Home தேசிய national tamil நாளைய போட்டியில் கைகுலுக்கல் பற்றி சூர்யகுமார் யாதவ் – சல்மான் அகா கூறியது என்ன?

நாளைய போட்டியில் கைகுலுக்கல் பற்றி சூர்யகுமார் யாதவ் – சல்மான் அகா கூறியது என்ன?

19
0

SOURCE :- BBC NEWS

'டிரம்ப் கார்டு' என்று உஸ்மான் தாரிக்கை அழைத்த பாகிஸ்தான் அணி கேப்டன்

பட மூலாதாரம், Getty Images

14 பிப்ரவரி 2026, 14:24 GMT

புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கொழும்பில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளின் கேப்டன்கள் தனித்தனி செய்தியாளர் சந்திப்புகளை நடத்தினர்.

இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்கல் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.

பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவிடம் உஸ்மான் தாரிக் மற்றும் கைகுலுக்கல் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன.

கைகுலுக்கலைப் பற்றி சூர்யகுமார் யாதவ், “டாஸ் போடும் நேரத்தில் கைகுலுக்கலைப் பார்ப்போம். 24 மணி நேரம் காத்திருங்கள்.” என்று கூறியுள்ளார்.

இந்திய வீரர்களுடன் கைகுலுக்கப்படுவது குறித்த கேள்விக்கு, சல்மான் அகா, “அதைப் பற்றி நாளை பார்ப்போம்” என்றார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா செய்தியாளர்களிடம் பேசினார்.

பட மூலாதாரம், Getty Images

சல்மான் அகா என்ன சொன்னார்?

இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், உஸ்மான் தாரிக் அணியின் ‘துருப்புச் சீட்டு’ (டிரம்ப் கார்டு) என்று பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா கூறினார்.

”அவரது பந்துவீச்சு முறை குறித்து பரவலாகப் பேசப்படுகின்றது. ஆனால் பாகிஸ்தான் அணி அதைப் பற்றி பொருட்படுத்தவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

வங்கதேசத்திற்கு ஆதரவாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் முதலில் அறிவித்தது.

இருப்பினும், ஐசிசி உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு பாகிஸ்தான் தனது முடிவை மாற்றிக்கொண்டு பிப்ரவரி 15 அன்று கொழும்பில் நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட ஒப்புக்கொண்டது.

உஸ்மான் தாரிக்

பட மூலாதாரம், Getty Images

உஸ்மான் தாரிக் பற்றி பாகிஸ்தான் கேப்டன் கூறியது என்ன?

“தாரிக் எங்களது துருப்புச் சீட்டு. உஸ்மானின் பந்துவீச்சு முறை இரண்டு முறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது, அது ஏன் மீண்டும் மீண்டும் விவாதிக்கப்படுகிறது என்று எனக்குப் புரியவில்லை,” என்று தெரிவித்தார் சல்மான் அகா.

மேலும், “ஆரம்பத்தில் இருந்தே விளையாடப்பட்ட அதே உற்சாகத்தில் இந்த போட்டி விளையாடப்படும் என்று நம்புகிறேன்” என்றும் அவர் கூறினார்.

அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் உஸ்மான் தாரிக் மூன்று விக்கெட்டுகளை எடுத்து நான்கு ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

பட மூலாதாரம், Getty Images

இந்திய வீரர்களுடன் கைகுலுக்குவது குறித்த கேள்விக்கு, “அதைப் பற்றி நாளை பார்ப்போம்” என்று சல்மான் அகா பதிலளித்தார்.

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் ஆசமின் ஃபார்ம் குறித்து அணியில் எந்தக் கவலையும் இல்லை என்று அகா தெரிவித்தார்.

“பாபர் ஆசம் குறித்து எங்களுக்கு கவலையில்லை. அவர் ரன்கள் எடுத்து வருகிறார். நாளையும் அவர் ரன்களை எடுத்து அணிக்கு உதவுவார் என்று நம்புகிறோம். பேட்டிங் வரிசையில் நாங்கள் அதிக மாற்றங்களைச் செய்ய விரும்பவில்லை,” என்றார்.

இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா

பட மூலாதாரம், Asanka Ratnayake/Getty Images

அபிஷேக் ஷர்மா பற்றி கூறியது என்ன?

அபிஷேக் ஷர்மா ஒரு சிறந்த வீரர் என்று கூறிய சல்மான் அகா, அவர் உடற்தகுதியுடன் இருந்து போட்டியில் விளையாட வேண்டும் என்றும், சிறந்த அணியுடன் களமிறங்க பாகிஸ்தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

“நாளை அபிஷேக் ஷர்மா விளையாடுவார் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

உடல்நல பாதிப்பு காரணமாக நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் ஷர்மாவால் விளையாட முடியாமல் போனது.

உஸ்மான் தாரிக் பற்றி விவாதம்

கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையிலான போட்டியில் அமெரிக்காவை 32 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோற்கடித்தது. இந்தப் போட்டியில் உஸ்மான் தாரிக் நான்கு ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை எடுத்தார்.

அந்தப் போட்டியின் காட்சிகள் இந்தியாவில் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவின.

அதனைத் தொடர்ந்து, உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு முறை குறித்து சில சமூக ஊடகப் பயனர்கள் கேள்வி எழுப்பினர்.

உஸ்மான் ஓடிவந்து நிறுத்தி பின்பு பந்து வீசும் விதம், விதிகளின்படி ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்றும் கேள்வி எழுப்பினர்.

இருப்பினும் இந்த முழு விவாதத்திற்கும் மத்தியில், இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், உஸ்மான் தாரிக்குக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

அஸ்வின், உஸ்மான் தாரிக்கை ஆதரித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

அஸ்வின் ஆதரவு

ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி என்ற சமூக வலைதள பயனர், உஸ்மானின் பந்துவீச்சில் அமெரிக்க பேட்ஸ்மேன் ஒருவர் ஆட்டமிழக்கும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், உஸ்மான் பந்தை வீசுவதற்கு முன்பு ஒரு கணம் நிற்பது காணப்படுகிறது.

”ஆக்ஷன் ஒகே. ஆனால் நிறுத்துவது? அதுவும் பந்தை வீச வேண்டிய தருணத்தில் அவ்வாறு செய்வதா? இதை தொடரக்கூடாது,” என்று அந்த வீடியோ குறித்து ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி பதிவிட்டுள்ளார்.

ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமியின் பதிவை மறுப்பதிவிட்டு எழுதிய அஸ்வின்,” ”ஒரு பேட்ஸ்மேன் எந்தப் பக்கத்தில் வேண்டுமானாலும் நின்று அடிக்கலாம். இப்படி செய்வதற்கு முன்பு அம்பையரிடமோ, பந்துவீச்சாளரிடமோ சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், ஒரு பந்துவீச்சாளர் விஷயத்தில் மட்டும் விதி கடுமையாக இருக்கிறது. அம்பையரிடம் சொல்லாமல் நடுவில் கையை மாற்றி பந்து வீசக் கூடாது. இந்த விதிதான் முதலில் மாற்றப்பட வேண்டும்,” என்று எழுதியுள்ளார்.

இந்த விவாதம் தீவிரமடைந்த நிலையில், அஸ்வின் எக்ஸ் தளத்தில் மற்றொரு நீண்ட கருத்தைப் பதிவிட்டார்.

அதில் அவர், “முதலில், பந்துவீச்சு முறை சரியா இல்லையா என்பதை ஐசிசி பந்துவீச்சு சோதனை மையத்தில் மட்டுமே சோதிக்க முடியும்,” என்று கூறினார்.

“இரண்டாவதாக, 15-டிகிரி விதி உள்ளது. அதன்படி, பந்துவீச்சாளர் தனது முழங்கையை 15 டிகிரி வரை நேராக்கலாம். மேலும், பந்துவீச்சாளர் 15 டிகிரியில் பந்து வீசுகிறாரா இல்லையா என்பதை மைதானத்தில் இருக்கும் நடுவர் தீர்மானிப்பது சாத்தியமற்றது.”

மேலும், “இதற்கு ஒரே தீர்வு, போட்டி நடக்கும் நேரத்திலேயே சோதனை கருவியை அறிமுகப்படுத்துவதுதான். இது ஒரு தெளிவற்ற விஷயம், இந்தத் தெளிவற்ற விஷயத்தைப் பயன்படுத்தி யாரோ ஒருவர் ஆதாயம் அடைகிறார்கள் என்று குற்றம் சாட்டுவது தவறு.

கிரீஸுக்குள் பந்து வீசும்போது நிறுத்துவது சட்டப்பூர்வமானதா இல்லையா என்ற கேள்வியைப் பொறுத்தவரை, அது அவருடைய வழக்கமான பந்துவீச்சு முறை என்பதால் அது முற்றிலும் சட்டப்பூர்வமானது என்றே நான் நம்புகிறேன்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு மே 7-ம் தேதி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், உஸ்மான் தாரிக் லாகூரில் உள்ள பயோமெக்கானிக்ஸ் ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார் என்றும், அங்கு அவரது பந்துவீச்சு முறை அங்கீகரிக்கப்பட்டது என்றும் தெரிவித்தது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU