Home தேசிய national tamil இரான் எழுச்சிக்கு டிரம்ப் அழைப்பு – இராக்கில் அமெரிக்கா செய்தது இப்போது பின்னடைவு தருமா?

இரான் எழுச்சிக்கு டிரம்ப் அழைப்பு – இராக்கில் அமெரிக்கா செய்தது இப்போது பின்னடைவு தருமா?

11
0

SOURCE :- BBC NEWS

டிரம்ப் அழைத்தும் இரானில் ஏற்படாத எழுச்சி - இராக்கில் அமெரிக்கா செய்த விஷயம்தான் காரணமா?

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க அதிபர் ஒருவர் எழுச்சிக்கு அழைப்பு விடுத்துவிட்டு, அது தொடங்கும் போது அதில் ஈடுபடாமல் போனால் என்ன நடக்கும் என்பதை நான் அறிவேன். ஏனென்றால் நான் அதை முன்பே பார்த்திருக்கிறேன்.

1991-ஆம் ஆண்டு, சரியாகச் சொல்லப்போனால் பிப்ரவரி 15 அன்று, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ் ஓர் உரையை நிகழ்த்தினார். அந்த உரையை நினைத்து அவர் தனது வாழ்நாள் இறுதி வரை வருத்தப்பட்டிருக்கலாம்.

அந்த வளைகுடாப் போரின் அதிநவீன ஆயுதமாக அறிமுகமான ‘பேட்ரியாட்’ இடைமறிப்பு ஏவுகணைகளைத் தயாரித்த மாசசூசெட்ஸில் உள்ள தொழிற்சாலையில் அந்த உரை நிகழ்த்தப்பட்டது.

தாக்க வரும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தும் இந்த பேட்ரியாட்கள், இன்றும் யுக்ரேனிலும் இரானுடனான போரிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

1991-ஆம் ஆண்டு, சரியாகச் சொல்லப்போனால் பிப்ரவரி 15 அன்று, முதல் அதிபர் ஜார்ஜ் புஷ் ஒரு உரையை நிகழ்த்தினார். அந்த உரையை நினைத்து அவர் தனது வாழ்நாள் இறுதி வரை வருத்தப்பட்டிருக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images

குவைத்தில் இருந்து இராக் படைகளை வெளியேற்றுவதற்கான பெரிய ராணுவ நடவடிக்கையான ‘டெசர்ட் ஸ்டார்ம்’ நடந்து கொண்டிருந்த போது புஷ் அந்த தொழிற்சாலைக்குச் சென்றார்.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளின் கூட்டு வான்படைகள் இராக் படைகளையும் அதன் நகரங்களையும் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்தன.

தரைவழிப் போர் தொடங்க ஒன்பது நாட்களே இருந்த நிலையில், பல்லாயிரக்கணக்கான நட்பு நாட்டு வீரர்கள் இராக் மற்றும் குவைத் எல்லைகளில் குவிக்கப்பட்டிருந்தனர்.

அப்போது நான் பாக்தாத்தில் அந்தப் போர் குறித்து செய்தி சேகரிப்பதில் மும்முரமாக இருந்தேன்.

சில நாட்களுக்கு முன்புதான், அமிரியா புறநகரில் உள்ள ஒரு முகாம் மீது அமெரிக்கர்கள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

அது ஒரு கட்டளை மையம் என்று அமெரிக்கர்களும் பிரிட்டிஷாரும் தவறாகக் கூறினர்.

ஆனால் நான் அங்கிருந்த சடலங்களைப் பார்த்தேன், அவற்றில் பெரும்பாலும் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் மட்டுமே இருந்தனர்.

இரான்

பட மூலாதாரம், Getty Images

இராக் மக்களுக்கு அழைப்பு

அப்போது, நான் புஷ்ஷின் உரையை கவனிக்கவில்லை.

ஆனால் 35 ஆண்டுகளுக்குப் பிறகு, டொனால்ட் டிரம்பும் பெஞ்சமின் நெதன்யாகுவும் இரானிய மக்களிடம், நேரடி ராணுவ ஆதரவு வாக்குறுதி அளிக்காமல் இஸ்லாமியக் குடியரசைத் தூக்கியெறிய உங்களுக்குத் தலைமுறைக்கு ஒருமுறை வரும் வாய்ப்பு வழங்கப்படுவதாகக் கூறுவதைக் கேட்கும் போதெல்லாம், புஷ்ஷின் அந்த உரையைப் பற்றித்தான் நான் நினைக்கிறேன்.

அதிசய ஆயுதமாகக் கருதப்பட்ட அந்த ஏவுகணைகளைத் தயாரித்த தொழிலாளர்களைப் பாராட்டுவதற்காகவே புஷ் அந்த தொழிற்சாலைக்குச் சென்றிருந்தார்.

இராக் ஆட்சியாளர் சதாம் உசேன் குவைத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

இரானுடனான தற்போதைய போரைப் போலல்லாமல், அந்த முதல் வளைகுடா போருக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் சட்டப்பூர்வ அங்கீகாரம் இருந்தது.

பின்னர் புஷ் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்திய சில வரிகளைக் கூறினார்.

“மோசமான தாக்குதல் நிறுத்தப்பட மற்றொரு வழி இருக்கிறது… அது இராக் ராணுவமும் இராக் மக்களும் அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, சர்வாதிகாரி சதாம் உசேனை பதவி விலகச் செய்வதுதான்…” என்று அவர் குறிப்பிட்டார்.

தொழிலாளர்கள் கூச்சலிட்டு கைதட்டினார்கள். வியட்நாம் பேரழிவிற்குப் பிறகு தங்களின் முதல் பெரிய போரில் ஈடுபட்டிருந்த அமெரிக்கர்களை உற்சாகப்படுத்தும் பணிக்கு அதிபர் திரும்பினார்.

இரானுடனான தற்போதைய போரைப் போலல்லாமல், முதல் வளைகுடாப் போருக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் சட்டப்பூர்வ அங்கீகாரம் இருந்தது.

பட மூலாதாரம், Stefan Zalkin/EPA-EFE

ஆட்சியில் நீடித்த சதாம் உசேன்

ஆனால் சில இராக் மக்கள் அவரது கருத்தைத் தீவிரமாக எடுத்துக்கொண்டனர்.

குவைத்திலிருந்து இராக் ராணுவம் வெளியேற்றப்பட்ட பிறகு, ஒரு போர்நிறுத்தம் சதாம் உசேனை அதிகாரத்திலேயே நீடிக்கச் செய்தது.

நாட்டின் தெற்கே இருந்த இராக் ஷியாக்களும், வடக்கே இருந்த குர்துகளும் அவரது ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

அமெரிக்கர்கள், பிரிட்டிஷார் மற்றும் கூட்டணியில் இருந்த மற்ற நாடுகள் நடப்பவற்றைக் கவனித்துக் கொண்டிருந்தனரே தவிர, தலையிடவில்லை.

போரினால் இராக் ஆட்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது, ஆனால் அவர்கள் தங்கள் ஹெலிகாப்டர்களைத் தொடர்ந்து வைத்திருக்க அனுமதிக்கப்பட்டனர்.

அமெரிக்க அதிபரின் ஆசி தங்களுக்கு இருப்பதாக நம்பி கிளர்ச்சியில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான குர்துகள் மற்றும் இராக் ஷியா இஸ்லாமியர்களை அந்த ஹெலிகாப்டர்கள் மூலம் நடத்தப்பட்ட பதில் தாக்குதல்கள் கொன்று குவித்தன.

ஆனால் அந்த கிளர்ச்சி வெற்றி பெறுவதை உறுதி செய்ய புஷ் தலையிடுவார் என்று அவர்கள் தவறாகக் கருதிவிட்டனர்.

அப்போது நான் குர்துக்கள் வாழும் மலைகளில் இருந்தேன். சதாம் உசேனின் ஆட்களால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரமான கொலைகள் பற்றிய கதைகளுடன் பல்லாயிரக்கணக்கான குர்துகள் அங்கிருந்து தப்பியோடினர்.

ஒவ்வொரு நாள் காலையிலும் தந்தையர்கள் தங்கள் குழந்தைகளின் உடல்களை போர்வைகளில் சுற்றப்பட்ட சிறு மூட்டைகளாக மலைச்சரிவுகளில் இருந்து இறக்கி வருவதை நான் கண்டேன்.

பனிப்பொழிவு அல்லது வயிற்றுப்போக்கினால் அந்த குழந்தைகள் இரவில் இறந்திருந்தனர்.

இறுதியில் அமெரிக்கர்கள், பிரிட்டிஷார், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் பிறர் வெட்கமடைந்து குர்துகளை மீட்பதற்கான ஒரு பெரிய மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தெற்கில் இருந்த ஷியாக்களுக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை.

ஒசாமா பின்லேடன்

பட மூலாதாரம், Getty Images

ஒசாமா பின்லேடனை கோபப்படுத்திய நிகழ்வு

அந்த முதல் வளைகுடாப் போரின் விளைவுகள் பல ஆண்டுகள் நீடித்தன. போருக்கு பிறகு இராக்கின் சில பகுதிகளில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட மண்டலத்தை அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் உருவாக்கின. அதாவது அங்கு இராக்கின் ராணுவ விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பறக்க கூடாது. இதை உறுதி செய்ய அமெரிக்கா கூட்டணி அங்கு தொடர்ச்சியான வான்வழி ரோந்துப் பணிகளை மேற்கொண்டது. மேலும் செளதி அரேபியாவில் நிரந்தர ராணுவ தளத்தை அமெரிக்கா அமைத்தது.

இது இளம் வயதில் இருந்த ஒசாமா பின்லேடனை கோபப்படுத்தியது.

அவரது பார்வையில் வெளிநாட்டுப் படைகள் இஸ்லாத்தின் புனிதத் தலங்கள் இருக்கும் மண்ணை அசுத்தப்படுத்திவிட்டதாக அவர் ஆத்திரமடைந்தார். இதுவே பிற்காலத்தில் அல் கய்தாவாக மாறிய அமைப்பை அவர் உருவாக்கக் காரணமாக அமைந்தது.

இராக்கில் 1991-ல் அமெரிக்கா செய்த ‘தவறு’ இப்போது இரான் போரில் பின்னடைவு ஏற்படுத்துகிறதா?

பட மூலாதாரம், Getty Images

மூன்றாவது வளைகுடா போர்

ஒவ்வொரு வளைகுடா போரும் அடுத்த போருக்கான விதைகளை விதைத்தது.

2003-ல் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ், சதாம் உசேனை பதவியில் இருந்து அகற்றினார். அவரது தந்தை முடிக்காத வேலையை அவர் முடித்ததாகக் கருதப்பட்டது.

அந்தப் போரில் இரான் ஒரு பெரிய வெற்றியாளராக இருந்தது. அமெரிக்கர்கள், அதன் பரம எதிரியான சதாம் உசேனை நீக்கியிருந்தனர்.

தற்போது நடக்கும் இந்த மூன்றாவது வளைகுடாப் போர், 2003-க்குப் பிறகு வேகம் பெற்ற இஸ்லாமியக் குடியரசின் பிராந்திய அதிகார வளர்ச்சியைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதன் ராணுவ மற்றும் அணுசக்தி தொடர்பான கனவுகளை தகர்க்கும் வகையில் இந்த குண்டுவீச்சுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன, குறிப்பாக இஸ்ரேல் இவற்றைத் தனது இருப்பிற்கே அச்சுறுத்தலாகக் கருதுகிறது.

முதல் முறையாக இஸ்ரேலுடன் இணைந்து போருக்குச் செல்லும் டிரம்பின் முடிவுக்கு அமெரிக்காவில் ஆதரவு இல்லை என்று சமீபத்திய கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.

மேலும், இஸ்ரேலைத் தவிர அமெரிக்காவின் மற்ற நட்பு நாடுகளுக்கு இது கவலையை அளிக்கிறது.

ஒருவேளை விமர்சகர்கள் சொல்வது தவறாக இருந்தால் என்ன செய்வது? ஒருவேளை ஆய்வாளர்களும் விமர்சகர்களும் டிரம்ப் மீதான தங்களின் வெறுப்பால் முடிவுகளைத் தவறாக எடுத்திருக்கலாம்.

மற்ற மத்திய கிழக்கு போர்களில் அமெரிக்கர்களுடன் இணைந்து போரிட்டு உயிர்நீத்த நட்பு நாடுகளின் வீரர்களை அவர் அவமதிப்பதோ அல்லது அவர் சில நேரங்களில் பொய்களைக் கூறுவதோ ஒரு காரணமாக இருக்கலாம்.


இரான் மக்கள்

பட மூலாதாரம், Getty Images

இரானில் ஒரு பள்ளிக்கூடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், பள்ளி மாணவிகள் உட்பட 165-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக இரான் கூறுகிறது.

அந்தத் தாக்குதலில் இரான் ‘டொமாஹாக்’ ஏவுகணையைச் செலுத்தியிருக்கலாம் என்று டிரம்ப் குற்றம் சாட்டினார். ஆனால் இரானிடம் டொமாஹாக் ஏவுகணைகளே இல்லை.

இவை அனைத்தும் போலிச் செய்திகள் என்று டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் வாதிடுகின்றனர்.

இந்த யுத்தம், வளைகுடா நாடுகள் மற்றும் இஸ்ரேலை மட்டுமல்லாமல், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவையும் கூட அச்சுறுத்தக்கூடிய அணு ஆயுதங்களையும், நீண்ட தூரம் பாயும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் இரான் பெறுவதைத் தடுத்தால், தற்காலிகமாக உயரும் பெட்ரோல் விலையை ஏற்றுக்கொள்வது பெரிய விஷயமல்ல என்று அவர்கள் கூறுகிறார்கள்.

‘போர்ச் செயலாளர்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், ஐ.நா சபையின் அங்கீகாரம் இல்லாமலோ அல்லது தற்காப்புக்கான உறுதியான காரணம் இல்லாமலோ ராணுவ வலிமையைப் பயன்படுத்துவது குறித்த ஐரோப்பாவின் கருத்துகளைக் கடுமையாக விமர்சித்தார்.

“வலிமையைப் பயன்படுத்துவது குறித்து கைகளைப் பிசைந்துகொண்டும், கவலைப்பட்டுக்கொண்டும், தயங்கிக்கொண்டும் இருக்கும் எங்களது பாரம்பரிய நட்பு நாடுகள் பல உள்ளன” என்று ஹெக்செத் சாடினார்.


இரான் மக்கள்

பட மூலாதாரம், Getty Images

இஸ்ரேல் கனவு

ஆனால், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவது எளிதல்ல என்பதும், அதன் விளைவுகள் அதிகபட்சமாக நிச்சயமற்றதாகவும், மோசமான பட்சத்தில் அபாயகரமானதாகவும் இருக்கும் என்பதும் ஏற்கனவே தெளிவாகியுள்ளது.

இஸ்ரேலுக்கு என்று தனிப்பட்ட செயல் திட்டம் உள்ளது. நெதன்யாகு தான் எதை விரும்புகிறார் என்பதில் தெளிவான பார்வை கொண்டவர்.

இரானின் இஸ்லாமியக் குடியரசை அழிப்பது என்ற தனது வாழ்நாள் கனவை அவரால் நனவாக்க முடியும் என்று அவர் நம்புகிறார்.

போரின் இரண்டாவது நாளில் அவர் ஆற்றிய உரையில், அமெரிக்காவின் ‘உதவியுடன்’ இஸ்ரேலால் “நாற்பது ஆண்டுகளாக நான் எதற்காக ஏங்கினேனோ அதைச் செய்ய முடிந்தது. அந்தப் பயங்கரவாத ஆட்சியைத் தகர்ப்பது. இதைத்தான் நான் வாக்குறுதி அளித்தேன், இதைத்தான் நாங்கள் செய்வோம்” என்று அவர் கூறினார்.

டிரம்பைப் போலவே, அவரும் இரானில் மக்கள் எழுச்சிக்கு அழைப்பு விடுத்தார்.

இரான் வன்முறை மற்றும் குழப்பத்தில் ஆழ்வது குறித்து இஸ்ரேல் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அது அவர்களுக்கு ஒரு நல்ல முடிவாகக் கூட இருக்கலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

முந்தைய அதிபர்கள் செய்யாதது

இரானிய ஆட்சியை அகற்றுவது உலகை பாதுகாப்பானதாக மாற்றும் என்று அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.

அவர்கள் சொல்வது சரியாகவும் இருக்கலாம். அது ஒரு விரும்பத்தகாத, வன்முறை ஆட்சிமுறையாகும். கடந்த ஜனவரி மாதத்தில் ஒடுக்குமுறை, ஊழல் மற்றும் பொருளாதாரச் சரிவுக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடிய ஆயிரக்கணக்கான இரானியர்களை அந்த ஆட்சி கொன்றது.

அது அணு குண்டாக மாற்றக்கூடிய அளவிற்கு யுரேனியத்தைச் செறிவூட்டியது.

ஆனால், 2003-ஆம் ஆண்டு இராக் மீதான படையெடுப்புடன் தொடங்கியதைப் போன்ற ஒரு பேரழிவை இந்தப் போரின் விளைவுகள் ஏற்படுத்தினால், அவர்கள் சொல்வது தவறாகிவிடும்.

இராக் சர்வாதிகாரி உசேனை அகற்றிய பிறகு, அந்த ஆட்சிக்கு மாற்றாகச் செயல்படக்கூடிய ஒரு முறையான திட்டம் இல்லாதது, பல ஆண்டுகால மதக் கலவரங்களுக்கும், உள்நாட்டுப் போருக்கும், பல்லாயிரக்கணக்கானோரின் உயிரிழப்புகளுக்கும் வழிவகுத்தது.

மேலும் அங்கு ஏற்பட்ட அதிகார வெற்றிடம், ஐ.எஸ் குழு வளரக் காரணமாக அமைந்தது. அவர்களை போன்றவர்கள் இப்போது இந்தப் புதிய நெருக்கடியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வழிகளைத் தேடுவார்கள்.

லெபனானில் நடந்த தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

நெதன்யாகு இரானுடனான போர் குறித்து பலமுறை யோசித்திருந்தாலும், அதற்குப் போருக்குத் தயாராக இருக்கும் ஒரு அமெரிக்க அதிபரின் உதவி இஸ்ரேலுக்குத் தேவை என்பதை எப்போதும் உணர்ந்திருந்தார்.

இறுதியாக, இப்போது அப்படி ஒருவர் கிடைத்துள்ளார், அவர்தான் அதிபர் டிரம்ப்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நெதன்யாகு பிரதமராக இருந்தபோது அவர் எதிர்கொண்ட முதல் அதிபரான பில் கிளிண்டன் உட்பட முந்தைய அதிபர்கள் யாரும் இதைச் செய்யவில்லை.

இரான் உண்மையிலேயே அணு ஆயுதத்தைப் பெற முயற்சித்தால் மட்டுமே போரை ஒரு இறுதி வாய்ப்பாக வைத்துக் கொண்டு, அதுவரை இரானைக் கட்டுப்படுத்தி வைப்பதிலேயே அவர்கள் திருப்தி அடைந்தனர்.

மேலும் அவர்கள் பெரும்பாலும் இதில் நடவடிக்கை எடுக்காததற்கு இப்போது நடப்பவையே காரணம்.

அதாவது அமெரிக்க அதிகாரத்தை எதிர்ப்பது, போரை விரிவுபடுத்துவது, பெரும் பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்துவது மற்றும் வளைகுடா நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே கவனமாக உருவாக்கப்பட்ட உறவுகளைச் சிதைப்பது போன்ற இரானின் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகும்.

இரான்

பட மூலாதாரம், Getty Images

வளைகுடா நாடுகள் நிலை என்ன?

வளைகுடா நாடுகள் இந்தப் போர் நடப்பதைத் தடுக்கவே முயன்றன. இப்போது இரான் அவர்களை இலக்குகளாக மாற்றியுள்ளது. சீனா பின்னணியில் காத்திருக்கும் நிலையில், அமெரிக்காவுடனான கூட்டணி மற்றும் இஸ்ரேலுடனான சுமுக உறவு ஆகியவற்றின் மதிப்பை அந்த நாடுகள் மீண்டும் பரிசீலிக்கக்கூடும்.

குறிப்பாக டிரம்ப் வெற்றியை அறிவித்துவிட்டு, அந்த குழப்பங்களைச் சரிசெய்யும் பொறுப்பை செளதி அரேபியா மற்றும் பிற நாடுகளிடம் விட்டுச் சென்றால் இது நடக்கலாம்.

இனி எப்போதும் முடிவில்லாத போர்கள் இருக்காது என்று அமெரிக்கர்களுக்கு வாக்குறுதி அளித்த டிரம்ப், தான் சீனாவை எதிர்கொள்ளப் பயன்படுத்த நினைத்த படைகளை மத்திய கிழக்கிலேயே வைத்திருக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படலாம்.

மறுபுறம், இஸ்ரேலியர்களைப் பொறுத்தவரை மத்திய கிழக்கை மாற்றி அமைக்கவும், சவால் செய்ய முடியாத ராணுவ வல்லமை கொண்ட நாடாகத் தங்கள் நிலையை வலுப்படுத்தவும் தங்களுக்குக் கிடைத்துள்ள மிகச்சிறந்த வாய்ப்பாக இதைக் கருதுகிறார்கள்.

இரானின் லெபனான் கூட்டாளியான ஹெஸ்பொலாவை ஒட்டுமொத்தமாக அழிக்க அவர்கள் இலக்கு வைத்துள்ளனர்.

இதை அவர்கள் 1990-களிலிருந்து முயன்று தோற்றுப் போயுள்ளனர். உலகத்தின் கவனம் இரானின் மீது இருக்கும் நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை முறையாகத் தன்னுடன் இணைத்துக் கொள்வதற்கான கூடுதல் நடவடிக்கைகளையும் இஸ்ரேல் எடுத்து வருகிறது.

போர்களைத் தொடங்குவது அவற்றை முடிப்பதை விட மிகவும் எளிதானது என்பதை டிரம்ப் உணரக்கூடும். நீங்கள் எங்குச் செல்கிறீர்கள் என்பது சரியாகத் தெரியாதபோது, எப்போது நிறுத்த வேண்டும் என்பதை அறிவது கடினம்.

உலகிலேயே வலிமைமிக்க நாடான அமெரிக்கா, ஒரு முறையான அரசியல் உத்தி இல்லாமலும், சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கும் ஒரு அதிபரின் கீழும் போருக்குச் சென்றுள்ள நிலையில், அதை முடிவுக்குக் கொண்டு வருவது இன்னும் கடினமானதாகும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU