Home தேசிய national tamil இந்தியாவுக்கு ‘ஆப்பிள்’ தந்த நம்பிக்கையை அமெரிக்கா – சீனா உடன்பாடு தகர்க்கிறதா?

இந்தியாவுக்கு ‘ஆப்பிள்’ தந்த நம்பிக்கையை அமெரிக்கா – சீனா உடன்பாடு தகர்க்கிறதா?

4
0

SOURCE :- BBC NEWS

இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகம், அமெரிக்காவின் இறக்குமதி வரி, வர்த்தகப் போர், சீனா,

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், நிகில் இனாம்தார்
  • பதவி, பிபிசி நியூஸ், லண்டன் 
  • 20 மே 2025, 04:01 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

உலகின் உற்பத்தி மையமாக உருவெடுப்பதற்கான நீண்ட கால லட்சியத்தை நோக்கி இந்தியா முன்னேற இப்போதுதான் தொடங்கியுள்ளது. இந்நிலையில், சீனாவும் அமெரிக்காவும் பரஸ்பரம் வரிகளை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது, உலகின் உற்பத்தி மையமாக உள்ள சீனாவின் இடத்தை அடைவதற்கான இந்தியாவின் நோக்கத்தை சீர்குலைக்கலாம் என கருதப்படுகிறது.

சீனா மீது டிரம்ப் விதித்த இறக்குமதி வரி ஒரே இரவில் 145 சதவிகிதத்தில் இருந்து 30 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. இது இந்தியாவுக்கு 27 சதவிகிதமாக உள்ளது. சுவிட்சர்லாந்தில் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.

அதன் விளைவாக, சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயரும் உற்பத்தி முதலீடுகள் ஒன்று “அப்படியே நின்றுவிடும்” அல்லது “(சீனாவுக்கே) திருப்பி அனுப்பப்படும்” என, டெல்லியை தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிந்தனை மையமான குளோபல் டிரேட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டின் (ஜிடிஆர்ஐ) அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.

“குறைவான செலவுடைய அசெம்பிள்கள் (assembly lines – ஒரு பொருளின் பாகங்களை ஒன்றாக இணைக்கும் செயல்முறை) தப்பிக்கலாம், ஆனால் மதிப்பு கூட்டு தயாரிப்புகளின் வளர்ச்சி ஆபத்தில் உள்ளது.”

அமெரிக்க சந்தைக்கான பெரும்பாலான ஐஃபோன் உற்பத்தியை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்றுவதாக ஆப்பிள் நிறுவனம் சமிக்ஞைகளை வெளிப்படுத்திய நிலையில், கடந்த மாதம் இந்தியாவுக்கு ஏற்பட்டிருந்த உற்சாகத்துக்கு எதிரான மனநிலையே தற்போது உள்ளது.

இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகம், அமெரிக்காவின் இறக்குமதி வரி, வர்த்தகப் போர், சீனா,

பட மூலாதாரம், Reuters

இன்னும் சாத்தியங்கள் உள்ளதா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக்-கிடம் “உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளுள் ஒன்றாக இருப்பதால்” இந்தியாவில் தயாரிக்க வேண்டாம் என கூறியிருந்தாலும், அப்படி நிகழ்வதற்கான சாத்தியக்கூறு இன்னும் உள்ளது.

“அமெரிக்காவுக்கு சரக்குகளை அனுப்புவதில் சீனாவுக்கு மாற்றாக உடனடியாக மாறுவதற்கான சிறப்பான நிலையில் இந்தியா உள்ளது,” என, முதலீட்டு ஆலோசனை நிறுவனமான கேபிட்டல் எகனாமிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பொருளாதார நிபுணர் ஷிலான் ஷா, இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக முதலீட்டாளர்கள் குறிப்பில் எழுதியுள்ளார். அமெரிக்காவுக்கான இந்தியாவின் 40% ஏற்றுமதிகள், “சீன ஏற்றுமதி பொருட்களுடன் ஒத்துப் போகின்றன” என்றார்.

சீன உற்பத்தியாளர்களால் ஏற்பட்ட இடைவெளியை நிரப்ப இந்திய ஏற்றுமதியாளர்கள் ஏற்கெனவே தொடங்கி விட்டதற்கான ஆரம்பகட்ட சமிக்ஞைகள் தென்படத் தொடங்கியுள்ளன. இந்திய உற்பத்தியாளர்களிடையே சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, புதிய ஏற்றுமதிகளுக்கான ஆர்டர்கள் 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

ஜப்பானிய நிதி நிறுவனமான நோமுரா (Nomura), குறிப்பாக மின்சாதனப் பொருட்கள், ஆடை உற்பத்தி, பொம்மைகள் தயாரிப்பு தொழில் உள்ளிட்ட துறைகளில் “வர்த்தகம் மற்றும் விநியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், குறைவான மற்றும் நடுத்தர தொழில்நுட்ப உற்பத்திகளில்” இந்தியா ஒரு வெற்றியாளராக உருவாகி வருவதற்கான “தனிப்பட்ட அனுபவச் சான்றுகள்” அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.

இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகம், அமெரிக்காவின் இறக்குமதி வரி, வர்த்தகப் போர், சீனா,

பட மூலாதாரம், EPA

தடைகளுக்கு மத்தியில் நம்பிக்கை

சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே வரி குறைப்பு நடவடிக்கை இருந்தபோதிலும், இருநாடுகளுக்கும் இடையே பெரியளவில் ஏற்பட்டுள்ள வியூக ரீதியிலான முரண்பாடு, இந்தியாவுக்கு நீண்ட கால பலனை அளிக்கும் என, ஆய்வாளர்கள் சிலர் கருதுகின்றனர்.

அதில் ஒன்று, வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிப்பதில் நரேந்திர மோதி அரசாங்கத்தின் பெரும் ஆர்வம், பயனளிக்கக் கூடியதாக இருக்கும். பல ஆண்டுகளாக வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டு வந்த நிலையில், இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

“சீனாவிலிருந்து பொருட்களின் உற்பத்தி இடம்பெயர்வதில்” ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உள்ள இந்தியா பலனை பெறும் வகையில், இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. சீனாவிலிருந்து சர்வதேச நிறுவனங்கள் விநியோக சங்கிலியை விரிவுபடுத்தும் நோக்கில் தங்கள் உற்பத்தியை வேறொரு இடத்துக்கு மாற்றி வருகின்றன.

விஸ்கி மற்றும் ஆட்டோமொபைல் போன்ற கட்டுப்படுத்தப்பட்ட துறைகளில் இறக்குமதி வரிகளை குறைக்கும் விதமாக, இந்தியா பிரிட்டனுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் சமீபத்தில் கையெழுத்திட்டது. இது, இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நடைபெற்று வரும் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவுக்கு இந்தியா என்ன மாதிரியான சலுகைகளை வழங்கலாம் என்பது குறித்த குறிப்புகளை வழங்குகிறது.

ஆனால், பல காரணங்களுக்காக இந்த நம்பிக்கை கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக உள்ளது. சீனா தற்போது மீண்டும் ஒரு போட்டியாளராக மாறியுள்ளதைத் தாண்டி, நிறுவனங்கள், “வியட்நாம் போன்ற மற்ற ஆசிய போட்டி நாடுகளுக்கு (இடம்பெயர்வது) குறித்து முழுமையாக மறுக்கவில்லை,” என, நொமுராவை சேர்ந்த பொருளாதார நிபுணர்கள் சோனல் வெர்மா மற்றும் ஔரோதீப் நன்டி, இந்த மாத ஆரம்பத்தில் எழுதிய குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

“எனவே, இந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக் கொள்வதற்கு, அந்நாடு குறிப்பிடத்தக்க வணிக சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.”

கடும் வணிக சூழல்களால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நீண்ட காலமாக விரக்தியை சந்தித்துள்ளனர். அத்துடன், இந்தியாவின் உற்பத்தித் துறை வளர்ச்சியும் தேங்கியுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு (ஜிடிபி) 15% என்ற அளவிலேயே நீடிக்கிறது.

இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகம், அமெரிக்காவின் இறக்குமதி வரி, வர்த்தகப் போர், சீனா,

பட மூலாதாரம், Reuters

இந்தியாவின் தொழில் கொள்கை மீதான விமர்சனம்

உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI – Production Linked Incentive) திட்டம் போன்ற மோதி அரசாங்கத்தின் முயற்சிகள், ஜிடிபி-யை அதிகப்படுத்துவதில் குறைவான பலனையே தந்தது.

இந்திய அரசாங்கத்தின் நிதி ஆயோக், சீனாவிலிருந்து இடம்பெயரும் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா “குறைவான பயனையே” பெற்றிருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளது. குறைந்த சம்பளம் பெறும் வேலையாட்கள், எளிமையான வரிச் சட்டங்கள், குறைவான இறக்குமதி வரிகள், உறுதியான தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் ஆகியவை வியட்நாம், தாய்லாந்து, கம்போடியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதிகளை அதிகப்படுத்தியிருப்பதாகவும் இவற்றில் இந்தியா பின் தங்கியிருப்பதாகவும் நிதி ஆயோக் குறிப்பிட்டுள்ளது.

மூலப்பொருட்கள் மற்றும் ஐஃபோன்கள் போன்ற மின்சாதனப் பொருட்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் ஆகியவற்றுக்கு சீனாவை இந்தியா சார்ந்திருப்பது, விநியோக சங்கிலியில் ஏற்படும் மாற்றங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதிலிருந்து இந்தியாவை தடுப்பதுதான் முக்கியமான கவலை என, நொமுரா குறிப்பிடுகிறது.

“முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கும் போது ஐஃபோன் மூலம் இந்தியாவுக்குக் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும்,” என ஸ்ரீவஸ்தவா பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகம், அமெரிக்காவின் இறக்குமதி வரி, வர்த்தகப் போர், சீனா,

பட மூலாதாரம், Getty Images

இந்தியா என்ன செய்ய வேண்டும்?

ஸ்ரீவஸ்தவாவைப் பொருத்தவரை, உதாரணத்துக்கு முழுமையாக 1,000 டாலர்களும் இந்திய ஏற்றுமதியாகக் கருதப்பட்டாலும், அமெரிக்காவில் விற்கும் ஒரு ஐஃபோனுக்கு ஆப்பிள் நிறுவனம் சுமார் 450 டாலர் (சுமார் ரூ. 39,000) வருமானம் ஈட்டுகிறது, அதேசமயம் இந்தியாவுக்கு 25 டாலர்களுக்கும் குறைவாகவே தக்கவைக்கிறது.

“ஆப்பிள் நிறுவனமும் அதன் சப்ளையர்களும் உதிரி பாகங்களை இங்கே தயாரிக்காத வரை இந்தியாவில் ஐஃபோன் தயாரிப்பது அதிக பலனை தராது. அப்படி செய்யாவிட்டால், இந்தியாவின் பங்கு அதில் சிறிதளவே இருக்கும், ஏற்றுமதி அதிகரிப்பு என்பது ஏட்டளவில் மட்டுமே இருக்கும். இதனால், இந்தியாவுக்கு உண்மையான பொருளாதார ஆதாயம் இல்லாமலேயே, அமெரிக்காவிடமிருந்து கூடுதல் சோதனைகளை சந்திப்பதற்கான சாத்தியங்கள் ஏற்படும்,” என ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

ஐஃபோன்களை அசெம்பிள் செய்வதற்கான வேலைவாய்ப்புகளும் அதிக மதிப்புமிக்கதாக இல்லை என்கிறது ஜிடிஆர்ஐ.

2007-ஆம் ஆண்டில் சென்னையில் தொழிற்சாலை அமைத்த நோக்கியா போன்ற நிறுவனத்தில் சப்ளையர்கள் ஒன்றாக இணைந்துள்ளனர். “இன்றைக்கு ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் பாகங்களை இறக்குமதி செய்கின்றனர், இந்தியாவில் விநியோக சங்கிலியை உருவாக்குவதற்கு பதிலாக அவர்கள் குறைவான இறக்குமதி வரிக்காக வாதிடுகின்றனர்,” என விளக்குகிறார் ஸ்ரீவஸ்தவா. அப்படியான சமயங்களில், இந்தியாவின் பி.எல்.ஐ திட்டத்தின் கீழ் பெறும் மானியங்களை விட அதில் முதலீடு செய்யப்படும் தொகை குறைவாக இருக்கும் என அவர் குறிப்பிடுகிறார்.

இறுதியில் சீன ஏற்றுமதியாளர்கள் தங்களின் சரக்குகளை அமெரிக்காவுக்கு அனுப்ப இந்தியாவை ஒரு தளமாக பயன்படுத்தலாம் என்ற கவலைகளும் உள்ளன.

இதனால் ஆபத்துகள் உள்ள போதிலும், இந்தியா இந்த யோசனையை எதிர்ப்பதாக தோன்றவில்லை. இந்தியாவின் முக்கிய பொருளாதார ஆலோசகர் கடந்தாண்டு கூறுகையில், ஏற்றுமதி சார்ந்த தொழிற்சாலைகளை அமைக்க சீன நிறுவனங்களை இந்தியா ஈர்த்து, உற்பத்தி துறையை உயர்த்த வேண்டும் என கூறினார். இந்தியாவின் சொந்த தொழில் கொள்கை பலனை அளிக்கவில்லை என்பதற்கான ரகசிய ஒப்புதலாக அது இருந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

ஆனால், இது தன்னுடைய சொந்த தொழில் தளத்தை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் திறன் மற்றும் உள்நாட்டு திறனை மேலும் கட்டுப்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கும் வகையிலான அறிவிப்புகளை தாண்டி, இந்தியா அதன் தொழில் லட்சியங்களை உணர்வதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதை இது காட்டுகிறது.

“உற்பத்தி செலவுகளை குறைப்பது, தளவாடங்களை மேம்படுத்துவது, ஒழுங்குமுறையை அதிகரிப்பதையும் செய்ய வேண்டும்,” என ஸ்ரீவஸ்தவா தனது சமூக ஊடக பதிவின் வாயிலாக கொள்கை வகுப்பாளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

“தெளிவாக சொல்கிறேன். அமெரிக்கா-சீனா இடையிலான இந்த (வரி குறைப்பு) நடவடிக்கை சேதத்தைக் குறைப்பதற்கான முயற்சி, நீண்ட கால தீர்வு அல்ல. இந்தியா நீண்ட கால நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் அல்லது ஓரங்கட்டப்படும் ஆபத்தை சந்திக்க நேரிடும்.”

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU