Home தேசிய national tamil இந்தியாவில் கிரிக்கெட்டில் பெண்களின் பங்கேற்பு 2020-ஆம் ஆண்டிலிருந்து இரு மடங்காக அதிகரிப்பு – பிபிசி ஆய்வு

இந்தியாவில் கிரிக்கெட்டில் பெண்களின் பங்கேற்பு 2020-ஆம் ஆண்டிலிருந்து இரு மடங்காக அதிகரிப்பு – பிபிசி ஆய்வு

9
0

SOURCE :- BBC NEWS

ஹர்மன்பிரீத் கவுர் , ஸ்மிருதி மந்தனா

பட மூலாதாரம், Alex Davidson-ICC/ICC via Getty Images

9 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

14 இந்திய மாநிலங்களில் நடத்தப்பட்ட புதிய ஆய்வின்படி, 2020 முதல் கிரிக்கெட் விளையாட்டில் இந்தியப் பெண்களின் பங்கேற்பு இரட்டிப்பாகியுள்ளது. இப்போது பத்து பெண்களில் ஒருவர் இந்த விளையாட்டை விளையாடுகிறார்கள்.

பிபிசி மற்றும் கலெக்டிவ் நியூஸ்ரூம் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வு, கடந்த ஆறு மாதங்களில் இரண்டு பேரில் ஒருவர் (51%) பெண்களுக்கான விளையாட்டு செய்திகளைப் பின்தொடர்வதாகவும் சுட்டிக்காட்டுகிறது. ஆடவர் விளையாட்டு செய்திகளைப் பின்தொடர்பவர்களின் விகிதத்துடன் (63%) ஒப்பிடுகையில் இது குறைவான விகிதம் அல்ல.

பெண்களுக்கான விளையாட்டுகளில் பங்கேற்பு மற்றும் பார்வையாளர் எண்ணிக்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துவதில் இளம் பெண்கள் (15-24 வயதுடையவர்கள்) முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

நான்கு இளம் பெண்களில் ஒருவர் (26%), விளையாட்டை ஒரு தொழில் வாய்ப்பாகக் கருதுவதாகக் கூறுகின்றனர், இந்த விகிதம் 2020-இல் 16% ஆக இருந்தது.

2020-இல், பெண்களை விட ஐந்து மடங்கு அதிகமான ஆண்கள் கிரிக்கெட் விளையாடினர். 2026-இல், இது மூன்று மடங்கு என்ற அளவில் குறைந்துள்ளது.

மகளிர் விளையாட்டு, பெண்கள், இந்தியா, கிரிக்கெட், பேட்மிண்டன்

பிபிசியின் ‘ஆண்டின் சிறந்த இந்திய வீராங்கனை’ (Indian Sportswoman of the Year) முயற்சியின் ஒரு பகுதியாக, பிபிசி மற்றும் கலெக்டிவ் நியூஸ்ரூம் ஆய்விற்காக, உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் நுண்ணறிவு நிறுவனமான காந்தர் (Kantar), இந்தியாவின் 14 மாநிலங்களில் 10,304 பேரிடம் நேர்காணல்களை நடத்தியது.

விளையாட்டுகளில் இந்தியப் பெண்களின் பங்கேற்பு மற்றும் வீராங்கனைகள் மீதான பரந்த சமூக அணுகுமுறைகளை மதிப்பீடு செய்வதற்காக, 2020-இல் நடத்தப்பட்ட இதேபோன்ற ஆய்வின் கண்டுபிடிப்புகளுடன் இந்தத் தரவுகள் ஒப்பிடப்பட்டன.

இந்திய வீராங்கனைகள் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துள்ள நேரத்தில் இந்த ஆண்டு ஆய்வு வெளிவந்துள்ளது. 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இரட்டைப் பதக்க வெற்றி, பாராலிம்பிக்கில் இந்திய மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் வென்ற 10 பதக்கங்கள் மற்றும் 2025-இல் சொந்த மண்ணில் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றது ஆகியவை கடந்த இரண்டு ஆண்டுகளில் தலைப்புச் செய்திகளாகின.

இந்த வெற்றிக் கதைகள் மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. ஆய்வில் பதிலளித்தவர்களில் 43% பேர் பெண்களுக்கான போட்டிகளை நேரலையில் பார்ப்பதாகத் தெரிவித்துள்ளனர், இது ஆண்களுக்கான போட்டிகளுக்கு 54% ஆக உள்ளது.

போட்டிகளை நேரில் சென்று பார்ப்பதில் பார்வையாளர் இடைவெளி குறைவாகவே உள்ளது – 29% பேர் பெண்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்வதாகவும், ஆண்களுக்கான நிகழ்வுகளில் 37% பேர் கலந்து கொள்வதாகவும் கூறுகின்றனர்.

வெற்றிகளால் ஈர்க்கப்பட்டு, அதிக பெண்கள் கிரிக்கெட் மற்றும் பேட்மிண்டன் விளையாடுகின்றனர்.

ஆய்வின்படி, பங்கேற்பைப் பொறுத்தவரை, ஆண்கள் மற்றும் பெண்களிடையே கிரிக்கெட் இப்போது மிகவும் பிரபலமான தேர்வாக உள்ளது. கடந்த ஆய்வுக்குப் பிறகு, இந்த விளையாட்டை விளையாடுவதாகக் கூறும் பெண்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளதால், கிரிக்கெட்டில் நிலவிய பாலின வேறுபாடு குறைந்துள்ளது.

மகளிர் விளையாட்டு, பெண்கள், இந்தியா, கிரிக்கெட், பேட்மிண்டன்

கிரிக்கெட்டைத் தவிர, பேட்மிண்டனும் பெண்களிடையே பிரபலமடைந்துள்ளது – ஆய்வில் கலந்துகொண்ட பெண்களில் 6% பேர் இப்போது இந்த விளையாட்டை விளையாடுகின்றனர், இது 2020-இல் 4% ஆக இருந்தது.

தெற்கில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்களிலும், வடக்கில் பஞ்சாபிலும் பெண்கள் பேட்மிண்டன் விளையாடுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தெரிகிறது. பி.வி. சிந்து, சாய்னா நேவால் மற்றும் தன்வி சர்மா போன்ற முக்கிய இந்திய வீராங்கனைகள் இந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்கேற்பு மற்றும் பார்வையாளர் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கு விளையாட்டு வீராங்கனைகளுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஆய்வுக்கு பதிலளித்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் (33%) ‘ஒரு வீராங்கனையை ஆதரிப்பதை’ தாங்கள் பெண்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளைப் பார்ப்பதற்கான காரணமாகக் குறிப்பிட்டுள்ளனர். அவ்வாறு கூறுபவர்களின் பங்கு 2020 முதல் 21% இல் இருந்து அதிகரித்துள்ளது.

ஆண்களுக்கான நிகழ்வுகளுக்கு, 17% பேர் மட்டுமே ஒரு தனிநபரை ஆதரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த ஆண்டு, ‘உங்களைச் சுற்றியுள்ளவர்களால் மிகவும் விரும்பப்படும் இந்திய வீராங்கனை யார்?’ என்ற கேள்விக்கு 51% பெண்களால் பதிலளிக்க முடிந்தது. இது 2020-ஆம் ஆண்டின் இதே கேள்விக்கான பதிலுடன் ஒப்பிடுகையில் 7 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது.

மகளிர் விளையாட்டு, பெண்கள், இந்தியா, கிரிக்கெட், பேட்மிண்டன்

பாதுகாப்பு தொடர்பான சிக்கல்

பல பெண்களுக்குப் பாதுகாப்பு இன்னும் ஒரு தடையாக உள்ளது.

தற்போது எந்த விளையாட்டையும் விளையாடாத 13% பெண்கள் பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக அவ்வாறு செய்யாமல் இருப்பதாகக் குறிப்பிட்டனர். இது ஆய்வு செய்யப்பட்ட மாநிலங்களில் 32.7 மில்லியன் பெண்களுக்குச் சமம் என்று ஆய்வு குறிப்பிட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் பாலின வன்முறை அதிகரித்துள்ளதாகப் பெண்கள் அதிகம் புகாரளிக்கும் மாநிலங்களில் இந்தக் கவலை அதிகமாக இருப்பதாக ஆய்வு பரிந்துரைத்தது.

சாதனைகள் ஒருபுறம் இருந்தபோதிலும், வீராங்கனைகள் குறித்த சமூக இழிச்சொற்களும் ஒரே மாதிரியான பிம்பங்களும் வலுவடைந்துள்ளன.

பங்கேற்பு மற்றும் பார்வையாளர் எண்ணிக்கை ஆகிய இரண்டிலும் வளர்ச்சி இருந்தபோதிலும், பெண்களுக்கான விளையாட்டுகள் குறித்த சில ‘எதிர்மறையான அணுகுமுறைகள்’ மற்றும் ‘ஒரே மாதிரியான பிம்பங்கள்’ 2020-ஆம் ஆண்டின் ஆய்வுடன் ஒப்பிடும்போது வலுவடைந்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.

ஆய்வில் பதிலளித்தவர்களில் பத்தில் நான்கு பேருக்கு மேல் (43%), பெண்களுக்கான விளையாட்டுகள் ஆண்களுக்கான விளையாட்டுகளை விடக் குறைவான பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டவை என்று நம்புகிறார்கள் (இது 38%-லிருந்து அதிகரித்துள்ளது).

வீராங்கனைகள் போதுமான அளவு பெண்மைத் தன்மையுடன் இல்லை என்று பதிலளித்தவர்களிடையேயும் இதேபோன்ற உயர்வு (37% முதல் 43% வரை) காணப்பட்டது.

குறிப்பாக, இத்தகைய பதில்கள் ஆண்களிடம் இருந்து மட்டும் வரவில்லை. வீராங்கனைகள் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்று கிட்டத்தட்ட இருவரில் ஒருவர் (46%) ஒப்புக்கொள்வதை ஆய்வு கண்டறிந்துள்ளது, மேலும் ஆண்களை விட பெண்களே இந்தக் கூற்றை அதிகம் ஒப்புக்கொண்டனர்.

மகளிர் விளையாட்டு, பெண்கள், இந்தியா, கிரிக்கெட், பேட்மிண்டன்

நேரமின்மை ஒரு பெரிய காரணி

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே விளையாட்டிலிருந்து விலகுவதற்கு நேரமின்மை ஒரு பெரிய காரணியாக உள்ளது.

கிரிக்கெட் பங்கேற்பு அதிகரித்துள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக அனைத்து விளையாட்டுகளிலும் ஈடுபடும் இந்தியர்களின் விகிதத்தில் ஒரு மிதமான முன்னேற்றத்தை மட்டுமே ஆய்வு கண்டறிந்துள்ளது. நேரமின்மை காரணமாக இந்தியர்கள் விளையாடும் பழக்கத்திலிருந்து விலகி வருவது குறித்து ஆய்வின் ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

74% இந்தியர்கள் (2020-இல் 69% ஆக இருந்தது) தாங்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தபோது விளையாடியதாகக் கூறினாலும், அவர்களில் பாதி பேர் மட்டுமே பெரியவர்களாக பின்பும் அதைத் தொடர்வதாகக் கூறினர்.

விளையாடுவதில்லை என பதிலளித்த மூன்றில் இரண்டு பங்கு (65%) பேர், தங்களுக்கு விளையாடுவதற்கு நேரமில்லை என்பதே அதற்கு காரணம் என்று கூறினர். இது மோசமான வேலை-வாழ்க்கை சமநிலையின் (work-life balance) கவலைக்குரிய போக்கைக் காட்டுவதாக ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

ஒரு சிறந்த வேலை-வாழ்க்கை சமநிலையானது பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், ஏனெனில் அவர்கள் இன்று ‘வேலைக்குச் செல்வதோடு வீட்டு வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகளையும் அதிகம் சுமக்கிறார்கள்’ என்றும் ஆய்வு கூறியது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இந்த ஆய்வின் அடிப்படையிலான கணக்கெடுப்பு காந்தர் இந்தியா நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது, அவர்களே 2020-ஆம் ஆண்டின் முந்தைய ஆய்வையும் நடத்தினர். இந்தத் திட்டத்தில், இந்தியாவின் பதினான்கு மாநிலங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 10,304 பேரை தனியார் இடங்களில் டேப்லெட் மூலம் நேருக்கு நேர் (CAPI) நேர்காணல் செய்யப்பட்டது.

வயது, பாலினம், சமூக-பொருளாதார வகுப்பு (NCCS) மற்றும் கிராமப்புறம் ஆகியவற்றில் ஆய்வு செய்யப்பட்ட பதினான்கு மாநிலங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதே இந்த மாதிரியின் நோக்கமாகும்.

இரண்டு ஆய்வுகளின் ஒப்பீட்டுத் தன்மையை உறுதி செய்வதற்காக, புதிதாகச் சேர்க்கப்பட்ட சில கேள்விகளைத் தவிர, கணக்கெடுப்புக்கான வினாப்பட்டியலும், கணக்கெடுப்பின் மாதிரி முறையும் மாறாமல் அப்படியே இருந்தன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU