Home தேசிய national tamil காபூல் மற்றும் கந்தஹார் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் – ஆப்கானிஸ்தானின் எதிர்வினை என்ன?

காபூல் மற்றும் கந்தஹார் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் – ஆப்கானிஸ்தானின் எதிர்வினை என்ன?

10
0

SOURCE :- BBC NEWS

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தான் தாலிபனுக்கும் இடையிலான ராணுவ மோதல் அதிகரித்துள்ளது (கோப்புப் படம்)

பட மூலாதாரம், Getty Images

33 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஆப்கன் தாலிபன்களுக்கு எதிராகப் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் ‘நேரடிப் போர்’ பிரகடனம் செய்துள்ளார்.

“இனியும் பொறுக்க முடியாது, அடுத்து இது நேரடிப் போராக இருக்கும்” என்று, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஆப்கன் தாலிபன்களை எச்சரித்துள்ளார்.

சமூக ஊடகத் தளமான எக்ஸ்-இல் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ஆப்கன் தாலிபன்கள் உலகம் முழுவதிலுமிருந்து பயங்கரவாதிகளை ஆப்கானிஸ்தானில் திரட்டுவதாக” அவர் குற்றம் சாட்டினார். மேலும் காபூலில் உள்ள இடைக்கால அரசாங்கம் “பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதாக” அவர் கூறியதாக பிபிசி உருது சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், தலைநகர் காபூல், பக்திகா மற்றும் கந்தஹாரில் உள்ள பல இடங்களை பாகிஸ்தான் குண்டுவீசித் தாக்கியதை உறுதிப்படுத்தினார். இந்தத் தாக்குதல்களில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை என்று அவர் கூறினார்.

ஆப்கன் தாலிபன்கள் “தங்கள் மக்களுக்கு அடிப்படை மனித உரிமைகளையும், இஸ்லாம் பெண்களுக்கு வழங்கும் உரிமைகளையும் மறுப்பதாக” பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குற்றம் சாட்டினார்.

பிபிசி உருது சேவை செய்தியின்படி, தங்களது ராணுவ நடவடிக்கைகளில் இதுவரை 133 ஆப்கன் தாலிபன்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 200 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் அதாவுல்லா தரார் தனது எக்ஸ் பதிவில், ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல், பக்திகா மற்றும் கந்தஹாரில் உள்ள ஆப்கன் தாலிபன் பாதுகாப்பு நிலைகளை பாகிஸ்தான் குறிவைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகளில் இரண்டு கார்ப்ஸ் தலைமையகங்கள், இரண்டு ஆயுதக் கிடங்குகள், ஒரு தளவாடக் கிடங்கு, மூன்று பட்டாலியன் தலைமையகங்கள், இரண்டு செக்டார் தலைமையகங்கள், 80-க்கும் மேற்பட்ட டாங்கிகள் ஆகியவை அழிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

பிபிசியால் இந்தத் தகவல்களைச் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தான் தாலிபன்களுக்கும் இடையிலான பதற்றங்கள் நீண்ட காலமாகத் தொடர்கின்றன (கோப்புப் படம்)

பட மூலாதாரம், Getty Images

இருப்பினும், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதாக அமைச்சர் அதாவுல்லா தரார் கூறுகிறார். ஏஎஃப்பி (AFP) செய்தி முகமையின்படி, இன்று (பிப்ரவரி 27) அதிகாலையில் ஆப்கன் தலைநகர் காபூலில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டன.

அதிகாலை 1:50 மணியளவில் நகரம் முழுவதும் போர் விமானங்களின் சத்தத்துடன் வெடிப்புச் சத்தங்களும் கேட்டதாகவும், அதிகாலை 2:30 மணி வரை மத்திய காபூலில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காபூல் மற்றும் கந்தஹார் மீதான இந்தத் தாக்குதல்கள், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே சில காலமாக நடந்து வரும் தொடர் மோதல்களின் சமீபத்திய பகுதியாகும். இரண்டு நாடுகளும் அக்டோபர் 2025-இல் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட பின்னரும் இந்த நிலை நீடிக்கிறது.

கடந்த வாரம், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் இரவு முழுவதும் நடத்திய பல வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாகத் தாலிபன்கள் தெரிவித்தனர். பாகிஸ்தானில் சமீபகாலமாக நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள ஏழு பயங்கரவாத முகாம்கள் மற்றும் மறைவிடங்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகப் பாகிஸ்தான் கூறியிருந்தது.

மறுபுறம், தாலிபன் நிர்வாகம் பொது மக்களின் வீடுகள் மற்றும் ஒரு மதப் பள்ளி (madrasa) இலக்கு வைக்கப்பட்டதாகவும், பலியானவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் இருப்பதாகவும் கூறியது.

இருதரப்பு குற்றச்சாட்டுகள்

இரு தரப்பு ராணுவத்தினருக்கும் இடையிலான முந்தைய மோதல்களைப் போலவே, இந்த முறையும் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் முதலில் தாக்கியதாகக் குற்றம் சாட்டி வருகின்றனர்.

“தூண்டுதல் இல்லாத ஆப்கன் தாக்குதல்களுக்கு” பதிலடியாக காபூல் மற்றும் கந்தஹார் உள்ளிட்ட நகரங்களில் “எதிர் தாக்குதல்களை” நடத்தியதாகப் பாகிஸ்தான் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

முன்னதாக, இந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பதிலடியாக “பெரிய அளவிலான” நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக ஆப்கன் தாலிபன்கள் தெரிவித்தனர். தாலிபன் ராணுவ செய்தித் தொடர்பாளர் வாஹிதுல்லா முகமதி, இந்த “எதிர் நடவடிக்கை” வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில் தொடங்கப்பட்டதாகக் கூறினார்.

தலைமை செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், இந்தத் தாக்குதலில் “பல” பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் சிறைபிடிக்கப்பட்டதாகவும் கூறினார் – ஆனால் பாகிஸ்தான் அதிகாரிகள் இந்தக் கூற்றை மறுத்துள்ளனர். பகிரப்பட்ட எல்லையில் ராணுவ நிலைகளுக்கு எதிராக ஆப்கன் தாலிபன்கள் நடவடிக்கை எடுத்ததில் வியாழக்கிழமை இரவு தங்களது வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதாகப் பாகிஸ்தான் கூறுகிறது.

முன்னதாக இந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பதிலடியாக “பெரிய அளவிலான” நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக ஆப்கான் தலிபான்கள் தெரிவித்தனர். பயங்கரவாத முகாம்கள் மற்றும் மறைவிடங்களை இலக்கு வைத்ததாக பாகிஸ்தான் கூறியது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

புதிய மோதலின் தொடக்கம்

முன்னாள் ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய், காபூல், கந்தஹார் மற்றும் பக்திகாவில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களைக் கண்டித்துள்ளார். “ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் நிலத்தை முழு ஒற்றுமையுடன் பாதுகாப்பார்கள் மற்றும் ஆக்கிரமிப்புக்கு தைரியத்துடன் பதிலடி கொடுப்பார்கள்” என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கன் தாலிபன்களுக்கு இடையிலான தற்போதைய மோதல் கடந்த ஆண்டு அக்டோபர் 7-8 தேதிகளில் தொடங்கியது. தடையற்ற தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானிடம் வலியுறுத்தி வருகிறது.

உண்மையில், 133 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட டியூரண்ட் கோடுதான் இன்னும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான பதற்றத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது.

பிரிட்டிஷ் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளரான சர் ஹென்றி மோர்டிமர் டியூரண்ட் மற்றும் ஆப்கானிஸ்தானின் அமீர் அப்துர் ரஹ்மான் கான் ஆகியோருக்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

இந்த கோட்டின் மேற்கு முனை இரானிய எல்லையையும், கிழக்கு முனை சீன எல்லையையும் தொடுகிறது.

ரஷ்யாவின் தெற்கு நோக்கிய முன்னேற்றத்தைத் தடுக்க, பிரிட்டன் 1839-இல் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது, அதில் பிரிட்டிஷ் படைகள் தோற்கடிக்கப்பட்டன. பின்னர் 1849-இல் பஞ்சாபை இணைத்த பிரிட்டன், சிந்து நதிக்கு மேற்கே உள்ள பகுதிகளை ஆக்கிரமித்தது.

இந்தப் பகுதியில் ஏராளமான பஷ்டூன் (Pashtun) பழங்குடியினர் வாழ்ந்தனர். அவர்களின் நிர்வாகம் பிரிட்டிஷாருக்குப் பிரச்னையாக இருந்தது.

1893-இல், வடமேற்குப் பகுதிகளின் மீதான கட்டுப்பாட்டை வலுப்படுத்த, 2640 கிமீ நீளமுள்ள எல்லை ஒப்பந்தத்தை ஆப்கானிஸ்தானுடன் பிரிட்டிஷ் அரசு செய்துகொண்டது.

ஏன் இது சர்ச்சைக்குரியது?

ஒரு பக்கம் ஆப்கானிஸ்தானின் 12 மாகாணங்களும், மறுபக்கம் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா, பலுசிஸ்தான் மற்றும் கில்கித்-பல்டிஸ்தான் பகுதிகளும் உள்ளன. இருபுறமும் உள்ள மக்கள் கலாசார ரீதியாகவும், மத ரீதியாகவும் மிகவும் நெருக்கமானவர்கள்.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஒவ்வொரு அரசாங்கமும் டியூரண்ட் கோட்டைத் தனது பிராந்திய ஒருமைப்பாட்டில் தலையிடுவதாகக் கருதி, அதை அங்கீகரிக்க மறுக்கிறது. ஆனால், பாகிஸ்தான் தனது கூட்டாட்சி அமைப்பைக் குலைக்கக்கூடிய பஷ்டூன் தேசியவாதத்தை ஒடுக்கவும், பிரிவினையைத் தடுக்கவும் இக்கோட்டை அங்கீகரிக்கிறது. அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகள் இதை ஒரு நிஜமான (de-facto) எல்லையாக அங்கீகரிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் ஆரம்பத்தில் அழுத்தத்தின் கீழ் இதை ஏற்றுக்கொண்டாலும், ஆப்கன் குடிமக்கள் இதைத் தங்களது பஷ்டூன் நிலத்தின் தன்னிச்சையான பிரிவினையாகக் கருதி இன்றும் போராடி வருகின்றனர். 1894 மற்றும் 1896-க்கு இடையில் இக்கோடு உருவாக்கப்பட்டது, ஆனால் பல கடினமான பகுதிகளில் இது இன்றும் தெளிவற்றதாகவே உள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU