SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், @trahmanbnp
முகமது யூனுஸ் வங்கதேசத்தின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள துறைமுக நகரமான சிட்டகாங்கில் வளர்ந்தார். அவரது தந்தைக்குப் பிறந்த ஒன்பது குழந்தைகளில் அவர் மூன்றாவது குழந்தை.
யூனுஸ் பாய் ஸ்கவுட்ஸில் தீவிரமாக இருந்தார். மேலும் வளரிளம் பருவத்தினராக இருந்தபோது சர்வதேச நிகழ்வுகளில் பங்கேற்க ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளுக்குச் சென்றார்.
வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க ஃபுல்பிரைட் உதவித்தொகையைப் பெற்றார். அங்கு அவர் 1971இல் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். மேலும், மிடில் டென்னசி மாகாண பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் கற்பித்தார்.
கடந்த 1971இல் பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேசத்தின் சுதந்திரப் போராட்டத்தின்போது, புதிய நாட்டின் அதிகாரபூர்வ அங்கீகாரத்திற்காக யூனுஸ் அமெரிக்க அரசிடம் வற்புறுத்தினார். அதோடு வெளிநாடு வாழ் வங்கதேச சமூகத்திற்காக ஒரு செய்திமடலை நிர்வகிக்க உதவினார்.
யூனுஸ் 1972ஆம் ஆண்டு வங்கதேசத்திற்குத் திரும்பினார். சுதந்திரப் போராட்ட வீரரும் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் தலைமையில் புதிய நாட்டைக் கட்டியெழுப்பும் பணிகளில் பங்கேற்க அவர் ஆர்வமாக இருந்தார்.
முதலில் அவர் அரசாங்கத்தின் திட்ட ஆணையத்தில் பணியாற்றினார். பின்னர் தனது சொந்த ஊரிலுள்ள பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் கற்பித்தார்.
கடந்த 2006ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஓராண்டு கழித்து, ஆகஸ்ட் 2007இல் முகமது யூனுஸ், சிட்டிசன் பவர் என்ற அரசியல் கட்சியை உருவாக்கினார். ஆனால், அந்தக் கட்சி முன்னேற்றம் காணவில்லை.
நவம்பர் 30, 2007 அன்று, அமெரிக்க நாளிதழான வால் ஸ்ட்ரீட் ஜர்னல், முகமது யூனுஸிடம் அவரது கட்சியால் ஏன் அரசியலில் முன்னேற முடியவில்லை என்று கேட்டது.
பட மூலாதாரம், Getty Images
உருவானவுடன் சிதைந்த யூனுஸின் கட்சி
வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக, பேராசிரியர் யூனுஸ், “நோபல் பரிசு பெற்ற பிறகு, அரசியலில் நுழைந்து ஆட்சியை மேம்படுத்த வேண்டுமென எனக்கு மிகப்பெரிய அழுத்தம் இருந்தது. நான் அதைச் செய்வேன் எனக் கருதினேன். ஆனால் நான் தொடங்கியபோது, அது நான் விரும்பும் அரசியல் கட்சியாக இருக்காது என்பதை உணர்ந்தேன்,” என்றார்.
மேலும், “நான் சுத்தமான, நற்பெயர் கொண்டவர்களை என் கட்சிக்குள் கொண்டு வர முயன்றேன். ஆனால் நான் அணுகிய அனைவரும் ‘இல்லை நான் அரசியலில் இருக்க விரும்பவில்லை’ என்று கூறி கட்சியில் சேர மறுத்துவிட்டனர். கட்சியில் சேர ஆர்வம் காட்டியவர்கள்தான் நாங்கள் அரசாங்கத்தில் இருந்து நீக்க விரும்பியவர்கள். எனவே நான் ஏதும் செய்யாமல் இருக்க முடிவு செய்தேன்,” என்றும் அவர் தனது பதிலில் கூறியுள்ளார்.
ஒரு கட்சியை உருவாக்க வேண்டுமென்ற முகமது யூனுஸின் முடிவில், வங்கதேசத்தின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளும் மகிழ்ச்சியடையவில்லை.
அப்போதைய அவாமி லீக் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனா, “திடீரென அரசியலில் நுழையும் புதியவர்கள் ஆபத்தானவர்கள், அவர்களை சந்தேகத்துடன் பார்க்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
வங்கதேச தேசியவாத கட்சியின் மூத்த தலைவரும், பேகம் கலீதா ஜியாவின் அரசாங்கத்தில் சட்ட அமைச்சராக இருந்தவருமான மௌதுத் அகமது மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்.
“அவர் அரசியலுக்கு வரவேற்கப்படுகிறார். அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன். ஆனால் அவர் நுழையாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றே நான் கருதுகிறேன்,” என அவர் கூறியிருந்தார்.
முன்பு யூனுஸின் ஆதரவாளராக இருந்தபோதிலும், கடந்த 2009இல் ஆட்சிக்கு வந்தபோது ஷேக் ஹசீனா, யூனுஸை விமர்சிப்பவராக மாறினார்.
அவரது அரசாங்கம், யூனுஸ் மற்றும் கிராமீன் வங்கிக்கு எதிராகப் பல விசாரணைகளைத் தொடங்கியது.
ஷேக் ஹசீனா, யூனுஸை “ரத்தத்தை உறிஞ்சுபவர்” என்று அழைத்தார். அதோடு, ஏழை கிராமப்புற பெண்களிடம் இருந்து கடன்களை வசூலிக்க பலவந்தப்படுத்துதல் மற்றும் பிற முறைகளை அவர் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.
ஜூலை 2024இல் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகக் கிளர்ச்சி வெடித்தது. ஆகஸ்ட் தொடக்கத்தில் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல நேர்ந்தது.
அவருக்குப் பிறகு, மாணவர் ஆர்வலர்கள் ஐரோப்பாவில் இருந்து முகமது யூனுஸை அழைத்து, இடைக்கால அரசாங்கத்தின் பொறுப்பை அவரிடம் வழங்கினர்.
பட மூலாதாரம், Getty Images
யூனுஸ் ஆட்சியில் இந்தியாவுடன் நிலவிய பதற்றம்
ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, முகமது யூனுஸ் இடைக்கால அரசின் பொறுப்பை சுமார் 18 மாதங்கள் ஏற்றுக்கொண்டார். இந்தக் காலகட்டத்தில் வங்கதேசம், இந்தியா இடையிலான உறவுகள் மோசமடைந்தன. அதற்குக் காரணம் தனது தவறு இல்லை என்று முகமது யூனுஸ் கூறி வந்தார்.
கடந்த செப்டம்பரில் ஆசிய சொசைட்டியுடன் நடந்த உரையாடலில், முகமது யூனுஸ், “மாணவர் எழுச்சியை அவர்கள் விரும்பாததால், இந்தியாவுடன் எங்களுக்கு பிரச்னைகள் உள்ளன. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா புகலிடம் வழங்கி வருகிறது. ஹசீனாதான் அனைத்து பிரச்னைகளையும் உருவாக்கினார். இது இந்தியா, வங்கதேசம் இடையே பதற்றங்களை அதிகரித்துள்ளது,” என்று கூறினார்.
மறுபுறம், முகமது யூனுஸ் தலைமையிலான அரசாங்கத்தால் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்க முடியவில்லை எனவும், அடிப்படைவாதிகளை ஊக்குவிப்பதாகவும் இந்தியா தொடர்ந்து கூறி வந்தது.
முகமது யூனுஸுக்கு வங்கதேச தேசியவாத கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி ஆதரவளித்தன. ஜமாத் மீதான தடையை நீக்கி, தேர்தலில் போட்டியிட அனுமதித்தது யூனுஸின் இடைக்கால அரசுதான்.
யூனுஸ் ஆட்சிக் காலத்தில்தான், கலீதா ஜியா சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரது மகன் தாரிக் ரஹ்மானும் 17 ஆண்டுகளிக்குப் பிறகு லண்டனில் இருந்து டாக்கா திரும்பினார்.
சமீபத்தில், தாரிக் ரஹ்மான் பிரதமரானபோது, முகமது யூனுஸுக்கு நெருக்கமான ஓய்வுபெற்ற தூதர் கலிலுர் ரஹ்மான், அவரது அரசில் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
முகமது யூனுஸின் இடைக்கால அரசில் கலிலுர் ரஹ்மான் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார்.
பட மூலாதாரம், @NarendraModi
முகமது யூனுஸ் மீது இந்தியாவுக்கு ஏன் இவ்வளவு கசப்பு?
இத்தகைய சூழ்நிலையில் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. தாரிக் ரஹ்மானிடம் இந்தியா காட்டும் தாராள மனப்பான்மை முகமது யூனுஸிடம் காட்டப்படாதது ஏன்?
சிந்தனைக் குழுவான அனந்தா மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்திராணி பாக்சியிடம் இதே கேள்வியைக் கேட்டபோது, “முகமது யூனுஸிடம் கடுமையாக நடந்து கொண்டதால் இந்தியா எந்தப் பலனையும் பெறவில்லை. தாரிக் ரஹ்மான் விஷயத்தில் இந்தியா முழுமையாக அதற்குத் தலைகீழான மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. ஆனால், யூனுஸ் வங்கதேசத்தை ஊக்குவித்த விதம், அவர் இந்தியாவின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுகிறார் என்பதைத் தெளிவாகக் காட்டியது,” என்று பதிலளித்தார்.
“உதாரணமாக, டிசம்பர் 2024இல் பாகிஸ்தான் சரக்குக் கப்பல் ஒன்று கராச்சியில் இருந்து வங்கதேசத்தின் தென்கிழக்குக் கடற்கரையில் உள்ள சிட்டகாங் துறைமுகத்திற்கு வந்தது. 1971 வங்கதேச விடுதலைப் போருக்குப் பிறகு இரு நாடுகள் இடையிலான முதல் கப்பல் தொடர்பு இதுதான். இது பி.என்.பி அரசின்போதுகூட நடக்கவில்லை,” என்கிறார் அவர்.
மேற்கொண்டு பேசிய இந்திராணி பாக்சி, “முழு தேர்தலையும் பாருங்கள். முகமது யூனுஸ் ஆதரவுடன் செயல்படும் தேசியவாத கட்சி (தேசிய குடிமக்கள் கட்சி), இந்தியாவின் ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி என்ன சொல்கிறது என்பதைப் பாருங்கள். முஸ்தபிசுர் ரஹ்மான் ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்பட்டபோது, பி.என்.பி முதல் ஜமாத் வரை யாரும் எதுவும் கூறவில்லை. ஆனால் முகமது யூனுஸ் முற்றிலும் தீவிரமான கொள்கையைக் கையில் எடுத்தார்,” என்று கூறுகிறார்.
“டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற்று வந்த காரணத்தால், வங்கதேசம் அதில் விளையாட வேண்டாம் என்று முடிவு செய்தது. வங்கதேச ராணுவத்தின் உயரதிகாரிகள் பாகிஸ்தானுக்கு வருகை தரத் தொடங்கினர். இதன் பொருள் முகமது யூனுஸின் கொள்கை முற்றிலும் மாறுபட்டது என்பதாகும்.”
பட மூலாதாரம், @ihcdhaka
ஆனால், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வு மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் மகேந்திர பி லாமா, இந்தியா ஒரு பெரிய அண்டை நாடாக இருப்பதால், பெருந்தன்மையான தன்மையை வெளிப்படுத்தி இதைக் கையாள முயன்றிருக்க வேண்டும் என்கிறார் அவர்.
“கடந்த 18 மாதங்களில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அரசாங்க மட்டத்தில் தொடர்புகள் முறிந்துள்ளது மட்டுமின்றி, சிவில் சமூக ஈடுபாடும் பலவீனமடைந்துள்ளது. மறுபுறம், சீனாவும் பாகிஸ்தானும், அரசாங்க மற்றும் சிவில் சமூக மட்டங்களில், வங்கதேசத்துடனான தங்கள் ஈடுபாட்டை வலுப்படுத்தியுள்ளன” என்கிறார் பேராசிரியர் லாமா.
“வங்கதேசம் நமக்கு மிகவும் முக்கியமானது. சிலிகுரியில் இருந்து மட்டும் கிழக்கு நோக்கிய கொள்கையைப் பின்பற்ற முடியாது. பிரிக்கப்படாத இந்தியா வழியாக வங்கதேசம் மட்டுமே ஒரு வழியை வழங்க முடியும். இந்தியா சில தியாகங்களைச் செய்ய வேண்டும்; வங்கதேசம் நம்மைவிட 23 மடங்கு சிறியது,” என்றும் லாமா குறிப்பிட்டார்.
முகமது யூனுஸ் சிறுபான்மையினரைப் பாதுகாக்கவில்லை எனவும் அவரது ஆட்சியின் கீழ் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன எனவும் இந்தியா நீண்ட காலமாகப் புகார் கூறி வருகிறது. ஆனால், பேராசிரியர் லாமா இந்தப் புகாரை நியாயமானதாகக் கருதவில்லை.
வங்கதேசத்தில் இந்தியாவின் கொள்கை
“வங்கதேசத்தில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை என்று எந்தத் தார்மீக அடிப்படையில் சொல்லப்படுகிறது? இந்தியாவில் சிறுபான்மையினர் தாக்கப்படுவது இல்லையா? ஒரு தாராளவாத, மதச்சார்பற்ற ஜனநாயகமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும்போதுதான், மற்றவர்களுக்குப் போதிப்பதற்கான தார்மீக தைரியம் வரும். வங்கதேசத்தில் மதச்சார்பற்ற அரசியலை எதிர்பார்ப்பதும், இந்தியாவில் இந்துத்துவா அரசியலை நடைமுறைப்படுத்துவதும் இரட்டை நிலைப்பாடு,” என்கிறார் பேராசிரியர் லாமா.
இந்தியாவின் இத்தகைய எதிர்பார்ப்புகளில் நிறைய ‘பாசாங்குத்தனம்’ இருந்ததாக இந்திராணி பாகிசியும் நம்புகிறார்.
இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் மதத்தின் அடிப்படையில் யாருக்கும் எதிராகப் பாகுபாடு காட்டப்படாமல் இருந்தால் மட்டுமே பி.என்.பி இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்கும் என்று அவர் கூறுகிறார்.

“வங்கதேசத்தில் உள்ள எந்த அரசாங்கமும் மக்கள் ஆணையைப் புறக்கணிக்காது. உதாரணமாக, ஜூலை 2024இல் முகமது யூனுஸை கொண்டு வந்த இளைஞர்கள் ஷேக் ஹசீனாவை எதிர்த்தனர். எனவே இடைக்கால அரசாங்கம் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோராது என்று நாம் எதிர்பார்க்க முடியாது. முகமது யூனுஸ் தனக்கு ஆதரவளித்த மக்கள் கோரியதைச் சரியாகச் செய்தார். இதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள இந்தியா ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்க வேண்டும்,” என்கிறார் அவர்.
இருப்பினும், வங்கதேசம் தொடர்பான இந்தியாவின் கொள்கையில் தொடர்ச்சியைக் காண்பதாக இந்திராணி பாக்சி கூறுகிறார். “வங்கதேசத்தில் ஆளுமைகளை மையமாகக் கொண்ட கொள்கைகளை இந்தியா பின்பற்றியதைப் பார்க்க முடிகிறது. ஆனால், எதிர்க்கட்சிகளுடன் அதிகம் ஈடுபாடு கொள்வதை இந்தியா தவிர்க்க வேண்டுமென்று ஷேக் ஹசீனா கோரினார்.”
“இது சிரமங்களை உருவாக்குகிறது. இருப்பினும் ஷேக் ஹசீனா, வங்கதேச தேசியவாத கட்சி தேர்தலில் போட்டியிடுவதைத் தடுத்தபோது இந்தியா எதுவும் கூறவில்லை. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அவாமி லீக் தடை செய்யப்பட்டபோது இந்தியா எதுவும் கூறவில்லை.”
கடந்த ஆண்டு, முகமது யூனுஸ் மார்ச் 26 முதல் 29 வரை சீனாவுக்கு பயணம் செய்தார். இந்தப் பயணம் இந்தியாவிலும் வித்தியாசமாகப் பார்க்கப்பட்டது.
ஆனால் வங்கதேச இடைக்கால அரசின் ஊடக செயலாளர் ஷஃபிகுல் ஆலம், முகமது யூனுஸ் முதலில் இந்தியாவுக்கு செல்ல விரும்புவதாகவும், ஆனால் புது டெல்லியில் இருந்து எந்தப் பதிலும் இல்லை எனவும் அப்போது கூறியிருந்தார்.
முகமது யூனுஸின் கோரிக்கைகளை இந்தியா புறக்கணித்ததா? இந்தக் கேள்விக்கு இந்திராணி பாகிஸ் பதிலளித்தபோது, “பேராசிரியர் யூனுஸ் இந்தியாவுக்கு செல்ல ஒரு திட்டத்தை அனுப்பியிருக்கலாம். ஆனால் அதற்குள் விஷயங்கள் கணிசமாக மோசமடைந்து இருந்தன. முகமது யூனுஸின் அரசாங்கத்திடம் இருந்து பல ஆக்ரோஷமான அறிக்கைகள் வெளிவந்தன. இது இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்தது,” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



