Home தேசிய national tamil அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா – தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம்

அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா – தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம்

7
0

SOURCE :- BBC NEWS

செந்தில் பாலாஜி , பொன்முடி
27 ஏப்ரல் 2025, 14:45 GMT

புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.செந்தில் பாலாஜி, பொன்முடி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.மனோ தங்கராஜ் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது தவிர அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், முத்துசாமி மற்றும் ராஜகண்ணப்பன் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் வனத்துறை மற்றும் காதித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோரின் ராஜினாமா கடிதம்ஏற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கும் எஸ்.எஸ்.சிவசங்கர், மின்சாரத்துறையை கூடுதலாக கவனித்துக் கொள்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரான எஸ்.முத்துசாமி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையை கூடுதலாக கவனித்துக் கொள்வார். பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வனத்துறை மற்றும் காதித்துறைக்கான கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார் எனவும் ஆளுநர் மாளிகையின் செய்திக்குறிப்பு கூறுகிறது.

அமைச்சரவையில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள மனோ தங்கராஜின் பதவியேற்பு, நாளை (ஏப்ரல்28) மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள், திமுக,

பட மூலாதாரம், TNDIPR

செந்தில் பாலாஜி ராஜினாமா பின்னணி என்ன?

கரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவும், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சருமான செந்தில் பாலாஜி அமைச்சரவையிலிருந்து ராஜினாதா செய்யக் கூடும் என்ற தகவல்கள் நேற்று முதலே தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

சட்டப்பேரவையில் சனிக்கிழமையன்று செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார்.

‘உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் விசாரணையின்றி சிறை செல்ல நேரிடும்’ என்ற மசோதாவை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்வதாக இருந்தது. இதில் ஏற்பட்ட மாற்றம் சுட்டிக்காட்டப்பட்டது.

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது, போக்குவரத்துத்துறையில் பணி நியமனம் முறைகேடு வழக்கில் சிறைக்கு சென்று தற்போது ஜாமீனில் வெளியே இருக்கும் அவருக்கு ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்று உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 23-ஆம் தேதி அன்று கேள்வி எழுப்பிய நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

செந்தில் பாலாஜி வழக்கு கடந்து வந்த பாதை

அ.தி.மு.கவின் முக்கியப் பொறுப்பாளராக விளங்கிய செந்தில் பாலாஜி, 2011-ஆம் ஆண்டு கரூர் சட்டமன்ற தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து, அதிமுகவின் அமைச்சரவையில் அவருக்கு போக்குவரத்துத்துறை ஒதுக்கப்பட்டது. இந்த சூழலில் அவர், பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துனர் பணிகளுக்கான நியமனங்களுக்கு பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

2015-ஆம் ஆண்டில் பணத்தைப் பெற்றுக்கொண்டு வேலை தரவில்லையெனக் தேவசகாயம் என்பவர் புகார் அளித்தார். உயர்நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகு செந்தில் பாலாஜி மீதும் அவரது சகோதரர் அசோக் உள்பட வேறு நாற்பது பேர் மீது சென்னை மத்தியக் குற்றப்புலனாய்வு துறை வழக்குப் பதிவு செய்தது.

அதே ஆண்டு ஜூலை 27-ம் தேதி அன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்தும் கரூர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் அவரை நீக்கி உத்தரவு பிறப்பித்தார் அன்றைய தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா.

இடையே ஜெயலலிதா இறந்துவிட, அவர் , டி.டி.வி. தினகரனின் ஆதரவாளராக இருந்துவந்தார் செந்தில் பாலாஜி. ஆனால், விரைவிலேயே அக்கட்சியிலிருந்து வெளியேறி, 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி தி.மு.க-வில் இணைந்தார் செந்தில் பாலாஜி.

ஆனால் அதே ஆண்டில், இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அமைச்சர் செந்தில் பாலாஜி, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள், திமுக,

பட மூலாதாரம், DMK/www.dmk.in

செந்தில் பாலாஜி மீதான விசாரணைக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி. 2021 ஆம் ஆண்டு அவர் மீதான வழக்குகளை நிறுத்தி வைப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது.

ஆனால் இதே வழக்கில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்ததாகக் கூறி 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி அன்று செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.

அவருடைய மின்சாரத் துறை இலாகா, அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு வழங்கப்பட்டது. மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை எஸ் முத்துசாமிக்கு வழங்கப்பட்டது.

9 மாதங்களாக அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்தார். பிறகு அவர் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி அன்று அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அதே ஆண்டு, செப்டம்பர் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்தார். வந்த மூன்று நாட்களுக்குள் அவருடைய இலாகா அவருக்கு மீண்டும் வழங்கப்பட்டு அமைச்சர் பதவியை உறுதி செய்தார் முதல் அமைச்சர் முக ஸ்டாலின்.

அமைச்சர் செந்தில் பாலாஜி, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள், திமுக,

பட மூலாதாரம், Getty Images

ஜாமீனா அமைச்சர் பதவியா?

அவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யுமாறு வித்யா குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின்படி அடிப்படை உரிமை மீறப்பட்டதால் ஜாமீன் வழங்கினோம். 2 நாட்களுக்குள் அவர் அமைச்சர் ஆனதை ஏற்க முடியாது’ எனக் கூறியது.

மேலும், ‘ஜாமீன் வேண்டுமா.. அமைச்சராக நீடிக்க வேண்டுமா? என்பது குறித்து ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்குமாறு செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டது.

இந்த சூழலில் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார்.

சர்ச்சைகளிலிருந்து விலகாத பொன்முடி

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2021 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து, பொன்முடி மீதான சர்ச்சைகள் அணிவகுத்தன.

மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத்தை விமர்சித்தது, அரசு நிகழ்ச்சிகளில் பொதுமக்களை விமர்சித்தது எனத் தொடர்ந்து பொன்முடியின் பேச்சு விமர்சனத்துக்குள்ளானது.

தி.மு.க பொதுக்குழு கூட்டத்திலேயே இதுதொடர்பாக தனது அதிருப்தியை முதலமைச்சர் ஸ்டாலின் வெளிக்காட்டினார். இந்தநிலையில், கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் வனத்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றார்.

அப்போது, சைவம், வைணவம் ஆகிய மதங்களை பாலியல் தொழிலாளிகளுடன் ஒப்பிட்டு அவர் பேசினார்.

பொன்முடியின் பேச்சு இணையத்தில் பரவியது. இதையடுத்து, பொன்முடியை தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்டேஷ், “சைவ, வைணவ சமயங்கள் குறித்த பேச்சுக்கு அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.

“இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யவில்லை என்றால் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறி ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

மீண்டும் வழக்கு விசாரணையின்போது, ‘கட்சியே நடவடிக்கை எடுததும்கூட காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை’ எனக் கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “பொன்முடியின் பேச்சு வெறுப்பு வரம்புக்குள் வருகிறது” எனக் கூறினார்.

வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதற்காக பதிவுத் துறைக்கு தான் உத்தரவிடுவதாகவும் ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.

பின்தொடரும் சொத்துக்குவிப்பு வழக்கு

இதுதவிர, 1996-2001 தி.மு.க ஆட்சியின்போது போக்குவரத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீது 2002 ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

அவர் 1.36 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு வேலூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி ஆகியோரை வேலூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ‘ஒரு மாவட்டத்தில் உள்ள வழக்கை மாவட்டத்தின் நிர்வாக நீதிபதிகள் வேறு மாவட்டத்துக்கு மாற்ற முடியுமா?’ எனக் கேள்வி எழுப்பி, இதற்கு அரசின் தலைமை வழக்கறிஞர் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டார்.

‘பொன்முடி மீதான வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்ற முடியும் என்றால், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கிலும் எந்த விசாரணையும் நடத்த முடியாது’ எனக் கூறி இறுதி விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.

இந்த சூழலில்தான் செந்தில் பாலாஜியுடன் சேர்ந்து பொன்முடியும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU