Home தேசிய national tamil வங்கதேசத்தில் புதிய அரசு அமைக்கவுள்ள பிஎன்பி முன்னுள்ள மிகப்பெரிய சவால்

வங்கதேசத்தில் புதிய அரசு அமைக்கவுள்ள பிஎன்பி முன்னுள்ள மிகப்பெரிய சவால்

9
0

SOURCE :- BBC NEWS

வங்கதேசத்தின் 13-வது நாடாளுமன்றத் தேர்தல் அந்நாட்டின் அரசியலில் ஒரு புதிய யுகத்தின் தொடக்கத்தைக் குறித்தது.

பட மூலாதாரம், AFP via Getty Images

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

வங்கதேசத்தின் 13-வது நாடாளுமன்றத் தேர்தல் அந்நாட்டின் அரசியலில் ஒரு புதிய யுகத்தின் தொடக்கத்தைக் குறித்துள்ளது.

இதில் வங்கதேச தேசியவாத கட்சி (பி.என்.பி) அமோக வெற்றி பெற்றதுடன், ஜமாத்-இ-இஸ்லாமி முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

மொத்தமுள்ள 300 இடங்களில், பி.என்.பி மட்டும் 209 இடங்களை வென்றது, அதன் கூட்டணிக் கட்சிகள் மூன்று இடங்களை வென்றன. ஜமாத் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 77 இடங்களைக் கைப்பற்றின.

அதே சமயம், 2024-ஆம் ஆண்டில் மாணவர் போராட்டங்களிலிருந்து உருவான தேசிய குடிமக்கள் கட்சி (என்.சி.பி ) ஆறு இடங்களைப் பெற்றுள்ளது.

பி.என்.பியின் இந்த மகத்தான வெற்றியை வங்கதேச ஊடகங்கள் “சூப்பர் மெஜாரிட்டி”(மிகப் பெரும்பான்மை) என்று விவரிக்கின்றன. பி.என்.பி தலைவர் தாரிக் ரஹ்மான் நாட்டின் அடுத்த பிரதமராக இருப்பார் என்பது இப்போது உறுதியாகக் கருதப்படுகிறது.

தாரிக் ரஹ்மானின் தேர்தல் வெற்றி வங்கதேச ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக பிளவுபட்ட நிலையில் உள்ள நாட்டை மீண்டும் சரியான பாதையில் கொண்டு வருவதற்கான ஒரு வாய்ப்பாக இது பி.என்.பி கட்சிக்கு அமையக்கூடும் என்றும், அதே நேரத்தில் ஒரு பெரிய சவாலாகவும் இது இருக்கும் என்றும் சிலர் கூறுகின்றனர்.

ஜமாத்-இ-இஸ்லாமி, பி.என்.பியை விட வெகுவாகப் பின்தங்கி, இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தாலும், அது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்களில் விவாதங்கள் நடைபெறுகின்றன.

இதுதவிர, பி.என்.பி அரசாங்கம் அமைந்த பிறகு நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் என்ன மாற்றங்கள் வரக்கூடும் என்பது குறித்தும் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

கட்சியின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்துவதில் தாரிக் ரஹ்மான் வெற்றி பெற்றார்

பட மூலாதாரம், AFP via Getty Images

தாரிக் ரஹ்மானின் வெற்றிக்கான காரணம்

வங்கதேசத்தின் முன்னணி ஆங்கில செய்தித்தாளான தி டெய்லி ஸ்டார் , பொதுத் தேர்தலில் பி.என்.பி பெற்ற மகத்தான வெற்றியை அந்நாட்டு அரசியலில் ஒரு ‘திருப்புமுனை’ என்று வர்ணித்துள்ளது.

“பொதுமக்களுக்குப் பொறுப்புக் கூறக் கூடிய, விமர்சகர்கள் உட்பட அனைத்து குடிமக்களிடமும் உணர்வுப்பூர்வமாக அணுகும் அரசை உருவாக்குவேன் என்ற தனது உறுதிப்பாட்டின் மூலம் தாரிக் ரஹ்மான் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். லண்டனில் சுமார் இரண்டு தசாப்தங்கள் நாடு கடத்தப்பட்ட நிலையில் இருந்தபோதிலும், தனது தாயும் முன்னாள் பிரதமருமான காலிதா ஜியா சிறை சென்ற பின்னரும் கட்சியை ஒருமுகப்படுத்தி வைத்ததில் அவர் உறுதியான நிலைப்பாட்டைக் காட்டினார்”என்று அந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

“ஷேக் ஹசீனா தலைமையிலான அப்போதைய அவாமி லீக் அரசின் அழுத்தத்திற்கு மத்தியில், இளம் தலைவர்களை ஊக்குவிப்பதன் மூலமும், அடிமட்ட கட்டமைப்பை மறுசீரமைப்பதன் மூலமும், தொழிலாளர்களின் மன உறுதியைப் பேணுவதன் மூலமும் அவர் பி.என்.பியை உற்சாகப்படுத்தினார்.”

“இந்தத் தேர்தலில் கிட்டத்தட்ட 60 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பது ஜனநாயக ரீதியான அங்கீகாரத்தைப் பிரதிபலிக்கின்றன. இந்தத் தேர்தல் அனைவரையும் உள்ளடக்கியது அல்ல என்ற வாதங்களுக்குச் சரியான அடிப்படை இல்லை என்பதைக் காட்டுகிறது. இந்தத் தேர்தலில் அவாமி லீக் பங்கேற்காததற்கு, கடந்த கால அத்துமீறல்களை ஒப்புக்கொள்ளத் தவறியது, அத்தகைய தவறுகளுக்கு மன்னிப்பு கேட்காதது மற்றும் உள் சீர்திருத்தங்களை மேற்கொள்ளாததே முதன்மைக் காரணங்களாகும். அவாமி லீக் கட்சியின் பாரம்பரியக் கோட்டைகளில் 40 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருப்பது, அதன் ஆதரவாளர்கள் இப்போது அதைக் கைவிட்டுவிட்டதைக் காட்டுகிறது” என்று தி டெய்லி ஸ்டார் எழுதியுள்ளது.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், AFP via Getty Images

வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்திற்கான அறிகுறிகள்

வங்கதேசத்தின் செய்தி வலைத்தளமான ‘போனிக்பர்தா’, அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கை குறித்த பிஎன்பி (பி.என்.பி) தலைவர் அமீர் காஸ்ரு மஹ்மூத் சௌத்ரியின் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை, பி.என்.பி உயர்மட்டக் குழு உறுப்பினர் அமீர் காஸ்ரு மஹ்மூத், வங்கதேச வெளியுறவுக் கொள்கையில் ஒரு பெரிய மாற்றத்திற்கான அறிகுறியைக் கொடுத்துள்ளதாக அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

“எதிர்காலத்தில், வங்கதேசத்தின் வெளியுறவுக் கொள்கை எந்தவொரு குறிப்பிட்ட நாட்டையும் மையமாகக் கொண்டிருக்காது. அனைத்து நாடுகளுடனும் உறவைப் பேணுவதில் வங்கதேசத்தின் சொந்த நலன்களுக்கே முதலிடம் அளிக்கப்படும்” என்று காஸ்ரு மஹ்மூத் செய்தியாளர்களிடம் கூறினார்.

“எந்தவொரு குறிப்பிட்ட நாட்டிற்கும் முன்னுரிமை அளிக்காமல், வங்கதேசத்தின் நலன்கள், சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கு முன்னுரிமை அளித்து அனைவருடனும் உறவுகளைப் பேண பி.என்.பி விரும்புகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, 2024-ஆம் ஆண்டு ஆகஸ்டில் இளைஞர் போராட்டத்தைத் தொடர்ந்து பதவி நீக்கம் செய்யப்பட்டு இந்தியாவில் இருக்கும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று பி.என்.பி மூத்த தலைவர் சலாவுதீன் அகமது கோரிக்கை விடுத்தார்.

“இந்தியா உட்பட அனைத்து நாடுகளுடனும் பரஸ்பர மரியாதை மற்றும் சமத்துவத்தின் அடிப்படையிலான நட்பு உறவை நாங்கள் விரும்புகிறோம்” என்று அகமது கூறினார்.

வெள்ளிக்கிழமை மாலை, பி.என்.பி உயர்மட்டக் குழு உறுப்பினர் அமீர் காஸ்ரு மஹ்மூத், வங்கதேச வெளியுறவுக் கொள்கையில் ஒரு பெரிய மாற்றத்திற்கான அறிகுறியைக் கொடுத்துள்ளதாக அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

பட மூலாதாரம், AFP via Getty Images

‘மிகப்பெரிய சவால் இப்போது தொடங்குகிறது’

வங்கதேசத்தின் ஆங்கில நாளிதழான ‘நியூ ஏஜ்’ , “பி.என்.பியின் அமோக வெற்றி, வாய்ப்புகளையும் சோதனைகளையும் ஒருசேரக் கொண்டு வந்துள்ளது” என்று எழுதியுள்ளது.

“தெளிவான பெரும்பான்மை என்பது அர்த்தமுள்ள சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கான சாத்தியத்தைக் கொண்டுவருகிறது. ஆனால் அது அதிகாரத்தை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும் அபாயத்தையும் கொண்டுள்ளது. கட்டுப்பாடற்ற அதிகாரம் அமோக தேர்தல் வெற்றியை கூட சிதைத்துவிடும் என்பதை வரலாறு காட்டுகிறது” என்று மொனவாருல் இஸ்லாம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

“வங்கதேச மக்கள் கடினமான சூழ்நிலைகளிலும் ஜனநாயக செயல்முறையின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஒரு முக்கியமான காலத்தில் நாட்டை வழிநடத்தும் பொறுப்பை அவர்கள் பி.என்.பி-யிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த நம்பிக்கை உடைந்து போக அனுமதிக்கக் கூடாது” என்று அவர் எழுதியுள்ளார்.

“உண்மையான சவால் தேர்தல் வெற்றியில் இல்லை, மாறாக அதிகாரத்தைச் செயல்படுத்துவதில் தான் உள்ளது. ஞானம், நடைமுறைவாதம் மற்றும் கொள்கைகளின் அடிப்படையிலான ஆட்சி மட்டுமே இந்த தேர்தலில் மக்கள் அளித்துள்ள முடிவு ஜனநாயக நெறிமுறைகளாக மாறுமா அல்லது வாக்குறுதிகள் மற்றும் ஏமாற்றங்களின் மற்றொரு யுகமாக மாறுமா என்பதைத் தீர்மானிக்கும். நாடு நம்பிக்கையுடனும் எச்சரிக்கையுடனும் முன்னோக்கிப் பார்க்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொனவாருல் இஸ்லாமின் கூற்றுப்படி, “இந்தத் தேர்தலில் பி.என்.பி வெற்றி பெறுவது, அதுவும் மூன்றில் இரண்டு பங்கு இடங்களுடன் இவ்வளவு பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு சாத்திமில்லாத பணியாகும். இருப்பினும், மிகப்பெரிய சவால் இப்போதுதான் தொடங்குகிறது.”

தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி-யின் புதிய தலைமைக்கு முன்னால் உள்ள சவால் மிகவும் தெளிவானது.’வேலை முடிந்தாக வேண்டும்.’ என்று டாக்கா ட்ரிப்யூன் குறிப்பிட்டுள்ளது.

“வெற்றியாளர் அனைத்தையும் எடுத்துக்கொள்கிறார் என்ற கசப்பான அரசியல் பாரம்பரியத்தை பி.என்.பி கைவிட வேண்டும். தனது மக்கள் ஆணையைத் தக்க வைத்துக் கொள்ள, அது எதிர்க்கட்சியின் நியாயமான வாதங்களைக் கேட்க வேண்டும் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்குத் தேவையான இடத்தையும் உறுதி செய்ய வேண்டும். மேலும் கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்தின் மதிப்புகளையும் அது நிலைநிறுத்த வேண்டும்”என்று அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

 ஜமாத்-இ-இஸ்லாமி

பட மூலாதாரம், AFP via Getty Images

மகத்தான வெற்றி கண்ட பிஎன்பி, எழுச்சி கொண்ட ஜமாத்-இ-இஸ்லாமி

‘டாக்கா ட்ரிப்யூன்’ ஒரு கட்டுரையில், “பி.என்.பி மகத்தான வெற்றி பெற்றுள்ளது, ஆனால் ஜமாத்-இ-இஸ்லாமி மிகப்பெரிய பலனைப் பெற்றுள்ளது. மிகக் கடினமான போராட்டத்திற்குப் பிறகு பெற்ற பெரும்பான்மை தந்துள்ள வாய்ப்பை முன்னோக்கி எடுத்துச் செல்ல பி.என்.பி தவறினால், அடுத்த வாய்ப்பிற்காக ஜமாத் தயாராக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

“அரசியலமைப்பைத் திருத்துவதற்கு சட்டப்பிரிவு 142-ஐப் பயன்படுத்தும் அளவுக்கு பி.என்.பி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் என்.சி.பி ஆகிய கட்சிகள் 300 இடங்களில் கிட்டத்தட்ட கால்கால் பங்கு இடங்களை வென்றுள்ளன. இது ஜமாத்தை எதிர்க்கட்சியின் மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாற்றுகிறது” என்று பத்திரிகையாளர் ரியாஸ் அகமது அந்த நாளிதழில் எழுதியுள்ளார்.

ஜமாத்தின் எழுச்சி குறித்து எழுதியுள்ள அவர், “சில அரசியல் வட்டாரங்களில் ஜமாத்தின் செயல்பாடு பலவீனமாக இருந்ததாக ஒரு கருத்து உள்ளது. அதற்கு மாறாக, இந்தத் தேர்தலில் பெரிய ஆதாயத்தைப் பெற்ற ஒரு கட்சியாக அது உருவெடுத்துள்ளது. வரலாற்று ரீதியாக 18 இடங்களுக்கு மேல் வென்றிராத ஒரு கட்சி, இப்போது தனது இருப்பை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“காலப்போக்கில் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் திறனை ஜமாத் காட்டியுள்ளது. பல தசாப்தங்களாக, அரசியல் ஆதாயத்திற்காக அது தனது முக்கிய எதிரிகளுடன் கூட கைகோர்த்துள்ளது. 1994-1996 போராட்டத்தின் போது அவாமி லீக் உடனான கூட்டணி, 2001-ல் பி.என்.பியுடனான அதிகாரப் பகிர்வு மற்றும் இப்போது மாணவர் தலைமையிலான என்.சி.பியைச் சேர்த்துக் கொண்டது என அனைத்தும் இந்த உத்தியின் ஒரு பகுதியாகும்” என்று அவர் விவரித்துள்ளார்.

“அவாமி லீக் விரைவில் திரும்புவதற்கான வாய்ப்பு குறைவாகவே தெரிகிறது. இத்தகைய சூழ்நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பி.என்.பிக்குத் தொடர்ச்சியான அழுத்தத்தைக் கொடுக்கும் நிலையில் ஜமாத் இப்போது உள்ளது” என்றும் ரியாஸ் அகமது குறிப்பிட்டுள்ளார்.

 தேசியவாத காங்கிரஸ் தலைவர் நஹித் இஸ்லாம்

பட மூலாதாரம், AFP via Getty Images

‘ஜென் ஸி எழுச்சியின் அளவைத் தேர்தல் காட்டுகிறது’

‘புரோதோம் ஆலோ’ இதழ், வங்கதேச தேர்தல்கள் ஜென் ஸி எழுச்சிக்குப் பிறகு இளைஞர் சக்தியின் எல்லைகளைக் காட்டியுள்ளதாக எழுதியுள்ளது.

2024-ஆம் ஆண்டு மாணவர் மற்றும் இளைஞர் போராட்டங்களுக்குப் பிறகு உருவான என்.சி.பி கட்சி, இந்தத் தேர்தலில் ஆறு இடங்களை வென்றுள்ளது.

“மக்கள் போராட்டங்களை வாக்குகளாக மாற்றுவதில் உள்ள சவாலை இந்தத் தேர்தல் காட்டியுள்ளது. கடந்த டிசம்பரில் ஜமாத்-இ-இஸ்லாமியுடன் கூட்டணி வைத்துத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தபோதே, என்.சி.பி தன்னை இந்தப் போட்டியிலிருந்து வெளியேற்றிக் கொண்டதாக அதன் ஆதரவாளர்கள் சிலர் கருதுகின்றனர்” என்று அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

“என்.சி.பி ஆரம்பத்தில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் போட்டியிடத் திட்டமிட்டிருந்தது, ஆனால் இறுதியில் கூட்டணியின் கீழ் 30 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. டாக்காவில் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்ட பிறகு, ஒரு பெரிய கட்சியின் ஆதரவு தேவை என உணர்ந்ததால் கூட்டணியில் சேர முடிவு செய்தது”என்று அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கு முன்னதாக போதுமான ஆதரவுத் தளத்தை உருவாக்குவதில் என்.சி.பி தவறிவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

“23 வயது பல்கலைக்கழக மாணவர் சோஹானூர் ரஹ்மான் கூறுகையில், 2024 கிளர்ச்சிக்குப் பிறகு மக்கள் தன் மீது வைத்திருந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகத் தெரிவித்தார். ஜமாத் உடனான என்சிபி-யின் கூட்டணி எங்களுக்கு ஒரு துரோகமாகத் தெரிந்தது, எங்களைப் போன்ற பல இளம் வாக்காளர்கள் அதனை ஆதரிக்க வேண்டாம் என்று முடிவு செய்தோம்”என்று அந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

பிஎன்பி அமோக பெரும்பான்மையைப் பெற்றுள்ளது

பட மூலாதாரம், AFP via Getty Images

பிஎன்பி முன்னுள்ள மிகப்பெரிய சவால்

புதிய அரசாங்கம் தனது அரசியல், பொருளாதார அல்லது சமூக முடிவுகள் அனைத்தையும் நாடாளுமன்றத்தின் மூலமாக எடுப்பதே மிக முக்கியமான தேவையாகும் என ‘தி டெய்லி ஸ்டார்’ இதழின் மற்றொரு கட்டுரையில் அல்தாஃப் பர்வேஸ் குறிப்பிட்டுள்ளார்.

கொள்கை முடிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் எடுக்கப்பட வேண்டுமே தவிர, அதிகார வர்க்கத்தின் மூலம் அல்ல. மேலும் உள்ளூர் நிர்வாகம் வலுப்படுத்தப்பட வேண்டும்.

காவல்துறையை மறுசீரமைப்பதே மிகப்பெரிய சவால் என்று அவர் எழுதியுள்ளார். அதன் கட்டமைப்பு சிதைந்துள்ளதோடு, தார்மீக ரீதியாக பலவீனமாகவும் உள்ளது. ஜூலை எழுச்சிக்கு முன்பு இருந்த நிலைக்கு காவல்துறை மீண்டும் செல்வதை பொதுமக்கள் விரும்பவில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

“கிளர்ச்சியின் போது காவல்துறை எடுத்த நடவடிக்கைகளால் உருவான கோபத்தை புதிய அரசாங்கம் பாரபட்சமின்றி கையாள வேண்டும். ஊழல் மற்றும் அரசியல் அழுத்தங்கள் இல்லாத ஒரு காவல்துறையையே மக்கள் விரும்புகின்றனர். சீருடையை மாற்றுவதைத் தாண்டி இடைக்கால அரசாங்கத்தால் இந்த இலக்கை அடைய முடியவில்லை. எனவே, புதிய நாடாளுமன்றமும் அரசாங்கமும் காவல்துறையை உண்மையிலேயே தொழில்முறை சார்ந்ததாக மாற்ற அதன் கட்டமைப்பை மாற்றுவதில் கவனம் செலுத்துவது அவசியம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “காணாமல் ஆக்கப்படுதல், நீதிமன்ற விசாரணைக்கு அப்பாற்பட்ட கொலைகள் அல்லது காவலில் இருக்கும் அரசியல் மற்றும் கருத்தியல் எதிரிகளை சித்ரவதை செய்யும் கலாசாரத்திற்கு வங்கதேசம் மீண்டும் திரும்பிச் செல்ல முடியாது. இதே போன்ற மாற்றங்கள் உளவு அமைப்புகளுக்குள்ளும் செய்யப்பட வேண்டும்” என்றும் அவர் எழுதியுள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU