SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்தியாவின் பாரம்பரிய வெளியுறவுக் கொள்கை மற்றும் ராஜதந்திரத் திட்டங்களில் ஒரு முக்கிய மாற்றம் தெரிகிறது.
ஏப்ரல் 22-ஆம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்திருக்கிறது. 25 சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
அதற்குப் பதிலடி கொடுப்பதற்காக, மே 6 -7 ம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் இந்தியா வான்வெளித் தாக்குதல்களை நிகழ்த்தியது. பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறி வைத்துத் தாக்கியதாக இந்தியா கூறியது. இந்தியாவின் தாக்குதலுக்குப் பிறகு எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துக் கொண்டே இருப்பதாகத் தெரிகிறது.
இந்த முறை இந்தியா தாக்குதல் நடத்திய விதம், இந்தியா பயன்படுத்தும் உத்திகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை காட்டுகிறது. அதைப் பற்றி நிறைய விவாதங்களும் நடக்கின்றன.
“அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பயன்படுத்தும் உத்திகளை, இந்த முறை இந்தியாவும் பயன்படுத்தியுள்ளது’, என்கிறார்கள் நிபுணர்கள்.

இந்தியாவின் உத்திகள் மாறியுள்ளதா?

பட மூலாதாரம், Getty Images
கடந்த காலத்தில் தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, பெரும்பாலும் ராஜ தந்திர முறைகளையே இந்தியா நாடும். 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி நடைபெற்ற மும்பைத் தாக்குதலுக்குல் லஷ்கர்-இ-தொய்பா மீது இந்தியா குற்றம் சுமத்தியது. இந்த வழக்கின்போது இது தொடர்பான ஆதாரங்களையும் கொடுத்துள்ளது இந்தியா.
அந்த சமயத்தில் மும்பையின் முக்கிய கட்டடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் நான்கு நாட்கள் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 160 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் குற்றம் சுமத்தப்பட்ட ராணா, அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டு சமீபத்தில் இந்தியா கொண்டு வரப்பட்டார்.
ஆனால் இப்படிப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு இந்தியாவின் உத்திகள் மாறியிருக்கிறதா?
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஹேப்பிமான் ஜேக்கப், “பாகிஸ்தானுக்கு எதிராக பதிலடி கொடுக்க இந்தியா பயன்படுத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’, இந்தியா புதிய கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளதைக் காட்டுகிறது.
“2001-ஆம் ஆண்டு பாராளுமன்றம் தாக்கப்பட்டபோதோ, 2006-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி மும்பை தாக்கப்பட்ட போதோ, பதிலடி கொடுப்பதற்கான எந்த சிறப்பு நடவடிக்கையையும் இந்திய அரசு செய்ததில்லை”.
“பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருக்கின்றன என்பதால் ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. நாம் வழக்கமான ராணுவத் தாக்குதல் நடத்தினால், அவர்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலாம். இந்திய அரசுக்கும், இந்திய அரசின் கொள்கைகளைத் தீர்மானிப்பவர்களுக்கும் இந்த பயமும் எண்ணமும் மனதில் இருந்து கொண்டே இருந்தது,” என்கிறார் அவர்.
ஆனால் 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு உரியில் 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டபிறகு, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி உள்ள தீவிரவாதிகளின் முகாம்களில் ‘துல்லியத் தாக்குதல்’ நடத்தியது இந்தியா.
2019-ம் ஆண்டில் புல்வாமா பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன்பிறகு பாலகோட் வரை உள்ளே சென்று வான்வழித் தாக்குதல் நடத்தியது இந்தியா.
“சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட இந்த மூன்று தாக்குதல்களிலும் ஒரு புதிய கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக நான் நம்புகிறேன். பாகிஸ்தான் மரபு ரீதியாக அல்லாமல் மாற்று வழியில் (உதாரணமாக பயங்கரவாத தாக்குதல்கள்) நடத்தும் போதெல்லாம், இந்தியா மரபு வழியில், அதாவது ராணுவத்தைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளது” என்கிறார் ஹேப்பிமான் ஜேக்கப்.
“பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் எப்போது தாக்குதல் நடத்தினாலும், இந்தியா திருப்பித் தாக்கும் என்று பாகிஸ்தான் புரிந்து கொள்ளும் என்பதே இதிலுள்ள முக்கியமான விஷயம்,” என்று அவர் நம்புகிறார்.
“இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை போன்றதாக இந்திய கொள்கை உள்ளது”

பட மூலாதாரம், Getty Images
சமீபத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, இந்தியாவில் என்ன நடந்தது என்பது தொடர்பான ஆதாரங்கள் வெளியிடப்பட்டன மற்றும் அது தொடர்பான பதிலடியாகத்தான் இந்தத் தாக்குதலை இந்தியா நடத்தியது.
முன்பெல்லாம் வழக்கமாக நடப்பது போல எந்த சர்வதேச அரங்கிலும் இந்த தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியா குரலெழுப்பவில்லை.
“நாங்கள் நினைத்தால் தாக்குவோம்” என்று சொல்லக்கூடிய இந்த விஷயம், இந்திய வெளியுறவுக் கொள்கையில் அடிப்படையில் எந்த வகையான மாற்றம்? உளவியல் அழுத்தத்தை உருவாக்குவதைத் தாண்டிய கொள்கையா இது?
“அமெரிக்கா மீது ஏதாவது தாக்குதல் நடந்தால் எந்த சர்வதேச அரங்குக்கும் அமெரிக்கா செல்லாது. இஸ்ரேலும் இதே கொள்கையை வைத்துள்ளது. அதுவும் எந்த அரங்குக்கும் சென்று எங்கள் மீது தாக்குதல் நடந்தது, நாங்கள் என்ன செய்வது என்று கேட்காது,” என்கிறார் பேராசிரியர் ஹேப்பிமான் ஜேக்கப்.
“இந்தியாவும் இதே கொள்கையை இப்போது ஏற்றுக்கொண்டுவிட்டது. நம் மக்கள் கொல்லப்பட்டால் நாமும் நேரடியாக நடவடிக்கை எடுப்போம் என்ற செய்தியைச் சொல்ல ஆரம்பித்துள்ளது. சர்வதேச அரங்குக்கு இந்த விஷயம் சென்றால் இந்தியாவுக்கு சாதகமாகத்தான் ஆதரவு குவியும்”.
“பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தீவிரவாத அமைப்பான ‘TRF the resistance front’ தான் நம் மீது நடந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றிருக்கிறது என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. அது லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையது. லஷ்கர்-இ-தொய்பாவின் தலைநகரம் முரிட்கேவில் உள்ளது. இந்த ஆதாரம் போதும்” என்கிறார் ஜேக்கப்.
“இத்தனை ஆண்டுகளாக பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தனை ஆண்டுகளாக அந்தத் தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானில் தான் இருந்திருக்கிறது. இதற்கான ஆதாரம் உலகின் முன்னால் இருக்கிறது. இதன் அடிப்படையில்தான் அந்த தீவிரவாத அமைப்பைத் தாக்க ‘ஆபரேஷன் சிந்தூர்’ மேற்கொள்ளப்பட்டது என்று இந்தியா சொல்லமுடியும்”.
” உளவியல் ரீதியான விஷயங்கள் குறித்துப் பார்க்கும் போது அதை நான் வேறுவிதமாகப் பார்க்க விரும்புகிறேன். 2001 மற்றும் 2008-இல் தாக்குதல் நடந்த போது அமெரிக்காதான் வலிமையான நாடு. அது இப்போதும் வலிமையான நாடுதான். ஆனால் அந்த சமயத்தில் உலகின் போலீஸ்காரன் போல அது நடந்து கொண்டிருந்தது. ஆனால் இன்றோ உலக விஷயங்களில் அமெரிக்கா அதிகம் அக்கறை காட்டுவதில்லை. அதோடு இந்தியா முன்பை விட வலிமையான நாடாகிவிட்டது,”
“அக்கம் பக்கத்து நாடுகளோ, சர்வதேச அமைப்புகளோ என்ன சொல்லும் என்பதில் அதிக கவனம் செலுத்தத் தேவையில்லை என்று இந்தியா புரிந்துகொண்டுள்ளது. நம் மீது தீவிரவாதத் தாக்குதல் நடந்தால், அது யார் நடத்தியது என்று தெரிந்தால், நாம் நடவடிக்கை எடுப்போம்,” என்கிறார் பேராசிரியர் ஜேக்கப்.
இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி, உலகின் பல நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. ஆனால் பெரும்பாலான நாடுகள் இதை வெளிப்படையாக எதிர்க்கவில்லை.
இந்தியா – பாகிஸ்தான் மோதல் எவ்வளவு தீவிரமானது?
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் (SIPRI) 2024-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவிடம் 172 அணு ஆயுதங்களும், பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்களும் இருக்கின்றன.
எத்தனை அணு ஆயுதங்கள், இரண்டு நாடுகளிடமும் பயன்படுத்தும் நிலையில் இருக்கின்றன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இரண்டு நாடுகளுமே அணு ஆயுத சக்திகள் என்பதால் ஒரு நாடு இன்னொரு நாட்டைத் தாக்காது என்று நம்பப்படுகிறது. ஆனால் சமீபத்திய மோதல்களுக்குப் பிறகு இந்த நம்பிக்கை எந்த அளவு மாறியுள்ளது?
“கோட்பாட்டு ரீதியாகப் பார்த்தால், அணு ஆயுதங்கள் தாக்குதலில் இருந்து காப்பாற்றும். ஆனால் இது தீவிரவாதத் தாக்குதலையோ, வழக்கமான பாணி ராணுவத் தாக்குதல்களையோ தடுக்காது. அதனால் ஓரளவு வரைதான் அணு ஆயுதம் நமக்கு பாதுகாப்பைக் கொடுக்கும்,” என்கிறார் பேராசிரியர் ஹேப்பிமான் ஜேக்கப்.
“பாகிஸ்தான் விமானப்படை, மிகத் திறமையானது என்று ஒரு கவலை இருக்கிறது. ஆனால் பாகிஸ்தானின் ராணுவம் வலிமை வாய்ந்ததாக இருந்தால் அது அணு ஆயுதங்களை நோக்கிச் செல்லாது என்று நான் நம்புகிறேன். மரபு ரீதியாக முறையில் போர் நடந்தால், இந்தியாதான் ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வலிமை வாய்ந்தது.” என்றார் அவர்.
உலக அளவில் இந்தியாவுக்கு நல்ல நண்பர்கள் இருப்பதுபோல பாகிஸ்தானுக்கு இல்லை என்று பேராசிரியர் ஹேப்பிமான் ஜேக்கப் நம்புகிறார். இந்தியாவால் மரபு ரீதியான போரில் வெல்லமுடியும். அதனால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தேவையில்லை என்று இந்தியா மதிப்பீடு செய்திருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா இந்த தாக்குதல் மூலம் ஏதேனும் சேதி சொல்ல விரும்புகிறதா?
அண்டை நாடுகளான இந்தியா – பாகிஸ்தான் இடையே எப்போதும் கசப்புணர்வு இருந்து வருகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையே போர்களும் நடந்துள்ளன.
வழக்கமாக இரண்டு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் நிலவும் சூழலில் மூன்றாவது நாடு ஒன்று தலையிட்டு அமைதியை ஏற்படுத்த முயற்சி செய்யும். ஆனால் இந்த முறை மூன்றாவது நாடு ஒன்று மத்தியஸ்தம் செய்வதற்கு இந்தியா எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை.
“1947-இல் இருந்து பாகிஸ்தான் எப்போதும் ஒரு மூன்றாவது நாடு மத்தியஸ்தம் செய்ய வர வேண்டும் என்று விரும்பியிருக்கிறது. பாகிஸ்தானிகள் ஜம்மு காஷ்மீரைத் தாக்கிய சமயத்தில் ஐநா வந்தது. 1965-ல் சோவியத் உள்ளே நுழைந்தது,” என்றார் பேராசிரியர் ஹேப்பிமான் ஜேக்கப்.
“ஆனால் 1971-ல் இந்தியா மூன்றாவது நபர் உள்ளே நுழைவதை விரும்பவில்லை. என்ன நடக்குமோ அது எங்களுக்குள் நடக்கட்டும் என்று கூறிவிட்டது”.
“இந்த முறை சர்வதேச சமூகம் என்ன சொல்லும் என்று கவலைப்படாமல் எதிர்வினையாற்றுவது என்று முடிவெடுத்தது இந்தியா. ஏனெனில் தாக்குதல் இந்தியாவில் நடந்திருக்கிறது. அதனால் திருப்பித் தாக்க தனக்கு உரிமை இருக்கிறது என்று முடிவு செய்து அதையே செய்தது இந்தியா”, என்று நம்புகிறார் ஹேப்பிமான் ஜேக்கப்.
தற்போதைய இந்தியா – பாகிஸ்தான் மோதலில், பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர் பகுதியில் மட்டுமல்ல. பாகிஸ்தானின் பிற பகுதிகளிலும் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு ஏதேனும் சேதியை உணர்த்த இந்தியா விரும்புகிறதா?
“2016-ல் இந்தியா, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி துல்லியத் தாக்குதல் நடத்திய போது, அது பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் செய்யப்பட்ட ஒரு பரிசோதனை முயற்சி. 2019-இல் இன்னும் கொஞ்சம் உள்ளே சென்று கைபர் பக்துன்க்வா மாகாணம் வரை சென்று தாக்குதல் நடத்தியது. இதில் உள்ள செய்தி என்று நான் நம்புவது இதைத்தான்.” என்கிறார் பேராசிரியர் ஜேக்கப்.
“இந்த முறை நடந்த தாக்குதல் பஞ்சாபில், பாகிஸ்தானின் மையப்பகுதியில் நடந்திருக்கிறது. இந்தியாவிடம் பல வாய்ப்புகள் இருக்கின்றன என்பது இதைக் குறிக்கிறது. வருங்காலத்தில் ஏதேனும் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால் , பதிலடி கொடுப்பதற்கு இந்தியாவிடம் பல வாய்ப்புகள் இருக்கும்,” என்கிறார் பேராசிரியர் ஜேக்கப்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU