SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) நடந்த 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி. அந்த இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 255 ரன்கள் எடுத்தது சூர்யகுமார் யாதவின் அணி. இந்திய அணி அந்த இமாலய ஸ்கோர் அடிக்க அடித்தளம் அமைத்தவர் அபிஷேக் ஷர்மா.
இந்த உலகக் கோப்பையின் அதிவேக அரைசதத்தை (18 பந்துகளில்) இறுதிப் போட்டியில் அடித்து நியூசிலாந்து அணி ஆரம்பத்திலேயே பின்தங்குவதற்குக் காரணமாக அமைந்தார் அபிஷேக்.
ஆனால், இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக அபிஷேக் ஷர்மா மீது நிறைய விமர்சனங்கள் இருந்தன. ஏனெனில், பெரும் எதிர்பார்ப்போடு இந்த உலகக் கோப்பையில் களமிறங்கிய அபிஷேக் ஷர்மா, அந்த இறுதிப் போட்டி வரை பெரிதாக சோபிக்கவில்லை. தொடரின் முதல் மூன்று போட்டிகளிலுமே டக் அவுட் ஆன அவர், அடுத்த 4 போட்டிகளிலும் சேர்ந்து கூட 89 ரன்கள் தான் எடுத்திருந்தார். ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஒரு போட்டியில் மட்டுமே அரைசதம் கடந்தார். இந்த உலகக் கோப்பையில், அரையிறுதிக்கு முன்பாக அவரது சராசரி 12.7 தான்.
அபிஷேக்கின் இந்த செயல்பாடு ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்தது. முக்கியமான இறுதிப் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவேண்டுமா என்ற கேள்விகள் எழுந்தன. ஒருசில போட்டிகளில் சஞ்ச சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், ஏன் அபிஷேக் ஷர்மாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படுகிறது என்ற கேள்வியும் எழுந்தது.
தற்போது வெளியிடப்பட்டிருக்கும் ஐசிசி டி20 ரேங்கிங்கில் கூட பேட்டிங் தரவரிசையில் அபிஷேக் ஷர்மா இன்னும் முதலிடத்திலேயே நீடிக்கிறார். அது எப்படி? ஏன் அவருக்குத் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன? இதுபற்றி இரு கிரிக்கெட் வல்லுநர்களிடம் பிபிசி தமிழ் சார்பாகப் பேசினோம்.
இந்திய அணியின் அணுகுமுறை
பட மூலாதாரம், Getty Images
“இந்தியா விளையாடிய கிரிக்கெட் ‘பிராண்ட்’ வைத்துப் பார்க்கும்போது அபிஷேக் ஷர்மாவின் இந்த செயல்பாடு ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்” என்று கூறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் வித்யுத் சிவரமாகிருஷ்ணன், அபிஷேக் ஷர்மா சரியாக விளையாடாதது ஒருவகையில் இந்திய அணி ஆடும் விதத்தின் விளைவு என்றும் கூறினார்.
இந்திய அணியின் அணுகுமுறை பற்றி விரிவாகப் பேசிய அவர், “இந்திய அணி பவர்பிளேவில் 70 முதல் 80 ரன்கள் எடுக்கவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அந்த ஸ்கோர் எடுக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். பேட்டிங் டெப்த் நன்றாக இருப்பதால், ஆரம்பத்தில் பெரிய ஷாட்களுக்குச் செல்லலாம். 2-3 விக்கெட்டுகள் விழுந்தாலும், அதிக ரன்கள் வரும்போது பின்னால் வரும் பேட்டர்கள் நன்றாக ஆடி 200+ ஸ்கோருக்கு எடுத்துச் செல்ல முடியும். அதனால், பெரிய ஷாட்கள் அடிக்கவேண்டும். கூடுதல் ரிஸ்க் எடுக்கவேண்டும். யாருமே பொறுப்பில்லாமல் ஆடி அவுட் ஆகப்போவதில்லை. அணியின் தேவை அதுவாக இருக்கிறது” என்று கூறினார்.
மேலும் பேசிய வித்யுத், “அபிஷேக் ஷர்மா போன்ற வீரர்கள் அதிக ‘ரிஸ்க்’ எடுத்து விளையாடுகிறார்கள். சுமார் 170, 180 ஸ்டிரைக் ரேட்டில் ஆடும்போது நிச்சயமாக அங்கு 3 அல்லது 4 போட்டிகளில் ஏமாற்றங்கள் ஏற்படும். அபிஷேக் ஷர்மாவுக்கு நடந்தது அதுதான். சூர்யகுமார் யாதவ் ஒருமுறை ரன் அடிக்கக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தபோது, அற்புதமான ஒரு விஷயம் சொன்னார்: ‘I’m not out of form, I’m out of runs’ (நான் ஃபார்ம் அவுட் இல்லை. ரன்கள் வரவில்லை அவ்வளவுதான்). அதுபோலத்தான் அபிஷேக் ஷர்மாவுக்கும் நடந்தது. நான் இந்த உலகக் கோப்பையின் எந்தவொரு கட்டத்திலும் அவருடைய ஃபார்ம் பற்றிக் கவலைப்படவில்லை. 2 அல்லது 3 நல்ல ஷாட்கள் ஆடிவிட்டால் அவர் பெரிய இன்னிங்ஸ் ஆடிவிடுவார் என்று தெரியும் ” என்றார்.
அணியின் அணுகுமுறைக்கு அபிஷேக்கின் ஆட்டமுறை தேவைப்படுகிறது என்பதாலும், இந்திய அணி நிர்வாகம் அதையே எதிர்பார்ப்பதாலும் அபிஷேக் ஷர்மாவின் இடம் கேள்விக்குறியாகவில்லை என்கிறார் வித்யுத் சிவராமகிருஷ்ணன்.
சாம்சனின் வரலாறு
இந்திய அணியின் அணுகுமுறையின் காரணமாக அபிஷேக் ஷர்மாவின் தடுமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியும் என்றால், ஏன் அதையே சாம்சனுக்கும் கருதவில்லை என்று வித்யுத்திடம் கேள்வியெழுப்பினோம். ஏனெனில், சாம்சனுமே எப்போதும் முதல் பந்தில் இருந்தே அடிக்கும் வழக்கம் கொண்டிருந்திருக்கிறார். என்றுமே தன் செயல்பாடு பற்றி யோசிக்காமல் அணிக்குத் தேவையான வேகமான தொடக்கத்தைக் கொடுக்கவே நினைத்திருக்கிறார். தற்போது உலகக் கோப்பை வெற்றிக்குப் பின் அதுதான் வெகுவாகப் பாராட்டப்படுகிறது. ஆனால், அதற்கு முன் ஏன் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று கேட்கும்போது, அதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகக் கூறுகிறார் வித்யுத்: சாம்சனின் வரலாறு, அபிஷேக் எக்ஸ் ஃபேக்டர் வீரராகக் கருதப்படுவது.
பட மூலாதாரம், Getty Images
சாம்சன் பற்றிப் பேசிய வித்யுத், “சாம்சனின் பழைய செயல்பாடுகள் அவருக்குப் பாதகமானதாகவே இருந்திருக்கிறது. அவர் ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடியபிறகு அதன்பிறகு இரண்டு மூன்று இன்னிங்ஸ்களுக்கு நல்ல ஸ்கோர் வராது. ஐபிஎல் அரங்கிலுமே அது நிறைய நடந்திருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் அவர் அதையெல்லாம் மாற்றியிருக்கிறார். அது மிகவும் சந்தோஷமான விஷயம். ஆனால், அவருடைய முந்தைய வரலாறு ஒவ்வொரு முறையும் அவருக்கு பாதகமானதாகவே அமைந்திருக்கிறது.
அதனால் தான் டெஸ்ட் கேப்டனான ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று நினைத்தபோது சாம்சன் இடத்தில் கை வைத்தார்கள். உலகக் கோப்பைக்கு முன்னதாக இஷான் கிஷன் சிறந்த ஃபார்மில் இருந்ததாலும், சாம்சன் வழக்கம்போல் சறுக்கலைச் சந்தித்திருந்தாலும் மீண்டும் அவரது இடம் பறிபோய்விட்டது” என்று கூறினார்.
கடந்த 2 ஆண்டுகளில் சாம்சனின் சர்வதேச டி20 செயல்பாட்டை அலசும்போது வித்யுத் சொல்வதோடு ஒத்துப்போகிறது. 2024 ஜூலையில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஹராரேவில் ஆடிய போட்டியில் 58 ரன்கள் எடுத்த சாம்சன், இலங்கைக்கு எதிராக ஆடிய அடுத்த இரு போட்டிகளில் டக் அவுட் ஆனார். அதே ஆண்டு நவம்பரில் வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்தடுத்த போட்டிகளில் இரண்டு சதங்கள் அடித்தவர், அடுத்த இரண்டு ஆட்டங்களிலும் டக் அவுட் ஆனார்.
அந்த இரு டக் அவுட்களுக்குப் பிறகு ஒரு சதம் அடித்தவர், அடுத்த 5 போட்டிகளிலும் சேர்த்தே 51 ரன்கள் தான் எடுத்தார். தற்போது இந்த உலகக் கோப்பைக்கு முன்னதாக நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 5 போட்டிகளில் ஆடி 46 ரன்கள் மட்டுமே எடுத்தார் சாம்சன். அவருடைய அந்த செயல்பாடும், இஷான் கிஷனின் நல்ல ஃபார்மும் ஒருகட்டத்தில் நடக்க, உலகக் கோப்பை தொடக்கத்தில் சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை.
‘எக்ஸ் ஃபேக்டர்’ வீரர்
பட மூலாதாரம், Getty Images
‘சாம்சன் தடுமாறும்போது பறிபோகும் இடம், அபிஷேக் தடுமாறியபோது ஏன் போகவில்லை’ என்று கேள்வி எழுப்பியதற்கு, ஆட்டத்தில் தனி ஆளாக தாக்கம் ஏற்படுத்தக்கூடிய எக்ஸ் ஃபேக்டர் (X Factor) வீரர்களுக்கு எப்போதுமே கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறுகிறார் வித்யுத் சிவராமகிருஷ்ணன்.
“ஒருசில வீரர்கள் தனி ஆளாக போட்டியில் பெரிய தாக்கம் ஏற்படுத்துவார்கள். அவர்களே கூட தனியாக அணியை வெற்றி பெற வைத்துவிடுவார்கள். இப்படிப்பட்ட திறமை கொண்ட வீரர்களுக்கு மற்ற வீரர்களை விடவுமே கூடுதல் வாய்ப்புகள் கொடுக்கப்படும். உதாரணமாக கங்குலி தலைமையில் யுவ்ராஜ் சிங்குக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. ஏனெனில், அவரால் என்ன செய்ய முடியும் என்பதை அப்போதைய அணி நிர்வாகம் உணர்ந்திருந்தது. அதேபோலத்தான் ரோஹித் ஷர்மாவுக்கும். மிடில் ஆர்டரில் தடுமாறியவருக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டதோடு ஓப்பனிங்கிலும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர், ரோஹித் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டினார். இந்த அணி நிர்வாகம் அபிஷேக் ஷர்மாவையும் அவர்களைப் போல் ஒரு ‘எக்ஸ் ஃபேக்டர்’ வீரராகக் கருதுகிறது” என்று அவர் கூறினார்.
அதேசமயம், இந்த வாய்ப்புகள் எல்லா வீரர்களுக்கும் கிடைக்குமா என்பது சந்தேகம் தான் என்றும் வித்யுத் கூறினார். “ஒருவேளை ஜஸ்ப்ரித் பும்ரா இரண்டு, மூன்று போட்டிகளில் 4 ஓவர்களுக்கு 50 ரன்கள் கொடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்…. அது நடக்காதுதான். இருந்தாலும், அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டாலும் பும்ராவை அணியில் இருந்து நீக்கவேண்டும் என்று நினைக்கக்கூட மாட்டார்கள். அதேசமயம், அதே நிலையில் மொஹம்மது சிராஜ் இருந்தார் என்றால் அவரையும் பும்ராவைப் போலவே நடத்தமாட்டார்கள். நிச்சயம் அவரது இடம் பற்றிய கேள்விகள் எழும்” என்று அவர் தெரிவித்தார்.
இறுதிப் போட்டிக்கு முன்னதாக அபிஷேக் ஷர்மா மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரின் செயல்பாடுகள் மீதும் கேள்விக்குறிகள் இருந்தன. ஆனால் இந்திய அணி எந்த மாற்றமுமே செய்யவில்லை. வருண் சக்கரவர்த்தி தொடர் வாய்ப்பு பெற்றதற்கும் அவர் ‘எக்ஸ் ஃபேக்டர்’ வீரராகக் கருதப்பட்டது காரணமா என்ற கேட்டதற்கு, “அதுவும் ஒரு காரணம். நிச்சயம் குல்தீப் யாதவை சேர்க்கலாமா என்ற கேள்வி அவர்களுக்குத் தோன்றியிருக்கும். அதேபோல், இன்னொரு விஷயமும் இருக்கிறது. ஒரு அணி ஃபைனலுக்கு முன்பாக அதிகம் மாற்ற செய்ய விரும்பாது. அதிலும், குறிப்பாக உலகக் கோப்பை போன்ற ஒரு தொடரின் பிளேயிங் லெவனில் அதிக மாற்றங்கள் செய்ய விரும்ப மாட்டார்கள். அதனால், அதுவுமே அவர்களுக்கு சாதகமாக அமைந்திருக்கும்” என்றும் வித்யுத் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
பெரிய அணிகளின் குணம்
வர்ணனையாளர் பகவதி பிரசாத் இப்படி முக்கியமான வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுப்பதுதான் ஒரு பெரிய அணியின் சிறப்பம்சம் என்று கூறினார். இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்குப் பிறகான உரையாடலின்போதே அவர் அந்தக் கருத்ததைத் தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் ஷர்மா டக் அவுட் ஆன பிறகு பேசிய பகவதி பிரசாத், “பெரிய அணிகள் தங்களின் முக்கிய வீரர்களுக்கு எப்போதுமே அதிக வாய்ப்புகள் கொடுப்பார்கள். ஓரிரு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்பதால் உடனே அந்த வீரரைத் தூக்கிவிடமாட்டார்கள். அந்த வீரர்கள் தங்களின் நல்ல ஃபார்முக்கு வரும்போது நிச்சயமாக அவர்களால் போட்டியை மாற்ற முடியும் அந்த அணிக்குத் தெரியும். அதேபோல், அந்த வீரர்களும் முக்கியமான கட்டத்தில் தனியாக ஆட்டத்தில் தாக்கம் ஏற்படுத்துவார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் வரலாற்றில் நிறையவே நிகழ்ந்திருக்கின்றன.
பட மூலாதாரம், Getty Images
2007 ஒருநாள் உலகக் கோப்பையில் கில்கிறிஸ்ட் ஒரு அபாரமான இன்னிங்ஸ் ஆடி ஆஸ்திரேலியா சாம்பியன் ஆகக் காரணமாக இருப்பார். அதேபோல், 2019 ஐபிஎல் ஃபைனலில் அதுவரை சோபிக்காத ஷேன் வாட்சன், சூப்பர் கிங்ஸை வெற்றிக்கு மிகவும் நெருக்கமாக எடுத்துச் செல்வார். அதுதான் அந்த வீரர்களின் சிறப்பு. அவர்களுக்கு அப்படி வாய்ப்புகள் கொடுப்பதுதான் அந்த பெரிய அணிகளின் அடிப்படையான குணமாகவே இருந்திருக்கிறது. இந்த இந்திய அணியும் அதையே செய்யும். முக்கியமான கட்டத்தில் அபிஷேக் ஷர்மா பெரும் தாக்கம் ஏற்படுத்துவார்” என்று உறுதியாகக் கூறினார். அவர் கூறியது போலவே இறுதிப் போட்டியில் ஒரு மிக முக்கிய இன்னிங்ஸ் ஆடினார் அபிஷேக்.
இன்னும் எப்படி நம்பர் 1?
சமீபத்தில் வெளியாகியிருக்கும் டி20 பேட்டர்கள் தவரிசையில் அபிஷேக் ஷர்மா இன்னும் முதலிடத்தில் நீடிக்கிறார். இஷான் கிஷன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார். இந்த உலகக் கோப்பையில் 8 இன்னிங்ஸ்களில் 141 ரன்கள் எடுத்திருந்தாலும் அபிஷேக் ஷர்மா இன்னும் முதலிடத்தில் நீடிப்பதற்கான காரணம் அவருடைய ரேடிங் புள்ளிகள்.
டி20 போட்டிகளில் தொடர்ந்து கோலோச்சி வந்த அபிஷேக் ஷர்மா, டி20 தரவரிசையில் யாரும் தொடாத உச்சத்தைத் தொட்டிருந்தார். கடந்த ஆண்டு ஆசிய கோப்பையின் போது அவர் 931 ரேடிங் புள்ளிகளைத் தொட்டார். டி20 கிரிக்கெட்டில் ஒரு பேட்டர் பெற்ற அதிகபட்ச ரேடிங் அதுதான்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தவர், இந்த ஆண்டு ஜனவரி 28 அன்று 929 ரேடிங் புள்ளிகள் பெற்றிருந்தார். இது, இரண்டாவது இடத்தில் இருந்த ஃபில் சால்ட் பெற்றிருந்த புள்ளிகளை விட 80 அதிகம்.
உலகக் கோப்பையின் முதல் போட்டியில் டக் அவுட் ஆன இறகு அபிஷேக் ஷர்மாவின் ரேடிங் 908 புள்ளிகளாகக் குறைந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான டக் அவுட்டுக்குப் பிறகு அது 891 ஆகக் குறைந்தது. இப்படி அவரது செயல்பாடுகளுக்கு ஏற்ப மாறிக்கொண்டிருந்த அவரது ரேடிங் தற்போது 875 புள்ளிகளாக இருக்கிறது.
உலகக் கோப்பையில் பெரிதாக சோபிக்காவிட்டாலும், அது தொடங்குவதற்கு முன் அவருக்கும் மற்ற வீரர்களுக்குமான இடைவெளி மிகவும் அதிகமாக இருந்ததால் இன்னும் அபிஷேக் ஷர்மா நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



