SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், HANDOUT
புதுப்பிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
(இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இரா.நல்லகண்ணு காலமானார் அவருக்கு வயது 101.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், ” நல்லகண்ணு உடல் நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 24 தினங்களாக சிகிச்சையின் போது அவரது உடல் நிலையில் ஏற்றதாழ்வுகள் இருந்து வந்தன. ” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,” பல்துறை மருத்துவக்குழு தீவிர சிகிச்சையையும், அதிதீவிர கண்காணிப்பையும் தொடந்து வந்தனர். இன்று அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து, அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது.” என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
‘அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால், நல்லக்கண்ணு 25. 02. 2026 அன்று பிற்பகல் 1. 55 மணியளவில் காலமானார்.’ என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஸ்டாலின், விஜய் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி
தற்போது இரா. நல்லகண்ணுவின் உடல் பாலன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர். பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
அஞ்சலி செலித்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “வாழ்நாள் முழுவதும் போராடியவர். அவருடைய அரசியல், பொதுவாழ்வு, மக்கள் மீதான அக்கறை என பல விஷயங்களை அவர் மக்களுக்காக விட்டுச் சென்றுள்ளார். அவற்றை அவரின் வாழ்க்கையிலிருந்து ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, தொடர்ந்து அவற்றை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்” என்றார்.
அதேபோன்று, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயும் நல்லகண்ணு உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் உடனிருந்தார்.
மேலும், ஓ.பன்னீர்செல்வம், கவிஞர் வைரமுத்து, நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்டோரும் நல்லகண்ணு உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
பட மூலாதாரம், PTI
பிரதமர் மோதி, ராகுல் காந்தி இரங்கல்
பிரதமர் மோதி தன் எக்ஸ் பக்கத்தில், “அடிமட்ட அளவிலான தொடர்புகளுக்காகவும் சமூகத்தில் பின்தங்கியவர்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு குரல் கொடுப்பதற்கான முயற்சிகளுக்காகவும் நல்லகண்ணு நினைவுகூரப்படுவார். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவு மக்களாலும் பரவலாக மதிக்கப்பட்டவர் அவர். அவருடைய எளிமையும் குறிப்பிடத்தக்கதாகும். அவருடைய குடும்பத்தினர் மற்றும் அபிமானிகளுடன் என்னுடைய எண்ணங்கள் உள்ளன.” என பதிவிட்டுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில், “தோழர் ஆர். நல்லகண்ணுவின் வாழ்க்கை, ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கான நேர்மை, எளிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு ஓர் அரிய எடுத்துக்காட்டாகும்.
கிட்டத்தட்ட ஒன்பது தசாப்தங்களாக, அவர் நீதி மற்றும் கண்ணியத்திற்காக உறுதியாக நின்றார். அவரது குடும்பத்தினர், சகாக்கள் மற்றும் எண்ணற்ற அபிமானிகளுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.
மு. வீரபாண்டியன், மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
“தமிழ்நாட்டில் அவர் கண்ட சமதர்ம சமூகத்தை படைக்கவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை கட்டி வளர்க்கவும் சபதம் ஏற்கிறோம். சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நாளை பிற்பகல் 3 மணி வரை அவருடைய உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் கட்சியினர் அணிவகுப்போடு அவரது உடல் மருத்துவக் கல்லூரியிடம் மருத்துவ ஆய்வுக்காக ஒப்படைக்கப்படும்.”
தலைவர்கள் இரங்கல்
மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “முதுபெரும் தலைவர் தோழர் நல்லகண்ணு மறைந்தார் என்ற செய்தி நம்மையெல்லாம் கடும் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது. நம் சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி; நாட்டின் விடுதலைக்காக, பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக தம் இனிய வாழ்வின் பெரும்பகுதியை ஈகம் செய்த தியாகப் பெருஞ்சீலர்! கொள்கை உறுதி குலையாமல் குன்றமென நிமிர்ந்து நின்ற பண்புக்குரியவர் தீரமிகு தோழர் நல்லகண்ணு.” என தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், HANDOUT
தோழரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்!
மறக்க முடியாத அந்த மாமனிதரின் வாழ்வே நமக்காக அவர் விட்டுச் சென்றிருக்கும் மகத்தான செய்தி. அதுவே நமக்கு வழிகாட்டும் ஒளியாகட்டும்! பாட்டாளி மக்களுக்காகவே வாழ்ந்து நிறைந்த பகட்டில்லாத் தோழர் நல்லகண்ணுவின் நினைவும், புகழும் என்றென்றும் காலத்தால் அழியாத கல்வெட்டாக மக்கள் மனதில் நிலைத்திருக்கும்! தமிழ்நாட்டின் உயரிய விருது பெற்ற நம் தகைசால் தமிழரை – இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம்!” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செல்வப்பெருந்தகை, தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசுகையில், “நேர்மையான தலைவர், ஏற்றத்தாழ்வும் பாகுபாடும் பார்க்காதவர், சுதந்திர போராட்ட வீரர், இந்திய விடுதலைக்காக தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்தவர். ‘சுதந்திர போராட்டத்தின் போது என் மீசையை சுட்டதாக’ என்னிடம் தெரிவித்துள்ளார். இத்தகைய மாபெரும் தலைவரை தமிழ்நாடு இழந்திருக்கிறது. அவருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்க வேண்டும். நல்லகண்ணுவை வருங்கால தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையிலான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழ்நாடு பாஜக
நயினார் நாகேந்திரன் தன் எக்ஸ் பக்கத்தில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான நல்லக்கண்ணு, உடல்நலக்குறைவு காரணமாக தமது 101-வது வயதில் இயற்கை எய்தினார் என்ற தகவல் மிகுந்த மன வேதனையளிக்கிறது. அன்னாரின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைக் கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மிக இளம் வயதிலேயே அரசியலில் அடியெடுத்து வைத்து, நாட்டின் சுதந்திரத்திற்காகவும், அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளுக்காகவும் நூற்றுக்கணக்கான போராட்டங்களை முன்னெடுத்ததோடு, வாழும் வரை எளிமையின் அடையாளமாகவே அறியப்பட்டவர் நல்லக்கண்ணு . அன்னாரின் பொதுச்சேவையும் அர்ப்பணிப்பும் மக்கள் மனதிலும் அரசியல் வரலாற்றிலும் என்றும் நீங்கா இடம்பிடித்திருக்கும்!” என பதிவிட்டுள்ளார்.
விஜய், தலைவர், தமிழக வெற்றிக் கழகம்
விஜய் தன் எக்ஸ் பக்கத்தில், “சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள் காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன்.
அவரது இழப்பு, இந்த நாட்டுக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மறைந்த தோழர் இரா. நல்லகண்ணுவின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.” என தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், TVK
‘நூற்றாண்டு’ கண்ட நல்லகண்ணு
தமிழ்நாட்டுக்கும் தமிழின் வளர்ச்சிக்கும் பாடுபட்டதாகக் கூறி கடந்த 2022ஆம் ஆண்டு தகைசால் தமிழர் விருதை, முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
இதற்காகத் தனக்குக் கொடுக்கப்பட்ட 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகையுடன் தன்னுடைய பணமான 5,000 ரூபாயையும் சேர்த்து முதலமைச்சரின் நிவாரண நிதிக்கே நல்லகண்ணு வழங்கினார்.
நல்லகண்ணுவின் ஆரம்ப கால வாழ்க்கை
ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயக் குடும்பத்தில் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி ராமசாமி-கருப்பாயி தம்பதியின் மூன்றாவது மகனாக நல்லகண்ணு பிறந்தார்.
ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள காரனேஷன் உயர்நிலைப் பள்ளியில் படித்த நல்லகண்ணுவுக்கு பொதுவுடைமைக் கருத்துகளை பள்ளி ஆசிரியராக இருந்த பலவேசம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இந்திய சுதந்திர போராட்டம், விவசாயிகள் போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், கனிமவளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் எனத் தனது வாழ்நாளில் குறிப்பிட்ட பகுதியை போராட்டம், சிறை வாழ்க்கை என வாழ்ந்தவர் நல்லகண்ணு.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமன்றி இதர கட்சிகளின் தலைவர்களும் ‘தோழர் ஆர்.என்.கே’ என்ற அடைமொழியோடு அவரை அழைக்கின்றனர்.
கடந்த 1943ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த நல்லகண்ணு, இன்றுவரை அதே கட்சியில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கினார்.
அதுகுறித்து முன்பு கலந்துரையாடல் ஒன்றில் நினைவுகூர்ந்த நல்லகண்ணு, “என்னுடைய 16 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர முயன்றேன். அவர்கள் என்னைச் சேர்க்கவில்லை. ’18 வயது ஆகட்டும், சேர்த்துக் கொள்கிறோம்’ என்றனர். 18 வயது வந்ததும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைந்தேன்” என்றார்.
நல்லகண்ணு தொடர்பாக பிபிசி தமிழின் செய்தியாளர்களிடம் கடந்த காலங்களில் இடது சாரி அமைப்புகளின் நிர்வாகிகள் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை இந்த கட்டுரையின் பின்வரும் பத்திகளில் காணலாம்.
“பள்ளிப் பருவத்தில் காந்தியவாதியாக நல்லகண்ணு இருந்தார். அதன்பிறகு கம்யூனிஸ்ட்டாக மாறினார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் மாணவர்களைத் திரட்டி போராட்டம் நடத்தினார். திருநெல்வேலியில் நடந்த சுதந்திர போராட்டங்களில் அவர் பங்கெடுத்தார்” என்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் லெனின்.

நெல்லை சதி வழக்கு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த சில ஆண்டுகளில் நல்லகண்ணுவுக்கு கிளைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 1948ஆம் ஆண்டில் ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்ற போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது.
ஆயுதம் தாங்கிய போராட்டமாக இது இருந்ததாகக் கூறும் லெனின், “இந்திய அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாகத் தொடரப்பட்ட நெல்லை சதி வழக்கில் நல்லகண்ணு சேர்க்கப்பட்டார். அவரது மீசையை போலீஸ்காரர்கள் சுருட்டை வைத்துப் பொசுக்கினர். ஆனாலும், சக தோழர்களை அவர் காட்டிக் கொடுக்கவில்லை” என்றார்.
இந்த வழக்கில் ஏழு ஆண்டுகள் நல்லகண்ணு சிறையில் இருந்துள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு அன்னசாமி என்பவர், தனது மகள் ரஞ்சிதத்தை திருமணம் செய்து கொடுத்தார். இந்தத் திருமணம் 1958ஆம் ஆண்டு நடந்தது.
இதே காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் நிலச்சுவான்தார்களின் கைகளில் நிலம் இருந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் தலித் மக்கள் வீடுகளையோ நிலங்களையோ வைத்துக்கொள்ள முடியாத நிலை இருந்துள்ளது.
“நிலையான வீடு இல்லாததால் தலித் மக்களை ‘ஓடும் குடிகள்’ என அழைத்தனர். இதற்கு எதிராக தலித் மக்களைத் திரட்டிப் போராடி அவர்கள் குடியிருப்பதற்கான மனை உரிமையை நல்லகண்ணு பெற்றுத் தந்தார்” என்கிறார் லெனின்.
நல்லகண்ணுவின் அரசியல் பயணத்தில் விவசாய சங்கத்தின் பணிகளே பிரதானமாக இருந்துள்ளது. 1970 ஆம் ஆண்டில் நடந்த நில மீட்சிப் போராட்டத்தில் ஒரு சிலரின் கைகளில் இருந்த நிலங்களை மீட்பதற்காக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்தது.
அப்போது தமிழ்நாட்டில் மடங்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள் தொடர்பான விவரங்களைத் தொகுத்து சிறிய நூல் ஒன்றை நல்லகண்ணு வெளியிட்டார்.
சாதிக் கலவரத்தைத் தடுத்த நல்லகண்ணு
“நல்லகண்ணுவின் பிரதான காலகட்டம் என்பது விடுதலைப் போராட்டமும் அதற்குப் பிந்தைய காலகட்டமும்தான்” எனக் கூறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், 1996ஆம் ஆண்டு நடந்த சாதிக் கலவரத்தைக் குறிப்பிட்டு பிபிசி தமிழிடம் சில தகவல்களைத் தெரிவித்தார்.
தென் மாவட்டங்களில் 1996ஆம் ஆண்டு முக்குலத்தோர் மற்றும் தலித் மக்களுக்கு இடையே சாதிக் கலவரம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக நல்லகண்ணுவின் மாமனார் அன்னசாமி கொல்லப்பட்டார்.
“அது கொந்தளிப்பான நேரம். சற்று பிசகினாலும் அசம்பாவிதம் நடந்திருக்கும். ஆனால் அமைதியை ஏற்படுத்தும் பணியில் நல்லகண்ணு ஈடுபட்டார். ‘சிலர் செய்த தவறுக்காக ஒரு சமூகத்தையே குற்றவாளியாக்க முடியாது’ என்பதை அவர் நிலை நிறுத்தினார்” என்கிறார் கனகராஜ்.
மதுரையில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தலித் ஊராட்சித் தலைவர்கள் பதவியேற்க முடியாத சூழல் நிலவியது. இதை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்த நல்லகண்ணு, சுமார் நான்காயிரம் பேரைத் திரட்டி மாபெரும் உண்ணாவிரதம் இருந்தார்.
“இந்தப் போராட்டம் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தியது. 2006ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த கருணாநிதி தலைமையிலான அரசு, தேர்தலை நடத்தியே தீருவது என முடிவெடுத்து தேர்தலை நடத்தியது” என்று விவரித்தார் லெனின்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



