Home தேசிய national tamil ‘மடை திறந்து தாவும் நதியலை நான்’ – இளையராஜாவுக்கு தடை விதிக்கப்பட்ட பாடல்களில் 15 பிரபல...

‘மடை திறந்து தாவும் நதியலை நான்’ – இளையராஜாவுக்கு தடை விதிக்கப்பட்ட பாடல்களில் 15 பிரபல பாடல்கள் எவை?

17
0

SOURCE :- BBC NEWS

இளையராஜா

பட மூலாதாரம், X/ilaiyaraaja

‘சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான ஒலிப்பதிவுகள் மற்றும் இசை படைப்புகளை (musical works) பயன்படுத்தவோ, உரிமை கோரவோ கூடாது’ என இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிப்ரவரி 13-ஆம் தேதியன்று டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

‘இளையராஜாவின் இசையில் வெளியான 134 படங்களுக்கு இது பொருந்தும்’ எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவில் பட்டியலிடப்பட்டுள்ள படங்கள் என்னென்ன? அதில் பிரபல 15 பாடல்கள் எவை?

சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.

மனுவில், ‘தங்கள் நிறுவனம் 1976 முதல் 2001-ஆம் ஆண்டு வரை படத்தின் தயாரிப்பாளர்களுடன் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது’ எனக் கூறியுள்ளது.

இந்தப் படங்களின் ஒலிப்பதிவுகள், இசை படைப்புகளின் உரிமை தங்களிடம் உள்ளதாகவும் தங்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் சரிகம இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்களின் பதிப்புரிமை பெற்ற படைப்புகளை பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளதாக மனுவில் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றம்

‘தயாரிப்பாளரே முதல் உரிமையாளர்’

தங்களிடம் இளையராஜா இசையமைத்த 134 படங்களின் பாடல்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் உள்ளன என மனுவில் கூறியுள்ள சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம், ‘கடந்த பிப்ரவரி மாதம் அமேசான் மியூசிக், ஐ டியூன்ஸ் மற்றும் ஜியோ சாவ்ன் ஆகிய தளங்களுக்கு பாடல் உரிமையை இளையராஜா வழங்கியுள்ளார்’ என்கிறது.

‘1957-ஆம் ஆண்டு காப்புரிமைச் சட்டத்தின்படி படத்துக்காக உருவாக்கப்படும் இசைக்கு அதன் தயாரிப்பாளரே முதல் உரிமையாளர்’ என சரிகம இந்தியா லிமிடெட் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

அந்தவகையில், பதிப்புரிமை பெற்ற படைப்புகளை மாற்றியமைக்கவும் மீண்டும் உருவாக்கவும் பொதுவில் அதனைப் பயன்படுத்தவும் தங்களுக்கே பிரத்யேக உரிமை உள்ளதாகவும் மனுவில் அந்நிறுவனம் கூறியது.

பதிப்புரிமை பெற்றுள்ள பாடல்களின் மீது சட்ட மீறல்களில் இளையராஜா தரப்பு ஈடுபட்டுள்ளதாகக் கூறி அதுதொடர்பான சில ஸ்க்ரீன் ஷாட்டுகளை சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் இணைத்துள்ளது.

அதில், ‘கவிக்குயில்’ படத்தில் இடம்பெற்ற ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ பாடல், பாரதி படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள், ‘ஆகாய கங்கை’ ஆகிய பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

இளையராஜா

பட மூலாதாரம், Facebook/Ilaiyaraaja

‘ஈடுசெய்ய இயலாத இழப்பு’ – நீதிபதி

வழக்கின் மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி துஷார் ராவ் கெடேலா, ‘பட்டியலிடப்பட்டுள்ள திரைப்படங்களின் ஒரு பகுதியாக இருக்கும் ஒலிப்பதிவுகள், இசை ஆகியவற்றை பயன்படுத்துதல் அல்லது உரிமை கோரல்களை மேற்கொள்ளக் கூடாது’ எனக் கூறி, இளையராஜா மற்றும் அவர் சார்ந்த நபர்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

‘அவ்வாறு தடை விதிக்கப்படாமல் இருந்தால் சரிகம நிறுவனத்துக்கு ஈடுசெய்ய இயலாத இழப்பு ஏற்படும்’ எனவும் உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வழக்கில் இளையராஜா தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் நான்கு வாரங்களுக்குள் பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு கூறி வழக்கை ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

இதுதொடர்பாக, இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரையிடம் பிபிசி தமிழ் பேசியது.

“தீர்ப்பில் கூறப்பட்டுள்ள விவரங்களைப் பார்த்த பிறகு பேசுகிறேன்” என்று அவர் பதில் அளித்தார்.

சரவணன் அண்ணாதுரை

நீதிமன்ற உத்தரவில், இளையராஜாவின் இசையில் 1976-ஆம் ஆண்டு வெளியான ‘பத்திரகாளி’ படம் முதல் 2001-ஆம் ஆண்டு வெளியான ‘உசிரே’ என்ற கன்னட படம் வரையில் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ படத்தின் கன்னட ரீமேக் ஆக 2001-ஆம் ஆண்டு ‘உசிரே’ படம் வெளியாகியிருந்தது.

தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இளையராஜா இசையமைத்துள்ள 134 படங்களின் பட்டியலை சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2000-ஆம் ஆண்டில் ஞானராஜசேகரன் இயக்கத்தில் வெளியான ‘பாரதி’ படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கும் அந்நிறுவனம் உரிமை கோரியுள்ளது.

நீதிமன்றத்தில் சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் பட்டியலிட்டுள்ள இளையராஜா இசையமைத்த பாடல்களில் 15 பிரபல பாடல்கள் எவை?

‘செந்தூரப்பூவே…செந்தூரப்பூவே…’

 'செந்தூரப்பூவே' பாடலை எஸ்.ஜானகி பாடியிருந்தார்

பட மூலாதாரம், Youtube/Pyramid Glitz Music

1977-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் ’16 வயதினிலே’ படம் வெளியானது. நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

படத்தில் இடம்பெற்ற பாடல்கள் தனிக்கவனம் பெற்றன. கங்கை அமரனின் வரிகளில் இடம்பெற்ற ‘செந்தூரப்பூவே’ பாடலை எஸ்.ஜானகி பாடியிருந்தார். ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக் குஞ்சு வந்ததென்ன’ என்ற பாடலை மலேசியா வாசுதேவனும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர்.

இதே படத்தில் இடம்பெற்ற ‘செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா…’ பாடலை மலேசியா வாசுதேவன், பி.சுசீலா ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர்.

‘என் கண்மணி உன் காதலி…’

1978-ஆம் ஆண்டு தேவராஜ் – மோகன் இயக்கத்தில் ‘சிட்டுக்குருவி’ படம் வெளியானது. சிவக்குமார், சுமித்ரா ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்தில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் – பி.சுசீலா பாடிய ‘என் கண்மணி உன் காதலி இளமாங்கனி… உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதே’ என்ற பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

பேருந்து பயணத்தில் காதலனும் காதலியும் பாடுவதுபோல இந்தப் பாடலின் காட்சியமைப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது. இதே படத்தில் ‘அடடடா மாமரக் கிளியே…உன்னை இன்னும் நான் மறக்கலியே’ என்ற பாடலும் ‘உன்ன நம்பி நெத்தியிலே… பொட்டு வச்சேன் மத்தியிலே’ ஆகிய பாடல்கள் ரசிகர்களை ஈர்த்தன.

‘கோவில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ…’

கோவில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ பாடலின் காட்சி

பட மூலாதாரம், Youtube/GLV

1978-ஆம் ஆண்டு ‘கிழக்கே போகும் ரயில்’ வெளியானது. ’16 வயதினிலே’ படத்துக்குப் பிறகு பாரதிராஜா இயக்கிய இந்தப் படத்தில் சுதாகர், ராதிகா ஆகியோர் நடித்திருந்தனர்.

படத்தில் கண்ணதாசனின் வரிகளில் இடம்பெற்ற ‘கோவில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ…’ பாடலை மலேசியா வாசுதேவனும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர்.

இதே படத்தில் கங்கை அமரன் எழுதிய ‘பூவரசம் பூ பூத்தாச்சு…’ பாடல், ஜெயச்சந்திரனின் குரலில் இடம்பெற்ற ‘மாஞ்சோலை கிளிதானா…மான்தானோ…வேப்பம்தோப்பு குயிலும் நீதானோ’ ஆகிய பாடல்களை ரசிகர்கள் கொண்டாடினர்.

‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…’

1978-ஆம் ஆண்டு மகேந்திரன் இயக்கிய ‘முள்ளும் மலரும்’ படம், எழுத்தாளர் உமா சந்திரன் எழுதிய நாவலின் கதையை மையமாக வைத்து உருவாகியிருந்தது.

படத்தில் கண்ணதாசனின் வரிகளில் உருவான ‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…’ பாடலை கே.ஜே.யேசுதாஸ் பாடியிருந்தார். இது ரசிகர்களின் விருப்பப் பாடலாக மாறியது.

அடுத்து, பஞ்சு அருணாச்சலத்தின் வரிகளில் இடம்பெற்ற ‘அடி பெண்ணே…பொன்னூஞ்சல் ஆடும் இளமை…வண்ணங்கள் தோன்றும் இயற்கை’ என்ற பாடலை ஜென்சி பாடியிருந்தார்.

இதே படத்தில் கங்கை அமரன் எழுதிய இரு பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. அவர் எழுதிய ‘நித்தம் நித்தம் நெல்லு சோறு… நெய் மணக்கும் கத்திரிக்காய்… நேத்து வச்சு மீன் குழம்பு என்னை இழுக்குதய்யா’ என்ற பாடலை வாணி ஜெயராம் பாடியிருந்தார்.

அடுத்து, ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்…’ பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எல்.ஆர்.அஞ்சலியும் இணைந்து பாடியிருந்தனர்.

கங்கை அமரன்

பட மூலாதாரம், x

‘ஆகாய கங்கை… பொன்தேன் மலர் சோலை’

1979-ஆம் ஆண்டு ஆர்.சி.சக்தி இயக்கத்தில் ‘தர்மயுத்தம்’ படம் வெளியானது. ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்திருந்த இந்தப் படத்தில் ‘ஆகாய கங்கை பொன்தேன் மலர் சோலை…’ என்ற பாடல் வரவேற்பைப் பெற்றது.

எம்.ஜி.வல்லபனின் வரிகளில் இடம்பெற்ற இந்தப் பாடலை மலேசியா வாசுதேவனும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர். இதே படத்தில் இடம்பெற்ற ‘ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு’ பாடலும் ரசிகர்களை ஈர்த்தது.

கண்ணதாசனின் வரிகளில் இடம்பெற்றிருந்த இந்தப் பாடலை மலேசியா வாசுதேவன் பாடியிருந்தார்.

‘ஆயிரம் மலர்களே… அமுத கீதம் பாடுங்கள்’

'ஆயிரம் மலர்களே பாடலின் காட்சி

பட மூலாதாரம், Youtube/pyramid music

1979-ஆம் ஆண்டு வெளிவந்த ‘நிறம் மாறாத பூக்கள்’ படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் சுதாகர், ராதிகா, விஜயன் ஆகியோர் நடித்திருந்தனர்.

படத்தில் ‘ஆயிரம் மலர்களே… மலருங்கள்… அமுதகீதம் பாடுங்கள்’ என்ற பாடலை ஜென்சி, எஸ்.பி.சைலஜா, மலேசியா வாசுதேவன் ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். பாடலை பஞ்சு அருணாச்சலம் எழுதியிருந்தார்.

‘மலர்களில் ஆடும் இளமை புதுமையே’

கமல்ஹாசன் ஸ்ரீதேவி நடிப்பில் 1979-ஆம் ஆண்டு ‘கல்யாணராமன்’ படம் வெளியானது. ஜி.என்.ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அதிக வரவேற்பைப் பெற்றன.

மலேசியா வாசுதேவன் பாடிய ‘ஆஹா வந்துருச்சு….காதல் வந்துருச்சு… ஆசையில் ஓடிவந்தேன்’ பாடல், ‘காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்…’ பாடலும் எஸ்.பி.சைலஜா பாடிய ‘மலர்களில் ஆடும் இளமை புதுமையே.. மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே…’ ஆகியவை கவனம் பெற்றன.

‘உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்சு கிளி..’

1979-ஆம் ஆண்டு வெளியான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் சிவகுமார், தீபா உன்னிமேரி உள்பட பலர் நடித்திருந்தனர்.

படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.பி.சைலஜாவும் இணைந்து பாடிய ‘உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்சு கிளி…’ பாடலும் ‘மாமன் ஒருநாள் மல்லிகைப் பூ கொடுத்தான்…’ என்ற பாடல்கள் ரசிகர்களை ஈர்த்தன.

‘சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்…’

1980-ஆம் ஆண்டு வெளியான ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தை எஸ்.பி.நிவாஸ் இயக்கியிருந்தார். படத்தில் பாரதிராஜா, சுதாகர், அருணா ஆகியோர் நடித்திருந்தனர்.

கங்கை அமரனின் வரிகளில் இடம்பெற்ற ‘சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்… இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்..’ பாடலை மலேசியா வாசுதேவனும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர்.

‘பொதுவாக என் மனசு தங்கம்…’


பொதுவாக என் மனசு தங்கம் பாடலின் காட்சி

பட மூலாதாரம், Youtube/AP international

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1980-ஆம் ஆண்டு ‘முரட்டுக்காளை’ படம் வெளியானது. ரஜினிகாந்த், ரதி அக்னிஹோத்ரி ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றளவும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

பஞ்சு அருணாச்சலத்தின் வரிகளில் இடம்பெற்ற ‘பொதுவாக என் மனசு தங்கம்… ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்…’ பாடலை மலேசியா வாசுதேவன் பாடியிருந்தார்.

‘எந்தப் பூவிலும் வாசம் உண்டு… எந்தப் பாட்டிலும் ராகம் உண்டு…’ என்ற பாடலையும் பஞ்சு அருணாச்சலம் எழுதியிருந்தார். இந்தப் பாடலுக்கு எஸ்.ஜானகியின் குரல் தனி அழகைக் கொடுத்தது.

‘மடை திறந்து தாவும் நதியலை நான்…’

பாரதிராஜா இயக்கத்தில் 1980-ஆம் ஆண்டு ‘நிழல்கள்’ படம் வெளியானது. இந்தப் படத்தில் சந்திரசேகர், ரோகிணி, ராஜசேகர் உள்பட பலர் நடித்திருந்தனர்.

படத்தில் வாலியின் வரிகளில் இடம்பெற்ற ‘மடை திறந்து தாவும் நதியலை நான்… மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்…’ பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருந்தார்.

கங்கை அமரனின் வரிகளில் இடம்பெற்ற ‘பூங்கதவே தாழ் திறவாய்…’ பாடலும் வைரமுத்து எழுதிய ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது… வான மகள் நாணுகிறாள்..’ ஆகிய பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

‘சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்…’

1981-ஆம் ஆண்டு ஜி.என்.ரங்கநாதன் இயக்கத்தில் ‘மீண்டும் கோகிலா ‘ படம் வெளியானது. கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஆகியோர் நடித்த இந்தப் படத்தில் ‘சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி…’ என்ற பாடலை கே.ஜே.யேசுதாசும் எஸ்.பி.சைலஜாவும் இணைந்து பாடியிருந்தனர்.

இதே படத்தில் இடம்பெற்ற ‘ராதா.. ராதா.. நீ எங்கே.. கண்ணன் எங்கே… நான் அங்கே’ என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரணியமும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர்.

‘ராமனின் மோகனம்… ஜானகி மந்திரம்…’

ராமனின் மோகனம்... ஜானகி மந்திரம்

பட மூலாதாரம், Youtube/ Bayshore Records

1981-ஆம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ‘நெற்றிக்கண்’ படம் வெளியானது. இந்தப் படத்தில் தந்தை – மகன் என இரு வேடங்களில் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.

படத்தில் கே.ஜே.யேசுதாஸ், ஜானகி ஆகியோர் இணைந்து பாடிய ‘ராமனின் மோகனம்… ஜானகி மந்திரம்… ராமாயணம்…பாராயணம்… காதல் மங்கலம்’ பாடலும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ‘தீராத விளையாட்டு பிள்ளை… இவன் சிங்கார மன்மதன் தான் சந்தேகம் இல்லை..’ பாடலும் வரவேற்பைப் பெற்றன.

இப்படத்தில் இடம்பெற்ற ‘மாப்பிள்ளைக்கு மாமன் மனசு…’ என்ற பாடலை மலேசியா வாசுதேவனும் பி.சுசீலாவும் இணைந்து பாடியிருந்தனர்.

‘அந்தி மழைபொழிகிறது…’

1981-ஆம் ஆண்டு சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் ‘ராஜ பார்வை’ படம் வெளியானது. இந்தப் படத்தில் கமல்ஹாசன், மாதவி ஆகியோர் நடித்திருந்தனர்.

படத்தில் வைரமுத்துவின் வரிகளில் இடம்பெற்ற ‘அந்தி மழைபொழிகிறது… ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது’ பாடல் அதிக கவனம் பெற்றது. இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி..’

பாக்கியராஜ் இயக்கத்தில் 1982-ஆம் ஆண்டு ‘தூறல் நின்னு போச்சு’ படம் வெளியானது. இந்தப் படத்தில் பாக்கியராஜ், சுலோசனா, நம்பியார் உள்பட பலர் நடித்திருந்தனர்.

படத்தில் கே.ஜே.யேசுதாஸ் பாடிய ‘ஏரிக்கரை பூங்காற்றே… நீ போற வழி தென்கிழக்கோ’ பாடலை சிதம்பரநாதன் எழுதியிருந்தார்.

இதே படத்தில் வைரமுத்துவின் வரிகளில் ‘தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ…’ பாடலும் முத்துலிங்கம் வரிகளில் ‘பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்’ பாடலும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU