Home Latest news tamil சமீபத்திய செய்தி மக்களிடையே பணப் புழக்கத்தை அதிகரிக்க இந்திய ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு

மக்களிடையே பணப் புழக்கத்தை அதிகரிக்க இந்திய ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு

3
0

SOURCE :- BBC NEWS

மக்களிடையே பணப் புழக்கத்தை அதிகரிக்க இந்திய ரிசர்வ வங்கி எடுத்த அதிரடி முடிவு

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், நிக்கில் இனாம்தார்
  • பதவி, பிபிசி நியூஸ், லண்டன்
  • 6 ஜூன் 2025

இந்திய ரிசர்வ் வங்கி, எதிர்பார்த்ததைக் காட்டிலும் வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்து அறிவித்துள்ளது. ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமான இந்தியாவில் வளர்ச்சி குறைந்து, பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில் மூன்றாவது முறையாக வட்டி குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரெப்போ விகிதம் என்பது ரிசர்வ் வங்கி, இதர வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கு விதிக்கும் வட்டியாகும். இது வீடுகள் மற்றும் கார் கடன்கள் வாங்குவதற்கான செலவீனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

புதிய அறிவிப்பின்படி, புதிய ரெப்போ விகிதம் 5.5% ஆகும். கடந்த மூன்று ஆண்டுகளில் மிகக் குறைந்த ரெப்போ விகிதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

வட்டி விகிதம் குறைக்கப்பட்டது தொடர்பாகப் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, “நாம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் வளர்ச்சி குறைவாகவே உள்ளது. உலக அளவில் பல நிச்சயமற்ற சூழல்கள் நிலவி வரும் நிலையில், உள்நாட்டில் நுகர்வு மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும் தேவை ஏற்பட்டுள்ளதாக உணர்ந்தோம்,” என்று கூறியுள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

ஏற்கெனவே பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் வட்டி விகிதத்தைக் குறைத்த பிறகு மூன்றாவது முறையாக ரெப்போ விகிதம் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வெளியான தரவுகளின் அடிப்படையில், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த கடந்த நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது 6.5% ஆக இருக்கிறது.

உலகில் வேகமாக விரிவடைந்து வரும் பொருளாதாரமாக இந்தியா அறியப்பட்டு இருந்தாலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி கண்டுள்ளது. 2023-24 நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது 9.2% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்த்தைக் காட்டிலும் இந்தியாவில் சில்லறை வணிகமும் 3.16% என்ற அளவில் ஏப்ரலில் குறைந்துள்ளது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவான விகிதம். உணவுப் பொருட்களின் விலை குறைந்ததால் ஏற்பட்ட வீழ்ச்சியைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் 4% என்ற இலக்கைக் காட்டிலும் வணிக வளர்ச்சி குறைந்துள்ளது.

பணவீக்கம், பொருளாதாரம், இந்தியா, ரெப்போ வட்டி விகிதம், ஆர்.பி.ஐ

பட மூலாதாரம், Getty Images

ரிசர்வ் வங்கி, இந்த ஆண்டில் பணவீக்கம் எப்படியாக இருக்கும் என்று முன்பு கணித்ததைக் காட்டிலும் பணவீக்க மதிப்பைக் குறைவாக அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி தற்போது தன்னுடைய பணவியல் கொள்கைகளையும் மாற்றிக் கொண்டுள்ளது. இணக்கமான பணவியல் (accommodative) கொள்கையில் இருந்து நடுநிலையான பணவியல் கொள்கைக்கு மாறியுள்ளது. அதாவது நாட்டின் வளர்ச்சி – பணவீக்கத்தின் மதிப்பின் அடிப்படையில் வருங்கால ரெப்போ விகித குறைப்பு இருக்கும் என்று குறிப்பாக உணர்த்துகிறது.

இருப்பினும், எதிர்பார்த்திருந்த பருவமழை காரணமாக நிரம்பியுள்ள தானியக் கிடங்குகள், எண்ணெய் போன்ற பொருட்களுக்கான பலவீனமான விலை, தாராளமான பணப்புழக்கம் போன்றவை, வரும் காலங்களில் இந்தியாவின் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். எனவே ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதமும் குறைவாக இருக்கும்.

மக்களிடையே பணப் புழக்கத்தை அதிகரிக்க இந்திய ரிசர்வ வங்கி எடுத்த அதிரடி முடிவு

பட மூலாதாரம், Getty Images

வீடுகளில் நிலவும் மேம்பட்ட பொருட்கள் வாங்கும் திறன், நிறுவனங்களில் நிலவும் குறைந்த உள்ளீட்டு செலவுகள், அரசாங்கத்திற்கான குறைந்த கடன் சேவை செலவுகள் போன்றவை காரணமாகக் குறைந்த கடன் செலவுகள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

இது வீடு வாங்குவோருக்கும், தத்தளித்துக் கொண்டிருக்கும் ரியல் எஸ்டேட் பிரிவினருக்கும் உதவிகரமாக இருக்கக்கூடும்.

“இது கடன் வாங்கும் செலவுகளைத் திறம்படக் குறைக்கிறது. மேலும் வீட்டுக் கடன்களுக்கான மாதத் தவணைகளை எளிமையாக்குகிறது. இது வீடு வாங்குவதையும் எளிமையாக்குகிறது. இந்திய ரியல் எஸ்டேட் துறையில் தேவையை அதிகரிக்கும். குறிப்பாக மத்திய வருவாய் பிரிவினருக்கு இது உதவும்.

ஏனெனில், கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பிறகு, மலிவு விலையிலான வீடுகளை வாங்கும் போக்கு குறைந்து போனது. 7 முன்னிலை நகரங்களில் விற்பனை மற்றும் புதிதாக வீடு கட்டுதலும் குறைந்து போனது,” என்று அனாரோக் குழுமத்தின் தலைவர் அனுஜ் பூரி கூறுகிறார்.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த அறிவிப்பால் பங்கு விலைகள் உயர்ந்தன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC