Home தேசிய national tamil இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்துக் கொன்றதாக தாய் கைது – இன்றைய முக்கிய...

இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்துக் கொன்றதாக தாய் கைது – இன்றைய முக்கிய செய்திகள்

3
0

SOURCE :- BBC NEWS

பெண் சிசு கொலை; விஷம் கொடுத்து கொன்றதாக ஒப்புக் கொண்ட தாய் - இன்றைய முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இன்றைய (24/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

கடந்த புதன்கிழமை அன்று பிறந்த தனது மகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் பெண் சிசுக்கொலை வழக்கில், 23 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

“கைது செய்யப்பட்டவர் சிவசக்தி என அடையாளம் காணப்பட்டுள்ளார். திண்டுக்கலில் உள்ள கோடை சாலை அருகே அமைந்திருக்கும் ஜே. ஊத்துப்பட்டியில் 32 வயதான பாலமுருகன் மற்றும் அவரது மனைவி சிவசக்தி வசித்து வந்தனர். இந்தத் தம்பதிக்கு ஐந்து வயதில் ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. சிவசக்தி இரண்டாவது முறையாக கர்ப்பமாகி ஏப்ரல் 16ஆம் தேதியன்று அரசு மருத்துவமனையில் மற்றுமொரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்” என்று காவல்துறையினர் குறிப்பிட்டதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தி நியூ இந்தியன் எக்ஸபிரஸின் அந்தச் செய்தியில், “இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததில் சிவசக்தி மகிழ்ச்சி அடையவில்லை. ஏப்ரல் 20ஆம் தேதியன்று அந்தப் பச்சிளம் குழந்தை மர்மமான முறையில் இறந்து, அவரது வீட்டின் பின்புறத்திலே அடக்கம் செய்யப்பட்டது.

உள்ளூர் மருத்துவ அதிகாரிகள் சிவசக்தியிடம் அவரது குழந்தையின் மரணம் குறித்து விசாரித்தபோது, ​​அவர் எந்தப் பதிலும் சொல்லவில்லை. இதில் சந்தேகம் கொண்ட அவர்கள் அம்மைநாய்க்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்,” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், “கடந்த புதன்கிழமை, வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் வந்த ஒரு காவல்துறை குழு, அந்தக் குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்தது.”

விசாரணையின்போது, ​​சிவசக்தி தனக்கு இரண்டாவதாக பெண் குழந்தை வேண்டாம் என்று கூறி அந்தக் குழந்தையைக் கொன்றதாக ஒப்புக்கொண்டதாகவும் இதையடுத்து அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை விசாரிக்க பதிவுத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை விசாரிக்க பதிவுத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பட மூலாதாரம், Ponmudi

சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராகத் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க நீதிமன்ற பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

“அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பொன்முடியின் சர்ச்சை பேச்சை சுட்டிக்காட்டி, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ஐந்து புகார்கள் பெறப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் மீது வழக்குப் பதிவு செய்ய அறிவுறுத்தி, விசாரணை புதன்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டது” என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், “இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்ததாகவும் அந்த வழக்கில் அமைச்சருக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை என்பதால் அதை முடித்து வைத்து விட்டதாகவும் தெரிவித்ததை ஏற்றுக்கொண்டு அந்த வழக்கை மதுரை அமர்வு முடித்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்” என்று தினமணியின் செய்தி கூறுகிறது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “தமிழகத்தின் முக்கிய சமயங்களான சைவ மற்றும் வைணவ சமயங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியின் கருத்துகள், இரு சமயத்தினரின் மனதைப் புண்படுத்துவதாகும். அமைச்சர் பொன்முடியின் பேச்சு வெறுப்புப் பேச்சு வரம்புக்குள் வருகிறது.

இந்தப் பேச்சுக்காக அவர் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இருப்பினும், குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என காவல் துறை தெரிவித்திருக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையின் செயல் துரதிர்ஷ்டவசமானது. வெறுப்புப் பேச்சை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது” என்று குறிப்பிட்டதாக அந்தச் செய்தி கூறுகிறது.

தொடர்ந்து பேசிய நீதிபதி, “ஏற்கெனவே ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு மூலம் சலுகை பெற்றுள்ள அமைச்சர் பொன்முடி, அதைத் தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார். அவரது வெறுப்புப் பேச்சு தொடர்பாக அவருக்கு எதிராகத் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என பதிவுத் துறைக்கு உத்தரவிடுகிறேன்” என்றும் உத்தரவிட்டதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மறைந்த வாடிக்கையாளர்களின் பணம் கையாடல் – வங்கி மேலாளர், எழுத்தர் கைது

மறைந்த வாடிக்கையாளர்களின் பணம் கையாடல் - வங்கி கிளை மேலாளர், எழுத்தர் கைது

பட மூலாதாரம், Getty Images

மறைந்த வாடிக்கையாளர்களின் பணம் உள்பட வங்கியில் இருந்து 23 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயை மோசடி செய்ததாக இந்தியன் வங்கியின் கிளை மேலாளர், எழுத்தர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியன் வங்கியின் சென்னை தெற்கு மண்டல மேலாளர் சத்ய நாராயணா, கடந்த ஏப்ரல் 8ஆம் தேதியன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுத்தார்.

அதில் அவர், “இந்தியன் வங்கியின் சாந்தோம் கிளை மேலாளராக இருந்த வேளச்சேரியைச் சேர்ந்த 47 வயதான சுந்தர் மோகன் மாஜி, அதே வங்கியின் எழுத்தராக (கிளார்க்) இருந்த மயிலாப்பூர் பஜார் ரோடு பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஜெய்சிங் ஆகிய இருவரும் வாடிக்கையாளர்களின் பணத்தை அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களது கையெழுத்தை போலியாகப் போட்டு எடுத்தது, மறைந்த வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைக் கையாடல் செய்தது, வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி வங்கிக் கடன் பெறுதல் உள்படப் பல்வேறு வகையில் 23 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயை கையாடல் மற்றும் மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்” என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

“இது குறித்து உரிய நடவ டிக்கை எடுக்க காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதன்படி, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் ராதிகா தலைமையிலான வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர்” என்றும் “புகார் உண்மை எனத் தெரிய வந்ததைத் தொடர்ந்து, சுந்தர் மோகன் மாஜி, ஜெய்சிங் ஆகிய இருவரும் நேற்று (ஏப்ரல் 23) கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பபட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுப் பாடம் செய்யாத மாணவிக்கு 400 தோப்புக்கரணங்கள் தண்டனை விதித்த ஆசிரியர்

வீட்டுப் பாடம் செய்யாத மாணவிக்கு 400 தோப்புக்கரணங்கள் தண்டனை விதித்த ஆசிரியர்

பட மூலாதாரம், Getty Images

“தனது வீட்டுப் பாடத்தை முடிக்காததற்குத் தண்டனையாக ஏழாம் வகுப்பு மாணவியை 400 முறை தோப்புக்கரணம் போடுமாறு கட்டாயப்படுத்திய விவகாரத்தில் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு, மாநில மனித உரிமைகள் ஆணையம் (SHRC) அந்த வகுப்பு ஆசிரியரை குற்றவாளி எனக் கண்டறிந்துள்ளது. மேலும் அந்த மாணவியின் தாய்க்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது” என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

“இந்தத் தண்டனையால் மாணவிக்கு வயிற்று வலி மற்றும் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவர் ஆறு நாட்கள் ஐசியுவில் சிகிச்சை பெற்றார். கடந்த புதன்கிழமை பாதிக்கப்பட்ட மாணவியின் மனித உரிமைகளை மீறியதற்காக இழப்பீடு வழங்கவும், தண்டனை வழங்கிய தமிழ் ஆசிரியரின் தனிப்பட்ட கணக்கில் இருந்து பணத்தை மீட்டெடுக்கவும் தமிழ்நாடு அரசுக்கு மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன் உத்தரவிட்டார்” என்று அந்தச் செய்தி கூறுகிறது.

மாணவி பூப்பெய்திய 40 நாட்களுக்குள் இத்தகைய தண்டனை அளிக்கப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட உள் காயம் காரணமாக ரத்தப்போக்கு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறியதாக மாணவியின் தாய் கூறியதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

“புகாருக்குப் பதிலளிக்கவும், எதிர் மனுத்தாக்கல் செய்யவும் அந்த ஆசிரியர் மறுத்ததால், அவரது வாதத்தைக் கேட்காமலேயே தகுதிகள் அடிப்படையில் முடிவெடுக்க ஆணையம் முடிவு ஒன்றுக்கு வந்தது. நூற்றுக்கணக்கான தோப்புக்கரணங்களைப் போடுமாறு கட்டாயப்படுத்தியதன் மூலம், ஆசிரியை குழந்தையின் மனித உரிமைகளை மீறியதாக ஆணையம் கூறியது” என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

இதன் பின்னர் மாநில மனித உரிமைகள் ஆணையம் 2 லட்சத்தை இழப்பீடாக நிர்ணயித்தது. மேலும், ஒரு மாதத்திற்குள் பாதிக்கப்பட்ட மாணவியின் தாய்க்கு அதை வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவுடன் செய்த ரகசிய ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஸ

இந்தியாவுடன் செய்த ரகசிய ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் - நாமல் ராஜபக்ஸ

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுடன் ரகசியமாக செய்துகொண்ட ஒப்பந்தத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை மூடி மறைப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்ததாக வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிலாபம் பகுதியில் புதன்கிழமை (ஏப்ரல் 23) நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது நாமல் ராஜபக்ஸ உரையாற்றினார்.

அதில் அவர், “159 பெரும்பான்மை பலம் உள்ளது என்பதால் இந்த அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதில்லை. தன்னிச்சையாகச் செயல்படுகிறது.

தேசிய மக்கள் சக்தி தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியது. அந்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே நிறைவேற்றுவதாகக் குறிப்பிடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அந்த வாக்குறுதிகள் குறிப்பிடப்படவில்லை” என்று பேசியதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

மேலும் அதில், “தேர்தல் மேடைகளில் குறிப்பிட்ட வாக்குறுதிகள்கூட வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை. தேர்தல் வெற்றிக்காக நாங்கள் மக்களுக்குp பொய்யுரைக்கவில்லை. முடிந்ததை மாத்திரம் குறிப்பிட்டோம்.

அரச நிர்வாகத்தில் நாட்டு மக்கள் மத்தியில் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுவதாக அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம் இன்று வரை நாடாளுமன்றத்துக்குs சமர்ப்பிக்கவில்லை,” என்றும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அதோடு, “இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும். ஒப்பந்தங்களில் உள்ள விடயங்களை அறிந்துகொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு. நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை மூடிமறைப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை” என்றும் அவர் கூறியதாக வீரகேசரி அந்தச் செய்தியில் கூறியுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU