Home தேசிய national tamil ‘அறநிலையத்துறை, வக்ஃப் வரிசையில் தேவாலயங்கள்’ – நீதிமன்ற கருத்துக்கு எதிர்வினை என்ன?

‘அறநிலையத்துறை, வக்ஃப் வரிசையில் தேவாலயங்கள்’ – நீதிமன்ற கருத்துக்கு எதிர்வினை என்ன?

7
0

SOURCE :- BBC NEWS

'அறநிலையத்துறை, வக்ஃப் வரிசையில் தேவாலயங்கள்' - நீதிமன்றத்தின் கருத்துக்கு கிறிஸ்தவர்கள் எதிர்வினை என்ன?

பட மூலாதாரம், Getty Images

‘இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் மத அறக்கட்டளைகள் சட்டப்பூர்வ ஒழுங்குமுறைக்கு உட்பட்டவை. ஆனால், இந்த ஒழுங்குமுறை கிறிஸ்தவர்களுக்கு இல்லை’ – சிஎஸ்ஐ தூத்துக்குடி – நாசரேத் மறைமாவட்டத்துக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ஜனவரி மாதம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறிய கருத்துக்கள் இவை.

‘தேவாலயங்கள், அதன் கல்வி நிறுவனங்களை மேலும் பொறுப்புணர்வுடன் நடத்துவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் சட்டப்பூர்வ வாரியம் இருக்க வேண்டும்’ எனவும் உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

‘அறநிலையத்துறை, வக்ஃப் வாரியம் போல கிறிஸ்தவ தேவாலயங்களை நிர்வகிக்க முடியாது’ என, கிறிஸ்தவ அமைப்புகள் கூறுகின்றன. ஆனால், ‘சொத்துகளைப் பாதுகாப்பதற்கு சட்டப்பூர்வ அமைப்பு அவசியம்’ என்ற கருத்தும் சிலரால் முன்வைக்கப்படுகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் சிஎஸ்ஐ தூத்துக்குடி – நாசரேத் மறைமாவட்டம் செயல்பட்டு வருகிறது. மிகப் பழைமையான இந்த மறைமாவட்டத்தின் கட்டுப்பாட்டில் 518 தேவாலயங்கள் உள்ளன.

இதுதவிர, பல தொடக்கப் பள்ளிகளும் கல்வி நிறுவனங்களும் உள்ளதாக அதன் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. சி.எஸ்.ஐ தூத்துக்குடி-நாசரேத் மறை மாவட்டத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது.

'அறநிலையத்துறை, வக்ஃப் வரிசையில் தேவாலயங்கள்' : நீதிமன்றத்தின் கருத்தை கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், csi

தேர்தலை நடத்த தடை

“ஆனால், தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை எனக் கூறி சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்” என்கிறார், சி.எஸ்.ஐ தூத்துக்குடி-நாசரேத் மறைமாவட்டத்தின் முன்னாள் பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம். சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்தவர்களில் இவரும் ஒருவர்.

முன்னதாக, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் நடந்தது. இதற்கான பணிகளை ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி மேற்கொண்டு வந்தார்.

“ஐந்துகட்டத் தேர்தலில் நான்கு கட்டப் பணிகள் முடிந்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி தேர்தலை நடத்துவது திருச்சபையின் விதிகளுக்கு மாறாக உள்ளதாகக் கூறி சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்” என மோகன்ராஜ் அருமைநாயகம் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதியன்று தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டார்.

மறைமாவட்டத்தை நிர்வகிக்கவும் தேர்தல்களை நடத்தவும் மறைமாவட்ட ஆயர் சபைக்கே அதிகாரம் உள்ளதாகவும் தீர்ப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார், ஆர்.சக்திவேல் அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.

கடந்த ஜனவரி 22 ஆம் தேதியன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், சி.எஸ்.ஐ தூத்துக்குடி நாசரேத் மறைமாவட்ட தேர்தல் வழக்கை தனி நீதிபதி மீண்டும் விசாரிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மறைமாவட்ட விதிகளின்படி தேர்தல் நடத்தப்படுவதாக கூறினாலும் இதற்குத் தலைமை தாங்கும் நபர்கள், பல ஆண்டுகளாக முழு நிர்வாகத்தையும் கட்டுப்படுத்த முயற்சிப்பது தெரிவதாக, தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

”இந்த நீதிமன்றம் திருச்சபையின் சொத்துகள் மற்றும் அதன் நிதிகளை தவறாக நிர்வகிப்பது மற்றும் தவறாகப் பயன்படுத்துவது போன்ற பல்வேறு நிகழ்வுகளைக் கண்டுள்ளது” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

‘சட்டப்பூர்வ வாரியம் அவசியம்’

”கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என பல்வேறு பொதுப் பணிகளை கிறிஸ்தவ மிஷினரிகள் நிறைவேற்றியதை மறந்துவிடக் கூடாது. இதுபோன்ற வழக்குகள் பொதுமக்களைப் பாதிக்கின்றன. அவற்றின் சொத்துகள் மற்றும் நிதிகளுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது” எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

“இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் மத அறக்கட்டளைகள் சட்டப்பூர்வ ஒழுங்குமுறைக்கு உட்பட்டவை” எனக் கூறியுள்ள நீதிபதிகள், ”ஆனால், கிறிஸ்தவர்களுக்கு அத்தகைய விரிவான ஒழுங்குமுறை எதுவும் இல்லை” என்றனர்

”அந்தவகையில், கிறிஸ்தவ மத நிறுவனங்களை மேலும் பொறுப்புணர்வுடன் மாற்றுவதற்கு அதன் நிர்வாக விவகாரங்களை ஒழுங்குபடுத்துவதற்கு சட்டப்பூர்வ வாரியம் இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

கிறிஸ்தவ அமைப்புகள் கூறுவது என்ன?

 மோகன்ராஜ் அருமைநாயகம்

பட மூலாதாரம், Mohanraj Arumainayagam

நீதிமன்றத்தின் இந்தக் கருத்துக்கு கிறிஸ்தவ அமைப்பினர் மத்தியில் ஒருசேர ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

“அப்படியொரு சட்டப்பூர்வ அமைப்பு தேவையில்லை” எனக் கூறுகிறார், சி.எஸ்.ஐ தூத்துக்குடி – நாசரேத் மறைமாவட்டத்தின் முன்னாள் பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம்.

“அனைத்து இடங்களிலும் பிரச்னை இருக்கவே செய்கிறது” என பிபிசி தமிழிடம் பேசிய அவர், ” எங்களின் சொத்துக்களுக்கும் பிற மதத்தவரின் சொத்துக்களுக்கும் வித்தியாசம் உள்ளது” என்கிறார்.

“தேவாலயத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் விலை கொடுத்து முறையாக வாங்கப்பட்டவை. இதன் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒவ்வொரு கல்வி நிறுவனமும் முறைப்படி அனுமதி பெற்று நடத்தப்படுகிறது” என்கிறார் அவர்.

நீதிபதிகளின் தனிப்பட்ட கருத்தாக இதைப் பார்ப்பதாகக் கூறும் மோகன்ராஜ் அருமைநாயகம், “கோவில், மசூதிகளை சட்டப்பூர்வ அமைப்பு நிர்வகிப்பதைப் போல இதை நிர்வகிக்க முடியாது” எனவும் குறிப்பிட்டார்.

இனிகோ இருதயராஜ்

பட மூலாதாரம், InigoIrudayaraj

‘அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாது’

இதே கருத்தை முன்வைக்கும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ், “ஆங்கிலேயர் காலத்தில் நிலங்களை வாங்கி கிறிஸ்தவ மிஷினரிகள் உருவாக்கப்பட்டன” என்கிறார்.

ரோமன் கத்தோலிக்க திருச்சபைகள், தென்னிந்திய திருச்சபைகள், பெந்தோகொஸ்தே திருச்சபைகள் என, ஒவ்வொரு சபையும் அறக்கட்டளை மற்றும் சொசைட்டி சட்ட விதிகளின்படி செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

சிறுபான்மையினருக்கான உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ளதாகக் கூறும் இனிகோ இருதயராஜ், “இவற்றை அரசாங்கம் மூலமாக கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அது சிறுபான்மையினர் மீதான அடக்குமுறையாகத்தான் பார்க்க முடியும். வேண்டும்” என்கிறார்.

“புதிதாக ஓர் அரசு அமைப்பை உருவாக்குமாறு கூறுவது ஏற்புடையதல்ல. அறக்கட்டளையின் விதிகளுக்கு மாறாக ஏதேனும் தவறு நடந்திருந்தால் அதை சரிசெய்வதற்கான வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வழங்கலாம். அதைவிடுத்து, தேவாலயங்களை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாது. இதன்பேரில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.

 தேவாலயங்கள்

பட மூலாதாரம், Getty Images

‘இதுவே சரியான நேரம்’

முன்னாள் எம்.எல்.ஏவும் மாநில சிறுபான்மை ஆணையத்தின் முன்னாள் தலைவருமான பீட்டர் அல்ஃபோன்ஸ், “பல்வேறு தியாகங்களை செய்து ஏழை எளிய மக்களின் மேம்பாட்டுக்காக கிறிஸ்தவ கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் என உருவாக்கியுள்ளனர். அந்த நோக்கம் முறையாக செயல்படுத்தப்பட வேண்டும்” என பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.

பல இடங்களில் அவை சரியான முறையில் நிர்வகிக்கப்படவில்லை எனக் கூறும் பீட்டர் அல்ஃபோன்ஸ், “தவறுகள் நடந்திருப்பது உண்மை. அதைத் தடுத்து திருச்சபையின் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டும். அவை வரும் தலைமுறைக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும்” என்கிறார்.

“இதற்கான வழிமுறைகளை உருவாக்குதற்கான நேரம் வந்துவிட்டதாகவே பார்க்கிறேன்” எனவும் பீட்டர் அல்ஃபோன்ஸ் கூறுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU