Home தேசிய national tamil ‘சீன ஹோட்டலில் தங்கிய ஜோடியின் அந்தரங்க காட்சிகள் நேரடி ஒளிபரப்பு’ – பிபிசி புலனாய்வு

‘சீன ஹோட்டலில் தங்கிய ஜோடியின் அந்தரங்க காட்சிகள் நேரடி ஒளிபரப்பு’ – பிபிசி புலனாய்வு

10
0

SOURCE :- BBC NEWS

'சீன ஹோட்டலில் தங்கிய ஜோடியின் அந்தரங்க காட்சிகள் நேரடி ஒளிபரப்பு' - பிபிசி புலனாய்வு

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் பாலியல் சுரண்டல் மற்றும் தனியுரிமை மீறல் பற்றிய விவரங்கள் உள்ளன.

2023-ஆம் ஆண்டு, ஓர் இரவில் எரிக் தான் வழக்கமாக ஆபாச படங்கள் பார்க்கும் சமூக ஊடக பக்கத்தை ஸ்க்ரோல் செய்துகொண்டிருந்தார். ஒரு காணொளிக்குள் சென்ற சில வினாடிகளே அவர் உறைந்துபோனார்.

அவர் பார்த்துக் கொண்டிருந்த காணொளியில், அறைக்குள் நுழைந்து, தங்கள் பைகளை வைத்துவிட்டு, பின்னர் உடலுறவு கொள்ளும் ஜோடி தானும் தன் காதலியும் என்பதை உணர்ந்துதான் அதற்குக் காரணம்,.

மூன்று வாரங்களுக்கு முன்பு, எரிக்கும் அவர் காதலியும் தெற்கு சீனாவின் ஷென்ஜென் நகரத்தில் உள்ள ஒரு விடுதியில் ஓர் இரவு தங்கியிருந்தனர். அந்த அறையில் உண்மையில் தாங்கள் தனியாக இல்லை என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

அவர்களின் மிக நெருக்கமான தருணங்கள் ஓட்டல் அறையில் மறைத்து வைக்கப்பட்ட ரகசிய கேமராவில் (ஸ்பை கேம்) பதிவு செய்யப்பட்டிருந்தன. எரிக் ஆபாச படங்கள் பார்க்க பயன்படுத்திய சேனலிலேயே அவை பதிவேற்றம் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கானவர்களுக்கு கிடைக்கச் செய்யப்பட்டிருந்தன.

எரிக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இனி சீனாவின் உளவு-கேமரா ஆபாசத் தொழிலின் நுகர்வோர் மட்டுமல்ல, அதனால் பாதிக்கப்பட்டவராகவும் ஆகியிருக்கிறார்.

எச்சரிக்கை: அவதூறான சொற்கள் இடம்பெற்றுள்ளன

சீனாவில் ஆபாசப் படங்களைத் தயாரிப்பதும் விநியோகிப்பதும் சட்டவிரோதம் என்ற போதிலும், அங்கு ‘ஸ்பை-கேம் ஆபாசப் படங்கள்’ எனப்படும் ரகசியக் கேமரா மூலம் எடுக்கப்பட்ட ஆபாசப் படங்கள் குறைந்தது ஒரு பத்தாண்டுகளாக இருந்து வருகின்றன.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் ஒரு வழக்கமான விவாதப் பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக பெண்கள், பென்சில் அழிப்பான் அளவுள்ள சிறிய கேமராக்களைக் கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்த குறிப்புகளைப் பரிமாறிக்கொள்கின்றனர். சிலர் தாங்கள் படமாக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக விடுதி அறைகளுக்குள் கூடாரங்கள் அமைக்கும் அளவுக்குச் சென்றுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம், இதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக புதிய அரசாங்க விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன. அதன்படி, விடுதி உரிமையாளர்கள் கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா எனத் தொடர்ந்து சோதிக்க வேண்டும்.

ஆனால், விடுதி அறையின் தனிமையில் ரகசியமாகப் படமாக்கப்படும் அச்சுறுத்தல் இன்னும் நீங்கவில்லை. விடுதி அறைகளில் படமாக்கப்பட்டு, ஆபாசப் படங்களாக விற்கப்பட்ட ஆயிரக்கணக்கான சமீபத்திய ஸ்பை-கேம் வீடியோக்களைப் பல இணையதளங்களில் பிபிசி உலக சேவை கண்டறிந்துள்ளது.

இந்த உள்ளடக்கங்களில் பெரும்பாலானவை டெலிகிராம் செயலியில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. கடந்த 18 மாதங்களில், டெலிகிராமில் விளம்பரப்படுத்தப்பட்ட ஆறு வெவ்வேறு வலைத்தளங்களையும் செயலிகளையும் நான் கண்டறிந்தேன். இவை அனைத்தும் சேர்ந்து 180-க்கும் மேற்பட்ட விடுதி அறை உளவு கேமராக்களை இயக்குவதாகக் கூறின. இந்தக் கேமராக்கள் விருந்தினர்களின் செயல்பாடுகளைப் பதிவு செய்வது மட்டுமல்லாமல், நேரலையாகவும் ஒளிபரப்பி வந்தன.

இந்த வலைத்தளங்களில் ஒன்றை நான் ஏழு மாதங்களாகத் தொடர்ந்து கண்காணித்தேன். அப்போது, 54 வெவ்வேறு கேமராக்களால் பதிவு செய்யப்பட்ட உள்ளடக்கங்களைக் கண்டறிந்தேன். அவற்றில் பாதி கேமராக்கள் எந்த நேரத்திலும் இயங்கிக்கொண்டிருந்தன.

வழக்கமான அறை நிரம்பும் விகிதங்களின் அடிப்படையில், அந்த காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான விருந்தினர்கள் படம்பிடிக்கப்பட்டிருக்கலாம் என்று பிபிசி மதிப்பிடுகிறது. அவர்களில் பெரும்பாலானோருக்குத் தாங்கள் கேமராவில் படம்பிடிக்கப்பட்டிருக்கிறோம் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஹாங்காங்கைச் சேர்ந்த எரிக், பதின்ம வயதிலிருந்தே ரகசியமாகப் படம்பிடிக்கப்பட்ட வீடியோக்களைப் பார்க்கத் தொடங்கினார். அந்தப் பதிவுகள் எந்த விதத் திருத்தமும் இல்லாமல் ‘இயற்கையாக’ இருந்ததே அதற்குக் காரணம்.

“அந்த நபர்களுக்குத் தாங்கள் படம்பிடிக்கப்படுகிறோம் என்பது தெரியாது என்பதே என்னை ஈர்த்தது,” என்கிறார் 30 வயதைக் கடந்த இருக்கும் எரிக். “பாரம்பரிய ஆபாசப் படங்கள் மிகவும் திட்டமிடப்பட்டதாகவும், போலியாகவும் இருப்பதாக நான் நினைக்கிறேன்.” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

ஆனால் தானும் தன் காதலி “எமிலியும்” இருக்கும் வீடியோவைக் கண்டபோது இந்த விநியோகச் சங்கிலியின் எதிர் முனையில் இருப்பது எப்படி இருக்கும் என்பதை அவர் உணர்ந்தார். இப்போது அவருக்கு அந்த உள்ளடக்கத்தில் திருப்தி கிடைப்பதில்லை.

தாங்கள் விடுதியில் தங்கியிருந்தபோது எடுக்கப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு, ஒரு மணி நேர வீடியோவாக எடிட் செய்யப்பட்டு, டெலிகிராமில் பதிவேற்றப்பட்டுவிட்டன என்ற செய்தியை அவர் தன் காதலி எமிலியிடம் சொன்னபோது, எரிக் கேலி செய்வதாக அவர் முதலில் நினைத்தார். ஆனால், அந்த காட்சிகளைக் கண்டவுடன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

அந்த வீடியோவை சக ஊழியர்களும் குடும்பத்தினரும் பார்த்திருக்கக் கூடும் என்று எமிலி மிகவும் பயந்தார். அவர்கள் இருவரும் பல வாரங்களுக்கு ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளாமல் இருந்தனர்.

ஜோடிகளின் நெருக்கமான பாலியல் செயல்களை, வேடிக்கை பார்க்கும் நோக்கமுள்ள பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்காகச் சுரண்டும் இந்தத் தொழில் எப்படிச் செயல்படுகிறது, இதற்குப் பின்னால் இருப்பது யார்?

நான் சந்தித்த மிகவும் முக்கிய ரகசிய கேமரா ஆபாசப் பட வர்த்தகர்களில் ஒருவர், “ஏகேஏ” என்று அறியப்பட்ட ஒரு ஏஜென்ட்.

என்னை நுகர்வோராக அடையாளப்படுத்திக்கொண்டு, அவர் விளம்பரப்படுத்திய நேரலை ஒளிபரப்பு இணையதளங்களில் ஒன்றை அணுக நான் பணம் செலுத்தினேன். அதன் மாதாந்திர கட்டணம் 450 யுவான் (65 டாலர், 47 பவுண்டு).

உள்நுழைந்ததும், ஐந்து வெவ்வேறு ஒளிபரப்புகளுக்கு இடையே தேர்வு செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒவ்வொன்றும் பல விடுதி அறைகளைக் காட்டின. விருந்தினர் தங்கள் சாவி அட்டையைச் செருகி மின்சார விநியோகத்தைத் தொடங்கிய உடனேயே அந்த அறைகள் தெரியும். நேரலை ஒளிபரப்புகளைத் தொடக்கத்திலிருந்து பின்னோக்கிப் பார்க்கும் வசதியும், சேமிக்கப்பட்ட காணொளிகளைப் பதிவிறக்கம் செய்யும் வசதியும் இருந்தது.

'சீன ஹோட்டலில் தங்கிய ஜோடியின் அந்தரங்க காட்சிகள் நேரடி ஒளிபரப்பு' - பிபிசி புலனாய்வு

சீனாவில் டெலிகிராம் தடைசெய்யப்பட்டிருந்தாலும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. ஏகேஏ இந்த நேரலை ஒளிபரப்புகளை விளம்பரப்படுத்தினார். எங்கள் விசாரணையின்போது ஒரு டெலிகிராம் சேனலில் 10,000 உறுப்பினர்கள் வரை இருந்தனர்.

அவரது எடிட் செய்யப்பட்ட நேரலை காட்சிகளின் நூலகங்களும் டெலிகிராமில் ஒரு நிலையான கட்டணத்தில் கிடைக்கின்றன. 2017-ஆம் ஆண்டுக்கு முந்தைய 6,000க்கும் மேற்பட்ட காணொளிகளை சேமிப்பு தளத்தில் என்னால் பார்க்க முடிந்தது.

ஏகேஏவின் சந்தாதாரர்கள், விடுதி விருந்தினர்களின் காட்சிகளைப் பார்த்தவாறு அவர்களின் தோற்றத்தை மதிப்பிடுவது, அவர்களின் உரையாடல்களைப் பற்றி கிசுகிசுப்பது மற்றும் அவர்களின் பாலியல் செயல்திறனை மதிப்பிடுவது போன்ற விஷயங்களையொட்டி சேனல் பக்கத்தில் கருத்துகளைப் பதிவிட்டும் வருகின்றனர்.

ஒரு தம்பதியினர் உடலுறவு கொள்ளத் தொடங்கும்போது அவர்கள் கொண்டாடுகிறார்கள். அவர்கள் விளக்குகளை அணைத்து, அறையை இருளில் மூழ்கடித்தால் புகார் செய்கிறார்கள். பெண்கள் தொடர்ந்து “கெட்டவள்”, “விபச்சாரி” என்று பலவாறாக வர்ணிக்கப்படுகிறார்கள்.

பயனர்கள், சமூக ஊடகப் பயனர்கள் மற்றும் எங்கள் சொந்த ஆய்வு ஆகியவற்றிலிருந்து கிடைத்த பல தடயங்களை ஒன்றிணைப்பதன் மூலம், அந்த உளவு கேமராக்களில் ஒன்றைக் கண்டறிந்து, அது மத்திய சீனாவின் செங்சோ நகரில் உள்ள ஒரு விடுதி அறையில் இருப்பதைக் கண்டுபிடித்தோம்.

சம்பவ இடத்திலிருந்த ஆய்வாளர்களால் அந்த அறைக்குள் நுழைய முடிந்தது. சுவரில் உள்ள காற்றோட்டப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு கட்டிடத்தின் மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்டிருந்த கேமராவை அவர்கள் கண்டுபிடித்தனர். அதன் லென்ஸ் படுக்கையை நோக்கி இருந்தது.

'சீன ஹோட்டலில் தங்கிய ஜோடியின் அந்தரங்க காட்சிகள் நேரடி ஒளிபரப்பு' - பிபிசி புலனாய்வு

விடுதியின் விருந்தினர்களுக்கு ‘கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஒன்று’ எனக் கூறி ஆன்லைனில் பரவலாக விற்கப்படும் உளவு கேமரா கண்டறியும் ஒரு கருவி, அவர்கள் உளவு பார்க்கப்படுகிறார்கள் என்பதற்கான எந்த எச்சரிக்கையையும் அளிக்கவில்லை.

அந்தக் குழுவினர் ரகசியக் கேமராவைச் செயலிழக்கச் செய்தனர், இந்தச் செய்தி டெலிகிராமில் வேகமாகப் பரவியது.

“ஜோங்ஹுவா [கேமராவின் பெயர்] அகற்றப்பட்டுவிட்டது!” என்று ஏகேஏவால் நிர்வகிக்கப்படும் பிரதான சேனலில் ஒரு சந்தாதாரர் எழுதினார்.

“இது மிகவும் வருத்தமளிக்கிறது, அந்த அறையில்தான் ஒலித் தரம் மிகச் சிறப்பாக இருக்கும்!” என்று ஏகேஏ அந்த உரையாடலில் பதிலளித்தார்.

ஆனால், சில மணிநேரத்திற்குள், வேறு ஒரு விடுதியில் உள்ள மாற்று கேமரா ஒன்று செயல்படுத்தப்பட்டு விட்டதாக ஏகேஏ பதிவிட்டபோது, அந்தப் புகார்கள் கொண்டாட்டமாக மாறின.

“இதுதான்… [எங்கள் நேரலை ஒளிபரப்புத் தளத்தின்] வேகம்,” என்று ஏகேஏ தனது சந்தாதாரர்களிடம் கூறினார். “ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?”

எங்களின் 18 மாத கால ஆய்வில், ஏகேஏ போன்ற சுமார் 12 முகவர்களை நாங்கள் அடையாளம் கண்டோம்.

சந்தாதாரர்களுடன் அவர்கள் கொண்டிருந்த பரிமாற்றங்கள், விநியோகச் சங்கிலியில் மேலே இருப்பவர்களுக்காக அவர்கள் பணியாற்றுவதைத் தெளிவுபடுத்தின. அவர்களை “கேமரா உரிமையாளர்கள்” என்று குறிப்பிட்டனர். முகவர்களின் கருத்துகளில் கூறப்பட்டபடி, இந்த நபர்கள் உளவு கேமரா நிறுவுவதற்கு ஏற்பாடு செய்து நேரடி ஒளிபரப்பு தளங்களை நிர்வகித்தனர்.

ஏகேஏ உடனான எங்கள் நேரடி உரையாடலின்போது, அவர் தற்செயலாக “கேமரா உரிமையாளர்” என்று கூறிய ஒருவரிடமிருந்து வந்த செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்துகொண்டார். அவரது எண் “சகோதரர் சுன்” என்கிற பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஏகேஏ அந்தச் செய்தியை உடனடியாக நீக்கிவிட்டார். அது குறித்து விவாதிக்கவும் அவர் மறுத்துவிட்டார், ஆனால் நாங்கள் “சகோதரர் சுன்”-ஐ நேரடியாகத் தொடர்புகொள்ள முடிந்தது. ஏகேஏவுக்கு நேரலை ஒளிபரப்பு இணையதளத்தை அவர்தான் வழங்கினார் என்பதற்கான ஆதாரம் எங்களிடம் இருந்தபோதிலும், சகோதரர் சுன் தான் ஒரு சாதாரண விற்பனை முகவர் மட்டுமே என்று கூறினார். இருப்பினும், விநியோகச் சங்கிலி தன்னைப் போன்றவர்களையும் தாண்டி விரிந்துள்ளது என்பதை அவர் ஒப்புக்கொள்வது போல் தெரிந்தது.

தெளிவாகத் தெரிவது என்னவென்றால், இதில் கணிசமான அளவு பணம் புழங்குகிறது. சேனல் உறுப்பினர் கட்டணம் மற்றும் சந்தா கட்டணங்களின் அடிப்படையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஏகேஏ மட்டும் குறைந்தது சீன மதிப்பில் 163,200 யுவான் (22,000 டாலர், 16,300 பவுண்ட்) சம்பாதித்துள்ளார் என்று பிபிசி மதிப்பிடுகிறது. சீனாவின் புள்ளியியல் பணியகத்தின்படி, கடந்த ஆண்டு சீனாவில் சராசரி ஆண்டு வருமானம் 43,377 யுவான் (6,200 டாலர், 4,600 பவுண்டுகள்) ஆகும்.

'சீன ஹோட்டலில் தங்கிய ஜோடியின் அந்தரங்க காட்சிகள் நேரடி ஒளிபரப்பு' - பிபிசி புலனாய்வு

சீனாவில் உளவு கேமராக்களை விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் கடுமையான விதிகள் உள்ளன. ஆனால், ஹுவாகியாங்பேயில் உள்ள மிகப்பெரிய மின்னணு சந்தையில் ஒரு கேமராவை வாங்குவது ஒப்பீட்டளவில் எங்களுக்கு எளிதாக இருந்தது.

உளவு கேமரா மூலம் எடுக்கப்பட்ட ஆபாசப் படங்களுக்காக எத்தனை பேர் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர் என்பது குறித்த துல்லியமான புள்ளிவிவரங்களைக் கண்டறிவது மிகவும் கடினம். சமீபத்திய ஆண்டுகளில் சீன அதிகாரிகள் சட்ட வழக்குகளின் விவரங்களை மிகக் குறைவாகவே பகிர்ந்துள்ளனர். ஆனால், நாங்கள் கண்டறிந்த வழக்குகள் வடக்கில் உள்ள ஜிலின் மாகாணத்திலிருந்து, தெற்கில் உள்ள குவாங்டாங் வரை, சீனாவின் ஒரு முனையிலிருந்து மறு முனை வரை பரவியிருந்தன.

ரகசியமாகப் படம்பிடிக்கப்பட்ட அந்தரங்க காட்சிகளை இணையத்திலிருந்து அகற்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் ‘ரெயின்லில்லி’ என்கிற ஹாங்காங்கில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர் ப்ளூ லி. தனது குழுவின் சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருவதாகவும், ஆனால் அந்தப் பணி மேலும் கடினமாகி வருவதாகவும் கூறுகிறார்.

டெலிகிராம் நிறுவனம் ரெயின்லில்லியின் அகற்றல் கோரிக்கைகளுக்கு ஒருபோதும் பதிலளிப்பதில்லை என்று அவர் கூறுகிறார். இது குழு நிர்வாகிகளைத் தொடர்புகொள்ள அவர்களை கட்டாயப்படுத்துகிறது – உளவு-கேமரா ஆபாசப் படங்களை விற்கும் அல்லது பகிர்ந்துகொள்ளும் அதே நபர்கள், இவர்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பதற்கு எந்த ஊக்கமும் இருக்காது.

“இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் பொறுப்பைப் பகிர்ந்துகொள்கின்றன என்று நாங்கள் நம்புகிறோம். அவற்றின் கொள்கைகளே உள்ளடக்கம் எவ்வாறு பரப்பப்படும் என்பதை வடிவமைக்கின்றன,” என்று லி கூறுகிறார்.

பத்து நாட்களுக்குப் பிறகு, பிபிசியின் முழுமையான ஆய்வு முடிவுகளுடன் மீண்டும் தொடர்புகொண்டபோது, டெலிகிராம் நிறுவனம் எங்களிடம், “சம்மதமின்றி எடுக்கப்பட்ட ஆபாசப் படங்களைப் பகிர்வது டெலிகிராமின் சேவை விதிமுறைகளால் வெளிப்படையாகத் தடை செய்யப்பட்டுள்ளது” என்றும், “அது ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை அகற்ற, முன்கூட்டியே கண்காணித்து… [பொருத்தமற்ற உள்ளடக்கம் குறித்த] புகார்களை ஏற்றுக்கொள்கிறது” என்றும் கூறியது.

சந்தேகப்படாத விடுதி விருந்தினர்களைச் சுரண்டி அவர்கள் லாபம் ஈட்டுகிறார்கள் என்ற எங்கள் கண்டுபிடிப்புகளை நாங்கள் பிரதர் சுன் மற்றும் ஏகேஏவிடம் முறையாகத் தெரிவித்தோம். அவர்கள் பதிலளிக்கவில்லை, ஆனால் சில மணிநேரத்திற்குப் பிறகு, அந்த உள்ளடக்கத்தை விளம்பரப்படுத்த அவர்கள் பயன்படுத்திய டெலிகிராம் கணக்குகள் நீக்கப்பட்டதாகத் தெரிந்தது. இருப்பினும், ஏகேஏ எனக்கு அணுகலை விற்ற இணையதளம் இன்னும் விடுதி விருந்தினர்களை நேரலையில் ஒளிபரப்பி வருகிறது.

எரிக் மற்றும் எமிலி ஆகியோர் தங்கள் அனுபவத்தால் இன்னும் அதிர்ச்சியில் உள்ளனர். தாங்கள் அடையாளம் காணப்படக் கூடும் என்ற அச்சத்தில் அவர்கள் எப்போதும் தொப்பி அணிந்தபடியே பொது இடங்களுக்குச் செல்கிறார்கள்.

விடுதிகளில் தங்குவதைத் தவிர்க்க முயற்சிக்கிறார்கள். எரிக் இப்போது ஆபாசப் படங்களைப் பார்க்க டெலிகிராம் சேனல்களைப் பயன்படுத்துவதில்லை என்று கூறுகிறார். ஆனால், அந்த வீடியோ மீண்டும் வெளிவந்துவிடுமோ என்ற பயத்தில் அவ்வப்போது அவற்றைச் சரிபார்ப்பதாகக் கூறுகிறார்.

இந்தக் கட்டுரை தனியுரிமை மீறல்கள் மற்றும் ஒப்புதல் இல்லாத ஆபாச உள்ளடக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், உடனடியாக உள்ளூர் அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU