SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
“எனக்குப் பெரிய மார்பகங்கள் இருப்பதைக் காட்டிக்கொள்ளாமல் இருக்க, என் தோள்களைச் சற்று குனிந்தபடியே வைத்துக்கொண்டு நடப்பேன். நான் மிகவும் வெட்கப்பட்டேன் என்பதால் அது எனக்கு நினைவில் இருக்கிறது.”
கடந்த 2010ஆம் ஆண்டில், அர்ஜென்டினாவை சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியரான ராக்கேல், மார்பகக் குறைப்பு அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவெடுத்தார்.
தற்போது 52 வயதாகும் அவர், இந்த அறுவை சிகிச்சை தனக்கு முன்பில்லாத ஒரு “சுதந்திர உணர்வை” ஏற்படுத்தியதாகக் கூறுகிறார்.
உலகின் பல பகுதிகளில் பெரிய மார்பகங்கள் இருப்பது கவர்ச்சிகரமான விஷயமாக கருதப்பட்டாலும், உண்மை கடினமானதாக உள்ளது. பெண்களின் ஆரோக்கியத்திலும் அன்றாட வாழ்க்கையிலும் அது குறிப்பிடத்தக்க பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
நாள்பட்ட முதுகு வலி, தலை வலி, மோசமான தோரணை, உணர்வின்மை, தூக்க கலக்கம் ஆகியவற்றுடன் மன ஆரோக்கியத்தில் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு பெரிய மார்பகங்கள் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சர்வதேச அழகியல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் சமீபத்திய தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் உலகளவில் 6,52,676 மார்பகக் குறைப்பு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக பிரேசிலில் 1,15,647 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, அமெரிக்கா (67,478), பிரான்ஸ் (38,780), ஜெர்மனி (32,068), துருக்கி (25,334), இந்தியா (22,400) ஆகிய நாடுகள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
தனது மார்பகம் பெரிதாக இருந்ததன் காரணமாகத் தான் வளரிளம் பருவத்தில் இருந்தே நாள்பட்ட முதுகு வலியை அனுபவித்ததாக ராக்கேல் கூறுகிறார்.
ஆனால், அர்ஜென்டினாவில் பெரிய மார்பகங்கள் இருப்பது பெரும்பாலும் ஓர் ஆசீர்வாதமாகக் கருதப்பட்டதாகக் குறிப்பிடுகிறார் அவர்.
பட மூலாதாரம், Raquel
“பெரும்பான்மை மக்கள், குறிப்பாக பெண்கள், நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என்கிறார்கள். நான் அதிர்ஷ்டசாலி இல்லை. நான் நிறைய சிரமப்பட்டேன். நான் ஒரு டீனேஜராக இருந்த போதும், ஒரு பெண்ணாகவும், ஒரு தாயாகவும் சிரமப்பட்டேன்,” என்று அவர் விளக்கினார்.
உண்மையில், தனது உடலை மறைக்க முயலும் விதம் காரணமாகத் தான் இன்னும் முதுகு வலியால் அவதிப்படுவதாக அவர் தெரிவித்தார்.
சுறுசுறுப்பானவரான ராக்கேல், யோகா, ஜிம்முக்கு செல்வது ஆகியவற்றை ரசித்ததாகக் கூறுகிறார். இறுதியில் அவரது பெரிய மார்பகங்களால் ஏற்படும் பதற்றம் அவரை உடற்பயிற்சி செய்வதில் இருந்து தடுத்தது.
அழகியல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான பிரிட்டிஷ் அமைப்பின் தலைவரான மருத்துவர் நோரா நியூஜென்ட் இதுகுறித்துப் பேசியபோது, “மார்பக குறைப்பு அறுவை சிகிச்சை செய்ய விரும்பும் நோயாளிகளிடம் இருந்து, இயல்பான இயக்கத்தில் பாதிப்பு, உடற்பயிற்சி செய்வதில் சிரமங்களை எதிர்கொள்வது போன்ற சில பொதுவான புகார்களைக் கேட்பதாக” கூறினார்.
“ஒருவரது இயல்பான செயல்பாட்டுக் கண்ணோட்டத்தில் பார்க்கையில், பெரிய மார்பகங்கள் கனமாக இருக்கும். எனவே, அவை உங்களை முன்னோக்கி இழுத்து, முதுகு மற்றும் கழுத்தில் நீடித்த அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன,” என்று அவர் விளக்கினார்.
“இது உடற்பயிற்சி செய்வதை மிகவும் சங்கடப்படுத்துகிறது. அதோடு, நன்கு பொருந்தக்கூடிய, தங்களுக்கு வசதியான உள்ளாடைகளைக் கண்டுபிடிப்பதை மிகவும் கடினமாக்குகிறது.”
ராக்கேல் தனது மார்பகங்களைத் தாங்கிக்கொள்ள “இரண்டு அல்லது மூன்று” உள்ளாடைகளை அணிய வேண்டியிருந்தது என்றார். தனது அளவுக்குப் பொருந்தக்கூடிய உள்ளாடையைக் கண்டுபிடிப்பது கூடுதல் நிதிச் சுமையை உண்டாக்கியதாகவும் குறிப்பிட்டார்.
“அர்ஜென்டினாவில் பெரிய மார்பகங்களுக்கான உள்ளாடைகள் மிகவும் விலை உயர்ந்தவை” என்று அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Raquel
‘சுதந்திரமாக உணர்ந்தேன்’
பிரிட்டனில், தனது பெரும்பாலான நோயாளிகளின் ஒவ்வொரு மார்பகத்தில் இருந்தும் 500 கிராம் முதல் 800 கிராம் வரை அகற்றப்பட்டதாக நியூஜென்ட் கூறுகிறார். அதேவேளையில், அதைவிட அதிக அளவுக்கு அகற்றப்படுவதையும் தான் பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
“சில நேரங்களில் அது உடல் எடையில் பெரிய அளவாகத் தெரியாது. ஆனால் உடலின் ஒரு சிறிய பகுதியைப் பொருத்தவரை இது பெரிய அளவு” என்று அவர் விளக்குகிறார்.
ராக்கேலின் விஷயத்தில், மருத்துவர்கள் அவரது மார்பகங்களில் இருந்து மொத்தம் 2.5 கிலோவை அகற்றினார்கள்.
“அறுவை சிகிச்சைக்குப் பிறகு, தரையில் இருந்து எதையாவது எடுக்க வேண்டியிருந்தால் ‘ஆஹா வேறொரு உடல் போல் இருக்கிறது’ என்று நான் உணர்ந்தது எனக்கு நினைவிருக்கிறது. நான் மிகவும் சுதந்திரமாக உணர்ந்தேன்.”
பொருத்தமான உள்ளாடை அவசியம்
பேராசிரியர் ஜோனா வேக்ஃபீல்-ஸ்கர் தனது நாள்பட்ட மார்பக வலியைப் பற்றி ஆலோசிக்கத் தனது மருத்துவரிடம் சென்றபோது, அவருக்குத் தேவையானது நன்கு பொருந்தக்கூடிய உள்ளாடைதான் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.
பயோமெக்கானிக்ஸில் நிபுணராக இருக்கும் அவர், ஒரு நல்ல உள்ளாடையை உருவாக்குவது எது என்பதை ஆராய முடிவு செய்தார்.
“உண்மையில் நமக்கு ஏன் உள்ளாடை தேவை, அதன் நன்மைகள் என்ன, அதன் பணிகள் எப்படியானவையாக இருக்க வேண்டும் என்பன பற்றி நமக்கு மிகக் குறைவாகவே தெரியும் என்பதை நான் உணர்ந்தேன்,” என்று வேக்ஃபீல்ட்-ஸ்கர் கூறுகிறார்.
“மாறாக, மார்பக உள்ளாடை என்பது செயல்பாட்டுக்குரிய, ஒரு நோக்கத்திற்கு உதவக்கூடிய, சுகாதார நன்மைகளைக் கொண்ட ஒன்று என்பதைவிட, அது ஒரு வகையான ஃபேஷன் பொருளாகவே கருதப்பட்டது. அதனால் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன்.”
பட மூலாதாரம், UEFA/UEFA via Getty Images
இது 2005ஆம் ஆண்டு பிரிட்டனின் போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தில் மார்பக ஆரோக்கியம் குறித்த ஆய்வுக் குழுவை அமைக்க அவரைத் தூண்டியது.
பொருத்தமற்ற உள்ளாடையை அணிவதால் ஏற்படும் நான்கு முக்கியமான எதிர்மறை விளைவுகளை அவரது குழு அடையாளம் கண்டது. அவை,
- வலி
- தோல் நீட்சி மற்றும் திசு சேதம்
- சுவாசிக்கும் விதத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் இதயத் துடிப்புகளுக்கு இடையிலான நேர நீளம்
- உடலின் இயல்பான செயல்பாடுகளைத் தடை செய்வது
“மார்பகங்கள் கனமாக இருந்தால், அவை மேலும் கீழும் நகர்ந்தால், அவை ஒரு நபரின் சுவாசிக்கும் விதத்தைப் பாதிக்கலாம். அவை உடல் அசைவுகளையும் தரையில் எவ்வளவு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்பதையும் மாற்றலாம். இது ஒட்டுமொத்த உடலின் செயல்பாட்டு விதத்தையும் பாதிக்கக்கூடும்.”
பல வருட ஆய்வு மற்றும் பரிசோதனைகள் மூலம், அனைத்து வகையான உடற்பயிற்சிகளிலும் மார்பகங்கள் எட்டு வடிவங்களில் நகர்வதாக ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளது.
மார்பக வலியைக் குறைப்பதற்கான திறவுகோல், அவை எவ்வளவு நகர்கின்றன என்பதைவிட, அவற்றின் இயக்கத்தை மெதுவாக்குவதிலேயே இருப்பதாக நிபுணர்கள் நிறுவினர்.
பட மூலாதாரம், Getty Images
இந்த ஆய்வுக்குழு, இப்போது பிரிட்டனின் பெண்கள் கால்பந்து அணியான லயனஸ் அணி வீராங்கனைகளுக்கு சிறந்த உள்ளாடையை உருவாக்கியுள்ளது.
“கடந்த ஐந்து ஆண்டுகளில், கால்பந்து கூட்டமைப்பு, வேர்ல்ட் ரக்பி போன்ற நிறுவனங்கள், தடகள வீராங்கனைகளின் சுகாதார முயற்சிகளுக்கு நிதியளிக்கத் தங்கள் பணத்தை முதலீடு செய்வதை நாங்கள் பார்க்கிறோம்” என்று வேக்ஃபீல்ட்-ஸ்கர் கூறுகிறார்.
“இது ஒப்பீட்டளவில் புதிது. ஆனால், அந்த மாற்றத்தைக் காண்கிறோம் என்பது நல்ல விஷயம்.”
‘நன்றாக வாழவே விரும்புகிறார்கள்’
பெரிய மார்பகங்களின் சுமையை சமூகம் பார்க்கும் விதத்தையும் அதைப் புரிந்துகொள்ளும் தன்மையையும் ராக்கேல் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
தான் மார்பகக் குறைப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்டது குறித்துத் தனது சகாக்கள் எதிர்மறையாகப் பேசியதாக அவர் கூறுகிறார். அதோடு, இதற்கான அவரது உந்துதல் குறித்து ஒரு பொதுவான தவறான கருத்தும் நிலவியது.
“பெரும்பான்மை மக்கள், அதை ஒரு உடல்நலப் பிரச்னையாக இல்லாமல், ஓர் அழகியல் விஷயமாகக் கருதுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்கிறார் அவர்.

“நான் அறுவை சிகிச்சை செய்தபோது, ஒரு பெண் என்னிடம், ‘இப்போது நீங்கள் சென்று உங்கள் வயிற்றுப் பகுதியையும் அகற்ற வேண்டும்’ என்று கூறியது எனக்கு நினைவிருக்கிறது.”
இதுபோன்ற கருத்துகளை எதிர்கொண்ட போதிலும், அறுவை சிகிச்சை செய்துகொண்டது குறித்துத் தனக்கு எவ்வித வருத்தமும் இல்லை என்கிறார் ராக்கேல்.
“நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இப்போது மாதவிடாய் நின்றுவிட்டதால், பெரிய மார்பகங்களுடன் எப்படி வாழ முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. அந்த உடலைச் சமாளிக்க முயல்வதை என்னால் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியவில்லை.”
மார்பகக் குறைப்பு அறுவை சிகிச்சையை நாடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சுய பராமரிப்பில் அதிகரிக்கும் ஆர்வத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கக்கூடும் என்கிறார் நியூஜென்ட்
“இந்தத் தேடல் முழுமையை நோக்கமாகக் கொண்டது இல்லை. இது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான தேடல்,” என்று அவர் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



