கடினமாக்கலாம்.
தைவான் மீதான சீனாவின் தற்போதைய ராணுவ நிலைப்பாடு
பட மூலாதாரம், ADEK BERRY/AFP via Getty Images
இதற்கு ஒரு வரலாற்று உதாரணம் உள்ளது. 1958ம் ஆண்டில், சீனத் தலைவர் மா சேதுங் கின்மென் மற்றும் மட்சு தீவுகள் மீது ஷெல் தாக்குதல் நடத்தினார்.
இந்தத் தீவுகள் சீனாவின் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளன, ஆனால் அவை இன்னும் தைவானின் கட்டுப்பாட்டில் உள்ளன.
அந்த நேரத்தில், அமெரிக்கா லெபனானில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.
அப்போது, தைவான் மற்றும் லெபனானை அமெரிக்காவைச் சிக்கவைக்கும் “இரண்டு பொறிகள்” என்று மா விவரித்தார்.
கின்மென் மற்றும் மட்சு மீது தாக்குதல் நடத்துவதன் மூலம், மத்திய கிழக்கு மக்களின் அமெரிக்க எதிர்ப்புப் போராட்டத்திற்கு சீனா ஆதரவளிப்பதாக அவர் நம்பினார்.
ஆனால் இந்த முறை, அமெரிக்கா தனது ராணுவ வளங்களில் சிலவற்றை மத்திய கிழக்கை நோக்கி அனுப்பியுள்ள நிலையிலும், தைவானைச் சுற்றியுள்ள ராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்க இரான் போரை சீனா பயன்படுத்திக் கொள்ளவில்லை.
உதாரணமாக, அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ தென் சீனக் கடலில் இருந்து மத்திய கிழக்கிற்கு அனுப்பப்பட்டது.
யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் ஜனவரி 14 அன்று தென் சீனக் கடலில் இருந்து மத்திய கிழக்கிற்கு தனது பயணத்தைத் தொடங்கியது, மேலும் அது ஜனவரி 26 அன்று ஓமன் கடற்கரைக்கு அருகில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இது தவிர, தென் கொரியாவில் உள்ள தாட் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை மத்திய கிழக்கில் நிலைநிறுத்தவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் தற்காப்புத் திறனைக் குறைத்துவிடுமோ என்று சிலர் கவலைப்படுகின்றனர்.
எனினும், மார்ச் மாதத்தில் இதுவரை தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் இரண்டு சீன போர் விமானங்கள் மட்டுமே காணப்பட்டுள்ளன, இது சமீபத்திய ஆண்டுகளில் தைவான் வான்வெளியில் சீன விமானங்களின் மிகக்குறைந்த ஊடுருவலாகும்.
டிரம்பின் வருகைக்கு முன்னதாக ஒரு ஆக்கபூர்வமான சூழலை உருவாக்க சீனா விரும்புவதாகவும், தற்போது தைவான் விவகாரத்தை வலுக்கட்டாயமாக தீர்க்காது என்பதை உணர்த்த விரும்புவதாகவும் தைவான் நிபுணர்கள் நம்புகின்றனர்.
எனினும், அமெரிக்காவின் பாதுகாப்பு ஆதரவு மற்றும் ஆயுத விற்பனையைச் சீர்குலைக்க சீனா முயற்சி செய்யலாம் என்று தைவானின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஷி-டிரம்ப் சந்திப்பின் செயல்திட்டம் என்னவாக இருக்கும்?
பட மூலாதாரம், Getty Images
சீனாவில் நடைபெறவிருக்கும் சந்திப்பில் ஷி ஜின்பிங் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
தைவான், வர்த்தகம் மற்றும் இதர பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வழிகளை இரு வல்லரசு நாடுகளும் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றன.
அமெரிக்க ஊடகங்களின்படி, தைவான் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்புடன் ஒரு சமரசத்தை எட்ட சீனா முயற்சிக்கக்கூடும்.
தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வது குறித்த விவாதங்கள், வர்த்தக வரி குறைப்பு, மற்றும் செமிகண்டக்டர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நீக்குதல் போன்ற விஷயங்கள் இதில் அடங்கும்.
அதே நேரத்தில், ரஷ்யா மற்றும் இரானிடமிருந்து சீனா குறைந்த அளவு எண்ணெயையும், அமெரிக்காவிலிருந்து அதிக அளவு எண்ணெய், எரிவாயு, சோயாபீன்ஸ் மற்றும் போயிங் விமானங்களையும் வாங்க வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கும்.
இது தவிர, அரிய கனிமங்களின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை சீனா தளர்த்த வேண்டும் என்றும் அமெரிக்கா விரும்புகிறது.
வெனிசுலா மற்றும் இரானுக்கு எதிராக சமீபத்தில் அமெரிக்கா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகள், சீனாவின் எண்ணெய் விநியோகத்தைக் குறிவைப்பதற்கான ஒரு விரிவான மூலோபாயத்தின் பகுதியாக இருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
அதிகாரப்பூர்வமற்ற சீன மதிப்பீடுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் சீனா வெனிசுவேலாவிலிருந்து தினமும் சுமார் 4,63,000 பேரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது.
இது வெனிசுவேலாவின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 70-80 சதவீதமாகவும், சீனாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் சுமார் 7 சதவீதமாகவும் இருந்தது.
இரானுடன் அமெரிக்கா-இஸ்ரேல் நடத்தும் போர் சீனா மீது இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஆய்வுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் இரான் தனது மொத்த ஏற்றுமதியில் சுமார் 99 சதவீதத்தை சீனாவிற்கு ஏற்றுமதி செய்தது. இது கடல் வழியாக சீனாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 13 சதவீதமாகும்.
இதற்கிடையில், 2025-ஆம் ஆண்டில் ஹோர்முஸ் நீரிணை வழியாக தினமும் செல்லும் 14.9 மில்லியன் பேரல் எண்ணெயில் சுமார் 5 மில்லியன் பேரல்கள் சீனாவிற்குச் சென்றன. இது சீனாவின் மொத்த தினசரி இறக்குமதியில் சுமார் 43.3 சதவீதமாகும்.
நீண்டகாலப் போருக்கு நிலையான எரிசக்தி விநியோகம் தேவைப்படுவதால், சீனாவின் எரிசக்தி சார்பு நிலை தைவானுக்கு எதிரான சாத்தியமான ராணுவ நடவடிக்கைக்குத் தடையாக இருக்கலாம் என்று பிரெஞ்சு பொருளாதார நிபுணர் ஒருவர் கூறியதாகத் தைவான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், சீனாவின் இருப்புகளில் சுமார் 1.4 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் இறக்குமதி முற்றிலும் நின்றாலும் கூட, இந்த இருப்பு சுமார் ஆறு மாத காலத்திற்கு விநியோகப் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவும்.
தைவானுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை
பட மூலாதாரம், Daniel Ceng/Anadolu via Getty Image
வெளிநாட்டுப் பெட்ரோல் மற்றும் டீசலைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலம், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி வேகமாக மாறவும் சீனா முயற்சித்து வருகிறது.
தேசிய எரிசக்தி பாதுகாப்பை அடிப்படையில் உறுதிப்படுத்துவதும், வல்லரசு நாடுகளுக்கு இடையிலான போட்டியில் வலுவான அடித்தளத்தை உருவாக்கித் தன்னம்பிக்கையை அதிகரிப்பதும் அதன் நோக்கமாகும்.
ராணுவ சுத்திகரிப்பின் தாக்கம்
பட மூலாதாரம், Getty Images
அதிபர் ஷி ஜின்பிங்கின் சமீபத்திய ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளால் சீனாவின் ராணுவத் திறன் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
2022-ஆம் ஆண்டு முதல் 100-க்கும் மேற்பட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர் அல்லது நீக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் உயரிய ராணுவத் தலைமை அமைப்பான மத்திய ராணுவ ஆணையத்தின் (சிஎம்சி) ஏழு உறுப்பினர்களில் ஐந்து பேர் 2024 முதல் 2026-க்குள் நீக்கப்பட்டனர். தற்போது தலைவர் ஷி ஜின்பிங் மற்றும் துணைத் தலைவர் ஜாங் ஷெங்மின் மட்டுமே பதவியில் உள்ளனர்.
தைவானுக்கு எதிரான “கிரே-ஜோன் உத்தி” எனப்படுவதை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றிய சிஎம்சி துணைத் தலைவர் ஹி வீடாங், 2025-இல் ராஜினாமா செய்தது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே.
இந்த முடிவு மக்கள் விடுதலை ராணுவத்தின் போர்த் திறனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது, மேலும் இது தைவான் தொடர்பான சீனாவின் உத்தியில் மாற்றத்திற்கும் வழிவகுத்துள்ளது.
சீனாவின் அதிகாரப்பூர்வ ராணுவச் செய்தித்தாளான பிஎல்ஏ டெய்லியில் வெளியான கருத்துகளை ஆய்வு செய்த தைவான் ஆய்வாளர்கள், ராணுவ மறுசீரமைப்பின் முக்கிய நோக்கம் கட்சி மீதான விசுவாசத்தை வலுப்படுத்த “அரசியல் சீர்திருத்தத்தை” ஆழப்படுத்துவதுதான் என்று நம்புகின்றனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான இரானின் போரில் பயன்படுத்தப்பட்ட சீன தயாரிப்பான ஹெச்க்யூ -9பி வான் பாதுகாப்பு அமைப்பின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை எனக் கூறப்படுவது, தனது ஆயுதங்களின் திறன் மீது சீனா கொண்டுள்ள நம்பிக்கையைக் குறைக்கக்கூடும்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உயர்தர மின்னணுப் போர்முறை மற்றும் துல்லியமான தாக்குதல்களுக்கு எதிராக சீனா, ரஷ்யா மற்றும் இரானின் உள்ளூர் உபகரணங்களைக் கொண்ட “கலப்பு” அமைப்பு பயனற்றது என நிரூபிக்கப்பட்டதாகத் தைவான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இரானுக்கு ஆயுதங்களை வழங்குவதை சீனா மறுத்துள்ளது.
தைவான் அரசு நடத்தும் மத்திய செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி ஆய்வாளர்கள் கூறுகையில், வெனிவேசுலா மற்றும் இரானில் அமெரிக்காவின் சிக்கலான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் அதன் ராணுவ வலிமையைக் கண்டு சீனா ஆச்சரியமடைந்திருக்கலாம் என்றும், சீனாவின் ராணுவம் மற்றும் ஆயுதத் திறன்கள் இன்னும் பெரிய அளவிலான போரில் சோதிக்கப்படவில்லை என்றும் கூறுகின்றனர்.
அமெரிக்கா தனது கவனத்தை மத்திய கிழக்கு நோக்கித் திருப்பியது தைவானுக்கு எதிரான ராணுவ இலக்குகளை அடைய சீனாவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கினாலும், சீன ராணுவம் தற்போது ஒரு பெரிய மறுசீரமைப்பு மற்றும் மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது, மேலும் அமெரிக்கா இன்னும் ஒரு குறிப்பிடத்தக்க தடையாக இருக்கக்கூடும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



