SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், UGC
இலங்கையின் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் அடக்குமுறைச் சட்டமாகக் கருதப்படும் 1979-ஆம் ஆண்டின் 48-ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (பிடிஏ) முழுமையாக நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” (பிஎஸ்டிஏ) எனும் புதிய சட்ட மூலத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தற்போது தயார் செய்துள்ளது.
எனினும், இந்த புதிய வரைவு பழைய சட்டத்தை விடவும் அதிக அடக்குமுறைத் தன்மைகளைக் கொண்டிருப்பதாக சிவில் சமூக அமைப்புகளும் அரசியல் பிரதிநிதிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வாக்குறுதி மீறப்படுகிறதா?
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தனது தேர்தல் பரப்புரைகளின் போது ‘அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்போம்’ என உறுதியளித்திருந்தது.
இந்நிலையில், புதிய சட்ட மூலம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள ‘அனைவருக்கும் நீதி’ என்ற சிவில் சமூகக் கூட்டமைப்பு, அரசாங்கம் தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
பேராசிரியர் ஜயதேவ உயாங்கொட, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன உள்ளிட்ட மூத்த புத்திஜீவிகள் கையெழுத்திட்டுள்ள அந்த அறிக்கையில், “இப்புதிய சட்டம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்குப் பதிலாக ஒடுக்குமுறையையே சட்டப்பூர்வமாக்குகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அனைவருக்கும் நீதி’ அமைப்பு புதிய சட்டமூலத்தில் பிரதான சிக்கல்களாக சிலவற்றை சுட்டிக்காட்டியுள்ளது.
”பரந்த வரையறை: பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணம் மிகவும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது அரசாங்கத்திற்கு எதிரான அமைதியான போராட்டங்களைக் கூட ‘பயங்கரவாதம்’ என முத்திரை குத்த வழிவகுக்கும்.
கைது செய்யும் அதிகாரம்: பழைய பிடிஏ சட்டத்தில் கைது செய்ய உயர் அதிகாரிகள் அனுமதி தேவைப்பட்டது. ஆனால் புதிய சட்டத்தில் பொலிஸார் மட்டுமன்றி, ராணுவம் மற்றும் கடலோர பாதுகாப்புப் படையினருக்கும் கைது செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நிர்வாகத் தடுப்புக்காவல்: குற்றப்பத்திரிகை இன்றி ஒரு நபரை இரண்டு ஆண்டுகள் வரை தடுத்து வைக்க இது வழிசெய்கிறது
நிறைவேற்று அதிகார விரிவாக்கம்: ஜனாதிபதியினால் அமைப்புகளைத் தடை செய்யவும், அவசரகால சட்டத்தை அறிவிக்கவும், பாதுகாப்புச் செயலாளர் சில இடங்களை ‘தடைசெய்யப்பட்ட இடமாக’ அறிவிக்கவும் மேலுயர் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட 4 விஷயங்கள் புதிய சட்ட வரைவில் சிக்கல்களாக இருப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், UGC
ஐரோப்பிய ஒன்றியத்தின் கேள்வி
இந்நிலையில் இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு கொழும்பில், இலங்கை கூட்டு ஆணைக்குழுவுடன் நடத்திய சந்திப்பின் போது, அரசாங்கத்தின் இந்தத் திடீர் நிலைப்பாட்டு மாற்றம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளமையானது சர்வதேச ரீதியில் பேசுபொருளாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பதில் முகாமைத்துவப் பணிப்பாளர் பாவோலா பம்பலோனி, “பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (பிடிஏ) நீக்க வேண்டும் என முன்னர் உறுதியாக இருந்த தேசிய மக்கள் சக்தியினர், இப்போது ஏன் அதற்கு நேரெதிரான சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், “முதலில் எதிர்க்கட்சியில் இருந்தவர்கள், இப்போது அரசாங்கத்தில் இருக்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். ஆனால் இப்போதும் பாதுகாப்புத் தரப்பின் வசமே முழுமையான கட்டுப்பாடு இருக்கிறது என்பதையே இது வெளிப்படுத்துகிறது,” எனத் தெரிவித்துள்ளார்.
‘தந்திரோபாயமான ஏமாற்று வேலை’
புதிய சட்ட வரைவின் பின்னணியில் ஒரு அரசியல் தந்திரம் ஒளிந்திருப்பதாவும் எம்.ஏ. சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
“பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (பிடிஏ) விட மிக மோசமான ஒரு சட்டத்தை அரசாங்கம் முன்மொழியும். அதற்கு எதிராக மக்கள் போராடுவார்கள். பின்னர் அரசாங்கம் அந்த புதிய வரைவை வாபஸ் பெறும். ஆனால், உண்மையில் பழைய பிடிஏ சட்டம் தொடர்ந்து அமலிலேயே இருக்கும். இதுவே இந்த புதிய வரைவு முன்மொழியப்பட்டதன் உண்மையான உள்நோக்கமாகும்,” என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பல தசாப்தங்களாக அமலில் இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் (பிடிஏ) பதிலாக, “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” (பிஎஸ்டிஏ) என்ற புதிய சட்டமூலத்தை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. எனினும், இது ‘பழைய வீணையில் புதிய ராகம்’ என சிவில் சமூக அமைப்புகளும் அரசியல் பிரதிநிதிகளும் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” குறித்து தமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த சிவில் மற்றும் அரசியல் பிரதிநிதிகள், அரசாங்கம் மக்கள் கருத்துக்கு கொடுத்துள்ள காலக்கெடுவான பிப்ரவரி 28ஆம் திகதி வரையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதற்கும், புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை வாபஸ் பெறுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் இணைந்து நாடளாவிய ரீதியில் பல்வேறு கலந்துரையாடல்களையும், விழிப்புணர்வூட்டல் கூட்டங்களையும், எதிர்ப்புப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
‘செயற்பட முடியாமல் இருப்பது கவலைக்குரியது’
பட மூலாதாரம், Facebook/shanakiyan rasamanickam
இந்நிலையில், கொழும்பில் நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டத்தின் போது கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சாணக்கியன், “2023-ஆம் ஆண்டில் இதேபோன்ற ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டபோது, தற்போது அமைச்சர்களாக இருக்கும் வசந்த சமரசிங்க, நளிந்த ஜயதிஸ்ஸ, சுனில் ஹந்துனெத்தி ஆகியோர் அதற்கு எதிராகக் கையெழுத்திட்டனர். ஆனால் இன்று அதே நபர்கள் அமைச்சரவையில் இருக்கும்போது, மிக மோசமான சட்ட வரைவு கொண்டுவரப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், “நீதித்துறை அனுபவம் வாய்ந்த அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோர் இந்த விடயத்தில் மௌனமாக இருப்பது அல்லது செயற்பட முடியாமல் இருப்பது கவலைக்குரியது.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘நாடு ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக மாறும்’
சிவில் சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் இந்தப் புதிய சட்ட மூலத்தை ‘அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு கவசம்’ என விமர்சித்தார்.
வட கிழக்கில் மாத்திரமன்றி தற்போது தெற்கிலும் எழுந்துள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து அரசாங்கத்தைக் காப்பாற்றவே இந்தச் சட்டம் பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“இச்சட்டத்தின் ஊடாக மதவழிபாட்டுத் தலங்கள், போராட்டங்கள் மற்றும் கருத்து வெளிப்பாடுகள் என அனைத்தும் பயங்கரவாதமாகச் சித்திரிக்கப்படும். இளைஞர்கள், அரசியல் ஆர்வலர்கள் என யாருக்குமே எதிர்காலம் இல்லாமல் போய்விடும். இறுதியில் நாடு ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக மாறும்,” என அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், UGC
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான அம்பிகா சற்குணநாதன், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளைச் சந்தித்து இப்புதிய சட்ட வரைவின் உள்ளடக்கம் குறித்து பேசியுள்ளார்.
போதைப்பொருள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் புதிய சட்டமூலங்கள் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கலாம் என்று அவர் கூறுகிறார்.
“சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை அவற்றின் கொள்ளளவை விடப் பன்மடங்கு உயர்வாகக் காணப்படுவதால் கைதிகள் பெரும் பாதிப்புகளைச் சந்திக்கின்றனர். மரணதண்டனை வழங்கலை முடிவுக்குக் கொண்டுவருவதாக அரசாங்கங்கள் அளித்த வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை,” என்றும் குறிப்பிட்டார் அவர்.

சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராகப் போராடி வரும் குமுதினி சாமுவேல், தனது 70 வயதிலும் அதே போராட்டக்களத்தில் நிற்க வேண்டி இருப்பதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
1979 இல் ‘தற்காலிக ஏற்பாடாக’ கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம், எவ்வாறு வலிந்து காணாமலாக்கப்படுதலுக்கும், குடும்பங்களின் சிதைவுக்கும் காரணமாக அமைந்தது என்பது அனைவரும் அறிந்ததே என்கிறார் அவர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தம்
கொழும்பில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 27-வது கூட்டத்தில், இலங்கைக்கான வரிச்சலுகை ஒப்பந்தங்கள் குறித்து தீவிரமாக ஆராயப்பட்டது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பதில் முகாமைத்துவப்பணிப்பாளர் பாவோலா பம்பலோனி ஆகியோரின் இணைத்தலைமையில் கடந்த வியாழக்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றது.
அதில் ஜிஎஸ்பி+ வரிச்சலுகையின் கீழ் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை உரிய காலப்பகுதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என இலங்கையிடம் வலியுறுத்தப்பட்டது.
முக்கியமாக, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
‘பொதுமக்கள் கருத்துக்களுக்கு மதிப்பளிப்போம்’
பட மூலாதாரம், Facebook/Harshana Nanayakkara
இந்தப் பின்னணியில், புதிய சட்டமூலம் குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் தொடர்பாக பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, புதிய சட்டம் தொடர்பான ஆலோசனைகளை ஆராய அரசாங்கம் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
“இந்த விவகாரத்தில் முதலில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அதற்காகவே இம்மாதம் 28ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் ஆலோசனைகளை சாதகமாகப் பரிசீலித்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். மிகவும் வலுவான மற்றும் பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையிலான சட்டத்தையே அரசாங்கம் நடைமுறைப்படுத்தும்,” என அவர் தெரிவித்தார்.
மேலும், இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சர்வதேச தரப்புக்கும் அரசாங்கம் உரிய விளக்கங்களை அளித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தரவுகள் கூறுவது என்ன?
நீண்டகாலத் தடுப்புக்காவல்: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (HRCSL) தரவுகளின்படி, 2018ஆம் ஆண்டு நிலவரப்படி, சுமார் 29 கைதிகள் 5 முதல் 10 ஆண்டுகள் வரையும், 11 கைதிகள் 10 முதல் 15 ஆண்டுகள் வரையும் எந்தவித விசாரணையுமின்றி தடுப்புக்காவலில் வைக்கப்படிருந்தனர்.
சித்திரவதை புகார்கள்: ஐநா மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கைகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றன.
அண்மைக்கால கைதுகள்: 2024ஆம் ஆண்டு முழுவதும் 38 கைதுகள் இடம்பெற்ற நிலையில், 2025ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் 49 கைதுகள் இந்தச் சட்டத்தின் கீழ் பதிவாகியுள்ளதாக ஐநா மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது இந்தச் சட்டத்தின் பயன்பாடு குறையவில்லை என்பதைக் காட்டுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



