Home தேசிய national tamil ஃபேஷன் டிசைனர் ஆவது எப்படி? சென்னை, கோவையில் உள்ள கல்வி நிறுவனங்கள், வேலை, ஊதியம் உள்பட...

ஃபேஷன் டிசைனர் ஆவது எப்படி? சென்னை, கோவையில் உள்ள கல்வி நிறுவனங்கள், வேலை, ஊதியம் உள்பட முழு விவரம்

6
0

SOURCE :- BBC NEWS

பேஷன் டிசைனர் ஆவது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

ஆண்டு 2006.

பிகாரின் சப்ரா மாவட்டம்.

இந்தியாவின் லட்சக்கணக்கான குழந்தைகளைப் போலவே கௌரவ் கோவிந்தும் சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெயரை ஒளிரச் செய்ய விரும்பினார்.

கிரிக்கெட் தான் தனது முதல் விருப்பம் எனக் கூறும் கௌரவ், வாழ்க்கை தன் கையில் மட்டைக்குப் பதிலாக ஸ்கெட்ச் பென்சிலைக் கொடுத்தது என்கிறார்.

ரேம்ப் வாக் செய்யும் மாடல்கள், மின்னும் விளக்குகள், அழகான வடிவமைப்புகளை கண்டு எழும் கைதட்டல்கள்… ஃபேஷன் உலகத்துடனான கௌரவின் உறவு இங்கிருந்துதான் தொடங்குகிறது.

அதன்பிறகு, கௌரவ் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள காங்க்ராவின் தேசிய ஃபேஷன் தொழில்நுட்பக் கழகத்தில் பயின்றார், புகழ்பெற்ற வடிவமைப்பாளர்களுடன் பணியாற்றினார், ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்றை உருவாக்கினார். இப்போது என்ஐஎஃப்டி-யின் வாரணாசி வளாகத்தில் கற்பித்து வருகிறார். ஃபேஷன் டிசைனிங் என்பது வாழ்க்கையில் ஒரு முழுமையான தொழில் பாதை என்பதை அவரது கதை வெளிப்படுத்துகிறது.

இந்தப் பாதையை அடைவது எப்படி? இந்தப் பாதையில் பயணிப்பவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

நாட்டுக்கு ஃபேஷன் டிசைனிங் தொழில் துறை எவ்வளவு முக்கியம்?

பேஷன் டிசைனர் ஆவது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் கௌரவ் கோவிந்த் போன்ற ஆயிரக்கணக்கானோர் இன்று ஃபேஷன் உலகத்தைத் தங்களது தொழிலாகத் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.

இங்குள்ள ஜவுளி மற்றும் ஆடைத் தொழில் சுமார் 4.5 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. இது விவசாயத்திற்கு அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது பெரிய வேலைவாய்ப்பு வழங்கும் துறையாகக் கருதப்படுகிறது. இதில், பெண்கள் மற்றும் கிராமப்புறப் பின்னணியிலிருந்து வருபவர்களின் பங்களிப்பு அதிகமாக இருப்பது ஒரு குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

இந்த துறை, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3% மற்றும் மொத்த ஏற்றுமதியில் 12% பங்களிப்பு செய்கிறது. இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய ஜவுளிச் சந்தையாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த தொழில் துறையை 15-20 சதவிகிதம் வளர்க்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

அரசின் கொள்கைகள், அதிகரித்து வரும் உள்நாட்டு நுகர்வு, இணைய வர்த்தகத்தின் விரிவாக்கம் மற்றும் உலகளாவிய தேவை ஆகிய காரணங்களால் ஃபேஷன் வணிகம் புதிய வடிவம் பெற்றுள்ளது. இதன் காரணமாக, இந்தத் துறைக்கு இப்போது வடிவமைப்பாளர்கள் மட்டுமல்லாமல், மேலாண்மை (Management), பிராண்டிங், தரவு (Data) மற்றும் உத்தி (Strategy) ஆகியவற்றைப் பற்றிய புரிதல் உள்ள நிபுணர்களும் தேவைப்படுகிறார்கள்.

ஆனால், இந்தத் துறையில் சிறந்து விளங்கத் தேவையான தனித்துவமான பண்புகள் யாவை?

ஒய்.டபிள்யூ.சி.ஏ-வில் ஃபேஷன் டிசைனிங் பாடத்திட்டத்தைக் கற்பித்த சுனைனா துவாரி தாஸ் இது பற்பற்றி கூறுகையில், “ஃபேஷன் டிசைனர்கள் என்பவர்கள் தங்கள் ஆக்கப்பூர்வமான சிந்தனை, ஆராய்ச்சி மற்றும் கற்பனை மூலம் துணிகள், அணிகலன்கள் மற்றும் ஃபேஷன் தயாரிப்புகளை வடிவமைக்கும் நிபுணர்கள். அவர்கள் அழகான ஆடைகளை மட்டும் தயாரிப்பதில்லை, மாறாக ஒவ்வொரு வடிவமைப்பின் மூலமும் ஒரு கதை, அடையாளம் மற்றும் சிந்தனையை முன்வைக்கிறார்கள். ஒரு ஃபேஷன் டிசைனரின் வேலை, ஆடை எப்படித் தெரியும் என்பதிலிருந்து மட்டும் தொடங்குவதில்லை, அதற்கு முன்பே அவர்கள் மாறிவரும் ஃபேஷன் போக்கை புரிந்துகொள்கிறார்கள், மக்களின் விருப்பம் மற்றும் சந்தையின் தேவையை ஆய்வு செய்கிறார்கள், துணி-நிறம்-அமைப்பு குறித்து ஆராய்ச்சி செய்கிறார்கள், பின்னர் தங்கள் யோசனைகளை வரைபடம் மற்றும் வடிவமைப்பாக மாற்றுகிறார்கள்.”

மேலும் அவர், “எந்த வடிவமைப்புக்கு எந்தத் துணி சரியாக இருக்கும், அதன் வடிவம் (Pattern) எப்படி இருக்கும் மற்றும் அது அணிவதற்கு எவ்வளவு வசதியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்பதையும் ஃபேஷன் டிசைனர்களே தீர்மானிக்கிறார்கள். இன்றைய காலத்தில் ஃபேஷன் டிசைனரின் பங்கு ஆக்கப்பூர்வமானது மட்டுமல்லாமல், வியூகம் சார்ந்ததும் கூட. அவர்கள் டிரெண்ட் அனாலிசிஸ் பிராண்ட் அடையாளம், வாடிக்கையாளர் நடத்தை மற்றும் உற்பத்தி-சந்தைப்படுத்தல் குறித்த புரிதலையும் கொண்டிருக்க வேண்டும்.” என்றார்.

ஃபேஷன் டிசைனர்கள் என்பவர்கள் ஆடைகளின் மூலம் மக்களின் அடையாளத்தை உருவாக்குபவர்கள் மற்றும் ஃபேஷனை கலையிலிருந்து வணிகத்துடன் இணைப்பவர்கள் என்கிறார் கௌரவ் கோவிந்த்.

ஃபேஷன் டிசைனிங் என்பது தையல் வேலை மட்டுமா?

பேஷன் டிசைனர் ஆவது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

“ஃபேஷன் டிசைனிங் என்பது ஆக்கப்பூர்வமான சிந்தனை கொண்ட மற்றும் ஆடை, ஜவுளி மற்றும் அணிகலன்கள் வடிவமைப்பதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொரு மாணவருக்குமானது. வணிகவியல், கலை அல்லது அறிவியல் என எந்தப் பின்னணியைக் கொண்ட மாணவர்களும் ஃபேஷன் டிசைனிங் படிக்கலாம். பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்,” என சுனைனா கூறுகிறார்.

கலைத்துறை மாணவர்கள் தங்கள் கதை சொல்லும் திறன் மற்றும் கலாசார புரிதல் மூலம் இதில் ஜொலிக்க முடியும். அறிவியல் பின்னணி கொண்டவர்கள் தொழில்நுட்பம், பகுப்பாய்வு மற்றும் விநியோகச் சங்கிலியில் முன்னேறலாம். அதே நேரத்தில், வணிகவியல் மாணவர்கள் பிராண்டிங், சில்லறை வணிகம் மற்றும் ஃபேஷன் வணிகத்தில் தங்களது இடத்தைப் பிடிக்க முடியும்.

ஜேடி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியின் செய்தித் தொடர்பாளர் ஸ்ரிருஷ்டி ஜெய்ஸ்வாலின் கூற்றுப்படி, ஃபேஷன் டிசைனிங் அனைவருக்குமானது. ஆனால் இதற்கு சில திறன்கள் இருப்பது அவசியம். அவை:

  • ஆக்கப்பூர்வமான மற்றும் புதிய யோசனைகள்
  • வலுவான கவனிப்புத் திறன் மற்றும் அதை ஒரு காட்சியாக மாற்றும் புரிதல்
  • பொறுமை மற்றும் ஒவ்வொரு நுணுக்கமான விவரங்களிலும் கவனம் செலுத்தும் பழக்கம்
  • புதிய போக்குகள் மற்றும் பல்வேறு கலாசாரங்களைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம்
  • ஒவ்வொரு நாளும் புதிதாகக் கற்றுக்கொள்ளும் ஆர்வம்

பொதுவான கருத்தின்படி ஃபேஷன் டிசைனிங் என்றால் தையல் வேலை என்று மட்டும் கருதப்படுவதாகக் கூறுகிறார் சுனைனா. “ஆனால் உண்மை என்னவென்றால், இழையிலிருந்து துணி எப்படி உருவாகிறது மற்றும் துணி சந்தையை எப்படி அடைகிறது என்பதைப் புரிந்துகொள்வதும் இந்த வேலையின் ஒரு பகுதிதான்.” என்கிறார்.

ஃபேஷன் டிசைனர் மாறிவரும் போக்கை (Trend) கவனிக்க வேண்டும், சந்தைகளைச் சுற்றிப் பார்க்க வேண்டும், துணியின் கலாசார, வரலாற்று மற்றும் சமூக முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். பல மணிநேர வரைபடப் பயிற்சி (Sketching), சோதனை முயற்சிகள் (Trial-error) மற்றும் கடின உழைப்பு ஆகியவை இந்தத் தொழிலில் அடங்கும்.

வடிவமைப்பாளர்கள் இப்போது பொட்டிக்குடன் மட்டும் சுருங்கிவிடவில்லை என்கிறார் ஷ்ரிஷ்டி ஜெய்ஸ்வால், மாறாக சில்லறை வணிகம், ஊடகம், உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் தொழில் முனைவோர் துறைகளிலும் அவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

ஷ்ரிஷ்டி கூற்றுப்படி, ஃபேஷன் டிசைனிங் படிப்பவர்களுக்கு எதிர்காலத்தில் பல வழிகள் திறக்கப்படுகின்றன. உதாரணமாக, அவர்கள் ஃபேஷன் டிசைனர், ஃபேஷன் ஸ்டைலிஸ்ட், ஆடை அல்லது ஜவுளி வடிவமைப்பாளர், ஃபேஷன் பையர் அல்லது மெர்ச்சன்டைசர், இல்லஸ்ட்ரேட்டர், ஆடை வடிவமைப்பாளர், ஃபேஷன் உள்ளடக்க உருவாக்குநர் அல்லது ஆலோசகராகவும் மாறலாம்.

ஆரம்ப நிலையில் ஃபேஷன் டிசைனருக்கு ஆண்டுக்கு 3 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும் என்று அவர் கூறுகிறார். ஆனால், மூத்த வடிவமைப்பாளர்கள், பிராண்ட் உரிமையாளர்கள், ஆலோசகர்கள் இதைவிடக் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும்.

சம்பளம் குறித்து கௌரவ் கோவிந்த் கூறுகையில், “சம்பளம் என்பது ஒருவருக்கு எவ்வளவு அறிவு இருக்கிறது, புதிய போக்கை எவ்வளவு விரைவாகப் பிடிக்கிறார்கள் மற்றும் அவர்களின் வேலை எவ்வளவு தரமானதாக இருக்கிறது என்பதைப் பொறுத்தது. இருப்பினும், ஆரம்பத்தில் மாதத்திற்கு 30 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை எளிதாகக் கிடைக்கலாம்.” என்கிறார்.

பேஷன் டிசைனர் ஆவது எப்படி?

இதற்கு என்ன படிக்க வேண்டும்?

இதற்கான படிப்புகளை விளக்கிப் பேசிய கௌரவ் கோவிந்த், “பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு ஒருவருக்கு இந்தத் துறையில் செல்ல விருப்பம் இருந்தால், அவர்கள் பேச்சுலர் ஆஃப் டிசைன் (B.Des) இன் ஃபேஷன் டிசைன், பேச்சுலர் ஆஃப் சயின்ஸ் (B.Sc) இன் ஃபேஷன் டிசைன், டிப்ளோமா இன் ஃபேஷன் டிசைன் ஆகியவற்றைச் செய்யலாம்.” என்கிறார்.

“இவை தவிர, ஃபேஷன் ஸ்டைலிங், பேட்டர்ன் மேக்கிங் அல்லது பொட்டிக் மேனேஜ்மென்ட் போன்ற சில குறிப்பிட்ட படிப்புகளுக்குச் சான்றிதழ் படிப்புகளும் உள்ளன, அவை மூன்று முதல் ஆறு மாதங்களில் முடிந்துவிடும். யாராவது முதுநிலை பயில விரும்பினால், அவர்கள் மாஸ்டர்ஸ் ஆஃப் டிசைன் (M.Des) அல்லது பிஜி டிப்ளோமா செய்யலாம்.” என்றார் அவர்.

இந்தக் கல்வித் திட்டத்தில் உள்ள பாடங்கள்:

  • ஃபேஷன் இல்லஸ்ட்ரேஷன் மற்றும் ஸ்கெட்ச்சிங்
  • பேட்டர்ன் மேக்கிங் மற்றும் கார்மென்ட் கன்ஸ்ட்ரக்சன்
  • ஜவுளி அறிவியல் மற்றும் துணி குறித்த அறிதல்
  • கணினி உதவியுடன் வடிவமைப்பு (CAD)
  • ஃபேஷன் மார்க்கெட்டிங், மெர்ச்சன்டைசிங் மற்றும் போர்ட்ஃபோலியோ டெவலப்மென்ட்

ஃபேஷன் டிசைனிங் படிக்க சிறந்த கல்வி நிறுவனங்கள் எவை?

பேஷன் டிசைனர் ஆவது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

தேசிய ஃபேஷன் தொழில்நுட்பக் கழகம் (NIFT): புது டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இதன் 20 வளாகங்கள் உள்ளன. இதில் நுழைவுத் தேர்வு (NIFTEE) மூலம் சேர்க்கை நடைபெறுகிறது, இதில் ஆக்கப்பூர்வ திறன் தேர்வு (Creative Ability Test) மற்றும் பொதுத் திறன் தேர்வு (General Aptitude Test) ஆகியவை அடங்கும். இதன் ஒரு செமஸ்டர் (6 மாதங்கள்) கட்டணம் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் ஆகும்.

தேசிய வடிவமைப்பு கழகம் (NID): இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை இங்கிருந்து பயிலலாம். ஆமதாபாத், காந்திநகர் மற்றும் பெங்களூருவில் இதன் வளாகங்கள் உள்ளன. மாணவர் சேர்க்கைக்காக தேசிய வடிவமைப்பு கழகமும் தனியாக நுழைவுத் தேர்வை நடத்துகிறது. இதன் ஒரு செமஸ்டர் (6 மாதங்கள்) கட்டணம் சுமார் இரண்டேகால் லட்சம் ரூபாய் ஆகும்.

சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை பள்ளி (SVPITM): கோயம்புத்தூரில் உள்ள இந்த நிறுவனம் பி.எஸ்சி இன் டெக்ஸ்டைல் ஃபேஷன், டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ், டெக்ஸ்டைல் மற்றும் ஆடை வடிவமைப்பு, பி.பி.ஏ இன் டெக்ஸ்டைல் பிசினஸ் அனாலிசிஸ் போன்ற படிப்புகளை வழங்குகிறது. அதனுடன் இங்கு ஜவுளி மேலாண்மை, ஆடை மேலாண்மை, சில்லறை மேலாண்மை, ஜவுளி வணிகப் பகுப்பாய்வு ஆகியவற்றில் எம்.பி.ஏ-வும் செய்யலாம்.

பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) மதிப்பெண் அடிப்படையில் இதில் சேர்க்கை நடைபெறுகிறது. கட்டணத்தைப் பொறுத்தவரை, இளங்கலைப் படிப்புகளுக்குச் சுமார் இரண்டேகால் லட்சம் ரூபாயும், எம்.பி.ஏ-விற்குச் சுமார் இரண்டே முக்கால் லட்சம் ரூபாயும் தேவைப்படும்.

சர்வதேச ஃபேஷன் வடிவமைப்பு நிறுவனம் (IIAD): இங்கு மாணவர்கள் ஃபேஷன் பிசினஸ் மேனேஜ்மென்ட்டில் பி.பி.ஏ மற்றும் எம்.பி.ஏ பயிலலாம்.

இது தவிர, சில தனியார் நிறுவனங்கள் இளங்கலை வடிவமைப்பு மற்றும் பிபிஏ தவிர முதுகலை வடிவமைப்பு மற்றும் எம்பிஏ போன்ற முழுநேர படிப்புகளை வழங்குகின்றன, மேலும் அங்கு ஃபேஷன் டிசைனிங், கம்யூனிகேஷன், லக்ஸரி பிராண்ட் மேனேஜ்மென்ட் போன்ற சில குறுகிய கால தொழில்முறை படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன.

டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர் மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் இவற்றின் வளாகங்கள் உள்ளன. இவர்களின் இளங்கலைப் படிப்புகளின் ஒரு செமஸ்டர் கட்டணம் சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயாகவும், முதுகலைப் படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்குச் சுமார் மூன்று லட்சம் ரூபாயாகவும் உள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU