Home தேசிய national tamil தோழியிலிருந்து தலைவி வரை: வி.கே. சசிகலாவின் அரசியல் பயணம்

தோழியிலிருந்து தலைவி வரை: வி.கே. சசிகலாவின் அரசியல் பயணம்

3
0

SOURCE :- BBC NEWS

ஜெயலலிதா, சசிகலா, அதிமுக

பட மூலாதாரம், Getty Images

  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

நீண்ட காலமாக அரசியல் வனவாசத்தில் இருந்த வி.கே. சசிகலா ஏற்கெனவே கட்சியின் கொடியை மட்டும் அறிமுகப்படுத்தியிருந்த அவர், இன்று (மார்ச் 13) கட்சியின் பெயரை அறிவித்தார்.

போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எம்.ஜி ஆர், ஜெயலலிதா மீது ”விசுவாசமுள்ள தொண்டர் துவங்கிய கட்சியில் என்னை இணைந்திருக்கிறேன். இக்கட்சியின் பெயர் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம். இக்கட்சியின் சின்னம் தென்னந்தோப்பு” என கூறினார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் தோழியாக அறியப்பட்ட சசிகலா, அரசியல் வனவாசம் போனது ஏன்? ஜெயலலிதாவின் தோழி என்பது மட்டும்தான் அவரது அடையாளமா? வி.கே. சசிகலாவின் ஒரு அரசியல் பயோகிராஃபி.

ஒரு சாதாரண குடும்பத் தலைவி என்ற நிலையிலிருந்து, தமிழ்நாட்டின் சக்திவாய்ந்த பெண்மணியின் தோழி, ஆளும் கட்சியின் தலைவர் என்ற நிலைவரை உயர்ந்த சசிகலாவின் வாழ்க்கைப் பயணம் நம்ப முடியாத பல திருப்பங்களையும் ஏற்ற இறக்கங்களையும் கொண்டது.

1984-ஆம் ஆண்டு ஆழ்வார்பேட்டை பீமண்ண தோட்டத் தெருவில் வினோத் வீடியோ விஷன் என்ற வீடியோ கடையை வைத்திருந்தார் சசிகலா. அவரது கணவர் ம. நடராசன் கடலூர் மாவட்ட அரசு மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தார். அப்போது கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்தவர், சந்திரலேகா ஐ.ஏ.எஸ்.

அந்த நேரத்தில் கடலூரில் நடந்த ஜெயலலிதாவின் கூட்டத்தை வீடியோ பதிவுசெய்யும் ஆர்டர், சந்திரலேகாவின் பரிந்துரையின் பேரில் வினோத் வீடியோ விஷனுக்குக் கிடைத்தது. வி.கே. சசிகலா இப்படித்தான் ஜெயலலிதாவுக்கு முதன் முதலாக அறிமுகமானார். இந்த அறிமுகம் மிகச் சாதாரணமாக இருந்தாலும், அதனைத் தொடர்ந்த சம்பவங்கள் அசாதாரணமானவை.

அதற்கு முன்பாக, அவரைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள்.

1956-இல் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டியில் விவேகானந்தன் – கிருஷ்ணவேணி தம்பதியின் மகளாக சசிகலா பிறந்தார். அவரோடு உடன் பிறந்தவர்கள் ஐந்து பேர் – சுந்தரவதனன், வினோதகன், ஜெயராமன், வனிதாமணி, திவாகரன். திருத்துறைப்பூண்டியில் பிறந்து வளர்ந்தாலும் சில ஆண்டுகள் கழித்து, அவரது குடும்பம் மன்னார்குடிக்கு குடிபெயர்ந்தது. பத்தாம் வகுப்புவரை படித்தார் சசிகலா.

மன்னார்குடிக்கு அருகில் இருந்த விளார் என்ற ஊரைச் சேர்ந்த ம. நடராசனை 1973-இல் அப்போது தஞ்சை மாவட்டத்தில் செல்வாக்கு மிகுந்த தலைவராக இருந்த மன்னை நாராயணசாமி தலைமையில் திருமணம் செய்துகொண்டார் வி.கே. சசிகலா. கல்யாணத்தை நடத்திவைத்தது, அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி.

1984-இல் ஜெ. ஜெயலலிதா, அ.தி.மு.கவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தபோது அவருக்கு அறிமுகமான சசிகலா, மெல்ல மெல்ல அவரது நம்பிக்கையைப் பெற்றவராக வளர ஆரம்பித்தார். ஜெயலலிதா மாநிலங்களவை உறுப்பினராக இருந்த காலத்தில் அவரோடு டெல்லி செல்லும் அளவுக்கு நெருக்கமானார். முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு இந்த நெருக்கம் இன்னும் தீவிரமானது.

எம்.ஜி.ஆர். மரணமடைந்து அவரது உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தபோது, ஜெயலலிதா அவரது தலைமாட்டில் நின்றுகொண்டிருந்தார். அந்தத் தருணத்தில் அவரைச் சுற்றிவளைத்துப் பாதுகாத்தது தங்களது குடும்பம்தான் என பிற்காலத்தில் ஊடகங்களில் தெரிவித்தார் நடராஜன்.

ஜெயலலிதா, சசிகலா, அதிமுக

பட மூலாதாரம், Sasikala

1988லிருந்து ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார் சசிகலா. இந்த காலகட்டத்தில்தான் ஜெயலலிதா வெகுவாக சசிகலாவைச் சார்ந்திருப்பவராக மாறினார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு கட்சி இரண்டாக உடைந்த நிலையில், 1988 பிப்ரவரியில் ஜெயலலிதா அணியின் பொதுக்குழு கூடியபோது, சசிகலா தம்பதியின் நம்பிக்கைக்கு உரியவர்கள் மட்டுமே, அந்த அணியின் ஆட்சி மன்றக் குழுவில் இடம்பெற்றனர். அந்த அளவுக்கு சசிகலாவின் செல்வாக்கு போயஸ் கார்டனில் வளர்ந்திருந்தது.

1991-இல் ஜெயலலிதா முதன் முறையாக தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற சமயத்தில், அவருக்கு எல்லாமுமாக மாறியிருந்தார் சசிகலா. அப்போதிலிருந்து ஜெயலலிதா, அம்மாவாகவும் சசிகலா சின்னம்மாவாகவும் கட்சித் தொண்டர்களால் அழைக்கப்பட ஆரம்பித்தார்கள். ஜெயலலிதா எங்கு சென்றாலும் நிழலாகப் பின்தொடர்ந்தார் சசிகலா. இதற்கு முன்பே, சசிகலாவின் கணவர் நடராஜன், சசிகலாவின் சகோதரர்கள், அவர்களது குடும்பத்தினரின் ஆதிக்கமும் அ.தி.மு.கவின் மீது படர ஆரம்பித்திருந்தது.

1995-இல் சசிகலாவின் உறவினரான வி.என். சுதாகரனை தனது தத்துப் பிள்ளையாக தத்தெடுக்கும் அளவுக்கு சசிகலாவை நம்பினார் ஜெயலலிதா. சுதாகரனுக்கு ஜெயலலிதா செய்துவைத்த ஆடம்பரத் திருமணம், உலகில் அதிகம் பேர் பங்கேற்ற திருமணமாக கின்னஸ் சாதனை படைத்தது.

ஆனால், ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சிக் காலத்தின் இறுதி காலகட்டத்தில், அ.தி.மு.கவின் மூத்த தலைவர்கள் பலர், கட்சியிலிருந்து ஒதுங்க ஆரம்பித்தனர். இதன் பின்னணியில் சசிகலா இருந்ததாகக் கூறப்பட்டது. மக்கள் மத்தியில் அதிருப்தி உருவானதற்கு சசிகலாவின் உறவினர்கள் செய்ததாக குற்றம் சாட்டப்படும் முறைகேடுகளும் சுட்டிக்காட்டப்பட்டன.

ஜெயலலிதா, சசிகலா, அதிமுக

பட மூலாதாரம், PTI

1996-இல் ஆட்சி போன பிறகு, கட்சிக்குள் சசிகலா குறித்து பெரும் அதிருப்தி எழுந்த நிலையில், 1996-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சசிகலாவையும் வி.என். சுதாகரனையும் ஒதுக்கிவைப்பதாக அறிவித்தார் ஜெயலலிதா. ஆனால், இது வெகுநாட்கள் நீடிக்கவில்லை. மீண்டும் வெகு சீக்கிரத்திலேயே, அதாவது 1997 ஆகஸ்ட் மாதத்திலேயே போயஸ் தோட்டத்தில் உள்ள இல்லத்திற்குள் மீண்டும் வரவேற்கப்பட்டார் சசிகலா.

2011-இல் மீண்டும் முதலமைச்சராகியிருந்த ஜெயலலிதா, தனக்கு எதிராக சசிகலா செயல்படுவதாகக் கருதினார். விளைவு, 2011 டிசம்பர் 19-ஆம் தேதி சசிகலா உட்பட அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா. இந்த நடவடிக்கையில் சசிகலா போயஸ் கார்டனிலிருந்து வெளியேற்றப்பட்டார். நடராசன், திவாகரன், தினகரன், பாஸ்கரன், சுதாகரன், டாக்டர் வெங்கடேஷ், ராமச்சந்திரன், ராவணன், மோகன் உள்ளிட்ட சசிகலாவின் உறவினர்கள் அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டனர். நடராசன், திவாகரன், மோகன் என பலரும் கைதுசெய்யப்பட்டார்கள்.

ஆனால், இந்தப் பிரிவும் வெகு நாட்களுக்கு நீடிக்கவில்லை. இந்த சம்பவம் நடந்து மூன்று மாதங்களிலேயே அதாவது 2012-ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி சசிகலா எழுதியதாக ஒரு அறிக்கை ஊடகங்களில் வெளியானது. அதில் கட்சி தொடர்பாகவோ, மக்கள் பிரதிநிதி ஆவது தொடர்பாகவோ தனக்கு எந்த விருப்பமும் இல்லை; அக்காவுக்கு உண்மையான தங்கையாக இருக்கவே தான் விரும்புவதாக அந்த அறிக்கையில் சசிகலா கூறியிருந்தார்.

இதற்குப் பிறகு, மார்ச் 31-ஆம் தேதி சசிகலாவை மட்டும் ஜெயலலிதா கட்சியில் சேர்த்துக்கொண்டார். இதற்குப் பிறகு, ஜெயலலிதா மரணம் வரை இந்த நட்பு நீடித்தது. 2014-ஆம் ஆண்டில் சொத்துக் குவிப்பு வழக்கில், இருவருமே ஒன்றாக சிறை சென்றனர்.

ஜெயலலிதா, சசிகலா, அதிமுக

பட மூலாதாரம், UGC

ஜெயலலிதாவின் நிழலாகவே இருந்தாலும், ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை கட்சியின் முன்னணியில் ஒருபோதும் சசிகலா தென்பட்டதில்லை. ஆனால், கட்சியின் முக்கியமான தருணங்களில் முக்கியமான முடிவுகளை எடுப்பவராக சசிகலாவே இருந்ததாக பலர் கருதினார்கள். தேர்தல்களின்போது வேட்பாளர் தேர்வில் சசிகலாவின் செல்வாக்கு எத்தகையது என்பது அ.தி.மு.கவில் உள்ள அனைவருக்குமே தெரியும்.

2002-இல் ஜெயலலிதா முதல்வராக பதவி வகிக்க முடியாமல் போனபோது, ஓ. பன்னீர்செல்வம் அந்த இடத்திற்கு முன்னிறுத்தப்பட்டது சசிகலாவின் ஆலோசனையின் பேரில்தான். அதற்குப் பிந்தைய தேர்தல்களில் எல்லாம் வேட்பாளர்களைத் தேர்வுசெய்யும்போது அதில் சசிகலாவின் பங்கும் இருக்கும். கட்சியின் அனைத்து மட்டங்களிலும் சசிகலாவின் செல்வாக்கு இருந்தது.

2016-இல் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரைத் தவிர ஆட்சியில் இருந்த யாராலும் அவரைச் சென்று பார்க்க முடியவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. அந்த ஆண்டு டிசம்பரில் ஜெயலலிதா இறந்துவிட, சசிகலாவின் பரிந்துரையின் பேரிலேயே நள்ளிரவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அரசு பதவியேற்றது.

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது ஒதுக்கிவைக்கப்பட்ட சசிகலாவின் உறவினர்கள், அவர் மறைந்த பிறகு ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலைச் சுற்றி நின்றது கடுமையான விமர்சனங்களுக்குள்ளானது.

ஜெயலலிதா, சசிகலா, அதிமுக

பட மூலாதாரம், AIADMK

விரைவிலேயே சசிகலாவின் உண்மையான விருப்பம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியாக ஆரம்பித்தது. ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த காலத்திலேயே தினமும் போயஸ் கார்டனுக்குச் செல்லும் அமைச்சர்கள், சசிகலாவை கட்சித் தலைமை ஏற்க வலியுறுத்தும் காட்சிகள் அரங்கேறின. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும் ஊடகங்களுக்கு பகிரப்பட்டன.

ஜெயலலிதா மறைந்து சில நாட்களில், அதாவது 2016-ஆம் ஆண்டு டிசம்பர் பத்தாம் தேதியன்று தமிழ் காலை நாளிதழ் ஒன்றில் வெளியான முழுப்பக்க விளம்பரத்தில், “புரட்சித் தலைவி அம்மாவிற்கு காலன் தன்னை வென்றிடுவான் என்று தெரிந்திருந்தால் தனக்குப் பிறகு எல்லாமே சின்ன அம்மாதான் என்று சொல்லி இறைவனடி சேர்ந்திருப்பார்” என கூறப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தை அளித்தவர் பெயர் ஏதும் இல்லாமல், “விசுவாசத் தொண்டனின் மனசாட்சி” என்ற பெயரில் அந்த விளம்பரம் வெளியாகியிருந்தது.

அன்றைய தினமே, முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பெயரில் வெளியான அறிக்கையில், “ஜெயலலிதாவைப் போல கட்சியை ராணுவ அமைப்பைப்போல நடத்துவதற்கு சசிகலா பொதுச்செயலாளர் ஆவதுதான் ஒரே வழி” எனக் கூறப்பட்டிருந்தது. “என்னைப் பொறுத்தவரை, கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்க வேண்டும், அமைச்சர் பதவியை அடைய வேண்டும், ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என எனக்குத் துளியும் ஆசையில்லை” என ஜெயலலிதா இருக்கும்போது கடிதம் எழுதிய வி.கே. சசிகலா, டிசம்பர் 29-ஆம் தேதி நடந்த அ.தி.மு.கவின் பொதுக் குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக 2017 பிப்ரவரி ஐந்தாம் தேதியன்று முதலமைச்சர் பதவியை ஓ. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். பிறகு அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்த சசிகலா, தனக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதால், தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டுமெனக் கூறினார்.

ஜெயலலிதா, சசிகலா, அதிமுக

பட மூலாதாரம், Getty Images

ஆனால், ஆளுநர் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. அதன்படி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. முதலமைச்சராக பதவியேற்போம் என கருதியிருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அவரது அரசியல் வாழ்க்கைக்கு கிட்டத்தட்ட முடிவுரை எழுதியது.

இதற்குப் பிறகு, எடப்பாடி கே. பழனிசாமியை முதல்வராக்கிவிட்டு சிறையை நோக்கிப் புறப்பட்ட சசிகலா, ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று, அந்த சமாதி மீது அடித்து சபதம் செய்தார். இதற்குப் பிறகு, பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா.

அவர் சிறையில் இருந்த காலகட்டத்தில், தமிழக அரசியல் களத்தில் பல விஷயங்கள் நடந்துவிட்டன. டிடிவி தினகரன் உள்ளிட்ட இவரது உறவினர்கள் அனைவரும் அ.தி.மு.கவை விட்டு வெளியேற்றப்பட்டனர். டி.டி.வி. தினகரன் அ.ம.மு.க. என்ற புதிய கட்சியையும் துவங்கிவிட்டார். இதற்கு நடுவில் 2017 நவம்பரில் சசிகலா மற்றும் அவருடைய உறவினர்கள் தொடர்புடைய 180க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை ரெய்டுகளை நடத்தி, பல கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டன.

இதற்கு நடுவில், சசிகலாவின் கணவர் நடராசனின் உடல்நலம் குன்றியது. ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல் நலம் தேறிய நடராசன், சசிகலாவை பரோலில் எடுத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என அறிவித்தார். ஆனால், 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அ.தி.மு.கவிலிருந்து அஞ்சலி செய்திகூட வரவில்லை.

ஜெயலலிதா, சசிகலா, அதிமுக

பட மூலாதாரம், Getty Images

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவின் தண்டனைக் காலம் ஒரு வழியாக முடிவுக்கு வந்து, 2021 ஜனவரி 27ஆம் தேதி சிறையிலிருந்து வெளியில் வந்தார். ஆனால், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால், சில நாட்கள் கர்நாடக மாநிலத்திலேயே தங்கி சிகிச்சை பெற்றார். அதற்குப் பிறகு பிப்ரவரி 8ஆம் காலையில் பெங்களூருக்கு அருகே உள்ள தேவனஹள்ளியிலிருந்து புறப்பட்டார் சசிகலா. வழிநெடுக அவரது ஆதரவாளர்களும் அ.ம.மு.க. தொண்டர்களும் அவருக்கு வரவேற்பளித்தனர்.

அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் அவர் வந்தது பெரும் பேசுபொருள் ஆனது. வாணியம்பாடி அருகில் வாகனத்தை நிறுத்திப் பேசிய சசிகலா, “அடக்கு முறைக்கு நான் அடிபணியப் போவதில்லை,” என தெரிவித்தார். ஆனால், தமிழகம் திரும்பிய பிறகு அரசியல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார் சசிகலா.

தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கிய நிலையில், 2021-ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் தேதி, அரசியலை விட்டு விலகப் போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார் சசிகலா. “நான் அரசியலைவிட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் ஆட்சி அமைய பிரார்த்தனை செய்வேன்” என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் சசிகலா. ஆனால், 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது. இதற்குப் பிறகு, ஒற்றைத் தலைமை விவகாரத்தை வைத்து, கட்சிக்குள் பெரும் களேபரமே நடந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

இந்த நிலையில், மீண்டும் அ.தி.மு.க. மீது பார்வையைத் திருப்பிய வி.கே. சசிகலா, தொண்டர்கள், நிர்வாகிகளிடம் தொலைபேசியில் பேசும் ஆடியோக்கள் வெளியாக ஆரம்பித்தன. “அ.தி.மு.க. பொதுச் செயலாளர்” என்ற பெயரில் அறிக்கைகளையும் வெளியிட்டுவந்தார் சசிகலா. 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மீண்டும் தோல்வியைத் தழுவியபோது, அறிக்கை ஒன்றை வெளியிட்ட வி.கே. சசிகலா, “கட்சியை ஒருங்கிணைக்க பெரும் முயற்சிகள் மேற்கொண்டேன். ஒரு சிலரின் தனிப்பட்ட சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக இயக்கம் அழிவதை இனியும் என்னால் வேடிக்கை பார்க்கமுடியாது. 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் கழகம் வெற்றிபெறுவதை யாராலும் தடுக்க முடியாது. அதற்கான பணிகளை உடனே ஆராம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். கட்சியின் நலன் கருதியும், தமிழக மக்களின் நலன் கருதியும் ஒற்றுமையோடு இணைந்து பணியாற்ற அனைவரும் வர வேண்டும்” என்று அறிக்கை வெளியிட்டார்.

இதற்குப் பிறகு, அவ்வப்போது அறிக்கைகளை மட்டும் வெளியிட்டுவந்த வி.கே. சசிகலா, தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கும் நிலையில், புதிய கட்சியைத் துவங்குவதாக அறிவித்திருக்கிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU