SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தானில் தாலிபன் இடைக்கால அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகம் அந்நாட்டின் கிழக்கு மாகாணங்களில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதல்களை வன்மையாக கண்டித்துள்ளது. இந்த தாக்குதல்களுக்கு “சரியான நேரத்தில் வலுவாக எதிர்வினையாற்றப்படும்” எனவும் எச்சரித்துள்ளது.
பிப்ரவரி 22 அன்று எக்ஸ் பக்கத்தில் இதுதொடர்பாக தாலிபன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானின் வான்வழி தாக்குதல்கள் ஒரு ‘குற்ற செயல்’ என்றும் ‘ஆப்கானிஸ்தானின் இறையாண்மை மற்றும் இஸ்லாமிய விழுமியங்கள் மீதான அப்பட்டமான மீறல்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அறிக்கையில், “தேசிய பாதுகாப்பு அமைச்சகம் நாட்டின் இறையாண்மையையும் மக்களின் பாதுகாப்பையும் தேசிய மற்றும் மதக் கடமையாக கருதுகிறது. இந்த செயலுக்கு தகுந்த நேரத்தில் உரிய பதிலடி கொடுக்கப்படும் என உறுதியளிக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார், பக்திகா மற்றும் கோஸ்ட் ஆகிய மாகாணங்களில் அமைந்துள்ள டிடிபியின் (டெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தான்) ஏழு முகாம்கள் மற்றும் மற்ற தீவிரவாத இலக்குகளை வான்வழி தாக்குதல் மூலம் அழித்ததாக பாகிஸ்தானின் ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த தாக்குதல்களில் 80க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் தரப்பில் கூறப்படுகிறது.
மற்றொருபுறம், இந்த தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக தாலிபன் கூறுகிறது.
மேலும் கசப்பாக மாறிய உறவு
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி கூறுகையில், தீவிரவாத சக்திகள், அவர்களின் உதவியாளர்கள், ஆதரவாளர்கள் எங்கு இருக்கின்றனர் என்பது பாகிஸ்தானுக்கு நன்றாக தெரியும் என்றும், நாட்டில் இனியும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்ந்தால், அதற்கு பொறுப்பானவர்கள் தப்பிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபன் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, காபூல் மற்றும் மற்ற பகுதிகளில் பல வான்வழி தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தியது, இது இரு நாடுகளுக்கு இடையே எல்லை மோதல்களுக்கு வழிவகுத்தது.
தடை செய்யப்பட்ட டிடிபி-க்கு ஆப்கானிஸ்தானில் தாலிபன் அரசாங்கத்தின் ஆதரவு இருப்பதாக பாகிஸ்தான் அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், ஆப்கானிஸ்தான் தாலிபன் இதை பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்னை என்று கூறி மறுத்துவருகிறது. சொந்த நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துமாறும் பாகிஸ்தானை தாலிபன் வலியுறுத்தியது.
கடந்தாண்டு இருநாடுகளுக்கு இடையேயான எல்லை மோதல்களால் ஏற்கனவே கசந்திருந்த உறவு சமீபத்திய பதற்றங்களால் மேலும் மோசமடைந்துள்ளது. கடந்தாண்டு நடந்த எல்லை மோதல்களை தொடர்ந்து கத்தார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்தால் போர் நிறுத்தம் எட்டப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் வான்வழி தாக்குதல்கள் மற்றும் “தகுந்த நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும்” என்ற ஆப்கன் தாலிபனின் அச்சுறுத்தலை தொடர்ந்து அடுத்து என்ன நிகழும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆப்கன் தாலிபனின் ராணுவ திறன்கள், “தகுந்த நேரத்தில் சரியான பதிலடி” என அவர்கள் எதை குறிப்பிடுகின்றனர், அடுத்துவரும் நாட்களில் என்ன நடக்கும் என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.
‘இந்த முறை வழக்கமான போருக்கான சாத்தியம் இல்லை’
பட மூலாதாரம், SANAULLAH SEIAM/AFP via Getty Images
ஆப்கன் விவகாரங்களை உற்றுநோக்கி வருபவரும் ‘கோரசன் டைரி’யுடன் (Khorasan Diary) தொடர்புடைய மூத்த பத்திரிகையாளருமான இஃப்திகார் ஃபிர்தௌஸ் கூறுகையில், “பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே பாரம்பரிய போர் நடப்பதற்கு எந்த சாத்தியமும் இல்லை” என தெரிவித்தார்.
பிபிசி உருதுவிடம் பேசிய அவர், “பாகிஸ்தானின் தாக்குதல்கள் அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் பதிலடி, எல்லையில் அதிகரிக்கும் பதற்றம் மற்றும் அதைத்தொடர்ந்து ராஜ்ஜீய அதிகாரிகளின் பேச்சுவார்த்தை என, இதுவொரு விநோதமான, விரக்தியளிக்கும் சுழற்சியாக இருக்கிறது. ஒரு நாட்டின் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்துவது சாதாரணமான விஷயம் அல்ல. இது மீண்டும் மீண்டும் நிகழும் சுழற்சியாகும். ” என்றார்.
ராணுவ திறன்கள், வான்வழி தாக்குதல்களுக்கான வளங்கள், விநியோக சங்கிலி மற்றும் பயிற்சியளிக்கப்பட்ட வீரர்கள் தேவை என்பதால் பாகிஸ்தானுடன் தாலிபன் வழக்கமான பாரம்பரிய போரில் ஈடுபடுவதற்கு சாத்தியமில்லை என அவர் கூறுகிறார்.
“ஆப்கானிஸ்தானின் பொருளாதார சூழல் மற்றும் அவர்களிடம் உள்ள ராணுவ வளங்களை கருத்தில் கொண்டால், சாத்தியமான பழிவாங்கல் என்பது சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு மட்டுமே சமமாக இருக்கும்.”
இது அவர்களின் கௌரவ பிரச்னை என்பதால், வருங்காலத்தில் தாலிபன் நிச்சயமாக இதற்கு எதிர்வினையாற்றும் என்று கூறிய அவர், ஆனால் முழுவீச்சிலான போருக்கு எவ்வித சாத்தியமும் இல்லை என கூறினார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள குவாயித்-இ-அசம் பல்கலைக் கழகத்தின் உளவு மற்றும் பாதுகாப்பு இயல் பிரிவின் இணை பேராசிரியர் முனைவர் குர்ரம் இக்பால் பிபிசியிடம் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தான் தாலிபன்களை டிடிபி-க்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவதற்கான அனைத்து அமைதியான வழிகளும் பாகிஸ்தானிடம் தீர்ந்து விட்டது. ஆப்கானிஸ்தானுக்குள் டிடிபி-யின் பாதுகாப்பான புகலிடங்கள் குறித்த பாகிஸ்தானின் கவலைகளை ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல சர்வதேச நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன’ என்றார்.
“ஒன்று அல்ல, 2023ம் ஆண்டிலிருந்து ஐநாவின் மூன்று தொடர்ச்சியான அறிக்கைகள், ஆப்கானிஸ்தானில் டிடிபி-க்கு பாதுகாப்பான புகலிடங்கள் இருப்பதாக உறுதிபடுத்தியுள்ளன. அனைத்து அமைதியான வழிகளையும் பயன்படுத்திய பிறகு, பலத்தைப் பயன்படுத்தும் நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது.”
குர்ரம் இக்பால் கூறுகையில், “அரசு நிர்வாகம், பொருளாதாரம் மற்றும் சமூக மட்டங்களில் ஆப்கானிஸ்தானுக்குள் தீவிரமான பிரச்னைகள் இருப்பதை நாங்கள் பார்த்து வருகிறோம். பல சர்வதேச மதிப்பாய்வுகளின்படி, பத்தில் எட்டு ஆப்கன் குடும்பங்கள் தாங்கள் வாழ்வதற்காக தங்களுடைய வீட்டு உபயோக பொருட்களை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. ” என்றார்.
பட மூலாதாரம், ISPR
“ஆப்கன் தாலிபன் உள்நாட்டு பிரச்னைகளை கையாள்வதில் தோல்வியுற்றிருக்கும் போது, அவர்கள் வெளியிலிருந்து நேரும் பிரச்னைகள் மீது கவனத்தை திருப்புகின்றனர். பாகிஸ்தானுடனான பதற்றம் உள்நாட்டில் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் பிரச்னைகளிலுருந்து கவனத்தை திசைதிருப்புவதற்கும் அவர்களுக்கு உதவுகிறது, அதனால் தான் அவர்கள் இந்த பதற்றம் தொடர விரும்புகின்றனர்.”
இரண்டாவது காரணம் அதிக யதார்த்தமானது என அவர் கூறுகிறார். “அவர்கள் (ஆப்கன் தாலிபன்) டிடிபி-க்கு எதிராக நடவடிக்கை எடுத்தால், டிடிபி ஆயுதக்குழுவினர் ஐ.எஸ்-க்கு விலகிச் செல்லக்கூடும் என்ற அச்சம் உள்ளது, இது இதற்கு முன்பும் நடந்துள்ளது. டிடிபிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அவர்கள் தயங்குவதற்கு இதுவும் ஒரு காரணம்.”
சாத்தியமான பதிலடி என்னவாக இருக்கும்?
இஃப்திகார் ஃபிர்தௌஸ் கூற்றின்படி, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நிலவும் சூழலில் ‘புதிதாக ஒன்றும் இல்லை, தாலிபனிடம் டிடிபி (டெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தான்) போன்ற வளங்கள் இருக்கின்றன, அத்தகைய வளங்களை முழுதாக பயன்படுத்தி பாகிஸ்தானில் உள்ள குடிமக்கள் வாழும் பகுதிகளை குறிவைக்கக்கூடும்.
தாலிபனின் திறன்கள் மற்றும் சாத்தியமான எதிர்வினை குறித்த இஃப்திகார் ஃபிர்தௌஸின் கருத்துடன் குர்ரம் இக்பால் உடன்படுகிறார். அவர் கூறுகையில், வழக்கமான போரில் பாகிஸ்தானை எதிர்ப்பதற்கான திறன்களில் ஆப்கன் தாலிபனிடம் பற்றாக்குறை நிலவுகிறது என்றும், கடந்த காலங்களை போல் அல்லாமல் வழக்கத்திற்கு மாறான உத்திகளை அவர்கள் நாடக்கூடும் என்றார்.
“பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிக்கக்கூடும். நாட்டின் நகர்ப்புற பகுதிகளில் வன்முறை அதிகரிக்கக்கூடும்.”
குர்ரம் இக்பாலின் கூற்றுப்படி, தாலிபன்கள் தீவிரமான பொருளாதார பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளதால், பாகிஸ்தானுடன் தாலிபனால் முழு வீச்சிலான அல்லது வழக்கமான போரிடுவதற்கான சாத்தியம் இல்லை.
வரும் நாட்களில் இரு தரப்பிலிருந்தும் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் கட்டுப்படுத்தப்பட்ட அளவிலான மோதல்கள் நடக்கக்கூடும் என்றும் சில தாக்குதல் ஒத்திகைகள் நடக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். இரு தரப்பிலிருந்தும் கடுமையான அறிக்கைகள், கூற்றுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் வெளியாகக்கூடும் என்றார்.
“கடந்த காலத்தில் பதற்றங்கள் அதிகரித்தபோது, பழிவாங்கப்பட்டதாக உள்நாட்டு மக்களுக்கு செய்தி தெரிவிக்க, ஆப்கன் தாலிபன் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவர்கள் எல்லையில் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் பீரங்கி தாக்குதல் நடத்தலாம்.”
ஆப்கானிஸ்தானின் ராணுவ பலம் என்ன?
பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தானில் தாலிபன் அரசின் படைகள் வைத்திருக்கும் ஆயுதங்கள் மூன்று வகையை சேர்ந்தவை. ஆப்கானிஸ்தானின் முன்னாள் ராணுவத்திடமிருந்த ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள், அமெரிக்கா உட்பட வெளிநாட்டுப் படையினர் திரும்பப் பெறப்பட்ட பிறகு ஆப்கானிஸ்தானில் எஞ்சியுள்ள அவர்களின் ஆயுதங்கள் மற்றும் சட்டவிரோத சந்தைகளிலிருந்து தாலிபன்கள் பெற்ற புதிய ஆயுதங்கள் உள்ளிட்டவை.
நிபுணர்களின் கூற்றுப்படி, ஆப்கன் தாலிபன் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு இடையே நடைபெற்ற எல்லை மோதல்கள் தொடர்பானதாக கூறப்படும் வீடியோக்களில் தாலிபன்கள் பாகிஸ்தானுக்கு எதிராக பெரும்பாலும் இலகுரக ஆயுதங்களையே பயன்படுத்தியுள்ளனர். கனமான ஆயுதங்கள் மற்றும் நீண்ட தூர ஆயுதங்களை பயன்படுத்தியதற்கான தடயங்கள் மிக குறைவாகவே உள்ளன.
மறுகட்டமைப்புக்கான அமெரிக்காவின் சிறப்பு ஐஜி மற்றும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றின்படி, ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக முந்தைய அரசாங்கத்திற்கு சுமார் 16 லட்சம் இலகுரக மற்றும் கனரக ஆயுதங்கள் மற்றும் பல்வேறு ராணுவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய ஆயுதங்களுள் தோராயமாக 70% ஆயுதங்கள் அல்லது சுமார் 10 லட்சம் ஆயுதங்கள் தற்போது ஆப்கானிஸ்தானின் தாலிபன்கள் கட்டுப்பாட்டில் உள்ளன.
தாலிபன் அரசாங்கத்தின் ராணுவத்திடம் தற்போது கலாஷ்னிகோவ் (ஏகே-47) , அமெரிக்கன் எம்-16, எம்-4 மற்றும் எம்-29 இலகுரக எந்திர துப்பாக்கிகள் உள்ளிட்டவையே பெரும்பாலும் உள்ளன.
பிகா எம்-2 (Pika) மற்றும் எம்-240 போன்ற இயந்திர துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், ஆர்பிஜி-7 மற்றும் ஏடி-4 போன்ற ராக்கெட் ஏவுகணைகள், ஏடி-4 மற்றும் டாங்கிகள் எதிர்ப்பு ஏவுகணைகள் அடங்கும்.
அமெரிக்க பாதுகாப்பு துறை வெளியிட்ட அறிக்கைகளின்படி, ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய பிறகு, முந்தைய ஆப்கானிஸ்தான் படைகளுக்கு அமெரிக்கா வழங்கியிருந்த கனரக கவச வாகனங்கள் மற்றும் மற்ற கனரக ராணுவ உபகரணங்கள் ஆகியவை தாலிபன்கள் கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்த கனரக ஆயுதங்களுள் டி-30 என அழைக்கப்படும் 122 எம்எம் ஹோவிட்சர்கள் (பீரங்கி வகை). இவற்றில் 100 முதல் 120 வரை ஆப்கானிஸ்தானில் இன்னும் செயல்பாட்டில் உள்ளன.
இதைத்தவிர, தாலிபனிடம் 155 எம்எம் ஹோவிட்சர்கள் மற்றும் ZT-23-2 போன்ற பல ரஷ்ய ஆயுதங்களும் உள்ளன.
பட மூலாதாரம், AFP via Getty Images
2024-ஆம் ஆண்டில் பக்ரம் விமானப்படை தளத்தில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் தாலிபன் அரசு கனரக ஆயுதங்களை காட்சிப்படுத்தியது. இதில், ஸ்கட் (Scud) ஏவுகணை ஆர்-17 மற்றும் 300 கிமீ வரை சென்று தாக்கவல்ல எல்ப்ரோஸ் (Elbros) ஆர்-300 போன்ற ஆயுதங்களும் அடங்கும்.
ஃப்ராக்-7 என அறியப்படும் லூனா (Luna) ஏவுகணையானது, கிராட் ராக்கெட் ஏவுகணை, மிலன் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை மற்றும் ஆர்கன் ஏவுகணைகளுடன் தோராயமாக ஆறு மைல்கள் வரம்பைக் கொண்ட ஒரு ஆயுதம் மற்றும் ஏவுதள அமைப்பாகும்.
இத்தகைய ஆயுதங்கள் ஆப்கானிஸ்தானில் குறைந்தது மூன்று தசாப்தங்களாகப் பயன்படுத்தப்படவில்லை. சில ஆயுதங்கள், பாதுகாப்பு அமைச்சகத்தின் கிடங்குகளிலும், மற்றவை பஞ்ச்ஷிர் போன்ற மலைப்பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆயுதங்களில் சிலவற்றை மீண்டும் செயல்படுத்தியதாக தாலிபன் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. இருப்பினும், அவற்றின் தொழில்நுட்ப நிலை மற்றும் போர் தயார்நிலை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஆப்கானிஸ்தானுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தானுக்குள்ள ஒரு சாதகமான அம்சம், விமானப்படை மற்றும் நவீன போர் விமானங்கள் ஆகும். தாலிபன் அரசாங்கத்திடம் அதை எதிர்கொள்ள விமானப்படை இல்லை.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து பல ஹெலிகாப்டர்களை பழுதுபார்த்து தாலிபன் அரசாங்கம் இயக்கியுள்ளது மற்றும் பல விமானிகளுக்கு பயிற்சி அளித்துள்ளது.
பிஸ்மில்லா தபானின் கூற்றுப்படி, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தனது இருப்பின் இறுதி ஆண்டுகளில் ஆப்கானிய விமானப்படையை முழுமையாகப் பயன்படுத்தவில்லை. அதன் பல விமான ஆயுதக் கிடங்குகளை அழித்துவிட்டது. “அதனால்தான் தாலிபன்களிடம் வானில் இருந்து மற்றொரு வான் இலக்கை தாக்கக்கூடிய ஆயுதங்கள் இல்லை.”
அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிக்கையின்படி, தாலிபன் கைப்பற்றியதில், C-208 விமானங்கள், MD-530 ஹெலிகாப்டர்கள், பிளாக் ஹாக் (Black Hawk) ஹெலிகாப்டர்கள், A-29 விமானங்கள், Mi-17 போக்குவரத்து ஹெலிகாப்டர்கள், Mi-24 போர் ஹெலிகாப்டர்கள் மற்றும் MD-500 இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் ஆகியவை அடங்கும்.
தாலிபன் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தன்னிடம் சுமார் 60 கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இருப்பதாகக் கூறுகிறது.
‘கெரில்லா போரில் நீண்ட அனுபவம்’
பட மூலாதாரம், Getty Images
தாலிபன்கள் கெரில்லா போர் முறையில் விரிவான அனுபவம் பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக அமெரிக்கா, நேட்டோ மற்றும் முன்னாள் ஆப்கானிய அரசாங்கப் படைகளுக்கு எதிராகப் போராடியுள்ளனர். இந்த அனுபவம் இன்றும் அவர்களின் ராணுவ உத்தியின் முதுகெலும்பாக உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
2025 அக்டோபரில் பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான எல்லை மோதல்களைத் தொடர்ந்து, சமீபத்திய மோதல்களின் வீடியோக்கள் மற்றும் பிற சான்றுகள் தாலிபன்கள் இன்னும் ஒரு வழக்கமான ராணுவமாக அல்லாமல், இலகுரக ஆயுதமேந்திய கெரில்லா குழுவாகவே போராடுவதைக் குறிக்கின்றன என்று ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு நிபுணர் பிஸ்மில்லா தபான் பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த போர் முறையில் பதுங்கியிருந்து ‘திடீர்’ தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் பங்கேற்ற ஒரு தாலிபன் தளபதி, பெயர் வெளியிட விரும்பவில்லை என்ற நிபந்தனையின் பேரில் பேசுகையில், தாலிபன் படைகள் “பெரும்பாலும் கெரில்லா தந்திரோபாயங்களில் கவனம் செலுத்தின, அதில் எங்களுக்கு அதிக அனுபவம் உள்ளது. இருப்பினும், தேவைப்படும் போது வழக்கமான ராணுவப் பிரிவுகளும் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டன” என்று கூறினார்.
ஆப்கானிஸ்தானின் பிரதேசங்கள் மற்றும் நிலைகள் மீது கட்டுப்பாட்டைப் பேணுவதே முதன்மையான நோக்கம் என்று அவர் விளக்கினார். “அதிகார மையத்திலிருந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன, ஆனால் உள்ளூர் எல்லைத் தளபதிகளுக்கு கள நிலைமையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கவும் அவர்களின் திறன்களை நிரூபிக்கவும் முழு அதிகாரம் வழங்கப்படுகிறது.”
தாலிபன்களால் இன்னும் தங்கள் கெரில்லா குழுவை வழக்கமான ராணுவமாக மாற்ற முடியவில்லை என்றும், எனவே அவர்கள் தங்கள் பழைய கெரில்லா போர் திறன்களை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர் என்றும் பாதுகாப்பு நிபுணர் ஆமிர் ராணா பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்தியா போன்ற ஒரு சக்தி வாய்ந்த நாட்டுடன் போரிடுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வழக்கமான ராணுவத்தை பாகிஸ்தான் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



