SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
16 நிமிடங்களுக்கு முன்னர்
வைபவ் சூர்யவன்ஷி என்ற பெயர் நேற்று முதல் விளையாட்டுச் செய்திகளில் தவறாமல் இடம் பிடித்து வருகிறது. 14 வயது 23 நாட்களில் ஐபிஎல் டி20 தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி, நேற்று (ஏப்ரல் 28) நடந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகளில் 101 ரன்கள் (11 சிக்ஸர், 7 பவுண்டரிகள்) எடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குஜராத் அணியை வீழ்த்தக் காரணமாக இருந்தது சூர்யவன்ஷியின் மிரட்டலான சதம்.
இந்நிலையில், அவருக்கு கிரிக்கெட் உலகின் பிரபல ஜாம்பவான்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

‘அச்சமற்ற அணுகுமுறை’
சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில், வைபவ் சூர்யவன்ஷி ஒரு சிக்ஸர் மூலம் சதத்தை எட்டும் காணொளியைப் பகிர்ந்து, “வைபவின் அற்புதமான இன்னிங்ஸிற்கு, அவரது அச்சமற்ற அணுகுமுறை, பேட்டிங் வேகம், பந்தைக் கணிக்கும் திறன், அந்தப் பந்தின் சக்தியைத் தனக்குச் சாதகமாக மாற்றுவது ஆகியவையே காரணம். சிறப்பான ஆட்டம்” எனப் பதிவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
யுவராஜ் சிங் தனது எக்ஸ் பதிவில், “14 வயதில் இப்படி விளையாடுவதை நம்ப முடியவில்லை. இந்தச் சிறுவன் கண்ணிமைக்காமல், உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களை எதிர்கொள்கிறான். வைபவ் சூர்யவன்ஷி. இந்தப் பெயரை நினைவில் கொள்ளுங்கள், அச்சமற்ற மனப்பான்மையுடன் விளையாடுகிறான். அடுத்த தலைமுறை பிரகாசிப்பதைக் கண்டு பெருமைப்படுகிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், “14 வயதில், பெரும்பாலான பிள்ளைகள் ஐஸ்கிரீம் குறித்துக் கனவு கண்டு சாப்பிடுகிறார்கள். வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் போட்டியில் மிக அற்புதமான ஒரு சதத்தை விளாசினார். அவரது வயதுக்கு அப்பாற்பட்ட அமைதி, நிதானம் மற்றும் தைரியம். ஒரு நட்சத்திரத்தின் எழுச்சியை நாம் காண்கிறோம். இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் இதோ…” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ஐபிஎல் தொடரில் அதிவிரைவாகவும், இளம் வயதிலும் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றார். இதற்கு முன் யூசுப் பதான் 37 பந்துகளில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 2010இல் சதம் அடித்திருந்தார். அதை சூர்யவன்ஷி தற்போது முறியடித்துள்ளார்.
இதைத் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், “ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக சதமடித்த இந்தியர் என்ற சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷிக்கு எனது வாழ்த்துகள். அதுவும் நான் செய்தது போலவே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சதமடித்தது இன்னும் சிறப்பு,” என்று பாராட்டியுள்ளார்.
மேலும், “இந்த அணியில் இணையும் இளைஞர்களிடம் ஏதோ ‘மேஜிக்’ உள்ளது. நீ இன்னும் அடைய வேண்டிய உயரங்கள் அதிகம், சாம்பியன்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமி, “வைபவ் சூர்யவன்ஷி, என்ன ஒரு அற்புதமான திறமை. வெறும் 14 வயதில் சதம் அடிப்பது நம்ப முடியாதது. தொடர்ந்து சாதனைகளைக் குவிக்க வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
‘இன்னும் அவருக்கு நிறைய சவால்கள் உள்ளன’

பட மூலாதாரம், Getty Images
மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா, தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் காணொளியைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, “உன் ஆட்டம் என்னை நிச்சயமாக ‘என்டர்டைன்’ (Entertain) செய்தது” எனப் பதிவிட்டுள்ளார்.
ஒரு பக்கம் பாராட்டுகள் குவிந்தாலும், மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இயன் பிஷப், வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.
ஈ.எஸ்.பி.என் கிரிக்இன்ஃபோ தளத்திற்குப் பேட்டியளித்த அவர், “இன்னும் அவருக்கு நிறைய சவால்கள் உள்ளன. குறிப்பாக இதேபோன்ற ஆட்டத்தை அடுத்தடுத்த போட்டிகளில் அவர் மீண்டும் வெளிப்படுத்தத் தவறினால் சவால்கள் இருக்கும். எனவே தோல்வியைச் சமாளிப்பது மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
தோல்வியைச் சமாளிப்பதில், நான் பார்த்த மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர் பிரையன் லாரா. நாங்கள் 14 அல்லது 15 வயதிலிருந்தே ஒன்றாக விளையாடினோம். லாரா, எப்போதும் தோல்வி தன்னைப் பாதிக்காதவாறு செயல்படுவார். இன்னும் சிறப்பான ஒன்றை அடைய வேண்டும் என்ற முனைப்பு அவரிடம் இருக்கும். இதை அவர் லாராவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும், “அவர் எட்டிய இந்த நம்ப முடியாத உயரத்தைத் தக்க வைக்க, மேன்மேலும் முன்னேறுவதை உறுதி செய்ய, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, அவரைச் சுற்றி சரியான நபர்களை வைத்துக் கொள்வதும் மிக முக்கியமானது” என்று இயன் பிஷப் அறிவுறுத்தியுள்ளார்.
‘பாகிஸ்தானில் இப்படி செய்திருந்தால்..?’

பட மூலாதாரம், Getty Images
வைபவ் சூர்யவன்ஷி, 14 வயது 23 நாட்களில் ஐபிஎல் டி20 தொடரில் அறிமுகமானார். ஏப்ரல் 19 அன்று லக்னௌ அணிக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் எதிர்கொண்ட முதல் பந்திலேயே, சர்வதேச பந்துவீச்சாளரான ஷர்துல் தாக்கூரின் பந்தில் சிக்ஸர் அடித்தார். அந்தப் போட்டியில் 20 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்.
அப்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் சூர்யவன்ஷியை விராத் கோலியுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார்.
“அவர் (வைபவ் சூர்யவன்ஷி) விராட் கோலியை போல 20 ஆண்டுகள் ஐபிஎல் விளையாடுவதை இலக்காகக் கொள்ள வேண்டும். கோலி 18 வயதில் ஐபிஎல் விளையாடத் தொடங்கி 18 சீசன்களில் விளையாடியுள்ளார். அவர் அடித்த ஆயிரக்கணக்கான ரன்கள், சதங்களின் எண்ணிக்கையைப் பாருங்கள். அதுதான் குறிக்கோளாக இருக்க வேண்டும். உங்கள் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த பிறகு நீங்கள் ஒரு நட்சத்திரமாகிவிட்டீர்கள் என்று நினைத்தால், வரும் ஆண்டுகளில் உங்களை நாங்கள் பார்க்க முடியாமல் போகலாம்” என்று சேவாக் தெரிவித்திருந்தார்.
அதேபோல முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாசித் அலியும், சூரியவன்ஷியின் துணிச்சலான அணுகுமுறையைப் பாராட்டி சில நாட்களுக்கு முன்பாகக் கருத்து தெரிவித்திருந்தார்.
“வைபவ் சூரியவன்ஷி என்ற14 வயது சிறுவன், முதல் பந்தை சிக்ஸருக்கு அடித்த விதம் ஒரு மிகப்பெரிய விஷயம். பாகிஸ்தானில், ஒரு வீரர் முதல் பந்தை சிக்ஸருக்கு அடிக்க முயன்று அவுட்டாகி வெளியேறியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்? மக்கள் என்ன சொல்லியிருப்பார்கள்?
பாகிஸ்தான் மக்கள் அவரை அணியிலிருந்து தூக்கி வெளியே எறியுங்கள் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் சூரியவன்ஷியை போலத்தான் நம்பிக்கை விதைக்கப்படுகிறது, அது பின்னர் பலனளிக்கிறது” என்று கூறியிருந்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : BBC