Home Latest news tamil சமீபத்திய செய்தி ஏழில் 4 முறை ஆட்டநாயகன்: இந்தியாவுக்கு அரையிறுதியில் சவால் தர காத்திருக்கும் இங்கிலாந்தின் ‘வில்...

ஏழில் 4 முறை ஆட்டநாயகன்: இந்தியாவுக்கு அரையிறுதியில் சவால் தர காத்திருக்கும் இங்கிலாந்தின் ‘வில் ஜேக்ஸ்’

27
0

SOURCE :- BBC NEWS

வில் ஜேக்ஸ், இந்தியா - இங்கிலாந்து, டி20 உலகக்கோப்பை அரையிறுதி

பட மூலாதாரம், Getty Images

இந்தியா, இலங்கையில் விறுவிறுப்பாக நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை மறுநாள் நடக்கவுள்ள அரையிறுதிப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் ஆல்ரவுண்டராக ஜொலிக்கும் இங்கிலாந்து வீரர் வில் ஜேக்ஸ் அரையிறுதியில் இந்தியாவுக்கு சவாலாக இருப்பார் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

வில் ஜேக்ஸ் இந்தத் தொடரின் மிகச் சிறந்த வீரர்களுள் ஒருவராக விளங்கிக் கொண்டிருக்கிறார். சொல்லப்போனால் அவர்தான் சிறந்த வீரர் என்று கூட சொல்லலாம். நான் அவரது செயல்பாட்டை வெறுமனே எண்களால் பார்க்கவில்லை. இலங்கையில் உள்ள பெரிய, மெதுவான ஆடுகளங்களில் நிறைய போட்டிகளை விளையாடியிருக்கிறார்கள் எனும் போது அங்கு பெரிய எண்களைப் பார்க்க முடியாது. நெறுக்கடியான நேரத்தில் இங்கிலாந்தை எத்தனை போட்டிகளில் அவர் காப்பாற்றியிருக்கிறார் என்பதைப் பார்க்கிறேன். நெருக்கடியான நேரத்தில் இந்த உலகக் கோப்பையில் மிகச் சிறந்த செயல்பாட்டைக் கொடுத்தவர் ஜேக்ஸ் தான்.

இந்த உலகக் கோப்பையில் (இங்கிலாந்து vs நியூசிலாந்து போட்டி வரை) அவர் 191 ரன்கள் எடுத்திருக்கிறார். அதிக ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் அது 12-வது இடம். 7 விக்கெட் வீழ்த்தி அந்தப் பட்டியலில் 23-வது இடத்தில் இருக்கிறார்.

இதையெல்லாம் விட என்னை அதிகம் கவர்ந்திருக்கும் எண் – அவர் 7 ஆட்டங்களில் 4 முறை ஆட்ட நாயகன் விருது வென்றிருக்கிறார்.

வில் ஜேக்ஸின் பங்களிப்பு இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து விளையாடிய முதல் போட்டியில் இருந்தே தொடங்கிவிட்டது. நேபாளத்துக்கு எதிராக அவர் 18 பந்துகளில் அடித்த 39 ரன்கள் (ஆட்டமிழக்கவில்லை) தான் பெரிய வித்தியாசமாக இருந்தது. அது இல்லாவிட்டால் நிச்சயம் அந்தப் போட்டியில் இங்கிலாந்து தோற்றிருக்கும்.

அதேபோலத்தான் இத்தாலிக்கு எதிரான அரைசதம், இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக அவர் வீசிய 4 ஓவர் ஸ்பெல், நியூசிலாந்துக்கு எதிராக அவர் (ஆட்டமிழக்காமல்) அடித்த 32 ரன்கள் எல்லாமே.

“பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஆடுகிறார்”

இந்த உலகக் கோப்பையில் பெரும்பாலான போட்டிகளில் ஜேக்ஸ் நெருக்கடியான நேரத்தில் தான் களமிறங்கியிருக்கிறார். அந்தப் போட்டிகளில் மிகச் சிறப்பாகவும் செயல்பட்டிருக்கிறார். சொல்லப்போனால், பெரும்பாலான இங்கிலாந்து பேட்டர்கள் இந்த உலகக் கோப்பையில் அவ்வளவு சிறப்பான ஃபார்மில் இல்லை.

ஃபில் சால்ட், டாம் பேன்டன், சாம் கரண் என அனைவரின் சராசரியுமே 25க்கும் குறைவாகத்தான் இருக்கிறது. குறிப்பாக பட்லர் இரட்டை இலக்க ஸ்கோரை எடுக்கவே தடுமாறுகிறார். அதனால்தான், ஜேக்ஸின் பங்களிப்பு இன்னும் பெரிதாக இருக்கிறது. இங்கிலாந்து விரைவாக 4 அல்லது 5 விக்கெட்டுகளை இழந்த பிறகு தான் களமிறங்குகிறார். அங்கிருந்து அணியைக் கரை சேர்த்துக் கொண்டிருக்கிறார். இதுதான் ஒரு வீரரின் திறமையைக் காட்டும்.

நீங்கள் 140/4 என்ற நிலையில் களமிறங்கி கடைசியில் அதிரடியாக ஆடி 180 என்ற ஸ்கோருக்குக் கொண்டுவருவது அவ்வளவு கடினமான விஷயம் இல்லை. ஆனால், 40/5, 50/4 என்ற நிலையில் இறங்கி 170, 180 கொண்டுவருவது சாதாரண விஷயம் இல்லை. கடினமான சூழ்நிலைகளில் மற்ற வீரர்கள் சுழலுக்கு எதிராகத் தடுமாறும் போது இவர் சிறப்பாக ஆடியிருக்கிறார். ஸ்பின்னர்கள் மீது ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார்.

அந்த இலங்கை ஆடுகளங்களில் பந்து சற்று நின்று மெதுவாக வரும். நன்கு திரும்பும். அதனாலேயே பேட்டர்கள் சிரமப்படுவார்கள். பொதுவாக முன்பே முடிவுசெய்து ஒரு பெரிய ஷாட் ஆடப் போகும்போது மாட்டிக்கொள்வார்கள். ஆனால், ஜேக்ஸ் தன் ஆட்டத்தை அதற்கு ஏற்றதுபோல் சற்று மாற்றியிருக்கிறார். அவர் நன்கு காத்திருந்து விளையாடுகிறார். பேக் ஃபூட்டில் காத்திருக்கும் அவர், பந்து தனக்கு வரும் வரை நிதானமாக இருக்கிறார். அதனால் பந்தை நன்கு கணித்து, அதற்கு ஏற்ப அவர் ஷாட்டை முடிவுசெய்கிறார். டி20 கிரிக்கெட்டில் இப்படி ஆடுவது எளிதான விஷயம் இல்லை.

வில் ஜேக்ஸ், இந்தியா - இங்கிலாந்து, டி20 உலகக்கோப்பை அரையிறுதி

பட மூலாதாரம், Getty Images

அதுமட்டுமல்லாமல் இலங்கை ஆடுகளங்களில் சேஸ் செய்வது எளிதான விஷயம் இல்லை. அங்கு டாட் பால் சதவீதம் அதிகமாக இருக்கும். அது மேலும் நெருக்கடியை அதிகரிக்கும்.

ஜேக்ஸ் அந்த நெருக்கடியான நேரங்களில் பொறுப்பை தன் தோள்களில் ஏற்றுக்கொண்டு அதை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். பெரும்பாலான வீரர்கள் இதுபோன்ற நெருக்கடியான சூழலில் தடுமாறிவிடுவார்கள். ஆனால், ஜேக்ஸ் பொறுப்பை சிறப்பாக சுமந்திருக்கிறார். பெரிய ஷாட்கள் ஆடுவது, ஸ்டிரைக் ரொடேட் செய்வது என அனைத்தையும் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

2007-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் யுவ்ராஜ் சிங் இப்படியான ஒரு செயல்பாட்டைத் தான் கொடுத்தார். அதைத்தான் இந்தத் தொடரில் ஜேக்ஸ் செய்துகொண்டிருக்கிறார்.

‘கடினமான இடத்திலும் ஜொலிக்கிறார்’

என்னைப் பொறுத்தவரை டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் செய்ய மிகவும் கடினமான இடம் என்றால் அது நம்பர் 6,7 தான். உங்களுக்கு அவகாசமே கிடைக்காது. அந்த இடத்தில் இருக்கும்போது முதல் பந்தில் இருந்தே அடிக்கவேண்டும் என்ற தேவை ஏற்படும். அது எளிதான காரியமில்லை. அதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் ஆடும் ஒவ்வொரு டாட் பாலுமே நெருக்கடியை அதிகரிக்கும். அதுவே ஓப்பனர்கள், நம்பர் 3 பேட்டர்கள் எனும்போது அந்த அவகாசம் கிடைக்கும்.

அதுமட்டுமல்லாமல், பவர்பிளேவில் நிறைய ஃபீல்டர்கள் வட்டத்துக்கு உள்ளேதான் இருப்பார்கள். அதனால், 2,3 டாட் பால்கள் ஆடினால் கூட உடனடியாக 2,3 பவுண்டரிகள் அடித்துவிட முடியும். அதிலும் இலங்கை ஆடுகளங்களில் பந்து நின்றுவரும்போது பவுண்டரிகள் அடிப்பது எளிதே இல்லை.

இந்தியாவில் இருக்கும் ‘flat’ ஆடுகளங்களில் அப்படி முதல் பந்தில் இருந்தே அடிப்பது எளிதாக இருக்கலாம். ஆனால், இலங்கையில் அப்படி அடித்திட முடியாது. அப்படியொரு இடத்தில், அந்த பேட்டிங் பொசிஷனில் இறங்கி ஆடியதால் தான் வில் ஜேக்ஸ் தனித்துத் தெரிந்திருக்கிறார்.

வில் ஜேக்ஸ், இந்தியா - இங்கிலாந்து, டி20 உலகக்கோப்பை அரையிறுதி

பட மூலாதாரம், Getty Images

இப்படியான சூழ்நிலைகளில் ஒரு மிடில் ஆர்டர் பேட்டரால், ஒரு ஃபினிஷரால் அந்த பெரிய ஷாட்களை எளிதாக முடிவு செய்து அடித்துவிட முடியாது. நீங்கள் எந்த பௌலரை டார்கெட் செய்து ஆடப் போகிறீர்கள், எந்த பவுண்டரியை, எந்த ஏரியாவை டார்கெட் செய்யப்போகிறீர்கள், உங்களின் பிரதான ஷாட்டாக என்ன இருக்கப்போகிறது என்பது போன்ற பல விஷயங்களை நீங்கள் முடிவு செய்து அதற்கேற்பத்தான் ஆடவேண்டும். இதை மகேந்திர சிங் தோனி நிறைய செய்து பார்த்திருக்கிறோம். ஓரிரு டாட் பால்கள் ஆடினாலும் அவர் அதன்பிறகு பவுண்டரிகள் அடித்து சரிசெய்வார். அந்த அளவுக்கு துல்லியமாகக் கணக்கிடவேண்டும்.

இந்த இடத்தில் தான் ஜேக்ஸ் பற்றிய இன்னொரு விஷயம் என்னை மிகவும் கவர்கிறது – அவர் தற்போது தன் ரோல் மாறித்தான் இந்தக் கடினமான ஃபினிஷர் வேலையைச் செய்துகொண்டிருக்கிறார். முன்பு டாப் ஆர்டர் பேட்டராக ஆடியவர் அவர்.

நீங்கள் ஒரு ஓப்பனராக, டாப் ஆர்டர் பேட்டராக ஆடிவிட்டு அதன்பிறகு வந்து மிடில் ஆர்டரில் ஆடுவது என்பது எளிதல்ல. டெஸ்ட் போட்டிகளில் கூட அது கடினம்தான். டி20 பற்றி சொல்லவே தேவையில்லை. ஓப்பனர்களுக்குக் கிடைக்கும் அவகாசம், ஃபீல்ட் செட் அப் எல்லாம் கடைசியில் வருபவர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. முதல் பந்தில் இருந்தே அடிக்கவேண்டும், ஓடவேண்டும் என்ற நெருக்கடி இருந்துகொண்டே இருக்கும்.

அதனால்தான் தோனி, ஆந்த்ரே ரஸல் போன்றவர்களின் செயல்பாடுகள் கூடுதல் கவனம் பெறுகின்றன. அதனால் தான் அணிகள் அவர்கள் மீது கூடுதல் நம்பிக்கை வைத்திருக்கின்றன. அவர்கள் தங்கள் அணிகளுக்குச் செய்த வேலையைத்தான் ஜேக்ஸ் தற்போது இங்கிலாந்துக்கு செய்துகொண்டிருகிறார்.

பந்துவீச்சிலும் சிறப்பான செயல்பாடு

பந்துவீச்சைப் பொருத்தவரை ஜேக்ஸ் அவ்வளவாக பந்தை தூக்கிப் போடவில்லை. மேலும், பந்தின் வேகத்தை நன்றாக மாற்றிக்கொண்டேயிருக்கிறார். இந்த வேகத்தில் தான் வரும் என்று பேட்டர்களால் கணிக்க முடியவில்லை. பெரும்பாலும் ‘அரவுண்ட் தி ஸ்டம்ப்’ வந்து பந்துவீசும் அவர், கோணங்களை (angle) மாற்றியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், இலங்கையின் பெரிய மைதானங்களைக் கருத்தில் கொண்டு பந்துக்கு நிறைய சுழற்சியைக் கொடுத்திருக்கிறார். அதனால் அவ்வப்போது பந்து கூடுதலாக பவுன்ஸ் ஆகியிருக்கிறது. அங்குதான் அவர் விக்கெட்டுகள் வீழ்த்துகிறார். மிடில் ஓவர்கள் பந்துவீசுவது ஓரளவு எளிதுதான். ஆனால், பவர்பிளேவிலும் ஜேக்ஸ் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார். அங்குதான் இங்கிலாந்துக்கு பொட்டிகளையும் வென்று கொடுத்திருக்கிறார்.

வில் ஜேக்ஸ், இந்தியா - இங்கிலாந்து, டி20 உலகக்கோப்பை அரையிறுதி

பட மூலாதாரம், Getty Images

பெரும் மாற்றம்

ஒரு வீரராக, ஒரு ஆல்ரவுண்டராக அவர் நன்கு மெருகேறியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் தன் ஆட்டத்தை மாற்றியிருக்கும் விதம் அசாத்தியமானது.

வில் ஜேக்ஸ் திறமை பற்றி அவர் கரியரின் ஆரம்பத்தில் இருந்தே நிறைய பேசப்பட்டது. இப்போது ஜேக்கப் பெத்தல் பற்றி எப்படிப் பேசுகிறார்களோ அதுபோல் தான் சில ஆண்டுகள் முன்பு ஜேக்ஸ் பற்றிப் பேசினார்கள். ஆனால், அது அவ்வளவாக வெளியே தெரியாமல் இருந்தது. 2024 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக ஒரு சதம் அடித்தார். ஆமதாபாத்தில் நடந்த அந்த ஆட்டத்தில் ரஷீத் கான் உள்பட அனைவரின் பந்துவீச்சையும் வெளுத்துக்கட்டி 41 பந்துகளில் சதமடித்தார். அப்போதுதான் அவரால் என்ன செய்ய முடியும் என்று நான் பார்த்தேன்.

அதேசமயம் அவரது பயணம் எளிதாகவும் இருக்கவில்லை. 2023-ல் அவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தம் கிடைக்கவில்லை. ஆனால், அந்தக் காலகட்டம் அவர் கற்றுக்கொள்வதற்கு நல்லதாக அமைந்திருக்கவேண்டும். அவர் அதன்பிறகு தன் சிறப்பான ஆட்டத்தை அவ்வப்போது வெளிப்படுத்த, இங்கிலாந்து தேர்வாளர்கள் அவர்மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார்கள். அதற்கான பலனை அவர்கள் தற்போது அனுபவிக்கிறார்கள்.

சொல்லப்போனால் அவருக்கு ஆஷஸ் தொடரில் கூட சில வாய்ப்புகள் கொடுத்தார்கள். நெருக்கடியான நேரத்தில் அங்கும் சில செயல்பாடுகளைக் கொடுத்தார். டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற சுபாவத்தைக் காட்டினார். அந்த ஆஷஸ் செயல்பாடு அவர் இப்படி உலகக் கோப்பையில் ஜொலிப்பதற்கான நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

கேப்டன் & நிர்வாகத்தின் பங்கு

வில் ஜேக்ஸ், இந்தியா - இங்கிலாந்து, டி20 உலகக்கோப்பை அரையிறுதி

பட மூலாதாரம், Getty Images

ப்ரூக்கின் இந்த செயல்பாட்டுக்கு இங்கிலாந்து நிர்வாகத்தையும் கேப்டன் ஹேரி ப்ரூக்கையும் பாராட்டவேண்டும். ப்ரூக் எந்த அளவுக்கு ஜேக்ஸ் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார், அதை எந்த அளவுக்குக் காட்டுகிறார் என்பதைப் பார்க்க முடிகிறது. சொல்லப்போனால் ஆஷஸ் தொடரில் இருந்தே நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை செலுத்திக்கொண்டிருக்கிறது.

இந்த உலகக் கோப்பையில் கூட பட்லர் சொதப்புவதால், அவர் இடத்தில் ஜேக்ஸை ஓப்பனராக இறக்கலாமோ என்ற எண்ணம் தோன்றக்கூடும். ஆனால், அப்படிச் செய்யாமல் தொடர்ந்து ஜேக்ஸை அவருக்கு முன்பு கொடுத்த ஃபினிஷர் ரோலிலேயே பயன்படுத்துகிறார்கள்.

அணி நிர்வாகமும், கேப்டனும் ஒரு வீரர் மீது நம்பிக்கை வைக்கும்போது, அது அந்த வீரரின் செயல்பாட்டில் பெருமளவு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அது வில் ஜேக்ஸ் விஷயத்திலும் நடந்திருக்கிறது.

வில் ஜேக்ஸ், இந்தியா - இங்கிலாந்து, டி20 உலகக்கோப்பை அரையிறுதி

இங்கிலாந்தின் துருப்புச்சீட்டு

உலகக் கோப்பை போன்ற ஒரு தொடரை வெல்லவேண்டும் என்றால் எந்தவொரு அணிக்குமே இப்படியொரு வீரர் தேவை. இங்கு நீங்கள் அடிக்கும் சதங்களோ, அரைசதங்களோ, 5 விக்கெட் ‘ஹால்’கள் இங்கு முக்கியமே இல்லை. ஆட்டத்தில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய, ஆட்டத்தை மாற்றக்கூடிய அந்த 30 ரன்கள், 2 விக்கெட்டுகள், மிடில் ஓவர்களில் பந்துவீசி ஆட்டத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவை மிக மிக முக்கியமானவை.

இங்கிலாந்து அணிக்கு அப்படியொரு வீரர் ஜேக்ஸ் மூலமாகக் கிடைத்திருக்கிறார். இதுவரை அவரை அந்த அணி நன்கு பயன்படுத்தியதுபோல் இனியும் தொடர்ந்து பயன்படுத்தவேண்டும்.

கிரிக்கெட் ஒரு ‘கான்ஃபிடன்ஸ் கேம்’ என்று சொல்வார்கள். நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் சிறப்பாக ஜொலிக்க முடியும் என்பார்கள். ஜேக்ஸின் நம்பிக்கை தற்போது வானளவு இருக்கிறது. முக்கியமான நாக் அவுட் சுற்றில் இவர்தான் இங்கிலாந்தின் துருப்புச் சீட்டாக விளங்கப்போகிறார்.

(இந்தக் கட்டுரையை எழுதிய வித்யுத் சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2000-ல்19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். தற்போது வர்ணனையாளராக இருக்கிறார்.)

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC