Home தேசிய national tamil இரான் மீதான தாக்குதல்களின் சுமையை தாங்கும் அமெரிக்காவின் வளைகுடா நட்பு நாடுகள்

இரான் மீதான தாக்குதல்களின் சுமையை தாங்கும் அமெரிக்காவின் வளைகுடா நட்பு நாடுகள்

4
0

SOURCE :- BBC NEWS

அபுதாபி, டிரோன்கள், பாலிஸ்டிக் ஏவுகணை, தாக்குதல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இரான்

பட மூலாதாரம், Reuters

அபுதாபியின் தெளிவான நீல வானத்தில், மணல் நிற வில்லாக்களுக்கும், நன்கு நீர்ப்பாசனம் செய்யப்பட்டு செழித்து வளர்ந்திருக்கும் தோட்டங்களுக்கும் மேலே வெண்ணிறப் புகைத் தடங்கள் காணப்படுகின்றன.

இவை சுற்றுலாப் பயணிகளையோ அல்லது விருந்தினர் தொழிலாளர்களையோ ஏற்றி வரும் ட்ரீம்லைனர்களோ அல்லது ஏர்பஸ் விமானங்களோ வெளியிடும் புகையல்ல. அவை இரானால் ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளின் எதிரொலியாகும்.

ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை, 165 பாலிஸ்டிக் ஏவுகணைகள், இரண்டு குரூயிஸ் ஏவுகணைகள் மற்றும் 541 இரானிய டிரோன்களை “எதிர்கொண்டிருப்பதாக” ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“பஹ்ரைனில், ஒரு தூக்கமில்லாத இரவைக் கழித்த பிறகு, ஞாயிற்றுக்கிழமை காலை விமான நிலையம் தாக்குதலுக்கு உள்ளானதாக நண்பர் ஒருவர் எனக்குத் தெரிவித்தார்.”

“பெரிய வெடிப்புச் சத்தங்களாலும் அலறும் சைரன் ஒலிகளாலும் விழிப்பு வந்தது,” என்று அவர் குறுஞ்செய்தி அனுப்பினார். “சுமார் 20 முறை வெடிப்புச் சத்தங்கள் கேட்டிருக்கும் என நினைக்கிறேன். குறைந்தது இரண்டு இடங்களிலாவது தாக்குதல் நடந்திருக்கிறது.”

இப்பகுதியில் இவை பழக்கப்பட்ட காட்சிகள் அல்ல. ஆனால் இந்த மோதல் சனிக்கிழமை காலை தொடங்கியதிலிருந்து, இரான் தனது இலக்குகளை விரிவுபடுத்தியதாகத் தெரிகிறது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவுத் தலைமையகம் போன்ற ராணுவ இலக்குகளைத் தாக்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல், விமான நிலையங்கள் மற்றும் பிற சிவில் இடங்களையும் அது இப்போது குறிவைக்கிறது.

வளைகுடா அரபு நாடுகளின் வான் பாதுகாப்பு அமைப்புகளில் இடைவெளிகள் ஏற்படுவதால், இப்போது ஆடம்பர ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் நவீன விமான நிலைய முனையங்கள் ஆங்காங்கே தாக்குதலுக்கு உள்ளாகின்றன.

என்றாவது ஒரு நாள் டிரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்கப்படலாம் என்ற கண்ணோட்டத்தில் இந்த இடங்கள் கட்டப்படவில்லை.

இரான், தனது அண்டை நாடுகளைக் குறிவைப்பதாகக் கூறப்படுவதை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி மறுத்துள்ளார். இது குறித்து அல் ஜசீரா ஊடகத்திடம் பேசிய அவர், “பாரசீக வளைகுடாவில் உள்ள எங்கள் அண்டை நாடுகளை நாங்கள் தாக்கவில்லை, அந்த நாடுகளில் உள்ள அமெரிக்காவின் இருப்பைத்தான் நாங்கள் இலக்கு வைக்கிறோம். அண்டை நாடுகள் தங்களின் புகார்களை இந்தப் போர் குறித்து முடிவெடுப்பவர்களிடம்தான் தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

வளைகுடா நாடுகளில் சிவில் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சில சேதங்கள் தற்செயலானவை – அவை இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகளில் இருந்து விழும் சிதறல்களால் ஏற்பட்டவை.

ஆனால் அனைத்துமே அப்படிப்பட்ட சேதங்கள் அல்ல.

பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விமான நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் எண்ணிக்கையானது, இது தற்செயலானது என்பதற்கும் அதிகமானது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.

தான் தாக்கப்பட்டால், அந்தத் தாக்குதலுக்கு உடந்தையாக இருப்பதாகத் தான் கருதும் எந்த நாட்டின் மீதும் பதிலடி கொடுப்போம் என்பதை இரான் முன்கூட்டியே தெளிவாக தெரிவித்திருந்தது.

டிரோன்கள், பாலிஸ்டிக் ஏவுகணை, தாக்குதல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இரான்

பட மூலாதாரம், Fadel SENNA / AFP via Getty Images

அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதலில் தாங்கள் ஒரு அங்கமல்ல என்பதைக் காட்டுவதற்கு வளைகுடா நாடுகள் பெருமளவு முயற்சி செய்தன.

இருப்பினும், அமெரிக்காவின் நீண்டகால ராணுவப் பங்காளிகளாக இருப்பதற்காக அவை அடிப்படையில் தண்டிக்கப்பட்டுள்ளன.

இஸ்லாமியப் புரட்சிக்கு முன்பு, ஷா மன்னரின் காலத்தில், “வளைகுடாவின் காவல்துறை” என்றே இரான் அழைக்கப்பட்டது.

புரட்சிக்குப் பிறகு, அந்தப் பொறுப்பைத் தான் மீண்டும் ஏற்க வேண்டும் என்றும், “கலீஜ்-இ-ஃபார்ஸ்” (அரபுகள் இதை அரேபிய வளைகுடா என்று அழைக்கிறார்கள், இரான் பெர்சிய வளைகுடா என்கிறது) பகுதியில் “பாதுகாப்பிற்கு பொறுப்பேற்க” வேண்டும் என்றும் தனது அண்டை நாடுகளை நம்ப வைக்க இரான் எப்போதும் முயற்சி செய்து வருகிறது.

அமெரிக்கக் கடற்படையை வெளியேற்றிவிட்டு, தங்களை பாதுகாவலர்களாக ஏற்றுக்கொள்ளுமாறு வளைகுடா அரபு நாடுகளை வற்புறுத்த இரானியத் தலைவர்கள் முயன்றபோதிலும், அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.

இருப்பினும், இஸ்லாமியக் குடியரசின் புரட்சிகர வேகம் என்பது பாரம்பரியமான, வம்சாவளி மன்னராட்சிகளைக் கொண்ட வளைகுடா நாடுகளின் ஆட்சியாளர்கள் முற்றிலும் வெறுக்கும் ஒன்று. எனவே, தற்போது அவர்கள் பொறுத்துக் கொள்ளக்கூடிய எல்லை மீறப்பட்டுள்ளது.

தற்போதைய இரானியத் தலைமை இந்தப் போரில் தப்பிப் பிழைத்தாலும் கூட, அவர்களுடன் வளைகுடா நாடுகள் சுமுகமான உறவு சாத்தியமாகாமல் போகலாம்.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் படைகளுக்கு நீண்டகாலமாக இடமளித்து வரும் செளதி அரேபியா மற்றும் ஓமன் ஆகிய இரண்டு நாடுகளும், பிற நான்கு வளைகுடா அரபு நாடுகளை விடக் குறைவான பாதிப்புகளுடனேயே தப்பித்துள்ளன.

இரானுடன் நல்லுறவைப் பேணி வருவதும், அமெரிக்கா மற்றும் இரானுக்கு இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் செய்து வரும் ஓமன் நாடு, அரேபிய கடற்கரையில் உள்ள தனது துக்ம் வணிகத் துறைமுகத்தின் மீது டிரோன் தாக்குதலை எதிர்கொண்டது.

அபுதாபி, டிரோன்கள், பாலிஸ்டிக் ஏவுகணை, தாக்குதல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இரான்

பட மூலாதாரம், Reuters

செளதி அரேபியாவின் தலைநகரான ரியாத், கடந்த சனிக்கிழமை இலக்கு வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கு அந்த நாட்டு அரசாங்கம் கடுமையான கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “ரியாத் பிராந்தியத்தையும் கிழக்கு மாகாணத்தையும் குறிவைத்து நடத்தப்பட்ட அப்பட்டமான மற்றும் கோழைத்தனமான தாக்குதல்களை செளதி அரேபிய அரசு வன்மையாக மறுப்பதோடு கண்டிக்கிறது. இந்தத் தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன. எந்தவொரு காரணத்திற்காகவும் இத்தகையத் தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது” என்று கூறப்பட்டுள்ளது.

இரான் தனது அண்டை வளைகுடா அரபு நாடுகளின் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குதல் நடத்துவது இது முதல் முறை அல்ல என்றபோதிலும், இதற்கு முன்பு ஒருபோதும் பெரிய அளவில் தாக்குதல் நடந்ததில்லை.

2019-ஆம் ஆண்டில், இராக்கில் உள்ள இரானிய ஆதரவு பெற்ற ஒரு ஆயுதக் குழு, செளதி அராம்கோவின் அப்யிக் மற்றும் குராய்ஸ் ஆகிய இடங்களில் உள்ள பெட்ரோகெமிக்கல் நிலையங்கள் மீது தொடர்ச்சியாக டிரோன்களை ஏவித் தாக்குதல் நடத்தியது. இது செளதியின் தினசரி ஏற்றுமதித் திறனில் பாதியைத் தற்காலிகமாக முடக்கியது.

கடந்த ஜூன் மாதம், கத்தாரில் உள்ள அல்-உதெய்த் விமானத் தளம் மீது இரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியது. ஆனால் இது இஸ்பஹான், நதான்ஸ் மற்றும் ஃபோர்டோ ஆகிய இடங்களில் இருந்த இரானின் அணுசக்தி தளங்களை அழித்த அமெரிக்காவின் ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே பார்க்கப்பட்டது; இது குறித்து இரான் ரகசியமாக முன்கூட்டியே எச்சரிக்கையும் விடுத்திருந்தது.

பஹ்ரைனில் வசிக்கும் ஷியா மக்கள் சில நேரங்களில் கிளர்ச்சியில் ஈடுபடுபவர்கள். தனது நாட்டில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு இரான் நிதி உதவி செய்வதாகவும், பயிற்சி அளித்து ஆயுதங்களை வழங்குவதாகவும் பஹ்ரைன் நீண்டகாலமாகக் குற்றம் சாட்டி வருகிறது.

இருப்பினும், வளைகுடா அரபு நாடுகள் தற்போது அனுபவித்து வரும் தற்போதைய சூழ்நிலையுடன் ஒப்பிடுகையில் இவை அனைத்தும் மிகச் சிறியதாகவே தோன்றுகின்றன.

அபுதாபி, டிரோன்கள், பாலிஸ்டிக் ஏவுகணை, தாக்குதல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இரான்

பட மூலாதாரம், Reuters

இது எப்படி முடியும்?

அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல், மத்திய கிழக்கின் பல அரசாங்கங்கள் மற்றும் நிச்சயமாக பல இரானியர்களுக்கும் இஸ்லாமியக் குடியரசின் ஆட்சி விரைவாக முடிவுக்கு வருவது தான் நல்லது. அதைத் தொடர்ந்து இரானில் ஜனநாயக மாற்றம் சுமூகமாக ஏற்பட்டு, உலகின் பிற நாடுகளுடன் இரான் இயல்பான உறவை அனுபவிக்கும் ஒரு சூழல் உருவாவது தான் இப்போது சிறந்த முடிவாக இருக்கும்.

இருப்பினும், அது நடப்பது என்பது தற்போதைக்கு நிச்சயமற்ற ஒன்றாகவே உள்ளது.

இரான் ஏவுகணைகளையும் டிரோன்களையும் ஏவுவதற்கு முன்பே, அவற்றை ஏவும் திறனை அழிப்பதற்கான அதிவேக முயற்சியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தற்போது ஈடுபட்டுள்ளன.

இரானின் புரட்சிகர காவல்படைக்கு (IRGC) இப்போதுள்ள இக்கட்டான நிலை என்னவென்றால், அமெரிக்கப் போர்க்கப்பல் போன்ற பெரிய இலக்கு ஒன்றின் மீது அதன் பாதுகாப்பு வளையங்களை மீறித் தாக்குதல் நடத்துவதா அல்லது அதிபர் டிரம்பின் பொறுமை காலாவதியாகும் வரை காத்திருந்து, தனது மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதக் கிடங்குகளைப் பாதுகாப்பதா என்பதுதான்.

தன்னிடம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மட்டுமே உள்ளன என்பதை இரான் அறிந்துள்ளதைப் போல, அவற்றை எதிர்கொள்ள தனது எதிரிகளிடம் எஞ்சியுள்ள வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் எண்ணிக்கையும் குறிப்பிட்ட அளவே உள்ளது என்பதையும் இரான் உணர்ந்துள்ளது.

இரானின் ஏவுகணைகள் அல்லது டிரோன்கள் தீருவதற்கு முன்னதாகவே, அவற்றை எதிர்கொள்ளும் எதிரிகளின் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் தீர்ந்துவிட்டால், வளைகுடா பிராந்தியத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை இன்னும் ஆபத்தானதாக மாறக்கூடும்.

அபுதாபி, டிரோன்கள், பாலிஸ்டிக் ஏவுகணை, தாக்குதல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இரான்

அதிகார பலம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு சாதகமாகவே பெரிதும் உள்ளது. இந்த இரு நாட்டு ராணுவங்களும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டவைகளாகும்.

இப்பிராந்தியத்தில் 200-க்கும் மேற்பட்ட போர் விமானங்களைக் கொண்ட இரண்டு அமெரிக்க விமானம் தாங்கி போர்க் கப்பல் தொகுதிகள் உள்ளன; ஆனால் பல ஆண்டுகளாக கடும் தடைகளுக்கு உள்ளாகியுள்ள இரானிடம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விமானப்படை ஏதுமில்லை. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டும் வான்வெளியில் முழுமையான ஆதிக்கத்தைக் கொண்டுள்ளன.

இருப்பினும், இரானிடம் இன்னும் சில சாதகமான அம்சங்கள் உள்ளன. இரானிய ஆட்சி பலவீனமடைந்திருந்தாலும், அதன் மக்களிடையே செல்வாக்கு குறைந்திருந்தாலும், இந்த மோதலில் தான் ஒரு நீண்டகால வெற்றியாளர் என்று பிரகடனப்படுத்திக் கொள்ள அது தப்பிப்பிழைப்பது மட்டுமே போதுமானது.

தியாக வழிபாடு எனும் தத்துவத்தைக் கொண்ட இஸ்லாமியக் குடியரசு, அமெரிக்காவை விட அதிக வலிகளைத் தாங்கிக்கொள்ளும் வல்லமை கொண்டது. இந்த மோதல் நீடிக்க நீடிக்க, இதிலிருந்து வெளியேறும் வழியைக் கண்டறிய அதிபர் டிரம்ப் அதிக ஆர்வம் காட்டுவார்.

அமெரிக்காவும் இரானும் மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்புமா?

இரானிய ஆட்சி வீழ்ந்தால், அதற்குத் தேவையிருக்காது. ஆனால் ஒருவேளை அந்த ஆட்சி தப்பிப்பிழைத்தால், இரான் மீதான மூன்று முக்கிய கோரிக்கைகளை அமெரிக்கா மீண்டும் முன்வைக்கும்.

அவை, இரானின் சந்தேகத்திற்குரிய அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்துதல், இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் இப்பிராந்தியத்தில் உள்ள ஹெஸ்புலா, ஹமாஸ் மற்றும் ஹூதிகள் போன்ற இரானிய ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களுக்கான ஆதரவை நிறுத்துதல் ஆகியவை ஆகும்.

கடந்த மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக ஓமன் கூறுகிறது. ஆனால் பிற இரண்டு விவகாரங்கள் குறித்து விவாதிக்க இரான் மறுத்துவிட்டது – இது “பேச்சுவார்த்தைகள் செல்லும் விதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை” என்று டொனால்ட் டிரம்ப் கூறக் காரணமாக அமைந்தது.

தற்போது மறைமுகத் தொடர்புகள் மூலம் ஒரு போர்நிறுத்தம் ஏற்படவும், அதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் இரு தரப்பினரின் நிலைப்பாடுகளில் மாற்றம் இல்லையென்றால், ராணுவ நடவடிக்கை மீண்டும் தொடரக்கூடும். எனவே, இந்த மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU