Home தேசிய national tamil 3 இஸ்லாமிய முதியவர்களை தாக்கும் இளைஞர் – வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

3 இஸ்லாமிய முதியவர்களை தாக்கும் இளைஞர் – வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

11
0

SOURCE :- BBC NEWS

உ.பியில் மூன்று இஸ்லாமியர்கள் தாக்கப்படும் காணொளி வைரல், தாக்குதலுக்கான காரணம் என்ன?

பட மூலாதாரம், Balabhadr/Shahbaz

“நானும் என் சக ஊழியர்களும் தாக்கப்பட்டோம். எங்களை நோக்கி மத ரீதியிலான கருத்துகளும் கூறப்பட்டன. நாங்கள் அமைதியாக அமர்ந்தோம்.அவர்கள் வீடியோவை வைரலாக்கினர். நாங்கள் எந்த சர்ச்சையையும் விரும்பவில்லை. ஆனால் எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு சுதந்திரமாக சுற்றித் திரிகிறார். அவர் மேல் சரியான பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்படவில்லை”

உத்திரபிரதேசத்தின் பதாயூன் மாவட்டத்தில் உள்ள சஹாஸ்வான் காவல்நிலைய எல்லையில் வசிக்கும் 56 வயது அப்துல் சலாம் பிபிசி இந்தியிடம் இவ்வாறு கூறினார்.

அப்துல் சலாம் உட்பட மூன்று இஸ்லாமிய முதியவர்களை இளைஞர் ஒருவர் அறையும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு காரணமான அக்‌ஷய் சர்மா என்ற இளைஞர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஆனால் அந்த இளைஞர் தற்போது ஜாமினில் வெளியே உள்ளார்.

காவல்துறையின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை என புகார்தாரர்கள் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை கூறுவது என்ன?

அப்துல் சலாம் இந்தச் சம்பவம் குறித்துக் கூறுகையில், “பிப்ரவரி 16 அன்று, மொஹல்லா கட்ராவைச் சேர்ந்த எங்களது நண்பர் ஆரிஃப் மற்றும் மொஹல்லா சிஸ்டம் டோலாவைச் சேர்ந்த ஜாவித் ஆகியோருடன் பில்சி தாலுகாவிலுள்ள இஸ்லாம் நகர் எல்லைக்குட்பட்ட ருதாயன் பகுதிக்குச் சென்றிருந்தோம். அங்கிருந்து நாங்கள் நன்கொடை சேகரிக்க வேண்டியிருந்தது. அப்போது ஒரு வாலிபர் பின்னால் இருந்து வந்து எங்களது ஆதார் அட்டையைக் காட்டச் சொன்னார். அதன் பிறகு எங்களைப் பற்றி மத ரீதியான கருத்துகளைக் கூறி, எங்களைத் தாக்கினார்; எங்களது தொப்பிகளைக் கழற்றும்படியும் கூறினார். அங்கு அவர்கள் நான்கு பேர் இருந்தனர்” என்றார்.

அப்துல் சலாம் அளித்த புகாரின் அடிப்படையில், பிப்ரவரி 19 அன்று இஸ்லாம்நகர் காவல் நிலையத்தில் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்தனர். இஸ்லாம்நகரைச் சேர்ந்த இளைஞர் அக்‌ஷய் என்ற சோட்டு என்பவர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

எஃப்ஐஆர்-ல் எழுதப்பட்டுள்ளதன்படி, “அப்துல் சலாம் மற்றும் அவரது மூன்று நண்பர்கள் ருதயான் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஒருவர் ஹாரன் அடித்தார், ஆனால் அவர்களால் அதை கேட்க முடியவில்லை, இதனால் அவர்கள் கோபமடைந்து அவர்களை அடித்தனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், பில்சி வட்டார காவல் அலுவலர் சுனில் குமார் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், “தொடர்புடைய வழக்கில், போலீசார் புகாரை பெற்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். நடவடிக்கை தொடர்கிறது.” என்று தெரிவித்தார்.

அப்துல் சலாம் என்ன சொன்னார்?

உ.பியில் மூன்று இஸ்லாமியர்கள் தாக்கப்படும் காணொளி வைரல், தாக்குதலுக்கான காரணம் என்ன?

பட மூலாதாரம், Balabhadr/Shahbaz

பாதிக்கப்பட்ட அப்துல் சலாம், காவல்துறையின் நடவடிக்கையை பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடுமையான தண்டனை கிடைத்திருக்க வேண்டும் என அவர் எண்ணினார்.

“எங்களுக்கு எதிராக மத ரீதியான கருத்துக்கள் கூறப்பட்டன சூழலைக் கெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீசார் சரியான பிரிவுகளைப் பயன்படுத்தவில்லை. இதன் காரணமாக, அவருக்கு உடனடியாக ஜாமீன் கிடைத்தது. நாங்கள் சர்ச்சையை விரும்பவில்லை, ஆனால் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்,” என்று அப்துல் சலாம் பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.

அப்துல் சலாமின் வழக்கறிஞர் பாஹிம் கானும் காவல்துறை அறிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

“அப்துல் சலாமைத் தாக்கிய இளைஞர் மீது பிஎன்எஸ் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்துள்ள பிரிவுகள் தாக்குதல், வாய்மொழி துஷ்பிரயோகம் மற்றும் கொலை மிரட்டல் தொடர்பானவை. அனைத்தும் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகள்” என்று அவர் கூறினார்.

இருப்பினும், பாதிக்கப்பட்டவரின் குற்றச்சாட்டு குறித்து இஸ்லாம் நகர் காவல் நிலைய எஸ்எச்ஓ (SHO) உதயவீர் சிங்கிடம் கேட்டபோது, “வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் அவர்கள் கூறியுள்ள உண்மைகளை ஆராய்ந்து அதற்கேற்ற பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.

அப்துல் சலாம் அங்கு சென்றது ஏன்?

தாக்குதல் சம்பவம் நடைபெற்றதில் இருந்து அப்துல் சலாம் அச்சத்தில் உள்ளார், இதனால் அவர் தனது மொபைலையும் அணைத்துவிட்டார். அவரது மற்ற நண்பர்களான ஆரிஃப் மற்றும் ஜாவேத் ஆகியோரும் ஊடகங்களிலிருந்து விலகியே உள்ளனர்.

அப்துல் சலாம் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள காசி பகுதியின் கவுன்சிலர் ஷாகிர் அன்சாரி, இந்த சம்பவம் குறித்து தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

“அப்துல் சலாம் கடின உழைப்பாளி, அவர் நன்கொடை சேகரிக்க ருதயனுக்குச் சென்றிருந்தார், அவரது நண்பர்கள் ஆரிஃப் மற்றும் ஜாவேத் ஆகியோரும் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று அவர் பிபிசி இந்தியிடம் கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

குற்றம் சாட்டப்பட்ட அக்‌ஷய் ஷர்மா யார்?

குற்றம் சாட்டப்பட்ட அக்‌ஷய் ஷர்மா அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களை தொடர்பு கொள்ள பிபிசி எடுத்த முயற்சிகள் எதுவும் பலனிக்கவில்லை.

அக்ஷய் சர்மா தரப்பு கருத்தை அறிய முற்பட்ட போது, அவரது மொபைலும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.

அப்துல் சலாம் கொடுத்த புகார் கடிதத்தில், ‘பஜ்ரங் தளத் தலைவர் என்று தன்னை அறிமுகம் செய்த அந்த இளைஞர், ஆதார் அட்டையைக் கேட்டு அடித்ததாக’ அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை உறுதிப்படுத்த பஜ்ரங் தளத்தின் உள்ளூர் தலைவர்களிடம் பேச முயன்றோம், ஆனால் அவர்களுடன் பேச முடியவில்லை.

ஆனால் பதாயூனில் உள்ள சஹாஸ்வானின் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ பிரிஜேஷ் யாதவ், அக்‌ஷர் ஷர்மா குறித்த மாற்று அறிமுகத்தை அளித்தார்.

“அக்‌ஷர் சர்மா ஒரு கௌ ரக்‌ஷா மிஷன் (பசு பாதுகாப்பு அமைப்பு) அமைப்பின் மாவட்டத் தலைவர், அவருடைய நியமனக் கடிதமும் எங்களிடம் உள்ளது. இந்த விஷயத்தில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் கோரியுள்ளோம்” என்று அவர் பிபிசி இந்தியிடம் கூறினார். இருப்பினும், அக்‌ஷய் சர்மா பசு பாதுகாப்பு இயக்கத்துடன் தொடர்புடையவரா என்பதை பிபிசியால் சுயாதீனமான உறுதிப்படுத்த முடியவில்லை.

பெயர் வெளியிட விரும்பாத உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர், “அக்‌ஷய் ஷர்மா சுமார் 21 வயது நிரம்பிய இளைஞர் என்றும், அவர் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார், விவசாயத்திலும் ஈடுபட்டுள்ளார்” என்று கூறினார். இதுபோன்ற வேறு எந்தவொரு சம்பவத்திலும் முன்பு அக்‌ஷய் ஷர்மாவின் ஈடுபாட்டை அந்த பத்திரிகையாளர் மறுத்திருந்தார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU