Home தேசிய national tamil கோலியை விஞ்சி அசத்தல்: ‘நீண்ட’ காத்திருப்பை சாதனையாக மாற்றிக் காட்டிய சாம்சன்

கோலியை விஞ்சி அசத்தல்: ‘நீண்ட’ காத்திருப்பை சாதனையாக மாற்றிக் காட்டிய சாம்சன்

14
0

SOURCE :- BBC NEWS

சஞ்சு சாம்சன், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ், டி20 உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரவீன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 2 மார்ச் 2026, 06:24 GMT

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

‘ஜஸ்டிஸ் ஃபார் சஞ்சு சாம்சன்’ (சஞ்சு சாம்சனுக்கு நீதி வேண்டும்)

கடந்த 10 ஆண்டுகளில், இந்த வரி சமூக வலைதளங்களில் பல முறை ட்ரெண்ட் ஆகியுள்ளது.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில், சஞ்சு சாம்சன் ஒரு அற்புதமான செயலைச் செய்தார், அது அடிக்கடி ட்ரெண்ட் ஆகும் அந்த வரியையே மாற்றிவிட்டது.

டி20 உலகக் கோப்பையில் கிட்டத்தட்ட காலிறுதி போன்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 97 ரன்கள் விளாசி, இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற உதவினார்.

சஞ்சுவின் இந்த இன்னிங்ஸிற்குப் பிறகு, ‘இறுதியாக சஞ்சு சாம்சனுக்கு நீதி கிடைத்துவிட்டது’ என்பதுதான் அதிகமாக விவாதிக்கப்பட்டது.

ஆனால் ‘சஞ்சு சாம்சனுக்கு நீதி வேண்டும்’ என்ற ட்ரெண்டிலிருந்து ‘இறுதியாக சஞ்சு சாம்சனுக்கு நீதி கிடைத்துவிட்டது’ என்ற நிலைக்கு வர சஞ்சு சாம்சன் கடந்து வந்த பயணம் எவ்வளவு கடினமானது மற்றும் எவ்வளவு நீண்டது என்பதை அவரை விட யாராலும் சிறப்பாக விவரித்திருக்க முடியாது.

இந்தியாவின் வெற்றிக்குப் பிறகு, அவர் மைதானத்தில் மண்டியிட்டு அமர்ந்து, தனது நீண்ட கால கனவு நனவானது போல வானத்தை உற்றுநோக்கிக் கொண்டிருந்தார்.

சஞ்சு சாம்சன் எப்போதும் தனது உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காட்டாத ஒரு வீரராகவே அறியப்படுகிறார். ஆனால் இந்த இன்னிங்ஸ் பலவற்றை மாற்றியுள்ளது.

அவர் இப்போது தனது உணர்ச்சிகளை நேரடியாக வெளிப்படுத்தியுள்ளார்.

போட்டிக்குப் பிறகு அவர் கூறுகையில், “இந்த இன்னிங்ஸ் எனக்கு மிக முக்கியமானது. நான் விளையாடத் தொடங்கிய நாளிலிருந்து, எனது நாட்டிற்காக விளையாட வேண்டும் என்று கனவு கண்ட நாளிலிருந்து, இதற்காகத்தான் நான் அதிகம் காத்திருந்தேன்,” என்றார்.

நீண்ட காத்திருப்பு

சஞ்சு சாம்சன், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ், டி20 உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

கடந்த இருபது ஆண்டுகளில் ரோஹித் சர்மாவிற்குப் பிறகு இந்தியாவில் ஏதேனும் ஒரு வீரர் மிகவும் திறமையானவராகக் கருதப்பட்டார் என்றால், அது சஞ்சு சாம்சன் தான்.

ரோஹித் சர்மாவைப் போலவே, சஞ்சு சாம்சனும் இயல்பாகவே புல்-ஷாட் ஆடுபவர். எந்த ஒரு சிறப்பான முயற்சியும் எடுக்காமல், வெறும் டைமிங் மூலமாகவே பெரிய சிக்ஸர்களை அடிக்கும் திறன் கொண்டவர்.

சஞ்சு சாம்சன் தனது 17 வயதில் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

தனது முதல் சீசனில் அவர் சிறப்பாகச் செயல்படவில்லை. இருப்பினும், அடுத்த சீசனில் பலமாக மீண்டு வந்த அவர், ஐந்து இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்தார்.

அதற்கு அடுத்த ஆண்டே, ராஜஸ்தான் ராயல்ஸ் அவருக்கு வாய்ப்பளித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சஞ்சு சாம்சனைத் தேர்ந்தெடுக்கும் போது, அப்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட், “சஞ்சு சாம்சன் இந்திய அணியின் எதிர்காலமாகத் திகழப் போகும் ஒரு சில வீரர்களில் ஒருவர்” என்று கூறினார்.

ஐபிஎல் தொடரின் தொடக்க ஆண்டுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக சஞ்சு சாம்சனுக்குப் பலன் கிடைத்தது. 2015-ஆம் ஆண்டு ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தச் சுற்றுப்பயணத்தில், இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது, ஆனால் அவரால் 19 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதன்பிறகு, மீண்டும் அணிக்குத் திரும்ப அவர் 2019 வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஐபிஎல் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், 2024 வரை இந்திய அணியில் தனது இடத்தைப் பிடிக்க சஞ்சு சாம்சனால் முடியவில்லை.

2024-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவரால் இடம்பெற முடிந்தது. ஆனால் அப்போதும் கூட, அவர் மைதானத்தில் இல்லாமல் பெஞ்சில் தான் அமர வேண்டியிருந்தது.

அந்த உலகக் கோப்பையின் போது பெஞ்சில் அமர வைக்கப்பட்ட கோபமோ என்னவோ, பின்னர் அணியின் ஆடும் லெவனில் இடம் கிடைத்தவுடன் வெறும் ஐந்து டி20 சர்வதேச போட்டிகளில் அவர் மூன்று சதங்களை விளாசினார்.

சஞ்சு சாம்சன், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ், டி20 உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

ஆனால், அப்போதும் கூட அணியில் அவரது இடம் உறுதி செய்யப்படவில்லை. இத்தகைய சிறப்பான ஆட்டத்திற்குப் பிறகும், அவர் அணியின் பரிசோதனைகளில் ஒரு பகுதியாகவே நீடித்தார்.

கடந்த ஆண்டு, அவரை டாப் ஆர்டரில் விளையாட வைப்பதற்காக சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர் இடத்திலிருந்து மிடில் ஆர்டருக்கு மாற்றப்பட்டார்.

சுப்மனுக்கான தரப்பட்ட வாய்ப்புகள் பலன் தராத நிலையில், உலகக் கோப்பைக்கு சற்று முன்பு மீண்டும் அவருக்குத் தொடக்க வீரராக வாய்ப்பு வழங்கப்பட்ட போது, அவரது ஃபார்ம் சரிந்திருந்தது.

நேற்றைய ஆட்டத்திற்கு முந்தைய 12 இன்னிங்ஸ்களில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

பின்னர் இந்த உலகக்கோப்பையின் தொடக்கத்தில், இஷான் கிஷன் பலமாக மீண்டு வந்து, இந்திய அணியில் சாம்சனின் இடத்தைப் பிடித்துவிட்டார்.

இரண்டு போட்டிகளுக்கு முன், அபிஷேக் சர்மாவின் மோசமான ஆட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர் சந்திப்பில் கேப்டன் சூர்யகுமாரிடம் சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைக்குமா என்று கேட்கப்பட்ட போது அவர் எப்படிப்பட்ட அனுபவத்தைக் கடந்திருப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள்.

அதற்கு கேப்டன் சூர்யகுமார், “அப்படியென்றால் அபிஷேக்கிற்குப் பதிலாகவோ அல்லது மூன்றாவது வரிசையில் திலக்கிற்குப் பதிலாகவோ அவரை விளையாட வைக்கச் சொல்கிறீர்களா?” என்று கேட்டார்.

இந்தப் பதிலைக் கூறிவிட்டு சூர்யகுமார் சிரித்தார்.

ஆனால், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் தோல்வி, சஞ்சு சாம்சன் மீண்டும் அணிக்குள் வருவதற்கான வழியை திறந்துவிட்டது.

அதன்பிறகு கேப்டன் சூர்யகுமார் தனது வார்த்தைகளை மாற்றிக்கொண்டது மட்டுமல்லாமல், போட்டிக்கு பிறகு மைதானத்திற்குள் நுழையும் போது தனது தொப்பியைக் கழற்றி தலைவணங்கி சஞ்சு சாம்சனின் திறமையை அங்கீகரித்தார்.

சஞ்சு சாம்சன் இந்தியாவிற்கு அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தபோது, சூர்யகுமார் கூறுகையில், “காத்திருப்பவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும் என்று நான் எப்போதும் சொல்வேன். இந்திய அணிக்காக விளையாடாத போது அவர் செய்த கடின உழைப்பினால்தான் இது சாத்தியமானது. இப்போது அதற்கான பலனை அவர் அறுவடை செய்துள்ளார்,” என்றார்.

‘ என்னால் இதைச் செய்ய முடியுமா என்று சிந்தித்துக் கொண்டே இருந்தேன்’

சஞ்சு சாம்சன், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ், டி20 உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

கடந்த 10-12 ஆண்டுகளில் அணிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்தபோது தான் எதையெல்லாம் கடந்து வந்தேன் என்பது குறித்துப் பேசிய சஞ்சு சாம்சன், “எனது பயணம் எண்ணற்ற ஏற்றத்தாழ்வுகளுடன் சிறப்பானதாக இருந்தது. நான் எப்போதும் என்னையே சந்தேகித்தேன். என்னால் முடியுமா, என்னால் இதைச் செய்ய முடியுமா என்று நான் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே இருந்தேன்,” என்றார்.

“ஆனால் இந்தச் சந்தேகங்களுக்கு மத்தியிலும், முடிவுக்கு வராத ஒன்று இருந்தது, அது நம்பிக்கையுடன் கூடிய விடாமுயற்சி. இப்போது நான் எனது ஆசிர்வாதங்களைப் பெற்றுள்ளேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்”என்றார் அவர்.

“நான் இந்த வடிவத்தில் பல வருடங்களாக விளையாடி வருகிறேன். நான் ஐபிஎல் தொடரில் 12 ஆண்டுகளாகவும், இந்திய அணியுடன் 10 ஆண்டுகளாகவும் இருக்கிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் எனக்கு விளையாட அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், இந்த நேரத்தில் நான் டக்அவுட்டில் இருந்தேன். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற வீரர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பது மிகவும் முக்கியமாக இருந்தது. இது எனக்கு நிறைய உதவியது” என்றும் குறிப்பிட்டார்.

சஞ்சு சாம்சன் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் பெரும்பகுதியில், ஒரு நல்ல தொடக்கம் கிடைத்த பிறகும் பொறுப்பற்ற ஷாட்களை ஆடி அடிக்கடி ஆட்டமிழப்பதாகக் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்தார்.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை, அவரது ஆட்டத்தில் ஒரு தெளிவான மாற்றம் தெரிந்தது. போட்டிக்குப் பிறகு ஹாட்ஸ்டாரில் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், சஞ்சு சாம்சன் இதற்கு முன் இப்படி பேட்டிங் செய்து தான் பார்த்ததில்லை என்று கூறினார். பந்தை காற்றில் பறக்கவிட்டு லாங் ஷாட்களை அடிக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, அவர் தரைப்பகுதியில் ஷாட்களை ஆட முயன்றார். அத்துடன், தனது விக்கெட்டையும் அவர் இழக்கவில்லை.

அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், “அணிக்கு மிகவும் தேவைப்பட்ட நேரத்தில் சஞ்சு சாம்சன் நிதானத்தை கடைபிடித்தார். அவர் மீண்டும் அணிக்குத் திரும்பியதிலிருந்து, ஒரு வித்தியாசமான அணுகுமுறையுடன் மைதானத்திற்கு வருகிறார். இந்த இன்னிங்ஸ் அற்புதமானது, ஏனென்றால் இந்தியா ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்திருந்தது. அவர் தனது விளையாடும் பாணியை மாற்றியுள்ளார். நிதானம் என்ற அந்த ஒரு வார்த்தை தான் அனைத்தையும் மாற்றியது”என்றார்.

போட்டிக்குப் பிறகு தனது ஆட்டத்தில் செய்த மாற்றங்கள் குறித்தும் சஞ்சு சாம்சன் பேசினார். அவர் கூறுகையில், “ஆரம்பத்தில், நாங்கள் விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்தோம். நான் பார்ட்னர்ஷிப்களை உருவாக்க முயற்சித்தேன். அந்த நேரத்தில், அடுத்த பந்தைப் பற்றி மட்டுமே நான் யோசித்தேன். அனைத்து கேள்விகளுக்கும் மத்தியில், நான் என்னை நம்பினேன், பந்து எப்படி வந்ததோ அப்படியே விளையாடினேன். அது எனக்குக் கை கொடுத்தது,” என்றார்.

சஞ்சு சாம்சன், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ், டி20 உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

கோலியை விஞ்சி சாம்சன் படைத்த சாதனை

டி20 உலகக் கோப்பையில் இலக்கைத் துரத்தும்போது , இந்தியாவிற்காக மிகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடிய வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னதாக, 2016-ல் விராட் கோலி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆட்டமிழக்காமல் 82 ரன்களும், 2022-ல் பாகிஸ்தானிற்கு எதிராகவும் ஆட்டமிழக்காமல் 82 ரன்களும் எடுத்திருந்தார்.

கோலியை விஞ்சி, டி20 உலகக் கோப்பையில் இலக்கைத் துரத்தும் போது அதிக ரன் சேர்த்த இந்திய வீரராக தற்போது சஞ்சு சாம்சன் உருவெடுத்துள்ளார்.

அதனால்தான் சஞ்சு சாம்சனின் இந்த இன்னிங்ஸ் சமூக வலைதளங்களிலும் பெரிதும் பாராட்டப்பட்டது.

சஞ்சு சாம்சன், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ், டி20 உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

சாம்சனுக்கு பாராட்டு

விளையாட்டுச் செய்தியாளர் பரத் சுந்தரேசன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இதுகுறித்துப் பதிவிட்டிருந்தார்.

அதில், “அனைத்து அழகான பவுண்டரிகளுக்கு மத்தியிலும், சஞ்சு சாம்சனின் தோழமை உணர்வு அவரது இன்னிங்ஸை முன்னோக்கி எடுத்துச் சென்றது. அவர் இந்தியாவை முன்னோக்கி அழைத்துச் சென்றார் மற்றும் உலகக் கோப்பையின் மறக்க முடியாத இன்னிங்ஸ்களில் ஒன்றை விளையாடினார்” என்று கூறியுள்ளார்.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

“வாழ்வா சாவா என்ற நிலையில் இருந்த ஒரு போட்டியில் சஞ்சு சாம்சன் இந்தியாவின் நம்பிக்கையாகத் திகழ்ந்தார். அவர் ஒருபோதும் கவனம் பெற்றவராக இருந்ததில்லை, ஆனால் அவர் ஒரு ஆட்டத்தை மாற்றியமைப்பவராக தன்னை நிரூபித்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸின் விளையாட்டுச் செய்தியாளர் ஆஷிஷ் மாகோத்ரா சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், ” சஞ்சு சாம்சன், என்ன ஒரு பயணம்” என்று கூறியுள்ளார்.

“சுப்மன் கில்லுக்காக சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரருக்கான இடத்திலிருந்து நீக்கப்பட்டார். கில் சிறப்பாக செயல்படவில்லை. சஞ்சு சாம்சன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் இஷான் கிஷனுக்காக அவர் நீக்கப்பட்டார். அபிஷேக்கின் மோசமான ஃபார்ம் மற்றும் வலது-இடது கை ஆட்டக்காரர்கள் கலவையின் தேவை ஆகியவை சாம்சனை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்தது. இப்போது அவர் இந்தப் போட்டியின் நட்சத்திரமாகத் திகழ்கிறார்”என்று அவர் பதிவிட்டுள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU