Home தேசிய national tamil சார்ல்ஸ் டார்வின் ‘கடவுளை கொன்று’ பரிணாம கோட்பாட்டை கண்டுபிடிக்க வித்திட்ட பீகிள் கடற்பயணம்

சார்ல்ஸ் டார்வின் ‘கடவுளை கொன்று’ பரிணாம கோட்பாட்டை கண்டுபிடிக்க வித்திட்ட பீகிள் கடற்பயணம்

16
0

SOURCE :- BBC NEWS

நம்பிக்கையா? அறிவியலா? – டார்வின் கண்ட பரிணாம உலகம்

பட மூலாதாரம், Getty Images

கடந்த 1835ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள், தென் அமெரிக்காவின் ஈக்வடார் நாட்டுக் கடற்கரையில் இருந்து சுமார் 965 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட கலாபகோஸ் தீவுக் கூட்டத்திற்கு, பிரிட்டிஷ் ஆய்வுக் கப்பலான எச்.எம்.எஸ். பீகிள் சென்றடைந்தது.

இந்தக் கப்பலின் தளபதி கேப்டன் ராபர்ட் ஃபிட்ஸ்ராய். இங்கிலாந்தின் கப்பற்படை, ராயல் நேவிக்காக தென் அமெரிக்கக் கடற்கரை வரைபடங்களைத் தயாரிப்பதே அவரது முக்கியப் பணி. சில ஆண்டுகளுக்கு முன்புதான் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற இளம் இயற்கை விஞ்ஞானியான சார்ல்ஸ் டார்வினும் அக்கப்பலில் இருந்தார்.

கலாபகோஸ் கடற்பரப்பில் வெறும் ஐந்து வாரங்கள் மட்டுமே பீகிள் கப்பல் தங்கியது; பின்னர் அதன் பயணத்தைத் தொடர்ந்தது. ஆனால் இந்த ஐந்து வாரத்தில் டார்வின் மேற்கொண்ட ஆய்வு, அறிவியல் வரலாற்றில் கலாபகோஸுக்கு அழியாத இடத்தை வழங்கியது.

நியூட்டனின் ஆப்பிளை போல, ஆர்க்கிமிடீசின் குளியலறைத் தருணத்தைப் போல, பரிணாமக் கொள்கையை வகுக்க இந்தத் தீவுகளில் வாழ்ந்த, குருவியைப் போன்ற சாயலுடைய பல விதமான ஃபின்ச் பறவைகள் டார்வினுக்கு வழிகாட்டின. எனவே அவை அறிவியல் கண்டுபிடிப்பு வரலாற்றில் முக்கிய நினைவுச் சின்னங்களாகக் கொண்டாடப்படுகின்றன.

‘கடவுளைக் கொன்ற’ பீகிள் பயணம்

“பிள்ளையாரைப் பிடிக்கப் போய்க் குரங்காய் முடிந்த கதை” என்பார்கள். அதுதான் சார்ல்ஸ் டார்வின் வாழ்விலும் நடந்தது. தொடக்கத்தில் டார்வினின் நோக்கம் வேறாக இருந்தது. ஆனால் அறிவைத் தேடிச் சென்றபோது அவர் சென்றடைந்த இறுதி நிலை, அதற்கு நேர் எதிரானதாக இருந்தது.

கடவுள்தான் உலகையும் உயிரினங்களையும் படைத்தார் என்ற இறையியல் கருத்துக்குச் சான்று தரப் போகிறோம் என்ற எண்ணத்தில்தான் டார்வின் தனது ஆய்வைத் தொடங்கினார்.

இறுதியில், கடவுளுக்கு எந்த வேலையும் இல்லாமல் இயற்கை தனது போக்கில் உயிரினங்களை உருவாக்கியது என்ற பரிணாம படிநிலை வளர்ச்சித் தத்துவத்தை வழங்கிவிட்டுச் சென்றார்.

உயிரினங்கள் கடவுளால் படைக்கப்பட்டவை அல்ல, இயற்கையின் தாக்கத்தில் பரிணாமத்தால் உருவானவை என்ற கருத்தை முதலில் ஆணித்தரமாகக் கூறிப் புரட்சி செய்த ‘இயற்கைத் தேர்வு மூலமாக இனங்களின் தோற்றம்’ என்னும் நூலை 1859ஆம் ஆண்டு வெளியிட்டார் டார்வின்.

அப்போது, மனிதன் பரிணாமத்தில் உருவான உயிரினம் என்பதை இலைமறைவாகவே கூறியிருந்தார். ஆனால் அப்போதே அந்தக் கருத்துக்கு எதிர்ப்பு உருவானது. பின்னர் 1871ஆம் ஆண்டு ‘மனிதனின் பரிணாமமும் பாலினம் சார்ந்த தேர்வும்’ என்ற நூலை வெளியிட்டார்.

இதைப் படித்த டார்வினின் நெருங்கிய நண்பரும் அறிஞருமான தாமஸ் ஹக்ஸ்லி ஒருநாள் அவரைச் சந்தித்தபோது, “உங்கள் படிநிலை வளர்ச்சி எனும் பரிணாமக் கருதுகோளின் மூலம் கடவுளின் இடத்தைக் காலி செய்துவிட்டீர்கள். நீங்கள் கடவுளைக் கொன்ற கொலையாளி” என்று சொல்லிச் சிரித்தாராம்.

எச்.எம்.எஸ். பீகிள் கப்பலின் கேப்டன் ராபர்ட் ஃபிட்ஸ்ராய்

பட மூலாதாரம், Getty Images

தற்செயலாகக் கிடைத்த வாய்ப்பு

டார்வினின் வாழ்க்கையை மாற்றிய சம்பவம் பீகிள் கடற்பயணம். கப்பலில் பயணித்து தென் அமெரிக்காவின் நிலப்பரப்பையும் அங்கு வாழும் தாவரங்கள், விலங்குகள், பறவைகளையும் ஆய்வு செய்யும் வாய்ப்பு 1831ஆம் ஆண்டு இறுதியில் அவருக்குக் கிட்டியது. அதுவும் ஒருவகையில் தற்செயலே.

பீகிள் எனும் கடல் ஆய்வுக் கப்பலைச் செலுத்தி தென் அமெரிக்காவின் தீவுகள், கடற்கரைப் பகுதிகள் போன்றவற்றின் நிலவியல் மற்றும் இயற்கை வளங்களை ஆராய்வது என பிரிட்டிஷ் அரசு முடிவு செய்திருந்தது.

இந்த ஆய்வுப் பயணத்தை மேற்கொள்ள கேப்டன் ராபர்ட் ஃபிட்ஸ்ராய் நியமிக்கப்பட்டிருந்தார். வெளிப்படையாக இயற்கையை ஆராயும் பயணம் எனக் கூறப்பட்டாலும், இந்தப் பயணத்திற்கு வேறு ஒரு உள்நோக்கம் இருந்தது. எங்கே என்ன கனிமங்களும் தாதுப் பொருள்களும் உள்ளன, தங்கம், வைரம் கொண்ட சுரங்கங்கள் உள்ளனவா என அறிவது ஒரு முக்கிய நோக்கம்.

இரண்டாவதாக, நாடு கைப்பற்றும் ஆசை. பதினேழாம் நூற்றாண்டு முதலே அமெரிக்கா, இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற உலகின் பல பகுதிகளுக்கும் ஐரோப்பிய கப்பல்கள் சென்று பல இடங்களில் தளங்களை அமைத்து வணிகம் செய்து வந்தன. இருந்தாலும், உலகின் பல பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்து காலனி நாடுகளை ஏற்படுத்தியது பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும்தான்.

ஐரோப்பாவில் முதலாளித்துவ சமூக, பொருளாதார அமைப்பு தீவிரமடையும் அதே காலகட்டத்தில்தான் காலனி நாடுகளின் விரிவாக்கம் ஏற்பட்டது. முதலாளித்துவத்தின் முக்கிய குணம் போட்டி. ஒவ்வொரு நாட்டைச் சார்ந்த முதலாளிகளும் காலனி நாடுகளின் சந்தையைத் தமது கைக்குள் வைக்கப் போட்டியிடும்போது இயல்பாக எழுவது போர். அந்தக் காலத்தில் போர் என்றால் ராணுவமும் கப்பற்படையும் மிக முக்கியமானவை.

இந்தச் சூழலில்தான் ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் உலகின் கடற்பகுதியை வரைபடம் செய்ய முயற்சி செய்து வந்தது. அதன் ஒரு பகுதியாகவே பீகிள் எனும் கப்பலைச் செலுத்தி வடக்கு மற்றும் தென் அமெரிக்காவின் கடலோரங்களையும் தீவுகளையும் வரைபடமாக்க கேப்டன் ஃபிட்ஸ்ராய் பணிக்கப்பட்டிருந்தார்.

எச்.எம்.எஸ். பீகிள் கப்பல்

பட மூலாதாரம், Getty Images

இயற்கை ஆய்வாளர் வேலை

போர்த் தயாரிப்பு மற்றும் வணிகப் பேராசை என்ற நோக்கங்களை மறைத்து, அறிவியல் ஆய்வு என்று பூசிமெழுகி அமெரிக்கா கண்டத்தைச் சுற்றி வந்து வரைபடம் தயாரிப்பதாகவே வெளியே கூறப்பட்டாலும், உண்மையான இலக்கு வேறு.

அமெரிக்கக் கடலில் உள்ள தீவுகளுக்கு இடையேயான தொலைவு, பல்வேறு புள்ளிகளில் கடலின் ஆழம், கடற்கரையில் உள்ள முகத்துவாரங்கள், போர் ஏற்பட்டால் எந்தப் பகுதியில் கப்பல்கள் எளிதாக நிலத்தை அடைய முடியும் என்பதற்கான தகவல்கள் போன்ற பல்வேறு தரவுகளைச் சேகரிப்பதே உண்மையான பணி.

கப்பலில் பயணம் செய்து கடலோரங்களையும் தீவுகளையும் கடலின் ஆழத்தையும் ஆராய்ந்து பதிவு செய்து வரைபடம் தயாரிப்பது, ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் பயணமாகும். அதன் பின்னர்தான் வீடு திரும்ப முடியும். கப்பலை இயக்க மாலுமிகள், மருத்துவர், நிலவியலாளர், கனிம ஆய்வாளர், வரைபட உதவியாளர், வானிலை ஆய்வாளர் என மொத்தம் 74 பேர் பயணம் செய்தனர். இவ்வளவு பேருடன் கப்பலில் பயணம் செய்தும், கடலில் உள்ள ஐந்து ஆண்டுகளும் தனிமையில் கழிக்க வேண்டியிருக்கும் என்று அஞ்சினார் ஃபிட்ஸ்ராய்.

அவருக்கு அந்த அச்சம் ஏன்? கப்பல் கேப்டனாகிய ஃபிட்ஸ்ராய் மேட்டுக்குடியைச் சேர்ந்தவர். அவரது சமூக நிலைக்குக் கீழே உள்ளவர்களுடன் கூடி அளவளாவிப் பேச அவரது உள்ளம் அனுமதிக்கவில்லை. தனது சமூக அந்தஸ்துக்கு சமமான ஒருவருடன் மட்டுமே ஓய்வாகப் பேசிப் பழக முடியும் எனக் கருதினார். எனவே, தனது சமூக நிலைக்கு ஏற்ற ஒருவர் கப்பலில் தன்னுடன் பயணம் செய்தால் அவர்கள் இருவரும் ஒன்றாக உணவருந்தலாம், பேச்சுத் துணை இருக்கும் என எண்ணினார்.

பேச்சுத் துணையின்றித் தனியாகப் பயணம் செய்வது குறித்த அவரது அச்சத்திற்குக் காரணமும் இருந்தது. அவருக்கு முன்னர் அதே கப்பலை தலைமையேற்றுச் செலுத்திய கேப்டன், தனிமையில் வாடி மனத்தளர்வடைந்து தற்கொலை செய்துகொண்டார். அதுபோல தானும் தனிமையில் வாடி மனநலம் பாதிக்கப்பட்டு தற்கொலைக்குத் தள்ளப்படுவோமா என்று அஞ்சினார் கேப்டன் ஃபிட்ஸ்ராய்.

சார்ல்ஸ் டார்வின்

பட மூலாதாரம், Getty Images

பீகிள் கப்பலின் இரண்டாம் பயணம்

இரண்டு பாய்மரங்களும் பத்து பீரங்கிகளும் கொண்ட 235 டன் எடையுள்ள, கடல் ஆய்வுப் பயணங்களுக்காகத் தயாரிக்கப்பட்ட கப்பல்தான் பீகிள்.

இது மே 11, 1820இல் தயாராக்கப்பட்டது. தயாரான பின்னர் ஆறு ஆண்டுகள் ஓய்வில் இருந்த இக்கப்பல், கேப்டன் பிரிங்கிள் ஸ்டோக்ஸ் தலைமையில் 1826 முதல் 1830 வரை தென் அமெரிக்க கடற்பகுதிகளை ஆராய்ந்தது. கடலில் தனிமையில் வாடிய ஸ்டோக்ஸ் 1828 ஆகஸ்ட் 12 அன்று தற்கொலை செய்துகொண்ட பின்னர், ஃபிட்ஸ்ராய் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்தச் சூழலில்தான் 1831 முதல் 1836 வரை மீண்டும் தென் அமெரிக்க கடற்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள இரண்டாம் கடற்பயணம் திட்டமிடப்பட்டது. தனக்குச் சமமான சமூகப் பின்புலம் கொண்ட ஒருவரைக் கப்பலில் கூட்டிச் செல்ல முடிவு செய்து சரியான நபரைத் தேடினார் ஃபிட்ஸ்ராய்.

இந்தப் பின்னணியில்தான் அறிவியல் அறிந்த, அதே நேரம் மேட்டுக்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கப்பலில் பேச்சுத் துணைக்காகப் பயணம் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை ஃபிட்ஸ்ராய் லண்டனில் உள்ள தனது நண்பர்களுக்குத் தெரிவித்தார்.

இந்தச் செய்தி டார்வினின் ஆசிரியரும் தாவரவியல் விரிவுரையாளருமான ஜான் ஸ்டீவன்ஸ் ஹென்ஸ்லோவின் காதுகளை எட்டியது. இந்த வேலைக்கு மிகவும் பொருத்தமானவர், கேப்டன் ஃபிட்ஸ்ராயின் வயதை ஒத்த டார்வின்தான் என்று முடிவுக்கு வந்த ஹென்ஸ்லோவின் பரிந்துரையின் பேரில், டார்வின் பீகிள் கடல் பயணத்திற்காக ஃபிட்ஸ்ராயிடம் அனுப்பப்பட்டார்.

சார்ல்ஸ் டார்வின்

பட மூலாதாரம், Getty Images

கப்பல் பயணம்

கடந்த 1831ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் நாள் டார்வினையும் சுமந்துகொண்டு தனது இரண்டாவது கடற்பயணத்தை பீகிள் கப்பல் தொடங்கியது. உயிரின மாதிரிகள், பாறைகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றைச் சேகரித்து, அவற்றை அடையாளமிட்டு, ஒழுங்குபடுத்தி, இங்கிலாந்துக்கு கொண்டு சென்று ஆய்வு செய்யும் பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டது.

ஐந்தாண்டு காலம் நீடித்த இந்த கடற்பயணம் சாகசம் நிரம்பியதாக இருந்தது. கடல் உபாதைகள், கொள்ளைநோய்கள் உள்ளிட்ட பல்வேறு சவால்களைச் சந்தித்தபடியே பிரேசில், அர்ஜென்டினா, பெரு, மால்டீவுகள், சிட்னி, தென்னாப்பிரிக்கா என்று சுற்றியலைந்து, இறுதியில் 1836 அக்டோபர் 2 அன்று மீண்டும் இங்கிலாந்தை வந்தடைந்தது.

அந்த கடற்பயணம் முழுவதும் டார்வின் பல்வேறு ஆய்வுகளில் நேரத்தைச் செலவிட்டார். பல்வேறு நிலவியல் ஆய்வுகளை மேற்கொண்டார். தான் சென்ற பகுதியில் மண் அடுக்குகள் குறித்த தகவல்களைச் சேகரித்துக் குறிப்பெடுத்தார்.

எந்தத் திசையில் கப்பல் சென்றது, வானிலை நிலவரம் என்ன, எந்தத் தீவு அல்லது கடற்கரையில் இறங்கினார்கள், அங்கு மண் அடுக்கு எப்படி இருந்தது, எந்த நிறத்தில் மணல் இருந்தது, அங்கே இருந்த பாறைகள், கனிமங்கள் என நிலவியல் தரவுகளைச் சேகரித்தார்.

அதுபோலவே அப்பகுதியில் வாழ்ந்த நீர்வாழ் உயிரினங்கள், பறவைகள், விலங்குகள், ஊர்வனங்கள் என ஒவ்வோர் உயிரி குறித்தும் டார்வின் குறிப்பெடுத்துக் கொண்டார். மேலும், அப்பகுதியில் வாழ்ந்த மனிதர்கள் மற்றும் அவர்களின் சமூக வழக்கங்கள் குறித்தும் குறிப்புகளைச் சேகரித்தார். ஆங்காங்கே கிடைத்த பறவைகள், சிறு விலங்குகள் போன்ற உயிரினங்களைப் பிடித்து அவற்றைப் பதப்படுத்தித் திரட்டினார். அவற்றின் வடிவம் போன்றவற்றை நுட்பமாக வரைந்துகொண்டார்.

புதைபடிவ தொல்லெச்சங்களைத் தேடித் தேடிச் சேகரித்தார். அந்தப் பயணத்தில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட உயிரின மாதிரிகளையும் புதைபடிவங்களையும் சேகரித்து இங்கிலாந்துக்கு அனுப்பினார்.

சார்ல்ஸ் டார்வின் தனது சுயசரிதையில், “பீகிள் பயணம் என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நிகழ்ச்சி. என் முழு வாழ்க்கையையும் அது வடிவமைத்துவிட்டது” என்று சிறப்பித்துக் கூறினார்.

“பீகிள் பயணத்தைத் தொடங்கும்போது நான் வைதீகமான நம்பிக்கை கொண்டிருந்தேன். எந்தவொரு நன்னடத்தை குறித்த சந்தேகங்களுக்கும் நான் பைபிளை ஆதாரமாகக் காட்டியே விளக்கம் தருவேன். இதைக் கண்ட பல கப்பல் அதிகாரிகள் பலமுறை கேலி செய்துள்ளனர். 1836 முதல் 1839க்குள் மெல்ல மெல்ல பழைய நம்பிக்கைகள் கரைந்து கொண்டு வந்தன” என்கிறார் டார்வின்.

பீகிள் பயணத்தின்போது தென் அமெரிக்காவில் ஆய்வு செய்த டார்வின், அங்கே பல்வேறு உயிரிகளின் தொன்மையான தடயங்களைக் கண்டறிந்தார். ஐரோப்பாவில் இல்லாத பல உயிரிகள் தென் அமெரிக்காவில் இருந்தன. இந்த வினோத விலங்குகளின் மூதாதையர்களின் தடயம் நிலத்துக்கடியில் மண் அடுக்குகளில் கிடைத்தது. இவற்றைத் தொகுத்துதான் பரிணாமக் கொள்கையை வகைப்படுத்தினார் டார்வின்.

சார்ல்ஸ் டார்வின்

பட மூலாதாரம், Getty Images

கலாபகோஸ் தீவுகள்

உலகில் எங்கும் காண முடியாத தனித்துவம் வாய்ந்தவை கலாபகோஸ் தீவுகள். சூரிய ஒளியில் தங்கம் போல் ஒளிரும் கடல், எரிமலைக் கற்கள் மீது குளிர்காயும் இகுவானாக்கள், நீல நீரில் சீறிப்பாயும் கடல் சிங்கங்கள், பென்குயின்கள், நீல நிறக் கால்களை அசைத்து நடமாடும் ‘ப்ளூ-ஃபூட்டெட் பூபி’ பறவைகள்.

தீவுகளின் நடுவே முள்ளுக்கற்றாழை மலர்களை மென்றுண்ணும் மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலான நில இகுவானாக்கள், புதர்களின் நடுவே அசைந்து செல்லும் நான்கு அடி நீளமுள்ள ராட்சத ஆமைகள் என விசித்திர விலங்குகள் வாழும் இத்தீவுகளில், குருவி போன்ற அளவில் விசித்திரமான ஃபின்ச் பறவைகளும் பரவலாகக் காணப்பட்டன. இவை அனைத்தும், ஏதோ வேற்றுலகுக்கு வந்துவிட்டோம் என்ற மனநிலையை ஏற்படுத்தின.

ஆனால் இத்தீவுகள் டார்வினுக்கு உடனடி ஈர்ப்பாக அமையவில்லை. “செங்குத்தாகப் பொழியும் வெப்பமான சூரிய கதிர்கள் கருப்பு எரிமலைக் கற்களை அடுப்பைப் போலச் சூடாக்கி, காற்றையே மூச்சுத் திணற வைக்கிறது. தாவரங்களுக்குக்கூட ஒருவித விரும்பத்தகாத மணம் உள்ளது; நரகத்தைக் கற்பனை செய்தால் எப்படி இருக்குமோ அதுபோல இந்தத் தீவுகள் உள்ளன” எனத் தனது கடற்பயணக் குறிப்பேட்டில் பதிவு செய்தார்.

ஆனால், அந்தத் தீவுகளில் எங்கும் காணப்பட்ட ஃபின்ச் பறவைகள் அவரது கவனத்தை ஈர்த்தன. முதல் பார்வைக்கு அனைத்தும் ஒரே மாதிரித் தோன்றின. சாம்பல், பழுப்பு, கருப்பு அல்லது ஆலிவ் நிற இறகுகள்; குருவியை ஒத்த உடல்; குறுகிய வட்டமான சிறகுகள்; பக்கமாகச் சாய்ந்தது போலத் தோன்றும் வால் — இவை பொதுவான அம்சங்கள்.

ஆண் பறவைகள் வளர்ந்த பின் முழுக்கக் கருமையாக மாறின; பெண் பறவைகள் மங்கலான சாம்பல் நிறத்தில் இருந்தன. அவற்றின் வேறுபாடு பெரிதாகத் தெரியாததால், டார்வின் சேகரித்த மாதிரிகளை மற்ற சேகரிப்புகளோடு சேர்த்து வைத்துவிட்டார்.

நான்கு ஆண்டுகள், ஒன்பது மாதங்கள், ஐந்து நாட்கள் நீண்ட கடல் பயணத்திற்குப் பிறகு, 1836 அக்டோபர் 2 அன்று டார்வின் இங்கிலாந்து திரும்பினார். சேகரித்த அனைத்தையும் ஒழுங்குபடுத்தத் தொடங்கினார்.

அவர் பறவையியல் நிபுணர் அல்ல. குறிப்பாக கலாபகோஸில் இருந்து கொண்டு வந்த பறவைகளை அடையாளம் காண்பதில் அவருக்குச் சிரமம் ஏற்பட்டது. அவை சாம்பல் கதிர்க்குருவி இனம் போல ‘வ்ரென்’ வகையைச் சேர்ந்த சாதாரண பறவைகள் என்றுதான் அவர் முதலில் நினைத்தார். அதனால் அவற்றுக்குப் பெரிதாக முக்கியத்துவம் அளிக்கவில்லை.

சார்ல்ஸ் டார்வின், பரிணாம கோட்பாடு

பட மூலாதாரம், Getty Images

ஃபின்ச் பறவைகள்

கடந்த 1837 ஜனவரி 4 அன்று, கலாபகோஸில் இருந்து சேகரித்த 31 பறவை மாதிரிகளைப் புகழ்பெற்ற பறவையியல் அறிஞர் ஜான் கோல்டிடம் அடையாளம் காண ஒப்படைத்தார். கோல்டு அவற்றை ஆராய்ந்தபோது வியப்பான உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

அவற்றின் உடலமைப்பு சற்றேறக்குறைய ஒரேபோல அமைந்திருந்தது. ஆனால் இந்தப் பறவைகளின் அலகு வடிவம் மட்டும் வேறுபட்டிருந்தது.

வீட்டுக் காகம், அண்டங்காக்கை, செம்பழுப்புவால் காகம் எல்லாம் காகம் எனும் வகையைச் சேர்ந்தவை. அதுபோல, இந்தப் பதிமூன்று இனங்களும் (உண்மையில் 14; ஆனால் ஒரு இனத்தை டார்வின் சேகரிக்கவில்லை) ஒரே வகையைச் சேர்ந்தவை. “மின்னல் பட்டது போல” டார்வின் அதிர்ச்சியடைந்தார். ஏன் உடல் ஒரேபோல உள்ளது, அலகு மட்டும் மாறுகிறது என்ற கேள்வி அவரைச் சிந்திக்க வைத்தது.

தனது குறிப்பேட்டைத் திருப்பி மீள்பார்வை செய்தபோது, அவை உண்ணும் உணவில் விடை இருப்பது புலப்பட்டது. சில ஃபின்ச்கள் விதைகளை உண்பவை; சில பூச்சிகளை உண்ணும். ராட்சத ஆமைகள், நில இகுவானாக்கள், கடல் இகுவானாக்கள் ஆகியவற்றின் உடலில் இருக்கும் ஒட்டுண்ணிகளை நசுக்கி, நிலவாழ் ஃபின்ச்கள் அவற்றின் வலுவான அலகுகளால் எடுத்துண்ணும்; இவற்றால் பறக்க முடியாது. அங்குமிங்கும் தத்தித்தத்திதான் செல்லும்.

முட்டைகளைக் கற்களில் அடித்து உடைத்துண்ணும் பழக்கமும் சில வகை ஃபின்ச்களுக்கு உண்டு. “வாம்பயர் ஃபின்ச்” என அழைக்கப்படும் இன்னொரு வகை, கவனமின்றி இருக்கும் பூபி பறவைகளின் உடலில் குத்தி ரத்தம் அருந்தும். குத்திக் குருதியைக் குடிக்க உதவும் படியாக அந்த வகை ஃபின்ச்களுக்குக் கூர்மையான அலகு இருந்தது.

தாவர விதைகள் போன்ற தாவர உணவு உட்கொள்ளும் ஃபின்ச்களுக்கும், நிலவாழ் ஃபின்ச்களுக்கும் நசுக்கிப் பிடிக்கும் தன்மை கொண்ட அலகு வடிவம் இருந்தது.

மர இடுக்குகளில் வாழும் பூச்சிகளை உண்ணும் மரம்சார் ஃபின்ச்களுக்குக் கிள்ளியெடுக்கும் வகையில் அலகு இருந்தது. காக்டஸ் ஃபின்ச், வார்ப்ளர் ஃபின்ச், வுட்பெக்கர் ஃபின்ச் ஆகியவற்றுக்குத் துளையிட வழிசெய்யும் நீண்ட குறுகிய அலகுகள்.

கிளைகள், கற்றாழை முட்கள் போன்றவற்றைக் கருவியாகப் பயன்படுத்தி உலர்ந்த மரக்கிளைகளுக்குள் இருக்கும் புழுக்களை நோண்டியெடுத்துண்ணும் வழக்கம் கொண்ட வுட்பெக்கர் ஃபின்ச்கள், மாங்க்ரோவ் ஃபின்ச்கள் போன்றவற்றுக்குப் பிடிக்கும் தன்மை கொண்ட அலகுகள், முள்ளுக்கற்றாழை மலர்களை உண்பவற்றுக்கு முட்களைத் தவிர்க்க உதவும் முனை கொண்ட அலகு என, எந்த உணவை உண்கிறதோ அதற்கு உதவும் விதமான அலகுகளைக் கொண்டதாக இந்த 13 வகை ஃபின்ச்களின் அலகுகளும் அமைந்திருந்தன என்பதை டார்வின் இனங்கண்டார்.

சார்ல்ஸ் டார்வின், பரிணாம கோட்பாடு

பட மூலாதாரம், Getty Images

ஒன்றும் பலவும்

ஒரே மாதிரியாகத் தோன்றும் பறவைகள், வெவ்வேறு அலகு அமைப்புகளால் வெவ்வேறு வாழ்வியல் முறைகளைப் பின்பற்றுகின்றன.

“ஒரே இனத்தை எடுத்துக்கொண்டு பல நோக்கங்களுக்கு ஏற்றபடி மாற்றியமைத்தது போல் இருக்கிறது” என்று அவர் சிந்தித்தார். 13 வகை ஃபின்ச்களின் அலகு வடிவங்களுக்கும் அவற்றின் உணவுமுறைக்கும் இடையே இருந்த தொடர்பு, பரிணாம வளர்ச்சி குறித்த அவரது சிந்தனையைத் தூண்டியது.

நிலப்பரப்பில் இருந்து சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தத் தீவுகளில் உயிர் வாழ்வது எளிதல்ல என்பதை டார்வின் உணர்ந்தார். பகலில் கடும் வெப்பம்; இரவில் கடும் குளிர்; உணவுப் பற்றாக்குறை.

இந்த நிலைகளில், ஒரு பொது மூதாதையில் இருந்து பல புதிய இனங்கள் உருவாகியிருக்கலாம் என்ற கருத்து அவருக்கு ஏற்பட்டது.

சிலவற்றுக்கு வலுவான அலகு உருவாகிக் கடின விதைகளை உடைக்க உதவியது. சிலவற்றுக்கு மெல்லிய அலகு உருவாகிப் பூச்சிகளை எடுக்க உதவியது. ஒரு இனமோ கருவி பயன்படுத்தும் திறனையும் பெற்றது. இவ்வாறான சிறு மாற்றங்கள் வெவ்வேறு உணவுகளை உண்டு உயிர்வாழ அவற்றைத் தகவமைத்தது.

தலைமுறைகள் கடந்தபோது அந்த அம்சங்கள் நிலைபெற்றன. ஒவ்வொன்றும் தனித்தனிப் பறவை இனமாக மாறிவிட்டதாக டார்வின் கருதினார். இதிலிருந்துதான் இயற்கைத் தேர்வு என்ற கருத்து டார்வினின் மனதில் உறுதிப்பட்டது.

ஏதோவொரு காலத்தில் நிலப்பரப்பிலிருந்து சில ஃபின்ச் பறவைகள் இந்தத் தீவுக் கூட்டங்களை அடைந்தன. இந்தத் தீவுகளில் உணவுப் பற்றாக்குறை. எனவே கிடைத்ததை எல்லாம் உண்ண வேண்டி வந்தது. ஆணி போன்ற வடிவில் நீளமாகக் குறுகிய அலகு கொண்ட பறவை எளிதில் மர இடுக்குகளில் உள்ள பூச்சிகளை எடுத்துண்டு பசியாற முடிந்தது.

ஆனால் இவற்றுக்கு விதைகளைச் சூழ்ந்துள்ள ஓட்டை உடைத்து விதையை உண்ணுவது எளிதல்ல. அதேநேரம், சுத்தியல் போல சற்றே பெரிய உருவில் அலகு கொண்ட பறவையால் விதையை உண்ண முடிந்தது; ஆனால் மர இடுக்குகளில் உள்ள பூச்சிகளைப் பிடிக்க முடியவில்லை.

கலாபகோஸ் தீவுக் கூட்டத்தின் ஐல்ஸ் தீவிலுள்ள டார்வின் ஃபின்ச் பறவை

பட மூலாதாரம், Getty Images

பரிணாம வளர்ச்சி

அலகுகள் அவற்றின் செயல்பாட்டிற்கு ஏற்றவாறு காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி அடைந்தன. இடுக்குகளில் இருந்து பூச்சி புழுக்களை எடுக்கும் ஃபின்ச்களுக்கு நீண்ட மெல்லிய அலகு.

மொட்டுகள், கனிகளை உண்பவற்றுக்கு அரைக்கும் தன்மை கொண்ட வலுவான அலகு. கற்றாழைக் கனிகளில் உள்ள விதைகளை எடுப்பதற்கு நீளமான முனை அலகு. தரையில் கிடைக்கும் விதைகளை உடைக்கக் குறுகிய தடித்த அலகு.

இவ்வாறு உணவுப் பழக்க வேறுபாடு காரணமாக அலகு அமைப்பு வேறுபாடு ஏற்பட்டு, பின்னர் இவை தனித்த இனங்களாகப் பரிணாமம் பெற்றன. இறுதியில், இந்தத் தீவுக்கூட்டத்தில் 14 தனித்த இனங்கள் உருவாயின; ஒவ்வொன்றுக்கும் தனித்த உணவுமுறை, அதற்குத் தகவமைந்த அலகு வடிவம்; இதுவே டார்வின் அளித்த விளக்கம்.

“ஒரே மரத்தின் கிளைகள் பல திசைகளில் நீளும்” என்பது போல, பரிணாம வளர்ச்சி ஒரே வேரிலிருந்து பல இனங்களை உருவாக்கியுள்ளதாக டார்வின் புரிந்துகொண்டார். இயற்கைத் தேர்வு மூலம் புதிய இனங்கள் பழைய இனங்களில் இருந்து உருவாகின்றன என்ற கருத்திற்கு கலாபகோஸ் ஃபின்ச்கள் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தன. டார்வின் உருவாக்கிய பரிணாமக் கோட்பாட்டிற்கு முக்கிய ஆதாரமாக அமைந்தன.

சார்ல்ஸ் டார்வின், பரிணாம கோட்பாடு

பட மூலாதாரம், Getty Images

தொடரும் பரிணாம படிநிலை வளர்ச்சி

பரிணாம படிநிலை வளர்ச்சி என்பதை நாம் ஏதோ கடந்த கால நிகழ்வு என்றுதான் கருதுகிறோம். ஆனால் இன்றும் பரிணாமம் நடந்துகொண்டேதான் உள்ளது. கலாபகோஸ் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த டாப்னே என்ற சிறு தீவுக்குச் சுமார் 1981இல் வேறொரு தீவிலிருந்து பறந்து வந்த கற்றாழை உண்ணும் ஆண் ஃபின்ச் பறவை ஒன்று, அந்தத் தீவைச் சேர்ந்த நிலவாழ் ஃபின்ச் பறவைகளுடன் செய்த இனப்பெருக்கம் காரணமாகப் புதிய வகை ஃபின்ச் இனம் உருவாகியுள்ளதை ஆய்வாளர்கள் இனங்கண்டுள்ளனர்.

ஈஸ்ட் போன்ற ஒரு செல் உயிரிகளில் சில மணிநேரங்களில் அடுத்த தலைமுறை உருவாகும். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சோதனைக் குடுவையில் பல லட்சம் தலைமுறைகளை வளர்த்துப் பரிணாம படிநிலை வளர்ச்சியை அடைந்ததைச் சோதனை செய்துள்ளனர். பரிணாம படிநிலைத் தத்துவம் இன்று வெறும் தத்துவம் மட்டுமல்ல; பூமியின் வடிவம் உருண்டை, பூமி சூரியனைச் சுற்றுகிறது என்பதுபோல ஓர் உண்மை.

இருப்பினும் சிலர், எடுத்துக்காட்டாக ஸ்ரீபாத் பக்தி மாதவ பூரி போன்றவர்கள், “டார்வின் கதை முடிந்தது” என்று அறிவிப்பதில் ஆர்வமாக உள்ளனர். சமூக ஊடகங்களில் தன்னை “டார்வினின் சவப்பெட்டி தூக்கும் மனிதன்” என அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒருவர், டார்வினின் கருத்துகள் ஆபத்தானவை, அவை தவறானவை, “பைபிள் என்பது கடவுளால் கூறப்பட்ட இறை வசனம்”, “ஆரம்பத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார்” என்பவையே உண்மை என்று வாதாடி, வலைப்பதிவுகளில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்.

இந்திய அரசியல்வாதி ஒருவரும் இதேபோல பரிணாமக் கொள்கையை எதிர்த்து ஒரு விமர்சனத்தை முன்வைத்தார். “குரங்குகள் மனிதர்களாக மாறுவதை நாங்கள் பார்த்ததில்லை; ஆகவே டார்வின் முற்றிலும் தவறு” என்றார். இணைய உலகமே இதுபோன்ற கூற்றுகளால் நிரம்பியுள்ளது. ஒருவர் டார்வினின் ‘தீய தலையை’ வெட்டி வீழ்த்திவிட்டதாக அறிவிக்கிறார்; இன்னொருவர் இறுதியாக அவரை மறுத்துவிட்டதாகச் சொல்கிறார்.

உண்மையில் டார்வின் 1882ஆம் ஆண்டிலேயே மறைந்துவிட்டார். வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நியூட்டனின் அருகில் அடக்கம் செய்யப்பட்டார். ஆனால், அவர்மீது தொடர்ந்து வீசப்படும் வசைக்கணைகள், ஆண்டுதோறும் மதிப்புமிக்க இதழ்களில்கூட “டார்வின் கோட்பாடு இறந்துவிட்டது” என்று கூறும் கட்டுரைகள் ஆகியவற்றைப் பார்க்கும்போது, மார்க் ட்வெய்ன் கூறியபடி, “அவரது மரணம் சற்றே மிகைப்படுத்தப்பட்டுள்ளது” என்று சொல்லத் தோன்றுகிறது.

சார்ல்ஸ் டார்வின், நிலவியலாளர் சார்லஸ் லைல் மற்றும் தாவரவியலாளர் ஜோசப் டால்டன் ஹூக்கர் ஆகியோர் இடம்பெற்றிருக்கும் ஓவியம்

பட மூலாதாரம், Getty Images

தொடரும் தயக்கம்

அவரது கோட்பாடு வெளியான காலத்திலிருந்தே எதிர்ப்புகள் எழுந்தன. ஒருபுறம் அவரது சமகால அறிவியலாளர்களில் சிலர் சந்தேகங்களை முன்வைத்தனர்; மற்றொருபுறம், உயிர் உருவாக்கம் என்பது அற்புத சக்தியுடைய கடவுளின் ‘படைப்புச் செயல்’ என்று நம்பிய மத அடிப்படைவாதிகளும் எதிர்த்தனர்.

காலப்போக்கில், பரிணாம படிநிலை வளர்ச்சியை உறுதிப்படுத்தும் பல்வேறு தொல்லெச்ச சான்றுகள், மரபணு ஆய்வுகள், பாறைச் சான்றுகள் ஆகியவை குவிந்தன. அவற்றை விளக்கும் பரிணாமக் கோட்பாடும் விரிவடைந்தது. ஆனால், பரிணாம படிநிலை வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள மத அடிப்படையிலான தயக்கம் இன்னும் தொடர்கிறது.

பரிணாம வளர்ச்சி உண்மை என்ற கருத்து, சிலர் கருதுவது போல ‘நம்பிக்கை’ அல்லது குறிப்பிட்ட கருத்துக்குக் கொள்ளும் கண்மூடித்தனமான ‘விசுவாசம்’ அல்ல. டார்வினுக்கு பிறகு கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் சேகரிக்கப்பட்ட தரவுகளில் இருந்து எடுக்கப்பட்ட சிறந்த அறிவியல் முடிவு.

முதலில், கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வக சூழலில் நடைபெறும் சிறு அளவிலான மாற்றங்களுக்கான நேரடிச் சான்றுகள் உள்ளன. டிரோசோபிலா எனும் பூச்சிமீது நடத்தப்பட்ட மரபியல் ஆய்வுகள் மிகவும் பரவலாக அறியப்பட்டவை.

மேலும், கடந்த 1988ஆம் ஆண்டு முதல் ரிச்சர்ட் லென்ஸ்கி தலைமையில் தொடங்கிய ஈ.கோலை நீண்டகால பரிணாமப் பரிசோதனை குறிப்பிடத்தக்கது. லட்சக்கணக்கான தலைமுறைகள் வளர்க்கப்பட்ட இந்தப் பாக்டீரியா பரிசோதனையில், இயற்கைத் தேர்வு செயல்படுவது கண்கூடாகப் பதிவாகியுள்ளது.

குறிப்பாக, சிட்ரிக் அமிலத்தை வளர்ப்பு ஊட்டச்சத்தாகப் பயன்படுத்த முடியாதிருந்த ஈ.கோலை இனங்களில், புதிய பரிணாம படிநிலை வளர்ச்சி தோன்றி, சிட்ரிக் அமிலத்தை ஊட்டமாகப் பயன்படுத்தும் திறன் வளர்ச்சி அடைந்தது. தொடக்க நிலையில் இருந்த ஈ.கோலை இனத்திலும், பிற அறியப்பட்ட ஈ.கோலை இனங்களிலும் இல்லாத இந்தத் தன்மை, சூழலுக்கேற்ப உருவான தகவமைப்பாகும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

“நீரில் இறங்கினால் நீந்தக் கற்றுக்கொள்வார்கள்” என்பது போல, சூழல் அழுத்தம் உயிரினத்தில் பரிணாம படிநிலை வளர்ச்சியைத் தோற்றுவிக்கிறது.

இரண்டாவதாக, இயற்கைச் சூழலிலேயே நிகழும் பரிணாம படிநிலை வளர்ச்சியை நாம் இனங்கண்டுள்ளோம். சில பட்டாம்பூச்சி இனங்களில் சிறகின் நிறமாற்றம், தொழில்துறை மாசு சூழலுக்கு ஏற்ப உருவானது. பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு எதிராகப் பரிணாம படிநிலை வளர்ச்சி பெற்ற புதுவகைப் பூச்சிகள் முதலிய அனைத்தும் இயற்கைத் தேர்வு செயல்படுவதற்கான சமகால எடுத்துக்காட்டுகள்.

இப்போது அழிந்துபோன உயிரினங்களை விட்டுவிட்டு, இன்றும் உயிருடன் இருக்கும் உயிரினங்களைக் கவனித்தாலும் பரிணாம படிநிலை வளர்ச்சியின் தடயங்கள் தென்படுகின்றன. ஒவ்வொரு உயிரினத்தினுள்ளும் ‘எச்சச் சுவடுகள்’ காணப்படுகின்றன.

மனித உடலில் காணப்படும் குடல்வால் அதன் ஒரு எடுத்துக்காட்டு. நமது மூதாதையருக்குப் பயன்பட்ட அமைப்பு, இன்று குறைந்த பயன்பாட்டுடன் எச்சமாகவே உள்ளது.

பரிணாம உயிரியல் அறிஞர் ஸ்டீபன் ஜே கூல்ட் முன்வைக்கும் கேள்வி சிந்திக்கத் தூண்டுகிறது.

ஒவ்வோர் இடத்திற்கும் கடவுள் தனித்த உயிரினங்களைப் படைத்தார் என்ற வாதம் உண்மையானால், கலாபகோஸ் தீவுகளில் உள்ள தாவரங்களும் விலங்குகளும், 600 மைல் தொலைவில் கிழக்கே உள்ள ஈக்வடார் நிலப்பரப்பின் உயிரினங்களை மிகவும் ஒத்திருப்பதற்குக் காரணம் என்ன?

கலாபகோஸின் சூழல் முற்றிலும் வேறுபட்டது; குளிர்ந்த கடலோட்டங்கள், எரிமலைத் திண்ம அடித்தளம். கடவுள் படைப்பு என்றால், இந்தத் தீவுகளுக்கு ஏற்ற தனி உயிரிகள்தானே படைக்கப்பட்டிருக்க வேண்டும்? ஏன் இந்தத் தீவில் உள்ள எல்லா உயிரினங்களும் ஈக்வடார் நிலப்பரப்பின் உயிரினங்களுடைய சாயலில் உள்ளன? இவற்றுக்கிடையே சிறிய வேறுபாடுகள் மட்டுமே இருப்பது ஏன்?

ஸ்டீபன் ஜே கூல்ட் கூறுவது போல, ஈக்வடாரில் இருந்து உயிரினங்கள் கலாபகோஸ் தீவுக்கூட்டத்திற்குக் குடிபெயர்ந்து, பின்னர் இயற்கைத் தேர்வு மூலம் வேறுபட்டுப் புதிய இனங்களாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பதே பொருத்தமான விளக்கம். அதாவது, ஒற்றுமை பொதுமூலத்தைச் சுட்டுகிறது; வேறுபாடு சூழல் தழுவலைக் காட்டுகிறது.

(கட்டுரையாளர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்)

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU