SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
2 மணி நேரங்களுக்கு முன்னர்
மே 1, 1945 அன்று மூன்றாம் ரைச்சின் (நாஜி ஜெர்மனி) பிரசார அமைச்சரும், ஹிட்லரின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவருமான, ஜோசப் கோயபெல்ஸ் கடற்படைத் தலைவர் கார்ல் டோனிட்ஸுக்கு தந்தி ஒன்றை அனுப்பினார்.
“அவசரம்”, “ரகசியம்” என்று அந்தத் தந்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் இடம் பெற்றிருந்த செய்தி இவ்வாறு ஆரம்பமானது: “ஃப்யூரர் (ஹிட்லர்) நேற்று மதியம் 3.30 மணியளவில் மரணித்துவிட்டார்.”
முதல் வாக்கியம் இப்படி இருந்தால், அதற்கு அடுத்த வாக்கியம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது: “ஏப்ரல் 29ஆம் தேதி எழுதப்பட்ட உயிலில் நீங்கள் மூன்றாம் ரைச்சின் அதிபராகச் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்கொலை செய்து கொள்வதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, ஹிட்லர், கார்ல் டோனிட்ஸை தனது வாரிசாகவும், கோயபெல்ஸை அடுத்த ‘சான்செலராகவும்’ தேர்வு செய்தார்.
“ஹிட்லரின் ஆணைக்கு இணங்க, இதைப் பாதுகாக்கவும், ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கவும், ஏற்ற வகையில் உயில் பெர்லினில் இருந்து உங்களுக்கும், ஃபீல்ட் மார்ஷல் ஷ்கார்னெருக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது,” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதில், “நாஜி கட்சியின் தலைமைச் செயலகத்தின் தலைவர் மார்டின் பொர்மான் இன்று நேரடியாக வந்து உங்களிடம் கள நிலவரம் குறித்துத் தெரிவிப்பார். இதை எப்போது, எவ்விதமாக ஊடகங்களுக்கும், துருப்புகளுக்கும் தெரிவிக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். தந்தி கிடைக்கப் பெற்றதை உறுதி செய்யவும்,” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் அவரிடம் இருந்து பதில் தந்தி வரும் வரை கோயபெல்ஸ் காத்திருக்கவில்லை. இந்த நிகழ்வைத் தொடர்ந்து, அவருடைய மொத்த குடும்பத்தினருடன், ஹிட்லர் மரணித்த அதே இடத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
பொர்மானோ, ஹிட்லரின் உயிலோ டோனிட்ஸை வந்தடையவில்லை. அப்போது ஜெர்மனியில் இருந்த நேச நாடுகளின் படையினரால் அது தடுக்கப்பட்டிருக்கலாம். டோனிட்ஸ் உள்பட யாருமே எதிர்பார்க்காத வகையில், வீழ்ச்சியடைந்து வரும் நாஜி ஜெர்மனியின் எதிர்காலம் அவரது தோளில் விழுந்தது.
“அந்த தந்தி எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது,” என்று பின்னாளில் அவர் எழுதிய நினைவுக் குறிப்பு நூலான “மெமோய்ர்ஸ்: 10 இயர்ஸ் அண்ட் 20 டேஸ்,” (1959) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் டோனிட்ஸ்.
“ஒரேயொரு பெரிய கூட்டத்தில் பங்கேற்றதைத் தவிர, 1944ஆம் ஆண்டு ஜூலை 20 முதல் நான் ஹிட்லரிடம் பேசவில்லை. இது குறித்து யாரிடம் இருந்தும் எந்த விதமான மறைமுகமான சமிக்ஞையும்கூட வரவில்லை,” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அவர் தேர்வு செய்யப்படக் காரணம் என்ன?
நாஜி ஜெர்மனியின் முக்கியமான இரண்டு தலைவர்களான ஹெர்மான் கோரிங் மற்றும் ஹென்ரிச் ஹிம்லெரை ஹிட்லர் அவருடைய அடுத்த வாரிசாக ஏன் தேர்வு செய்யவில்லை என்ற கேள்விக்கான விடையைத் தெரிந்து கொள்வதன் மூலம், டோனிட்ஸ் ஏன் தேர்வு செய்யப்பட்டார் என்பதை அறிந்து கொள்ள இயலும்.
ராணுவ வீரரான கோரிங், 1933ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஆட்சியைக் கைப்பற்ற ஹிட்லருக்கு உதவினார். ஹிட்லரின் பக்கபலமாக அவர் செயல்பட்டார். ஹிட்லரின் அடுத்த வாரிசாகவே அவர் அறியப்பட்டார்.
ஹிட்லர் பிடிபட்டலோ அல்லது கொல்லப்பட்டாலோ அடுத்த தலைவராக லுஃப்த்வாஃபின் தளபதியான கோரிங் நியமிக்கப்படுவார் என்று ரகசிய ஒப்பந்தம் ஒன்றிலும் 1941ஆம் ஆண்டு கையெழுத்திட்டார் அவர்.
ஆனால் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிலைமை மோசமடைந்தபோது, ஹிட்லருக்கு தந்தி ஒன்றை அனுப்பினார் கோரிங். அப்போது அவர் பெர்க்தெஸ்காடெனில் பாதுகாப்பாக இருந்தார். பெர்லின் கோட்டையிலேயே ஹிட்லர் இருக்கும்போது தன்னால் ஜெர்மனியின் தலைவராகப் பொறுப்பேற்க இயலுமா என்ற கேள்வியை கோரிங் முன்வைத்தார்.
“இரவு பத்து மணிக்குள் எனக்குப் பதில் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சுதந்திரத்தை இழந்துவிட்டீர்கள் என்று நான் முடிவு செய்துவிடுவேன். மேலும் உங்கள் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது போல், நாட்டின், நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுவேன்,” என்று கோரிங் அந்தத் தந்தியில் குறிப்பிட்டிருந்தார்.
“என் வாழ்வின் ஓர் இக்கட்டான சூழலில் உங்களைப் பற்றி என்ன யோசிக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். என் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. கடவுள் உங்களைப் பாதுகாக்கட்டும். நீங்கள் இங்கு வந்தடைய உங்களுக்குத் துணை புரியட்டும்,” என்று அந்தத் தந்தியில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தத் தந்தியைக் கண்டு கோபமுற்ற ஹிட்லர், கோரிங்குக்கு அனுப்பிய கடிதத்தில், கோரிங் மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், அவருக்கு வழங்கப்பட்ட பதவிகளில் இருந்து அவர் விலகவில்லை என்றால், மரண தண்டனை வழங்கப்படும் என்றும் ஹிட்லர் குறிப்பிட்டிருந்தார். ஏப்ரல் 25 அன்று விடிவதற்கு முன்பு, கோரிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
ஹிட்லரின் அடுத்த தேர்வாக ஹிம்லெர் இருந்தார். அவர் சுத்ஸ்டாப்பெல் (SS) என்ற துணை ராணுவத்தை வழி நடத்தி வந்தார். ஆரம்பக் காலம் தொட்டு அவர் ஹிட்லருடன் சேர்ந்தே பயணித்தார். நீண்ட காலம் அவர் செய்த சேவையின் அடிப்படையில் அவர், விசுவாசி ஹென்ரிச் என்று அழைக்கப்பட்டார்.
கோரிங்கின் தந்தியைப் பெற்ற ஐந்து நாட்கள் கழித்து, ஹிட்லருக்கு ஹிம்லெர் குறித்த தகவல்கள் கிடைத்தன. ஹிம்லெர், நேச நாடுகளிடம் (நாஜி ஜெர்மனி படைக்கு எதிராக அணி திரண்ட நாட்டினர்) பேச்சுவார்த்தை நடத்த முயன்றதாகவும், மேற்கில் உள்ள ஜெர்மனி ராணுவத்தினரிடம் அமெரிக்க ஜெனரல் ட்வைட் எய்சென்ஹோவரை ஒப்படைக்க முயன்றதாகவும் ஹிட்லருக்கு தகவல்கள் வந்தன.
மேலும், அதிகாரபூர்வ அனுமதியின்றி ரகசிய உத்தரவுகளையும் ஹிம்லெர் பிறப்பித்திருக்கிறார். ஹிட்லர் தங்கியிருந்த பதுங்குக் குழியில் நடந்ததை நேரில் கண்டவர்களுடைய கூற்றின்படி, ஹிம்லெரின் செயல்பாட்டால் ஹிட்லர் கடும் கோபம் அடைந்தார்.
இந்த இருவரின் செயல்களைத் தொடர்ந்து ஹிட்லர் டோனிட்ஸை தேர்வு செய்தார். அவர் ஹிட்லருடன் நீண்ட காலம் செலவழிக்கவில்லை என்ற போதும், நாஜி சித்தாந்தம் மற்றும் போரில் அவர் காட்டிய அர்ப்பணிப்பு காரணமாக ஹிட்லரின் நம்பிக்கையைப் பெற்றிருந்தார்.
மோசமான நபர்

பட மூலாதாரம், Getty Images
பலருக்கும் தெரியாத டோனிட்ஸை அடுத்த தலைவராக அறிவித்தது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது. ஜெர்மனியின் யூ-படகுகளைக் கொல்லும் ஆயுதமாக மாற்றியதால் அவருடைய புகைப்படம் 1942, 1943 ஆண்டுகளில் டைம் இதழின் முகப்புப் பக்கத்தில் இடம் பெற்றன.
நிலப்பரப்பில், ஐரோப்பிய எல்லையை நோக்கி நகரும் நேச நாடுகளின் படையைத் தடுத்து நிறுத்த ஹிட்லரால் செய்ய முடியாததை, ஜெர்மனியின் கடற்படை தலைமைத் தளபதி கார்ல் டோனிட்ஸ் கடலில் செய்ய ஆர்வம் காட்டினார்.
அவரது முயற்சிகள் பெரிய வெற்றியை வழங்கின. போரின் முடிவில் இது குறித்து வின்ஸ்டன் சர்ச்சில் பேசும்போது, “போரின்போது என்னை அச்சுறுத்திய ஒரேயொரு விஷயம் நீர்மூழ்கிக் கப்பல்கள்தான்,” என்று குறிப்பிட்டார். டோனிட்ஸால் ஏற்படுத்தப்பட்ட அபாயம் இது.
யூ-படகுகள் என்று அழைக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்த ஆர்வம் அவருக்கு முதல் உலகப் போரின்போது அதிகமானது. அப்போது அவர் ஜெர்மனி நாட்டுக் கடற்படையில் பணியாற்றினார்.
ஆனால் அது நீண்ட நாட்களுக்கு வெற்றியைத் தரவில்லை. போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு அவர் மால்டாவில் சென்று கொண்டிருந்த பிரிட்டன் நாட்டு ராணுவ வாகனங்களைத் தாக்கினார். இறுதியில் போர்க் கைதியாக பிரிட்டனில் சிறை வைக்கப்பட்டார். அங்கே அவர் ஒரு பைத்தியக்காரர் போல் நடிக்க நேரிட்டது.
பல வருடங்கள் கழித்து, நுரேம்பெர்க் சிறையில் லியோ கோல்டன்ஷான் என்ற மனநல மருத்துவரிடம் பேசும்போது, பைத்தியக்காரத்தனம் குறித்தோ அல்லது அப்படி நடிப்பது குறித்தோ தனக்கு ஏதும் தெரியாது என்று டோனிட்ஸ் தெரிவித்தார்.
“எங்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று அறிவித்தால் நாங்கள் அந்தச் சிறையில் இருந்து தப்பிக்க இயலும் என்று நானும் என்னுடன் பணியாற்றிய இரண்டு நபர்களும் நம்பினோம்,” என்று கூறினார்.
“நாங்கள் நீர்மூழ்கிக் கப்பல்களைப் போல் தலையைக் கீழே கவிழ்த்த வண்ணம் சத்தமிட்டவாறு நடந்து செல்வோம். நாங்கள் நீர்மூழ்கிக் கப்பல்கள் என்று கூறிக் கொண்டிருந்தோம். ஆனால் பிரிட்டன் மருத்துவர்கள் புத்திசாலிகள். எங்களால் அங்கிருந்து எங்கும் செல்ல இயலவில்லை,” என்றார்.
“எங்கள் தனிமை எங்கள் மன நிலையை உடனடியாகச் சரி செய்தது,” என்றும் அவர் கூறினார். ஜெர்மனி இதுபோன்ற கப்பல்களை உருவாக்கக் கூடாது என்று வெர்சாஜ் ஒப்பந்தம் குறிப்பிட்டாலும்கூட, அந்தச் சிறைவாசம், வரலாற்றிலேயே மிகப்பெரிய நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க வேண்டும் என்ற அவரின் ஆசையை அசைத்துக்கூடப் பார்க்கவில்லை.
முதல் உலகப் போரின்போது யூ-படகுகள் இருந்திருந்தால் அது ஜெர்மனிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கும் என்று அவர் முழுமையாக நம்பினார். 1936ஆம் ஆண்டு, யூ-படகு ஃப்ளோடில்லாவுக்கு தளபதியாக அவரை நியமனம் செய்வதற்கு முன்பே, ஜெர்மனியின் யூ-படகு கடற்படையை உருவாக்கத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். தொழில்நுட்பம் மற்றும் தளவாடங்கள் சார்ந்த நுட்பங்களை அவர் நன்கு கற்றுத் தேர்ந்தார்.
மிகச் சிறந்த கடற்படை

பட மூலாதாரம், Getty Images
இரண்டாம் உலகப் போரின் துவக்கத்தில் ஜெர்மனியிடம் குறைந்த இலக்கைத் தாக்கி அழிக்கும் 50 நீர்மூழ்கிக் கப்பல்கள் இருந்தன. ஆனால் போரின் முடிவில் டோனிட்ஸிற்கு திருப்தி அளிக்கும் வகையில், ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல்கள் உலகில் தலை சிறந்த கப்பல்களாக இருந்தன.
நேச நாடுகளின் வணிகக் கப்பல்கள்தான் யூ-படகுகள் எனப்படும் ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல்களின் இலக்காக இருக்க வேண்டும் என்று டோனிட்ஸ் வாதிட்டார்.
போரில் துருப்புகள் மற்றும் பொருட்களை வெற்றிகரமாக இடம் மாற்றுவது மிகவும் முக்கியமானது என்பதால் கடல் வழிகளைக் கண்காணிப்பது முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார்.
சில கடல் எல்லைகள் திறக்கப்பட்டன. அங்கே நடைபெற்ற அட்லாண்டிக் யுத்தம்தான், இரண்டாம் உலகப் போரின் மீது மிக நீண்ட காலம் நடைபெற்ற ராணுவ நடவடிக்கை என்று சர்ச்சில் குறிப்பிட்டார்.
நேச நாடுகளின் 3500 கப்பல்கள் நீரில் மூழ்கடிக்கப்பட்டன. இந்த நடவடிக்கையில் ஜெர்மனியின் 784 படகுகள் அழிந்தன. இதற்குக் காரணம் டோனிட்ஸின் வியூகம்தான்.
“ஒல்ஃப் பேக்” என்ற திட்டத்தின் மூலம் இதைச் சாத்தியமாக்கினார் டோனிட்ஸ். அத்திட்டத்தின்படி யூ-படகுகள் அதிக எண்ணிக்கையில் நேச நாடுகளின் கப்பல்களைச் சூழ்ந்து தாக்குதல் நடத்தும். இத்தகைய தாக்குதலின்போது, நேசப் படைகளின் கப்பல் கூட்டத்தின் மையப் பகுதியை இலக்காகக் கொண்டு யூ-படகுகள் தாக்குதலைத் தொடுக்கும். அதுவும் இரவு நேரங்களில். நீருக்கு அடியே செல்லும் ஏவுகணைகளை (torpedoes) அனைத்து திசைகளிலும் ஏவிய பிறகு விரைவாக நகர்ந்துவிடும் ஜெர்மனியின் படகுகள்.

பட மூலாதாரம், Getty Images
ஒரு சில நேரங்களில், நேசப் படைகளின் கப்பல்களில் ஒன்றை மட்டும் குறி வைத்து, அங்குள்ள படையினரின் கவனத்தை அந்த கப்பல் மீது திசை திருப்புவார்கள். பிறகு ஜெர்மனியின் கடற்படையினர், கவனம் செலுத்தப்படாத மற்ற கப்பல்களை இலக்காக வைத்து தாக்குதல் நடத்துவார்கள்.
இந்தத் தாக்குதல் பேரழிவை ஏற்படுத்தியது. ஜப்பான், பேர்ல் துறைமுகத்தைத் தாக்கிய பிறகு போர் அடுத்த கட்டத்தை எட்டியது. “மகிழ்ச்சியான நேரம்” என்று ஜெர்மன் நாட்டுக் கடற்படையினர் இந்தக் காலத்தை குறிப்பிட்டனர். 1942ஆம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கி ஆகஸ்ட் வரை இது நீடித்தது. இதில் 3.1 மில்லியன் டன் எடையுள்ள 609 நீர்மூழ்கிக் கப்பல்கள் நீரில் மூழ்கின. ஜெர்மனி மொத்தமாக 22 நீர்மூழ்கிக் கப்பல்களை இழந்தது.
ஆயிரக்கணக்கானோர் மாண்டனர். உண்மையான பிரச்னை 1943ஆம் ஆண்டு தொடங்கியது. பிரிட்டன் எரிபொருள் இன்றித் தவித்தது. அதே நேரத்தில் ஜெர்மனியின் யூ-படகுகளின் எண்ணிக்கை 47இல் இருந்து 200 ஆக அதிகரித்தது. ஆனால் லண்டனுக்கு சாதகமாக நிகழ்வுகள் அரங்கேறின.
நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு வியூகங்கள், மேம்படுத்தப்பட்ட ஆயுதங்கள், நீண்ட தூர ரேடார் பொறுத்தப்பட்ட விமானங்கள் போன்றவற்றின் உதவியோடு ஜெர்மனியின் யூ-படகுகளை அழிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டன. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்த நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வெளியாகின.
கடந்த 1943ஆம் ஆண்டு மே மாதம் டோனிட்ஸ் நீர்மூழ்கிக் கப்பல்களின் செயல்பாடுகளை நிறுத்த முடிவு செய்தார். அந்த ஆண்டுதான் போர் ஜெர்மனிக்கு எதிராகத் திரும்பியது. அதே ஆண்டில் டோனிட்ஸ் ஜெர்மனி கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார்.
அது நாள் வரை, ஹிட்லரை எப்போதாவது சந்தித்த டோனிட்ஸ், பதவி உயர்வுக்குப் பிறகு மாதத்திற்கு இரண்டு முறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இறுதி நாட்கள்

பட மூலாதாரம், Getty Images
நாஜி ஜெர்மனியின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டதாக 1945, மே 1ஆம் தேதியன்று தந்தியைப் பெறும் வரை அரசியல் மட்டத்தில் அவர் பேசுபொருளாக இருந்தார். இது தொடர்பாகத் தனது நினைவுக் குறிப்பில், “அந்தப் பணியை ஏற்றுக்கொள்வது எனது கடமை என்பதில் எனக்கு ஒரு நொடிகூட சந்தேகம் ஏற்படவில்லை,” என்று எழுதியுள்ளார்.
மேலும், “எந்தவொரு போராளியின் வாழ்விலும் ஏற்படும் இருண்ட தருணமாகக் கருதப்படும் நிபந்தனையற்று சரணடையும் நேரத்தை நெருங்கிவிட்டேன் என்று நான் உணர்ந்தேன்,” என்றார்.
“என் பெயர் என் செயல்பாட்டுடன் என்றென்றும் இணைக்கப்பட்டிருக்கும் என்றும், வெறுப்பும் திரித்துக் கூறப்படும் உண்மையும் என் கௌரவத்தைக் களங்கப்படுத்தும் என்று நான் உணர்ந்தேன்.”
“இதுபோன்ற சிந்தனைகளுக்கு இடம் அளிக்கக்கூடாது என்றது எனக்கான கடமை. என் கொள்கை மிகவும் எளிதானது: எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயிர்களைக் காப்பது.”
இரவு 10:26 மணிக்கு, ஹாம்பர்க் வானொலியில், பேசிய டோனிட்ஸ், “ஜெர்மனியின் ஆண்களே, பெண்களே, ஆயுதப் படை வீரர்களே… நம் ஃப்யூரர், அடால்ப் ஹிட்லர் வீழ்ந்துவிட்டார். ஆழ்ந்த துக்கத்துடனும் மரியாதையுடனும், ஜெர்மனி மக்கள் அஞ்சலி செலுத்துங்கள்,” என்றார்.
டோனிட்ஸ்தான் ஹிட்லரால் நியமிக்கப்பட்ட வாரிசு என்றும் அறிவித்தார். பிறகு “இந்த துரதிர்ஷ்டவசமான நேரத்தில் ஜெர்மன் மக்களின் தலைமையை,” ஏற்றுக் கொள்வதாகவும் கூறினார்.
தனது சுயசரிதையில், ஹிட்லர் ஆயுதப்படை அதிகாரி ஒருவர் மூலமாகப் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்பியதால்தான் தன்னை நியமனம் செய்ததாகத் தெரிவித்தார். டோனிட்ஸ் சரணடைவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார்.
போர்க் கைதிகள் மீது பயங்கரமான நடவடிக்கைகளை சோவியத் படையினர் மேற்கொள்வார்கள் என்று நினைத்ததால், ஜெர்மன் வீரர்கள் பலரையும் மேற்கத்திய நட்பு நாடுகளிடம் சரணடைய அனுமதிப்பதே பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாக இருந்தது.
இதனால் மே முதல் வாரத்தில், 1.8 மில்லியன் வீரர்கள் சோவியத் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தை விட்டு வெளியேற முடிந்தது. 1945, மே 7 அதிகாலையில், டோனிட்ஸின் தலைமையில் ஒரு ஜெர்மன் தூதுக்குழு, பிரான்சின் ரீம்ஸில் உள்ள ஜெனரல் எய்சென்ஹோவரின் தலைமையகத்திற்குச் சென்று, சரணடையும் ஆவணங்களில் கையெழுத்திட்டனர்.
சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் மே 9 அதிகாலையில் பெர்லினில் மற்றொரு கையெழுத்திடும் நிகழ்வு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மே 23 அன்று டோனிட்ஸ் இறுதியாக நேச நாட்டுப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் நடைபெற்றது என்ன?

பட மூலாதாரம், Getty Images
முன்னாள் நாஜி தலைவர்களின் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் நடைபெற்ற ஜெர்மனியின் நுரேம்பெர்க் சிறையில் அடைக்கப்பட்டார் டோனிட்ஸ்.
“கைது செய்யப்படாத, அதே நேரத்தில் மரண தண்டனை விதிக்கப்படாத ஒரேயொரு உயிருள்ள நாஜி தலைவர் நான் மட்டுமே என்பதால்தான்,” ஹிட்லர் என்னை வாரிசாக நியமித்தார் என்று கூறினார்.
“நிச்சயமாக, ராணுவத் தலைவர்கள் சுறுசுறுப்பாகத்தான் இருந்தனர். ஆனால் கடற்படையோ அல்லது லுஃப்த்வாஃபியோ அவர்களின் உத்தரவுகளுக்கு செவி சாய்க்கவில்லை. இதனால் தான், நான் மிகவும் எளிதாக அமைதியை ஏற்படுத்த இயலும் என்று உணர்ந்து என்னை வாரிசாக நியமித்தார்,” என்று அவர் கூறினார்.
“நான் அதை விரைவாகச் செய்து முடித்தேன். ஆனால் தற்போது ஹிட்லரின் வாரிசாக என்னைத் தூக்கிலிட அமெரிக்கர்கள் விரும்புகிறார்கள். இந்த விசாரணையின் மிகப்பெரிய அபத்தம் என்னவென்றால், முக்கியக் குற்றவாளிகளான ஹிட்லர் மற்றும் ஹிம்லெரின் பெயர்கள் விசாரணையில் சேர்க்கப்படவில்லை,” என்று அவர் கோல்டன்ஷானிடம் கூறினார்.
அவருக்கு அபத்தமாகத் தோன்றிய அந்த விசாரணையில், டோனிட்ஸ் தாம் ஹிட்லரின் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொண்டதை உணர்ந்தார்.
“அவர் என்னை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தக் கூறுகிறார் என்று நான் நினைத்தேன். ஆனால் 1945-46 குளிர்காலத்தில் நுரெம்பெர்க்கில் ஹிட்லரின் சாசனத்தின் விதிகளை நான் முதன்முதலில் கேட்ட போதுதான் என் அனுமானம் தவறானது என்று அறிய முடிந்தது,” என்றார் டோனிட்ஸ்.
ஹிட்லர் தனது அரசியல் சாசனத்தில், ஜெர்மனியர்களை “எந்தச் சூழ்நிலையிலும் சண்டையைக் கைவிட வேண்டாம்,” என்று கேட்டுக் கொண்டார். மேலும் “தந்தை நாட்டின் எதிரிகள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு எதிராகப் போரைத் தொடர வேண்டும்” என்று ஹிட்லர் அழைப்பு விடுத்ததை அவர் அறிந்துகொண்டார்.
டோனிட்ஸை வாரிசாக அறிவிப்பதற்கு முந்தைய பத்தியில், “ஜெர்மன் மக்களுக்கு மரியாதைக்குரிய நபர்களைக் கொண்ட ஓர் அரசாங்கத்தை வழங்க, அனைத்து வகையிலும் போரைத் தொடரும் வாக்குறுதியை நிறைவேற்றும் ஓர் அரசை வழங்க, புதிய அமைச்சரவையின் பின்வரும் உறுப்பினர்களை நாட்டின் தலைவர்களாக நியமிக்கிறேன்,” என்று ஹிட்லர் குறிப்பிட்டிருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
டோனிட்ஸ் அவருக்கு எதிராக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வாதிடும்போது, அவர் ஒருபோதும் ஓர் அரசியல்வாதியாகச் செயல்பட்டதில்லை என்றும், அவர் வெறும் விசுவாசமான அதிகாரியே என்றும் கூறினார்.
இனப்படுகொலைக் கொடூரங்கள் குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்று டோனிட்ஸ் ஒருமுறை கூறினார். பிறகு தனிப்பட்ட முறையில் 1934 முதல் வதை முகாம்களைப் பற்றி அறிந்திருந்ததாக ஒப்புக்கொண்டார்.
அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளில் மிகக் குறைந்த தண்டனையும், நீதிமன்றத்தின் மிகவும் சர்ச்சைக்குரிய தீர்ப்புமாக இது கருதப்பட்டது.
நேச நாட்டு ராணுவத்தினர் பலர் அவரை மிகவும் கௌரவமான அதிகாரியாகவும், அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை தேவையற்றது என்றும் கருதினார்கள். மற்றவர்களோ, ஜெர்மன் கடற்படையால் ஏற்பட்ட அழிவு மற்றும் உயிரிழப்பைக் கருத்தில் கொள்ளும்போது, அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை மிகவும் குறைவானது என்று வாதிட்டனர்.
விடுதலை
டோனிட்ஸ் தனது வாழ்நாள் முழுவதும் அவருடைய நாஜி சித்தாந்தங்களால் வருத்தமடையவில்லை. 1954ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு ஜெர்மனியின் அதிபர் தேர்தலில், பெர்லினின் ஸ்பன்தௌ சிறையில் இருந்து போட்டியிட்டார். ஆனால் அவர் வெற்றி பெறவில்லை.
கடந்த 1956ஆம் ஆண்டு அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். பிறகு அரசு ஓய்வூதியத்தை வைத்து, மேற்கு ஜெர்மனியில் உள்ள அமுஹ்லே நகரில் வசித்து வந்தார். அவர் இரண்டு நினைவுக் குறிப்புகளை (memoirs) எழுதினார். போர் குறித்த ஆவணப்படங்கள் சிலவற்றுக்குப் பேட்டி அளித்தார்.
அவர் தனது 89வது வயதில் 1980ஆம் ஆண்டு மரணித்தார். அதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, போர் நடைபெற்ற போது அவருக்கு ஏற்பட்ட சந்தேகம் உண்மை எனத் தெரிய வந்தது.
கடந்த 1943ஆம் ஆண்டு அவருடைய யூ-படகுகள் ஒவ்வொன்றாக மூழ்கத் துவங்கியபோது, தொலைத்தொடர்புக்காக பயன்படுத்தப்பட்ட நாஜி எனிக்மா இயந்திரத்தை ‘கிராக்’ செய்திருப்பார்களா என்ற சந்தேகம் அவருக்கு நிலவியது.
சுமார் 150 டிரில்லியன் இணைப்புகளைக் கொண்டு செயல்பட்ட அந்த இயந்திரம் ஜெர்மனியின் ஆயுதப் படைகளின் இடையே தொலைத்தொடர்புக்காகப் பயன்படுத்தப்பட்டது. இதன் செயல்பாட்டில் யாரும் குறுக்கிட இயலாது என்று நினைத்ததால் அந்த எண்ணத்தை அவர் உடனடியாகக் கைவிட்டார்.
ஆனால், 1974ஆம் ஆண்டு ஆலன் டூரிங் என்பவர் தலைமையில் செயல்பட்ட பிரிட்டிஷ் நிபுணர் குழு அந்த இயந்திரத்தின் செயல்பாட்டைக் கட்டுக்குள் கொண்டு வந்து அதில் வெற்றியும் பெற்றது.
போர் தொடர்பான அவரின் அனுபவங்களை இது மாற்றி அமைத்தது. வரலாற்று ஆசிரியர்கள் தற்போது மீண்டும் அனைத்தையும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU