Home தேசிய national tamil பாகிஸ்தான் வீரரின் ‘நிறுத்தி’ பந்து வீசும் முறை பற்றி விவாதம் – ஆதரவளிக்கும் அஸ்வின்

பாகிஸ்தான் வீரரின் ‘நிறுத்தி’ பந்து வீசும் முறை பற்றி விவாதம் – ஆதரவளிக்கும் அஸ்வின்

7
0

SOURCE :- BBC NEWS

 அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் உஸ்மான் தாரிக் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி நான்கு ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

பட மூலாதாரம், Getty Images

12 பிப்ரவரி 2026, 10:19 GMT

புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

‘அவர் என்ன செய்தார் என்பதை இந்தியாவால் கூட புரிந்துகொள்ள முடியாது.’

‘இது இந்தியாவுக்கு எதிரான துருப்புச் சீட்டாக இருக்கும்.’

பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டியின் போது, இந்தியத் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் போட்டி குறித்த நிகழ்ச்சியில் இப்படி பேசப்பட்டது. இந்த விவாதம், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் உஸ்மான் தாரிக்கை பற்றியது. இவருடைய தனித்துவமான பந்துவீச்சு முறை இதற்கு முன்பே விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவை 32 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோற்கடித்தது. இந்தப் போட்டியில் உஸ்மான் தாரிக் நான்கு ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அந்தப் போட்டியின் காட்சிகள் இந்தியாவில் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவின.

அதனைத் தொடர்ந்து, உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு முறை குறித்து சில சமூக ஊடகப் பயனர்கள் கேள்வி எழுப்பினர்.

உஸ்மான் ஓடிவந்து நிறுத்தி பின்பு பந்து வீசும் விதம், விதிகளின்படி ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்றும் மற்றவர்கள் கேள்வி எழுப்பினர்.

இருப்பினும் இந்த முழு விவாதத்திற்கும் மத்தியில், இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், உஸ்மான் தாரிக்குக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

அஸ்வின், உஸ்மான் தாரிக்கை ஆதரித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி என்ற சமூக வலைதள பயனர், உஸ்மானின் பந்துவீச்சில் அமெரிக்க பேட்ஸ்மேன் ஒருவர் ஆட்டமிழக்கும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், உஸ்மான் பந்தை வீசுவதற்கு முன்பு ஒரு கணம் நிற்பது காணப்படுகிறது.

”ஆக்ஷன் ஒகே. ஆனால் நிறுத்துவது? அதுவும் பந்தை வீச வேண்டிய தருணத்தில் அவ்வாறு செய்வதா? இதை தொடரக்கூடாது” என்று அந்த வீடியோ குறித்து ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி பதிவிட்டுள்ளார்.

ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமியின் பதிவை மறுப்பதிவிட்டு எழுதிய அஸ்வின்,” ”ஒரு பேட்ஸ்மேன் எந்த பக்கத்தில் வேண்டுமானாலும் நின்று அடிக்கலாம். இப்படி செய்வதற்கு முன்பு அம்பையரிடமோ, பந்துவீச்சாளரிடமோ சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், ஒரு பந்துவீச்சாளர் விஷயத்தில் மட்டும் விதி கடுமையாக இருக்கிறது. அம்பையரிடம் சொல்லாமல் நடுவில் கையை மாற்றி பந்து வீசக் கூடாது. இந்த விதிதான் முதலில் மாற்றப்பட வேண்டும்,” என்று எழுதியுள்ளார்.

உஸ்மான் தாரிக்

பட மூலாதாரம், Getty Images

இதற்கிடையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா ஒரு வீடியோவில், பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சு வலிமையானது என்று விவரித்ததுடன், உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு முறை சுவாரஸ்யமானது என்று கூறியுள்ளார்.

“உஸ்மானின் பந்துவீச்சு முறை சுவாரஸ்யமானது. நீங்கள் டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று யாரோ ஒருவர் நிறுத்துவது போல் இது உணர்வைத் தருகிறது. அவர் நிறுத்திவிட்டு பின்னர் பந்து வீசுகிறார். அதேபோல் மெதுவாகப் பந்து வீசுகிறார். இதில் எந்தப் பிரச்னையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இது சரியானதுதான். நீங்கள் நிறுத்தி பந்து வீசலாம். அதைப் பற்றி எந்த விதியும் இல்லை. மேலும் அவர் வீசும் மெதுவான பந்துகளில் கூட, முழங்கை மடங்குவது இல்லை,” என்றார்.

ஆனால், கையை வளைக்காமல் பந்தின் வேகத்தை 20 முதல் 25 கிலோமீட்டர் வரை அதிகரிக்க முடியுமா என்ற கேள்வியையும் ஆகாஷ் சோப்ரா எழுப்பினார்.

இந்த விவாதம் தீவிரமடைந்த நிலையில், அஸ்வின் எக்ஸ் தளத்தில் மற்றொரு நீண்ட கருத்தைப் பதிவிட்டார்.

அதில் அவர், “முதலில், பந்துவீச்சு முறை சரியா இல்லையா என்பதை ஐசிசி பந்துவீச்சு சோதனை மையத்தில் மட்டுமே சோதிக்க முடியும்,” என்று கூறினார்.

“இரண்டாவதாக, 15-டிகிரி விதி உள்ளது. அதன்படி, பந்துவீச்சாளர் தனது முழங்கையை 15 டிகிரி வரை நேராக்கலாம். மேலும், பந்துவீச்சாளர் 15 டிகிரியில் பந்து வீசுகிறாரா இல்லையா என்பதை மைதானத்தில் இருக்கும் நடுவர் தீர்மானிப்பது சாத்தியமற்றது.”

மேலும், “இதற்கு ஒரே தீர்வு, போட்டி நடக்கும் நேரத்திலேயே சோதனை கருவியை அறிமுகப்படுத்துவதுதான். இது ஒரு தெளிவற்ற விஷயம், இந்தத் தெளிவற்ற விஷயத்தைப் பயன்படுத்தி யாரோ ஒருவர் ஆதாயம் அடைகிறார்கள் என்று குற்றம் சாட்டுவது தவறு.

கிரீஸுக்குள் பந்து வீசும்போது நிறுத்துவது சட்டப்பூர்வமானதா இல்லையா என்ற கேள்வியைப் பொறுத்தவரை, அது அவருடைய வழக்கமான பந்துவீச்சு முறை என்பதால் அது முற்றிலும் சட்டப்பூர்வமானது என்றே நான் நம்புகிறேன்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு மே 7-ம் தேதி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், உஸ்மான் தாரிக் லாகூரில் உள்ள பயோமெக்கானிக்ஸ் ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார் என்றும், அங்கு அவரது பந்துவீச்சு முறை அங்கீகரிக்கப்பட்டது என்றும் தெரிவித்தது.

 உஸ்மானின் இந்த பந்து வீச்சு பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கியமானது என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இயன் பிஷப் வர்ணித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

பேட்ஸ்மேன்களுக்கு இந்த ஆட்டம் எவ்வளவு ஆபத்தானது?

அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற பிறகு ஈஎஸ்பிஎன் (ESPN) தளத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான இயன் பிஷப், உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு முறை குறித்து பேசினார்.

“அவர் வெவ்வேறு கோணங்களில் பந்து வீசுகிறார். அவர் ரவுண்ட் ஆர்ம் முறையிலும், பின்னர் ஓவர் தி டாப் முறையிலும் வீசுகிறார். இது உங்களுக்கு வெவ்வேறு அளவிலான பவுன்ஸ்களை வழங்குகிறது. ஆனால் அதைவிட முக்கியமாக, அவர் பந்து வீசுவதற்கு முன்பு நிறுத்தி, பேட்ஸ்மேன் எங்கே நகரக்கூடும் அல்லது அவர் என்ன ஷாட் ஆடக்கூடும் என்பதைப் பார்க்க அவருடைய கால்களைக் கவனிக்கிறார். பின்னர் அவர் பந்தை வீசும்போது, அது பேட்ஸ்மேனின் செயல்பாட்டைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்றார்.

அந்தச் சிறிய நிறுத்தம் தான் பந்துவீச்சாளருக்கு பேட்ஸ்மேனை விட முன்னிலை கொடுக்கிறது என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரீம் அதே விவாதத்தில் கூறினார்.

“ஏனெனில், இது அவருக்கு வெவ்வேறு மாற்றங்களை முயற்சிப்பதற்கான சுதந்திரத்தை அளிக்கிறது. கடந்த சில போட்டிகளில் நாம் பார்த்தது என்னவென்றால், அவர் (உஸ்மான்) சிறந்த மற்றும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களைக் கூட ஆட்டமிழக்கச் செய்வதில் வெற்றி பெற்றுள்ளார். இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு அவரது தனித்துவமான பந்துவீச்சு முறை மிகவும் முக்கியமானதாக அமையலாம்,” என்றார்.

தாரிக் பந்து வீச்சு தொடர்பான அடுத்தடுத்த சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

விதிகள் என்ன?

இதுகுறித்த அம்சங்களைப் புரிந்துகொள்வதற்காக, லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தின் பயோமெக்கானிக்ஸ் நிபுணர் பேராசிரியர் முகமது ஓவைஸுடன் பிபிசி உருது பேசியது.

கடந்த காலங்களில், பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு முறையைச் சோதிப்பதற்காகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பேராசிரியர் ஓவைஸைப் பணியமர்த்தியுள்ளது.

“பந்து வீசும்போது நிறுத்துவதைப் பொறுத்தவரை, அதில் எந்தப் பிரச்னையும் இல்லை, பந்து வீசும்போது முழங்கை கோணத்தின் மாற்றம் 15 டிகிரிக்கு மேல் இருக்கக்கூடாது. முழங்கையில் ஏற்படும் மாற்றம் 15 டிகிரி அல்லது அதற்குக் குறைவாக இருந்தால், அந்தப் பந்து செல்லுபடியாகும் எனக் கருதப்படும்,” என்றார்.

“ஒரு பந்துவீச்சாளர் நிறுத்தி பந்து வீசினால், அப்போதும் அதே விதிகள் பொருந்தும் என்பது உறுதி. ஐ.சி.சி விதிகளில் நிறுத்தி பந்து வீசுவது குறித்து எந்த விதிமுறையும் இல்லை, 15 டிகிரி சாய்வு பற்றி மட்டுமே பேசுகிறது,” என்றார்.

“சில நேரங்களில் ஒரு பந்துவீச்சாளரின் கை அமைப்பு இயற்கையாகவே அதிக நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்கும். எனவே, வெறும் கண்ணால் பார்க்கும்போது, பந்துவீச்சாளர் பந்தை எறிகிறார் , அதாவது தவறான முறையில் பந்து வீசுகிறார் என்று தோன்றலாம். இருப்பினும், ஐ.சி.சி கேமராக்கள் மூலம் அளவிடப்பட்டு ஆய்வு செய்யப்படும்போது, அது ‘சக்கிங்’ வகையின் கீழ் வராது. அந்தச் சோதனையில் பந்துவீச்சாளர் தவறாக வீசுவது நிரூபிக்கப்படாமல் போக முற்றிலும் வாய்ப்புள்ளது,” என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

உஸ்மான் தாரிக்கின் பின்னணி

ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தகவலின்படி, உஸ்மான் தாரிக் நவம்பர் 2023-இல் பாகிஸ்தான் தேசிய டி20 கோப்பை போட்டியில் அறிமுகமானார். அவர் 2024-இல் பிஎஸ்எல் தொடரிலும் பங்கேற்றார், ஆனால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஆனால், 2024-25 காலப்பகுதியில், அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான முறையில் மீண்டும் விளையாடத் தொடங்கி, 15 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இருப்பினும், இந்தக் காலக்கட்டத்தில் அவரது பந்துவீச்சு முறை குறித்து இரண்டு புகார்கள் வந்தன. முதல் முறை 2024 பிஎஸ்எல் தொடரின் போது புகார் எழுந்தது.

ஆனால், லாகூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு, அவர் தேர்ச்சி பெற்றார் மற்றும் அவரது பந்துவீச்சு தொடர்ந்தது.

அடுத்த பிஎஸ்எல் தொடரிலும் அவர் மீது மீண்டும் ஒரு புகார் அளிக்கப்பட்டது, ஆனால் அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையிலும் அவர் தேர்ச்சி பெற்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU