Home Latest news tamil சமீபத்திய செய்தி பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை – பாதிக்கப்பட்ட பெண்கள் நீதி கோர தைரியம் தந்தவர்கள் யார்?

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை – பாதிக்கப்பட்ட பெண்கள் நீதி கோர தைரியம் தந்தவர்கள் யார்?

8
0

SOURCE :- BBC NEWS

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு, சட்டம், நீதித்துறை, சிபிஐ, தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

”இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிடம், தினமும் வேலைக்குப் போய்வரும் போது ரோட்டில் எவ்வளவு லாரிகளை கடந்து போக வேண்டும் என்பதை யோசித்துப் பார்க்கச் சொல்லுங்கள் என்று அப்பெண்ணின் நெருங்கிய உறவினர் ஒருவரை வைத்து குற்றவாளிகள் தரப்பில் மறைமுகமாக மிரட்டியுள்ளனர்.

ஆனால் சிபிஐ போலீசார் அந்த உறவினரையும், அவர் வழியாக குற்றவாளி தரப்பையும் கடுமையாக எச்சரித்து அந்தப் பெண்ணுக்குக் கொடுத்த நம்பிக்கையால் அவர் இறுதிவரை பிறழாமல் சாட்சி கூறி, இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கக் காரணமாயிருந்தார்!”

பொள்ளாச்சி பாலியல் வழக்கில், முக்கிய சாட்சியாக இருந்த ஒரு பெண்ணுக்கு நேர்ந்த அனுபவத்தை பிபிசி தமிழிடம் விவரித்தார் சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திரமோகன்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக இந்த தண்டனை கிடைப்பதற்கு, பாதிக்கப்பட்ட 8 பெண்கள் கொடுத்த வாக்குமூலமே முக்கியக் காரணமாக அமைந்தது.

வழக்கு பதியப்பட்டதிலிருந்து, இறுதிவரையிலும் துணிச்சலுடன் இவர்கள் வழக்கை எதிர்கொள்வதற்கு பலவிதமான சவால்களை சந்தித்ததும், அதைக் கடந்து வெற்றி பெறுவதற்கு பல தரப்பினர் உதவியதும் தற்போது தெரியவந்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு, சட்டம், நீதித்துறை, சிபிஐ, தமிழ்நாடு

பட மூலாதாரம், SPECIAL ARRANGEMENT

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை, இளம்பெண்கள் பலரையும் நட்பாகப் பழகுவது போன்றும், காதலிப்பது போன்றும் நடித்து, பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம், 2019 ஆம் ஆண்டில் வெளியில் வந்தது.

ஒரு பெண், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் 2019 பிப்ரவரியில் கொடுத்த புகாரில்தான் பல உண்மைகள் வெளியாகி, காவல்துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முதலில் உள்ளூர் காவல்துறையாலும், பின்பு சிபிசிஐடி போலீசாராலும் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு பின் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. அந்த வழக்கில் 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

அந்த வழக்கில்தான் தற்போது 9 குற்றவாளிகளுக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

பாலியல் துன்புறுத்தலில் மீட்கப்படும் பெண்கள் தர வேண்டிய 3 வாக்குமூலங்கள்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு, சட்டம், நீதித்துறை, சிபிஐ, தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

பொதுவாக பாலியல் வழக்கு விசாரணையில் எத்தனை கட்டங்களை பெண்கள் கடந்து செல்ல வேண்டுமென்பதை சட்ட நிபுணர்கள் விவரிக்கின்றனர்.

குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின்படி, பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களிடம் காவல்துறையால் முதலில் வாக்குமூலம் (CrPC Section 161 – Examination of witnesses by police) பெறப்படும். பின்பு மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்குமூலம் (164 Statement) தர வேண்டும். மூன்றாவதாக கோர்ட்டில் அவர்கள் தரும் வாக்குமூலம் பதிவு செய்யப்படும்.

இதில் முதலில் காவல்துறையால் வாக்குமூலம் பெறுவதுதான் பெரும் சவாலாக இருக்கும் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

பொள்ளாச்சி வழக்கைப் பொறுத்தவரை, சிபிஐக்காக பணியாற்றிய காவல் ஆய்வாளர் பச்சையம்மாள், அவருக்கு துணையாக ஓர் ஆண் உதவி ஆய்வாளர், ஒரு பெண் உதவி ஆய்வாளர் மற்றும் 3 பெண் காவலர்கள் ஆகியோர் கொண்ட ரகசியக் குழுவினர்தான் இந்த பணியை மேற்கொண்டுள்ளனர்.

பல கட்டங்களாக கவுன்சிலிங் கொடுத்த பின்பே, பாதிக்கப்பட்டவர்கள் தங்களிடம் பேசினர் என்கிறார் காவல் ஆய்வாளர் பச்சையம்மாள்

ஒருவேளை பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையினரிடம் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் (161 Statement) தராவிட்டாலும் அவர்கள் கூறும் தகவலை வாக்குமூலமாக பதிவு செய்து கொள்ளும் அதிகாரம் விசாரணை அதிகாரிக்கு இருப்பதாகச் சொல்லும் சிபிஐ போலீசார், இந்த வழக்கைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட பெண்களின் முழு சம்மதத்துடனே வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகத் தெரிவித்தனர்.

”ஆரம்பத்தில் அவர்களை அணுகியபோது, பேச முன்வரவில்லை, பலமுறை பேசிப்பேசி நம்பிக்கையை ஏற்படுத்தினோம். அது ஒரே நாளில் ஏற்படுத்தப்பட்டதில்லை. ஐந்தாண்டுகளாக நாங்கள் ஏற்படுத்திய நம்பிக்கையே இறுதிவரை அவர்களை மாறாத சாட்சியாக நிற்க வைத்தது” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் சிபிஐ ஆய்வாளர் பச்சையம்மாள்.

இதற்கு அடுத்ததாக மாஜிஸ்திரேட் பதிவு செய்யும் வாக்குமூலம் பெரும்பாலும் போலீசாரின் வாக்குமூலத்தை ஒத்ததாகவே இருக்கும் என்று கூறும் வழக்கறிஞர்கள், அரிதான சில வழக்குகளைத் தவிர, பெரும்பாலான வழக்குகளில் இவ்விரு வாக்குமூலத்திலும் பெரியளவில் மாற்றங்கள் இருக்காது என்கின்றனர். இவ்வழக்கிலும் அதில் பெரிய பிரச்னை ஏற்படவில்லை என்கிறார் சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திரமோகன்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு, சட்டம், நீதித்துறை, சிபிஐ, தமிழ்நாடு

குறுக்கு விசாரணை

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி, நீதிமன்றத்தில் நடக்கும் குறுக்கு விசாரணைதான், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்கள் அனுபவித்த உடல் வேதனை, மன வேதனையைத் தாண்டிய பெரிய வலியை ஏற்படுத்துவதாக இருக்கும் என்கிறார் சுரேந்திரமோகன்.

”நீதிமன்றத்தில் எதையும் பார்த்துப் படிக்க முடியாது. நினைவை பயன்படுத்தியே வாக்குமூலம் தர வேண்டும். என்னதான் வழக்கறிஞர் சிலவற்றை அறிவுறுத்தினாலும், அதை எதிர்தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்யும்போது, சொல்ல நினைத்ததை அல்லது நடந்த உண்மையைச் சொல்வது மிகவும் கஷ்டமாகிவிடும். இத்தகைய வழக்குகளில் பெண்களின் நடத்தையை குற்றம்சாட்டுவது வழக்கமான எதிர்தரப்பு முயற்சியாக இருக்கும். இந்த வழக்கிலும் அது நடந்தது.” என்கிறார் சுரேந்திரமோகன்.

மேலும் தொடர்ந்த அவர், ”ஒரு கல்லுாரி மாணவிக்கு அவருடைய சக மாணவர் மூலமாகவே குற்றவாளி பழக்கமாகியிருக்கிறார். அதனால் அந்த சக மாணவருடன் அந்த மாணவியை இணைத்து, அது தொடர்பான வீடியோ இருந்ததாகவும் அது போலீசாரால் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. அது அப்பட்டமான பொய் என்பதால், முதலில் அந்தப் பெண் உடைந்து அழுதுவிட்டார். அதன்பின் அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கையூட்டியதும் அவர் மிகவும் துணிச்சலோடு பேசினார்.” என்றார் அவர்.

”எதிர்தரப்பு வழக்கறிஞர் பேசுவதை காதில் போட்டுக் கொள்ள வேண்டாம். அவர் சத்தமாகப் பேசினால் அதை விட நீங்கள் சத்தமாகப் பேசுங்கள் என்று கூறினோம். பெண் போலீசார் ரொம்பவே தெம்பூட்டினர்” என்கிறார் சிபிஐ வழக்கறிஞர்.

இந்த வழக்கில் கடந்த 2023 ஜனவரி மாதத்தில் சிபிஐ தரப்பு சிறப்பு வழக்கறிஞராக சுரேந்திரமோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வழக்கமாக இத்தகைய வழக்குகளில் பெண் வழக்கறிஞரை நியமிக்கும் சூழலில், ஆண் வழக்கறிஞரை நியமித்ததால், பல தரப்பிலும் எழுந்த சந்தேகங்களையும் கடந்து வந்து வழக்கில் வெற்றியடைந்ததாக கூறுகிறார் அவர்.

”நான் பொறுப்பேற்றுக் கொண்ட இரண்டே மாதத்தில் விசாரணை துவங்கிவிட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நம்பிக்கையைப் பெறுவது பெரும் சவாலாக இருந்தது. அவர்களிடம் என்னை உங்கள் சகோதரராக நினைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினேன். அவர்களுக்கு அப்போது என் மீது ஏற்பட்ட நம்பிக்கையே எனக்குக் கிடைத்த முதல் வெற்றி.” என்றார் சுரேந்திரமோகன்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு, சட்டம், நீதித்துறை, சிபிஐ, தமிழ்நாடு

நீதித்துறை தந்த பாதுகாப்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதி நந்தினி தேவி, சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் சுரேந்திரமோகனை தனது தீர்ப்பிலேயே பாராட்டியுள்ளார்.

ஆண் வழக்கறிஞராக இருந்தும், இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கை மிகச்சிறப்பாகக் கையாண்டு, பெண்களிடம் ஒரு சகோதரரைப் போல நம்பிக்கையை ஏற்படுத்தி, சிறப்பான சாட்சிகளை முன்னிறுத்தி வழக்கில் ஒரு தெளிவான முடிவை எடுப்பதற்கு உதவியதாக நீதிபதி அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய பாலியல் வழக்குகளில், குற்றவாளிகளை அடையாளம் காண்பிப்பது (Test Identification Parade -TIP) மிக முக்கியமான நடைமுறையாக இருக்கும். ஆனால் இந்த வழக்கில் அடையாளம் காண்பிக்கும் நடைமுறை உட்பட வழக்கின் எந்தக்கட்டத்திலும் பாதிக்கப்பட்ட பெண்கள், குற்றவாளிகளை நேரில் சந்திப்பதற்கான சூழ்நிலையை நீதித்துறை ஏற்படுத்தவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்ட பின்பு, பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் பர்தா அணிந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரும் நடைமுறை வந்துள்ளதை சட்ட நிபுணர்கள் விளக்குகின்றனர்.

அதேபோன்று நீதிமன்றத்திலும் ஒரு புறம் இருப்பவர், மற்றொரு புறத்தில் இருப்பவர் தெரியாததுபோன்ற கண்ணாடிக் கட்டமைப்பும் உருவாக்கப்பட்டிருக்கும்.

கோவை மகளிர் நீதிமன்றத்திலும் அத்தகைய அமைப்பு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருமே பர்தா அணிந்தே சாட்சி சொல்ல அழைத்து வரப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை அடையாளம் காண்பிக்கும் போதும், சேலம் மத்திய சிறையிலிருந்த அவர்களை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாகவே, அடையாளம் காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, குற்றவாளிகள் அனைவரும் சேலம் சிறையிலிருந்தவாறு வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாகவே நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதற்காகவே உயர்நீதிமன்ற உத்தரவின்படி அங்கு ஓர் அறையும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

”வழக்கு விசாரணை நடக்கும்போது, பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றவாளிகளை மீண்டும் பார்த்தால் அவர்களுக்கு ஒருவித அச்சம் ஏற்படும். உளவியல்ரீதியாக பாதிப்பு உருவாகும். அதனால் அனைத்து வாக்குமூலமும் பெற்ற பின்பே, ஒவ்வொரு பெண்ணிடமும் அவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த குற்றவாளிகளை அடையாளம் காட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.” என்றார் வழக்கறிஞர் சுரேந்திரமோகன்.

இவ்வழக்கில் குற்றவாளிகளை கோவை நீதிமன்றத்துக்கு நேரில் அழைத்து வராமலிருப்பதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன.

விசாரணை துவங்கிய சில நாட்களில், குற்றவாளிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துவரும்போது, அவர்கள் வரும் வாகனங்களில் முட்டைகள் வீசும் சம்பவங்கள் நடந்தன. அவர்களுக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் சில போராட்டங்களையும் நடத்தினர்.

அத்துடன் சேலம் மத்திய சிறைக்கு அவர்களை மீண்டும் அழைத்துச் செல்லும்போது மற்றொரு சம்பவமும் நடந்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டில், கோவை விமான நிலையத்துக்கு அருகில் சேலம் நெடுஞ்சாலையில், குற்றவாளிகள் கொண்டு செல்லப்பட்ட வாகனம் நிறுத்தப்பட்டு, அவர்களை உறவினர்கள் சந்தித்துப் பேசியதும், உணவு பரிமாறியதும் காட்சி ஊடகங்களில் வீடியோவாக வெளியானது. அதன் அடிப்படையில் சில அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை போலீசார் 16 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

அதற்குப் பின்பே, சேலம் மத்திய சிறையிலிருந்தே குற்றவாளிகளை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு, சட்டம், நீதித்துறை, சிபிஐ, தமிழ்நாடு

வீடியோ கான்ஃபரன்ஸ் நடக்க காரணமாயிருந்த சம்பவம்

பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய்மாமன் ஒருவர் மூலமாக, ஒரு பெரும் தொகையைக் கொடுக்கவும், வழக்கிலிருந்து விலகிக் கொள்ளவும் அழுத்தம்தரப்பட்டதாக சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திரமோகன் கூறினார்.

ஒரு பெண்ணுக்கு மறைமுக கொலை மிரட்டல் நடந்ததை விளக்கிய அவர், அந்த மிரட்டல்கள் மற்றும் அச்சத்திலிருந்து அவர்களை மீட்டெடுத்த பெருமை சிபிஐ போலீசாரையே சேரும் என்கிறார்.

இவை எல்லாவற்றையும் விட, குடும்பத்திலுள்ள நபர்களுக்கே தெரியாமல் பாதிக்கப்பட்ட பெண்ணை அணுகுவதும், அவர்களை சாட்சியாக மாற்றியதிலுமே சிபிஐ போலீசாரின் திறமையும் அணுகுமுறையும் நீதிபதியின் பாராட்டுக்குரியதாக இருந்துள்ளது.

அவர்களைச் சந்திப்பதற்கு பலவிதமான முயற்சிகளையும் சிபிஐ போலீசார் எடுத்துள்ளனர்.

”பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு திருமணமாகிவிட்டதால், அவருடைய கணவருக்குத் தெரியாமல் அவரை தனியாக அழைத்துப் பேசமுடியவில்லை. அந்தப் பெண்ணுக்கு வங்கிக்கடன் இருப்பதும், அதில் சில தவணைகள் செலுத்தாமலிருப்பதும் தெரிந்து, வங்கிக் கிளையில் இருந்து பேசுவது போல பேசி, அவரை வரவைத்தனர். அப்போது கணவரும் சேர்ந்து வந்துவிட்டார். அதற்கு முன் வங்கி அதிகாரியிடம் பேசி, அவரின் அறையில் சிபிஐ அதிகாரியை அமரவைத்துப் பேசினர். சில ஆவணங்களைச் சரி பார்த்துவிட்டு, மறுநாள் வரச்சொன்ன போது, கணவர் தன்னால் வரமுடியாது என்று கூறினார். அதனால் பெண்ணை தனியாக வரச்சொல்லி, மறுநாளே அவரிடம் விஷயத்தை விளக்கி வழக்கில் சாட்சியாகச் சேர்த்தனர்.” என்றார் சுரேந்திரமோகன்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நீதிபதி நந்தினி தேவி ஏற்படுத்திய நம்பிக்கை

இந்த வழக்கில் நீதிபதி நந்தினி தேவியின் ஈடுபாட்டையும் வழக்கறிஞர்கள் பலரும் பாராட்டுகின்றனர். இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்புக்குழு உருவாக்கப்படுவது வழக்கம். அதன் தலைவராக மாவட்ட முதன்மை நீதிபதி இருப்பார் அல்லது அவர் நியமிக்கும் ஒருவர் இருக்கலாம். அதைத் தவிர்த்து விசாரணை முகமை (சிபிஐ) எஸ்பி மற்றும் வழக்கறிஞர் இருக்க வேண்டும்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மாவட்ட முதன்மை நீதிபதியாக இருந்தவர், மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவியையே அந்த பாதுகாப்புக்குழுவின் தலைவராக நியமித்துள்ளார்.

”அவர் பாதிக்கப்பட்ட பெண்களிடம் ஒரு தாயைப் போலப் பேசி, பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தினார். சில நேரங்களில் குறுக்கு விசாரணையின்போது, எதிர்தரப்பு வழக்கறிஞர்களின் கடுமையான விசாரணையில் பெண்கள் உடைந்து அழுதபோது, விசாரணையை நிறுத்தி பிரேக் எடுப்பார்.

அதற்குள் அந்த பெண்கள் ஆசுவாசமடைந்து, மீண்டும் நம்பிக்கையுடன் கேள்விகளை எதிர்கொள்ள ஊக்கமளித்தார்.” என்கிறார் சிபிஐ வழக்கறிஞர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரம் வெளியில் வருவதற்கு முக்கியக் காரணமாக இருந்த முதல் புகார் அளித்த பெண்ணின் சார்பில் பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், ”பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இவ்வளவு நம்பிக்கை ஏற்படக் காரணம் சிபிஐ தான். அதை யாராலும் மறுக்கவே முடியாது.” என்றார்.

இந்த தீர்ப்புக்குப் பின், முதல்வர் ஸ்டாலின், ”பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளைக் காப்பாற்றத் துடித்த ‘சார்’கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.” என்று கூறியிருந்தார்.

அதற்குப் பதிலளித்திருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ”யார் வெட்கித் தலைகுனிய வேண்டும்…உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது.” என்று எக்ஸ் தளத்தில் விரிவான பதிவை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC