Home தேசிய national tamil மாதவிடாய் ரத்தம் சொல்லும் பெண்களின் உடல்நல ரகசியங்கள்

மாதவிடாய் ரத்தம் சொல்லும் பெண்களின் உடல்நல ரகசியங்கள்

11
0

SOURCE :- BBC NEWS

மாதவிடாய் ரத்தத்தில் மறைந்துள்ள மருத்துவ ரகசியம் பற்றி ஆய்வுகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Serenity Strull/ BBC

மாதவிடாய் ஏற்படும் பல பெண்களைப் போலவே, எம்மா பேக்லண்ட் ஒவ்வொரு மாதமும் தான் சிந்தும் ரத்தத்தைப் பற்றி அதிகம் சிந்திக்க விரும்பவில்லை. ஆனால், 2023ஆம் ஆண்டில் பயோடெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான நெக்ஸ்ட்ஜென் ஜேன் தனது மாதவிடாய் ரத்தத்தைக் கேட்டபோது, பேக்லண்ட் ஒரு மாதவிடாய் சுழற்சியில் இருந்து எட்டு டாம்பான்களை (tampon) சேமித்து, கலிஃபோர்னியாவின் ஓக்லாந்தில் உள்ள நிறுவனத்தின் ஆய்வகத்திற்கு அனுப்பினார்.

நிச்சயமாக இதுவோர் அசாதாரணமான கோரிக்கைதான். ஆனால், அவர் உதவுவதில் மகிழ்ச்சியடைந்தார். குறிப்பாக எதிர்கால பெண்கள் வளர்ந்து வரும் வலிமிகுந்த சோதனைகளைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக.

“எனக்கு 11 வயது ஆனபோது, முதல் மாதவிடாய் வந்தது. நான் இறந்து கொண்டிருப்பதாகக் கருதினேன்,” என்று அமெரிக்காவில் உள்ள மினசோட்டாவை சேர்ந்த 27 வயதான பட்டதாரி மாணவி பேக்லண்ட் கூறுகிறார்.

“நான் மருத்துவமனை செல்ல வேண்டுமென்று என் அம்மாவிடம் கூறியது எனக்கு நினைவிருக்கிறது. அதன் பிறகு எனக்கு ஏற்பட்ட ஒவ்வொரு மாதவிடாயும் அப்படித்தான் இருந்தது. நான் ஒவ்வொரு மாதமும் வாந்தி எடுப்பேன். சமூக நடவடிக்கைகள், பள்ளி ஆகியவற்றைத் தவறவிட்டேன். எரியும், குத்தும், குடலைப் பிடுங்கும் இந்த வலி மட்டும் தொடர்ந்தது.”

பேக்லண்டிற்கு எண்டோமெட்ரியோசிஸ் இருப்பதைக் கண்டறிய 13 ஆண்டுகள் ஆனது. இது கருப்பையின் திசு புறணி, அதற்கு வெளியே வளரத் தொடங்கும் ஒரு நாள்பட்ட, பலவீனப்படுத்தக்கூடிய கோளாறு.

எண்டோமெட்ரியோசிஸ் உலகளவில் 19 கோடி பெண்களை பாதிக்கிறது. இது உலகிலுள்ள இனப்பெருக்க வயதை அடைந்த பெண்களில் பத்தில் ஒருவருக்கு இருக்கிறது. அதிக மாதவிடாய், இடுப்பு வலி, சிறுநீர்ப்பை அல்லது குடல் பிரச்னைகள் மற்றும் குழந்தை பெறுவதில் சிக்கல் உள்படப் பல பாதிப்புகளை இது ஏற்படுத்துகிறது.

இதில் மோசமான விஷயம் என்னவெனில், பேக்லண்டை போலவே இந்தப் பிரச்னை இருப்பதைக் கண்டறிவதற்குப் பொதுவாக ஐந்து முதல் 12 ஆண்டுகள் வரை ஆகும். இதை உறுதி செய்வதற்கு லேப்ரோஸ்கோபி என்ற மருத்துவ முறை தேவைப்படுகிறது. அதில், ஒரு சிறிய கேமரா செருகப்படுகிறது என்று நெக்ஸ்ட்ஜென் ஜேனின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான ரிதி தரியல் கூறுகிறார்.

அதனால்தான் தரியலும் ஒரு சில புதுமையான ஸ்டார்ட்அப் நிறுவன தலைவர்களும் சிறந்த நோயறிதல் சோதனையை உருவாக்க உழைத்து வருகின்றனர். இது அறுவை சிகிச்சையைவிட விரைவான, மலிவான அதேநேரத்தில், குறைவாக உடலுக்குள் ஊடுருவக்கூடியது என்று அந்த ஸ்டார்ட்அப் உறுதியளிக்கிறது. ஒரு பெண்ணின் எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பையும் தாண்டி பல விஷயங்களை இது வெளிப்படுத்தக் கூடும் என நம்புகின்றனர்.

அதோடு, இதற்கான ரகசியம் மாதவிடாய் ரத்தத்தில் இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.

மாதவிடாய் ரத்தத்தில் மறைந்துள்ள மருத்துவ ரகசியம் பற்றி ஆய்வுகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

மருத்துவத்திற்கான தங்கச் சுரங்கம்

சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு பாபிலோனிய, சுமேரிய காலத்தில் இருந்தே சிறுநீர் மாதிரிகள் மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. ஒன்றிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு மலம் மற்றும் சிரை ரத்தம் மீதான பரிசோதனையும் தொடங்கின.

ஆனால், மாதவிடாய் ரத்தம் ஒருபோதும் அதிக மருத்துவ கவனிப்பைப் பெற்றதில்லை. இதுவொரு சிக்கலான திரவம்: அதில் பாதி வழக்கமான ரத்தம், மீதமுள்ளவை புரதங்கள், ஹார்மோன்கள், பாக்டீரியா, எண்டோமெட்ரியல் திசு, யோனிக்குழி, கருப்பைவாய், ஃபலோபியன் குழாய்கள், கருப்பைகள் மற்றும் பலவற்றில் இருந்து வெளியேற்றப்பட்ட செல்களை கொண்டுள்ளது.

“முழு ரத்தம், உமிழ்நீர் மற்றும் பிற மாதிரிகளில் இருந்து கிடைக்காத செல் வகைகள் மற்றும் பிற மூலக்கூறுகளை இவற்றில் காணலாம். இது அடிப்படையில் இனப்பெருக்க உறுப்புகளைப் பற்றிய நுண்ணறிவை உங்களுக்கு வழங்கும் ஓர் இயற்கையான பகுப்பாய்வாகும்,” என்கிறார் தரியல்.

அவரது நிறுவனமான நெக்ஸ்ட்ஜென் ஜேன், பேக்லண்ட் போன்ற தன்னார்வலர்களுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பருத்தி டாம்பான்களை அனுப்புகிறது. கடந்த 2014இல் நிறுவப்பட்டதில் இருந்து 330க்கும் மேற்பட்ட பெண்களிடம் இருந்து 2,000க்கும் மேற்பட்ட மாதவிடாய் ரத்த மாதிரிகளைப் பெற்று இந்த நிறுவனம் பகுப்பாய்வு செய்துள்ளது.

“கருப்பையை பாதிக்கும் எந்தவொரு நிலைமையையும் கண்டறிய மாதவிடாய் ரத்தத்தை பயன்படுத்தலாம். அவற்றில் பல விஷயங்கள் உள்ளன,” என்று அமெரிக்காவில் உள்ள நார்த்வெல் ஹெல்த் நிறுவனத்தில் இருக்கும் ஃபீன்ஸ்டீன் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இனப்பெருக்க உயிரியலாளர் கிறிஸ்டின் மெட்ஸ் கூறுகிறார்.

மாதவிடாய் ரத்தத்தில் மறைந்துள்ள மருத்துவ ரகசியம் பற்றி ஆய்வுகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், NextGen Jane

கிறிஸ்டின் மெட்ஸ் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் எண்டோமெட்ரியோசிஸ் பயோமார்க்ஸர்களை கண்டறிய மாதவிடாய் ரத்தத்தைப் பற்றி ஆய்வு செய்யத் தொடங்கினார். ஆனால், இப்போது எண்டோமெட்ரியல் புற்றுநோய், கருப்பைச் சுவரில் வளரும்போது ஏற்படும் அடினோமயோசிஸ் மற்றும் எண்டோமெட்ரியல் புறணியின் தொடர்ச்சியான வீக்கமான எண்டோமெட்ரிடிஸ் போன்ற நிலைமைகள் குறித்தான தகவல்களை மாதவிடாய் ரத்தம் வழங்குமா என்பதைப் பார்க்கவும் ஆர்வமாக இருக்கிறார்.

“கருப்பை ஆரோக்கியத்தைப் புரிந்துகொள்வதில் மாதவிடாய் ரத்தம் மதிப்புமிக்க ஒன்று. இதை வேறுவிதமாக அணுக நமக்கு வழிகள் இல்லை. இது மிகவும் தனித்துவமான உயிரியல் மாதிரி” என்று மெட்ஸ் கூறுகிறார்.

உதாரணமாக, ஓர் ஆய்வு மாதவிடாய் ரத்தத்தில் பிரத்யேகமாகக் காணப்படும் 385 புரதங்களைக் கண்டறிந்துள்ளது. மாதந்தோறும் கிடைப்பதைத் தாண்டி, மாதவிடாய் ரத்தத்தின் மற்றொரு பெரிய நன்மை என்னவெனில், எண்டோமெட்ரியல் பகுப்பாய்வின்போது பிரித்து எடுக்கப்படும் சிறிய திசுப் பகுதியுடன் ஒப்பிடும்போது இது கருப்பை ஆரோக்கியம் குறித்த முழுமையான பார்வையை வழங்குகிறது.

“கருப்பை ஒரு திராட்சைப் பழத்தின் அளவை ஒத்தது. எனவே, எண்டோமெட்ரியல் பயாப்ஸியுடன் உலகளாவிய மதிப்பீட்டைப் பெற முடியாது. ஆனால், மாதவிடாய் கழிவு என்பது முழுமையாக வெளியேற்றப்பட்ட எண்டோமெட்ரியம் ஆகும்,” என்று மெட்ஸ் கூறுகிறார். அவர் தன்னார்வலர்கள் மூலமாக மாதவிடாய் ரத்த மாதிரிகளைச் சேகரிக்கிறார்.

மாதவிடாய் ரத்தத்தில் மறைந்துள்ள மருத்துவ ரகசியம் பற்றி ஆய்வுகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

தனித்துவமான உயிரியல் குறிப்பான்களுக்கான தேடல்

மாதவிடாய் ரத்தம் நீண்டகாலமாக அறிவியல் ஆய்வுகளால் புறக்கணிக்கப்பட்டு வருவதால், எண்டோமெட்ரியோசிஸ் நோயறிதல் சோதனைக்குப் போதுமான நம்பகமான தனித்துவமான உயிரியல் குறிப்பான்கள் உள்ளனவா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால், மெட்ஸ் மற்றும் அவரது ஆய்வுக் கூட்டாளியான மரபியல் ஆய்வாளர் பீட்டர் கிரிகெர்சன் 3,700க்கும் மேற்பட்ட பெண்களை ஆய்வு செய்துள்ளனர். இதுவரை ஊக்கமளிக்கும் முடிவுகளே கிடைத்துள்ளன.

அதுகுறித்துப் பேசியபோது, “பல வேறுபாடுகள் உள்ளன” என்கிறார் மெட்ஸ். தொடக்கத்தில், கண்டறியப்பட்ட எண்டோமெட்ரியோசிஸ் உள்ள பெண்களுக்கு மிகக் குறைவான கருப்பை “எதிர்ப்பாற்றல்” செல்களே உள்ளன. அவை, நஞ்சுக்கொடி வளர்ச்சி மற்றும் தொற்றுகளுக்கு எதிராகப் பாதுகாப்பதன் மூலம் ஆரம்பக்கால கர்ப்பத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

“அவை கருவுறுதலில் செயலாற்றுகின்றன. எனவே அவற்றின் அளவு மிகக் குறைவாக இருப்பது நல்ல விஷயம் இல்லை” என்கிறார் மெட்ஸ்.

ஸ்ட்ரோமல் ஃபைப்ரோபிளாஸ்ட் செல்களில் ஒரு முக்கிய வேறுபாட்டையும் அவரது குழு குறிப்பிட்டது. இது ஒவ்வொரு மாதவிடாய்க்குப் பிறகும் கருப்பையின் புறணியை சரிசெய்யவும் மீட்டுருவாக்கவும் உதவுகிறது. எண்டோமெட்ரியோசிஸ் இருப்பவர்களிடையே, செல்கள் அதிக அழற்சி குறிப்பான்களை வெளிப்படுத்தின. கர்ப்பத்திற்கு கருப்பையைத் தயார்படுத்த உதவும் மாற்றங்களைத் தூண்டும் திறன் குறைவாக இருந்தது.

பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (PCOS) மற்றும் தொடர்ச்சியான கருச்சிதைவுகள் போன்ற பிற நிலைமைகளுடனும் இது இணைக்கப்பட்டுள்ளது.

எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்புள்ள பெண்களில், சில மரபணுக்கள் மாறுபட்ட விதத்தில் செயல்படுவதை மெட்ஸின் ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளது.

மாதவிடாய் ரத்தத்தைப் பரிசோதிப்பது, நீரிழிவு போன்ற எதிர்கால நோய்கள் ஏற்படும் அபாயத்தை முன்னறிவிப்பதில் பயனுள்ளதாக அமையக்கூடும்.

பட மூலாதாரம், Serenity Strull/ BBC

இந்த மாற்றங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஆராயும்போது, மருத்துவர்களால் இந்த நோயைக் கண்டறிய அவற்றை ஒரு கருவியாகப் பயன்படுத்த இயலக்கூடும். எதிர்காலத்தில், லேப்ரோஸ்கோபி போன்ற ஊடுருவும் நோயறிதல் முறைக்குப் பதிலாக, மாதவிடாய் ரத்தத்தைப் பயன்படுத்தி, எண்டோமெட்ரியோசிஸை கண்டறிவதற்கான ஒரு புதிய மற்றும் எளிய பரிசோதனை முறையை உருவாக்க இது உதவக்கூடும்.

மெட்ஸ், 2027ஆம் ஆண்டு வாக்கில் வீட்டிலேயே சோதனை செய்துகொள்ளக்கூடிய பரிசோதனைக் கருவியை சந்தைப்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் ஒப்புதலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று நம்புகிறார்.

அதேநேரத்தில், நெக்ஸ்ட்ஜென் ஜேன் ஆய்வாளர்கள் மாதவிடாய் ரத்தத்தை வேறு வழியில் ஆய்வு செய்து வருகின்றனர். ஒரு பெண்ணுக்கு எண்டோமெட்ரியோசிஸ் இருக்கிறதா என்பதைக் காட்டக்கூடிய பயோமார்க்கர்ஸ் எனப்படும் சிறப்பு உயிரியல் அறிகுறிகளைத் தேடுவதற்காக, மாதவிடாய் ரத்தத்தில் இருந்து எம்.ஆர்.என்.ஏ-வை சேகரித்து பகுப்பாய்வு செய்கிறார்கள்.

இதுவரை, எண்டோமெட்ரியோசிஸ் உள்ள பெண்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை மருத்துவர்கள் தெளிவாகக் கூற உதவும் பல குறிப்பான்களைக் கண்டறிந்து இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த முடிவுகளை உறுதிப்படுத்த, எண்டோமெட்ரியோசிஸ் உள்ள நூற்றுக்கணக்கான பெண்களை உள்ளடக்கிய ஒரு பெரிய ஆய்வு இப்போது அமெரிக்காவில் நடைபெற்று வருவதாக ஆராய்ச்சியாளர் ரிதி தரியல் கூறுகிறார்.

மே 2025இல், கருவுறாமை நோயாளிகளுக்கு எண்டோமெட்ரியோசிஸுக்கான மாதவிடாய் ரத்தப் பரிசோதனை மூலம் மருத்துவப் பரிசோதனை செய்ய நெக்ஸ்ட்ஜென் ஜேன் 2.2 மில்லியன் டாலர் மானியத்தைப் பெற்றது.

மாதவிடாய் ரத்தத்தில் மறைந்துள்ள மருத்துவ ரகசியம் பற்றி ஆய்வுகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

இனப்பெருக்க ஆரோக்கியம் மட்டுமே இலக்கல்ல

மாதவிடாய் ரத்தம் எண்டோமெட்ரியோசிஸை பற்றி மட்டுமே அல்லாமல் வேறு பல விஷயங்களைப் பற்றியும் ஆய்வு செய்வதற்குப் பயனுள்ளதாக இருக்கும். இது விஞ்ஞானிகள் பிற சுகாதார நிலைகளைப் பற்றி அறியவும் உதவும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எடுத்துக்காட்டாக, நெக்ஸ்ட்ஜென் ஜேனின் ஆராய்ச்சி, கருப்பை ஆரோக்கியத்திற்கும் வயதாவதற்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கலாம் எனக் கூறுகிறது. ஆராய்ச்சியாளர் ரிதி தரியல் இது தொடர்பாகப் பேசியபோது, “தரவுகள் இன்னும் ஆரம்பக் கட்டத்திலே உள்ளன. ஆனால் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதற்கும், இயற்கையாகவே மக்கள் வயதாகும் போது நிகழும் மாதவிடாய் சுழற்சிக்கும் இடையே ஒரு தெளிவான தொடர்பு இருப்பதைக் காண்கிறோம்” என்று கூறினார்.

மாதவிடாய் ரத்தம் எதிர்காலத்தில் நோயெதிர்ப்பு தொடர்பான நோய்களை அடையாளம் காண உதவும் என்றும் அவர்களின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஹைப்போ தைராய்டிசம், ஹைப்பர் தைராய்டிசம் போன்ற நிலைமைகளும் இதில் அடங்கும். இந்தப் பாதிப்புகளில், தைராய்டு சுரப்பி, உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் தைராக்ஸின் மற்றும் ட்ரையோடோதைரோனைன் ஹார்மோன்களை மிகக் குறைவாகவோ அல்லது மிக அதிகமாகவோ உற்பத்தி செய்கிறது.

எண்டோமெட்ரியோசிஸ் உள்ள பலருக்கும் பெரும்பாலும் ஒருவித தன்னுடல் தாக்க நிலை இருப்பதாகவும் தரியல் குறிப்பிடுகிறார். மாதவிடாய் சுழற்சியின்போது, உடல் வீக்கம் மற்றும் குணப்படுத்தலுக்கு இடையில் வடுக்கள் இல்லாமல் நகர்கிறது. இதன் காரணமாக, மாதவிடாய் ரத்தத்தை ஆய்வு செய்வது, முடக்கு வாதம், லூபஸ், மல்டிபிள் ஸ்களீரோசிஸ் போன்ற அழற்சி மற்றும் நோயெதிர்ப்பு சார்ந்த நோய்களை விஞ்ஞானிகள் நன்கு புரிந்துகொள்ள உதவும்.

நீரிழிவு நோயைக் கண்டறிவதற்கும் மாதவிடாய் ரத்தம் பயன்படுத்தப்படுகிறது. 2021 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், கலிஃபோர்னியாவை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான க்வின் என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், மாதவிடாய் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு உடலின் பிற பகுதிகளில் உள்ள சர்க்கரை அளவுகளுடன் நெருக்கமாகப் பொருந்துவதைக் கண்டறிந்தனர். இது ஒரு நாள் ரத்த சர்க்கரை அளவைக் கண்காணிக்க மாதவிடாய் ரத்தம் பயன்படுத்தப்படலாம் என்பதைக் குறிக்கிறது.

இந்த ஆய்வு முடிவுகள் 2024ஆம் ஆண்டில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட முதல் மாதவிடாய் ரத்த சர்க்கரை பரிசோதனையை உருவாக்க உதவியது. இந்தச் சோதனை க்யூ-பேட் எனப்படும் ஒரு சிறப்பு சுகாதாரப் பட்டை ஆகும். இது க்வின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்தப் பட்டையில் மாதவிடாய் ரத்தத்தைச் சேகரிக்கும் ஒரு சிறிய நீக்கக்கூடிய துண்டு உள்ளது. பயனர்கள் அதில் மாதவிடாய் ரத்தத்தை சேகரித்து க்வின் நிறுவனத்துடைய ஆய்வகத்திற்கு அனுப்புகிறார்கள். அங்கு அந்த மாதிரி ரத்த சர்க்கரை அளவைச் சரிபார்க்க சோதிக்கப்படுகிறது.

மாதவிடாய் ரத்தம், எண்டோமெட்ரியோசிஸ் உள்ளிட்ட பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளைக் கண்டறிய உதவக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

தாய்லாந்தில் 2022ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், தங்கள் பட்டையைப் பயன்படுத்தி சேகரிக்கப்பட்ட மாதிரிகள் அதிக ஆபத்துள்ள மனித பாபிலோமா வைரஸை (HPV) கண்டறிவதில் சிறந்தவை என்றும் க்வின் நிறுவனம் காட்டியது. இந்த வைரஸ் கருப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்பை உருவாக்கலாம். பாரம்பரிய பேப் ஸ்மியர் சோதனைகளைவிட இதன் முடிவுகள் இன்னும் சிறப்பாக இருந்தன. இந்தக் கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்த அமெரிக்காவில் ஒரு பெரிய ஆய்வு இப்போது நடந்து வருகிறது.

இந்த ஆண்டு முதல் கிளமிடியா, கோனோரியா போன்ற பாலியல் ரீதியாகப் பரவும் நோய்த்தொற்றுகளைச் சோதிக்க க்யூ-பேட் கருவியைப் பயன்படுத்த முடியுமா என்பதையும் ஆய்வு செய்யவுள்ளதாக க்வின் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மேட்ஸ் லில்லிலுண்ட் தெரிவித்தார்.

பின்னர், தைராய்டு ஹார்மோன்கள், இனப்பெருக்க ஹார்மோன்கள், வீக்கக் குறிப்பான்கள் மற்றும் ஒரு நபருக்கு SARS-CoV-2 வைரஸுக்கு நோயெதிர்ப்பு சக்தி உள்ளதா என்பதைக் காட்டும் ஆன்டிபாடிகள் போன்ற பிற சுகாதார குறிப்பான்களை அளவிட இந்தச் சோதனையைப் பயன்படுத்தலாம் என நிறுவனம் நம்புகிறது.

இதேபோல, பெர்லினில் உள்ள தி பிளட் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், தற்போது எண்டோமெட்ரியோசிஸ், மாதவிடாய் நிறுத்தம் முன்கூட்டியே வருவது, பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம், கருவுறுதல் பிரச்னைகள் போன்ற நிலைமைகளைக் கணிக்க உதவும் ஒரு கருவியைப் பரிசோதித்து வருகிறது.

மாதவிடாய் ரத்தத்தில் மறைந்துள்ள மருத்துவ ரகசியம் பற்றி ஆய்வுகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

மாதவிடாய் புரட்சி

சமீபத்திய முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், விஞ்ஞானிகள் இன்னும் மாதவிடாய் ரத்தத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை.

ஒரு முக்கிய விஷயம் என்னவெனில், ஆய்வாளர்கள் அதிலுள்ள அனைத்துப் பொருட்களையும் அல்லது மாதவிடாயின்போது இந்தப் பொருட்கள் எவ்வாறு விரைவாக மாற்றமடைகின்றன என்பதையும் இன்னும் அடையாளம் காணவில்லை.

இந்த விஷயத்தில் ஆராய்ச்சி இன்னும் மிகவும் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளது. மாதவிடாய் பற்றிப் பேசுவதில் உள்ள கலாசார ரீதியான பிரச்னைகள் இதற்கொரு காரணம். இது வெளிப்படையாக விவாதிக்கப்படக் கூடாத தடை செய்யப்பட்ட விஷயம் என்று பலருக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது என்று மெட்ஸ் கூறுகிறார்.

இதிலுள்ள மற்றொரு பிரச்னை என்னவெனில், மருத்துவ ஆய்வு பெரும்பாலும் பெண்களைவிட ஆண்கள் மீது அதிக கவனம் செலுத்தியுள்ளது. பெண்களின் சுகாதார ஆய்வுகளுக்குக் குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும், 2020ஆம் ஆண்டில் ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிதியில் சுமார் 5% மட்டுமே பெண்களின் ஆரோக்கியத்திற்காகச் செலவிடப்பட்டது.

பல மருந்துகள் முக்கியமாக ஆண்களுக்கு, பெரும்பாலும் வெள்ளையர்களுக்கு, பாலினம் அல்லது இன ரீதியாக மிகச் சிறிய வேறுபாடுகளுடன் சோதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உண்மையில், எண்டோமெட்ரியோசிஸ் போன்ற நிலைமைகளைவிட ஆண்களின் வழுக்கைக்கு தீர்வு காண அதிக பணம் செலவிடப்பட்டுள்ளதாக சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

எண்டோமெட்ரியோசிஸ் போன்ற வலி மிகுந்த நிலைமைகளுடன் வாழும் பல பெண்கள் இந்த வகையான ஆராய்ச்சி மிகவும் முன்னதாகவே செய்யப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறுகிறார்கள். மாதவிடாய் வலியுடன் வளர்ந்ததாலும், என்ன தவறு எனத் தெரியாமல் இருந்ததாலும் தான் மிகவும் தனிமைப்படுத்தப்பட்டதைப் போல உணர்ந்ததாக பேக்லண்ட் கூறுகிறார்.

மாதவிடாய் ரத்தத்தைப் பயன்படுத்தி எளிய சோதனைகளை உருவாக்குவதில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றால், எதிர்கால தலைமுறை பெண்கள் மிக விரைவாக நோய் கண்டறிதல் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை பெறுவார்கள் என்று அவர் நம்புகிறார். இது இன்று பல பெண்கள் எதிர்கொள்ளும் உடல் வலி மற்றும் உணர்ச்சிப் போராட்டங்களைத் தவிர்க்க அவர்களுக்கு உதவும்.

பிபிசி தமிழுடன் பகிருங்கள்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU