Home தேசிய national tamil திருப்பரங்குன்றம் வந்த மோதி ‘தீபத்தூண்’ பற்றி பெரிதாக பேசாதது ஏன்?

திருப்பரங்குன்றம் வந்த மோதி ‘தீபத்தூண்’ பற்றி பெரிதாக பேசாதது ஏன்?

16
0

SOURCE :- BBC NEWS

பிரதமரின் திருப்பரங்குன்றம் வருகை: தீபத்தூண் விவகாரத்தை  பெரிதாக முன்னிறுத்தாது ஏன்?

பட மூலாதாரம், https://x.com/NarendraModi

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபத்தூண் சர்ச்சை நீடிக்கும் நிலையில், திருப்பரங்குன்றத்திற்கு வந்து சென்றிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோதி.

ஆனால், மதுரைப் பொதுக் கூட்டத்தில் திருப்பரங்குன்றம் விவகாரத்தை மிகச் சிறிய அளவில் மட்டுமே தொட்டுக் காட்டினார் அவர். திருப்பரங்குன்றம் விவகாரம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாதா?

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்றும் விவகாரம், மதுரை நகரத்தையே பதற்றத்திற்கு உள்ளாக்கி, பிறகு அடங்கியது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோதி மதுரைக்கு வருகை தந்து, கோவிலுக்கும் செல்லவிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டபோது மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.

பிரதமர் திருப்பரங்குன்றம் கோவிலுக்கும் செல்வார் என அறிவிப்பு வந்தவுடனேயே, மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பு, “திருப்பரங்குன்றம் மலை, தீபம் தொடர்பாக மத ரீதியான சிக்கல்கள் நீடித்து வருவதால், இந்த வருகை சட்டம் – ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தலாம் என்பதால் இது குறித்து பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென” கோரியிருந்தது.

மாவட்ட ஆட்சியரிடமும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மனு அளித்தனர். ஆகவே, பிரதமரின் வருகை தொடர்பாக ஒரு பரபரப்பும் எதிர்பார்ப்பும் இருக்கவே செய்தது.

மோதி பேசியது என்ன?

மார்ச் 1-ஆம் தேதி முதலில் புதுச்சேரிக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோதி பிறகு மதுரைக்கு வந்து சேர்ந்தார்.

மதுரை மண்டேலா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேச ஆரம்பித்தபோது, திருப்பரங்குன்றம் குறித்து அவர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

“ஒட்டுமொத்த இந்தியாவின் நல்வளர்ச்சிக்கு முருகனிடம் வேண்டினேன். அதேவேளையில் எனது இதயம் கனத்தது. பூரணசந்திரன் என்ற இளம் பக்தர் உயிர்த் தியாகம் செய்தார் என்பதை நினைத்துப் பார்த்தேன். அவரது மனைவி இந்துமதியையும் அவரது இரு குழந்தைகளையும் சந்தித்தபோது அவர்களின் துக்கத்தை என்னால் உணர முடிந்தது. தி.மு.க. அரசின் நியாயமற்ற தன்மையால்தான் இது நடந்திருக்கிறது, தி.மு.க. என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால், இறுதியில் வாய்மையே வெல்லும். முருகனின் பக்தர்கள் வெல்வார்கள்” என்று மட்டும் குறிப்பிட்டார்.

இதற்குப் பிறகு பிரதமரின் பேச்சு, வழக்கமான பாணியில்தான் வடிவமைக்கப்பட்டிருந்தது.

தி.மு.க. ஆட்சி மீதான விமர்சனம், தி.மு.க. மீதான விமர்சனம், ஊழல் குற்றச்சாட்டுகள், தி.மு.கவும் காங்கிரசும் இணைந்து மாநில உரிமைகளை பறிகொடுத்தாக குற்றச்சாட்டு, பிறகு பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகள் என்று அமைந்திருந்தது.

பிரதமரின் திருப்பரங்குன்றம் வருகை: தீபத்தூண் விவகாரத்தை  பெரிதாக முன்னிறுத்தாது ஏன்?

தொகுதியில் யாருக்கு செல்வாக்கு?

தி.மு.கவின் சார்பில் இதற்குப் பதில் ஏதும் வரவில்லை.

திங்கட்கிழமையன்று ஊடகம் ஒன்றின் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், முந்தைய தினம் பிரதமர் முன்வைத்த வேறு சில குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார். ஆனால், திருப்பரங்குன்றத்தைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை.

இருந்தாலும், மார்ச் ஒன்றாம் தேதி ஸ்டாலினின் பிறந்த நாளை ஒட்டி ‘The Evolution of Orae Thalaivan’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட வீடியோவில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசு எடுத்த முடிவு குறித்து முதலமைச்சர் பேசியிருந்தார்.

இந்த வீடியோ ஏற்கனவே உருவாக்கப்பட்ட வீடியோ என்றாலும் திருப்பரங்குன்றம் தொடர்பாக பிரதமர் பேசியதற்குப் பதில் சொல்வதைப்போல அமைந்திருந்தது.

அந்த வீடியோவில் திருப்பரங்குன்றத்தில் பாரம்பரியத்தை பாதுகாக்க முடிவுசெய்ததாக கூறியிருந்தார் மு.க. ஸ்டாலின்.

“திருப்பரங்குன்றத்தில் நான் கோவிலின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க முடிவுசெய்தேன். ஆனால், மதத் தலைவராக அல்ல, முதல்வராக. மக்களின் நம்பிக்கையை அரசியலுக்கு அடிபணிய விடக்கூடாது என்பதே என் நிலைப்பாடு” என்று மட்டும் குறிப்பிட்டிருந்தார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியைப் பொறுத்தவரை, 1967ஆம் ஆண்டிற்கு முன்பாக காங்கிரஸ் கட்சியும் அதற்குப் பிறகு பெரும்பாலும் தி.மு.க., அ.தி.மு.க. அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றிபெற்றுவந்துள்ளன.

குறிப்பாக, 2019ஆம் ஆண்டின் இடைத் தேர்தலைவிட்டுவிட்டால், 2001ஆம் ஆண்டிற்குப் பிறகு அ.தி.மு.கவும் அதன் கூட்டணிகளுமே இந்தத் தொகுதியைக் கைப்பற்றிவந்திருக்கின்றன. 2006, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் போட்டியிட்ட பா.ஜ.க. மிகக் குறைவான வாக்குகளையே பெற்றது.


மோதி திருப்பரங்குன்றம் வந்தபோதும் தீபத்தூண் விவகாரத்தை பெரிதாக பேசாதது ஏன்?

ஆனால், கார்த்திகை மாதத்தில் தீபத்தூண் விவகாரம் வெடித்தபோது, இங்கு பா.ஜ.க. மிகத் தீவிரமாக செயல்பட்டது. இது, மதுரையில் இத்தொகுதியை குறிவைத்து அக்கட்சி பணியாற்றுகிறது என்ற பேச்சுகளையும் எழுப்பியது.

“இந்த விவகாரம் உச்சத்தில் இருந்தபோது, இந்தத் தொகுதியில் போட்டியிட எச். ராஜா விரும்பினார். ஆனால், இப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் என்ன செய்வார் எனத் தெரியவில்லை. மதுரையில் அ.தி.மு.க. உறுதியாக வெற்றிபெறக்கூடிய தொகுதிகளில் இதுவும் ஒன்று. திமுக கூட்டணியில், தே.மு.தி.க. இந்தத் தொகுதியைக் கேட்டுப்பெறக்கூடும்” என்று குறிப்பிட்ட மதுரையைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான திருமலை, பிரதமர் இந்த விவகாரத்தைப் பற்றி பேசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது என்கிறார்.

“பிரதமர் அது குறித்துப் பேசுவார் என்றே எல்லோருமே எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை” என்கிறார்.

பிரதமரின் திருப்பரங்குன்றம் வருகை: தீபத்தூண் விவகாரத்தை  பெரிதாக முன்னிறுத்தாது ஏன்?

‘பா.ஜ.க விட்டுவிடாது’

மதுரைக் கூட்டத்தில் பிரதமரின் பேச்சு ஆச்சரியமளிப்பதாகத் தெரிவிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன்.

“தமிழ்நாட்டிற்கு கடந்த முறை வருகை தந்தபோது இந்தியில் பேசிய பிரதமர், இந்த முறை ஆங்கிலத்தில் பேசினார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில், ஒரு வேளை இந்தியில் பேச வேண்டாம் என முடிவெடுத்திருக்கக்கூடும். திருப்பரங்குன்றம் விஷயத்தை எடுத்துக்கொண்டால், பா.ஜ.க. பெரிய அளவில் மதுரையில் அதனை வைத்து சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், பிரதமரின் உரையில் இந்த விவகாரம் அடக்கி வாசிக்கப்பட்டிருக்கிறது. மேலோட்டமாக மட்டுமே தொட்டுக்காட்டினார். ஒரு வேளை நீதிமன்றத்தில் இந்த விவகாரம் இருந்தது காரணமாக இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது திருப்பரங்குன்றம் விவகாரம் தேர்தலில் பெரிதாக பலனளிக்காது என்பதைப் புரிந்துகொண்டதைப் போலத்தான் இருக்கிறது” என்கிறார் இளங்கோவன் ராஜசேகரன்.

ஆனால், பா.ஜ.க. இந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிடாது என்கிறார் மதுரையைச் சேர்ந்த ஆய்வாளரான அ. முத்துகிருஷ்ணன்.

“மோதி மதுரைக்கு வருகிறார் என அறிவிக்கப்பட்டபோது அவர் மதுரை எய்ம்ஸை திறந்துவைக்கப்போகிறார் என்றுதான் பலரும் நினைத்தார்கள். வெளிப்படையாக சொல்லவும் செய்தார்கள். ஆனால், அதைப் பற்றி பிரதமர் பேசக்கூட செய்யவில்லை. ஆனால், திருப்பரங்குன்றம் விவகாரத்தைத் தொட்டுப் பேசியிருக்கிறார். பூர்ணசந்திரன் குடும்பத்தினரையும் சந்தித்திருக்கிறார். ஆகவே, இந்த விவகாரத்தை பா.ஜ.க. இப்போதைக்கு கைவிடப்போவதில்லை” என்கிறார் அவர்.

ஆனால், திருப்பரங்குன்றம் விவகாரம் பா.ஜ.கவுக்கு வாக்குகளைப் பெற்றுத்தருமா?

“திருப்பரங்குன்றம் மிகப் பழைய ஊர். இதற்கென ஒரு அமைப்பு (System) உண்டு. நிறையக் குடும்பங்கள் கோவிலைச் சார்ந்திருப்பார்கள். கோவிலைச் சுற்றியே பெரும்பாலும் அவர்களது வாழ்க்கை இருக்கும். பிரச்னை இல்லாமல் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்றே நினைப்பார்கள். எந்தப் பிரச்னையும் ஊருக்குள் வருவதை விரும்ப மாட்டார்கள். ஆகவே இது ஒரு தேர்தல் விவகாரமாக மாறுவதற்கான வாய்ப்பு குறைவு” என்கிறார் முத்து கிருஷ்ணன்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

இதே கருத்தையே எதிரொலிக்கிறார் இளங்கோவன்.

“திருப்பரங்குன்றம் விவகாரத்தைப் பொறுத்தவரை, பா.ஜ.கவின் மிகப் பழமையான அரசியலுக்குத் துல்லியமாகப் பொருந்துவதாக அவர்கள் முதலில் நினைத்தார்கள். ஆனால், அந்த அரசியல் பலனளிக்காது. மலை மீது தீபம் ஏற்றாவிட்டால் பரவாயில்லை. ஏற்றிக்கொண்டிருக்கும்போது என்ன பிரச்னை என்றுதான் மக்கள் பார்ப்பார்கள்” என்கிறார் அவர்.

மதுரை மக்கள் இந்த அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கவே செய்வார்கள் என்கிறார் இளங்கோவன்.

ஆனால், இந்த விவகாரத்தை ஒருபோதும் பா.ஜ.க. அரசியலோடு பொருத்திப் பார்க்கவே இல்லை என்கிறார் அக்கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளரான நாராயணன் திருப்பதி.

“திருப்பரங்குன்றம் தேர்தலுக்கான விவகாரமாகவே பா.ஜ.க. பார்க்கவில்லை. இது இந்துக்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்ட விவகாரம். இந்த விவகாரத்தில் மாநில அரசு தவறு செய்துவிட்டது, நீதிமன்றத்தின் உத்தரவை மீறியிருக்கிறது என்பதை பிரதமர் தனது வருகையினால் உணர்த்தியிருக்கிறார். அவ்வளவுதான்” என்கிறார் அவர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU