Home தேசிய national tamil ‘போப்பின் செயல் சோவியத் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது’ – சர்வதேச அரசியலில் போப் செல்வாக்கு என்ன?

‘போப்பின் செயல் சோவியத் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது’ – சர்வதேச அரசியலில் போப் செல்வாக்கு என்ன?

3
0

SOURCE :- BBC NEWS

போப் மரணம், கத்தோலிக்க திருச்சபைகளின் செல்வாக்கு

பட மூலாதாரம், Getty Images

வாடிகனின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, உலகம் முழுவதும் 140 கோடிக்கும் அதிகமான மக்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக உள்ளனர். இது உலக மக்கள் தொகையின் சுமார் 17 சதவிகிதம் ஆகும்.

2024 ஆம் ஆண்டு போப் பிரான்சிஸின் ஆசிய சுற்றுப்பயணத்தின் போது, அவரைக் காண பெரும் கூட்டம் கூடியதில் எந்த ஆச்சரியமும் அல்ல. கிழக்கு திமோரின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் அங்கு நடந்த திறந்தவெளி திருப்பலியில் கலந்து கொண்டனர்.

அதற்கு முந்தைய ஆண்டில், ஆப்பிரிக்காவுக்கு அவர் பயணம் செய்த போது, காங்கோ ஜனநாயகக் குடியரசின் கின்ஷாசா விமான நிலையத்தில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் திருப்பலியில் கலந்துகொண்டனர்.

இதுபோன்ற அதிக எண்ணிக்கையிலான மக்களை ஈர்க்கும் திறனும், அவர்களின் கடும் நம்பிக்கையும், போப்பும் , கத்தோலிக்க திருச்சபையும் உலகளவில் கொண்டிருக்கும் நிலையான செல்வாக்கை வெளிப்படுத்தும் முக்கிய அறிகுறிகளாக உள்ளன.

போப், கத்தோலிக்க விசுவாசிகளை மட்டுமல்ல, வாடிகன் நகர அரசையும், அதனுடைய நிர்வாக அமைப்பான ‘ஹோலி சீ’-யையும் (திருச்சபையையும்) வழிநடத்துகிறார்.

ஹோலி சீ ( திருச்சபை) சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் இறையாண்மை கொண்ட ஒரு அமைப்பாக மதிக்கப்படுகிறது.

184 நாடுகளுடனும், ஐரோப்பிய ஒன்றியத்துடனும் முழுமையான ராஜ்ஜீய உறவுகள் கொண்ட, சர்வதேச அரங்கில் ஒப்பந்தங்களுக்கும், கலந்துரையாடல்களுக்கும் உரிமை பெற்ற ஒருங்கிணைந்த பங்கேற்பாளராக ஹோலி சீ உள்ளது.

அரசு மற்றும் அரசாங்கத் தலைவர் என்ற அடையாளத்துடனும், ஒரு பில்லியனுக்கும் அதிகமான விசுவாசிகளின் ஆன்மிகத் தலைவராகவும் இருப்பதால், போப் உலகின் மிக முக்கியமான ஆன்மிக தலைவராகக் கருதப்படுகிறார்.

போப் மரணம், கத்தோலிக்க திருச்சபைகளின் செல்வாக்கு

பட மூலாதாரம், Getty Images

அதிகாரமிக்க ஹோலி சீ

ஹோலி சீ (திருச்சபை) ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தர பார்வையாளர் அந்தஸ்துடன் இருக்கிறது.

ஹோலி சீ-க்கு முழுமையான வாக்களிக்கும் உரிமை இல்லாவிட்டாலும், அது ஐ.நா. கூட்டங்களில் பங்கேற்கும் உரிமையைக் கொண்டுள்ளது. அங்கே எடுக்கப்படும் முடிவுகளை மாற்றி அமைக்கும் செல்வாக்கைக் கொண்டிருக்கிறது இந்த திருச்சபை.

2015 பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு முந்தைய காலத்தில், சுற்றுச்சூழலைக் காக்கும் முயற்சிகளுக்கு பதிலாக, நிதி லாபங்களை முன்னிலைப்படுத்தும் மனப்பாங்குடன் இருந்தவர்களை , போப் பிரான்சிஸ் ” புறக்கணிக்கும் மனநிலை” கொண்டவர்கள் என விமர்சித்தார்.

முக்கியமான நேரத்தில் அவர் கூறிய இந்தக் கருத்துகள், உலகின் தெற்கு பகுதியில் உள்ள நாடுகளுக்கான ஆதரவாகப் பார்க்கப்பட்டன.

2024 ஆம் ஆண்டில், ஐநா காலநிலை உச்சிமாநாட்டில், ஓரினச்சேர்க்கை மற்றும் திருநங்கைகள் தொடர்பான கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, பெண்களின் உரிமைகள் பற்றிய விவாதத்தை ஹோலி சீ தடுத்தது.

அந்த ஒப்பந்தம், பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் பெண்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால், வாடிகன், சௌதி அரேபியா, ரஷ்யா, இரான் மற்றும் எகிப்து போன்ற நாடுகள் ஒப்பந்தத்தில் திருநர் சமூகத்தினரை சேர்ப்பது குறித்து கவலை தெரிவித்ததோடு, தன்பாலின ஈர்ப்பாளர்கள் பற்றிய குறிப்புகளை அதன் உரையிலிருந்து நீக்க முயன்றன.

இந்த நடவடிக்கைக்காக திருச்சபை கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும், உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் ஒப்பந்தங்களை வடிவமைக்கும் அதன் சக்தியை இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.

2014 ஆம் ஆண்டில், அமெரிக்கா மற்றும் கியூபா ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவுகளை இயல்பாக்கும் ஒப்பந்தம், போப் மேற்கொண்ட ஒரு வெற்றிகரமான ராஜ்ஜீய முயற்சியின் இன்னொரு சிறந்த எடுத்துக்காட்டாக கூறலாம்.

அப்போதைய அமெரிக்க அதிபர் பார ஒபாமா மற்றும் கியூபா அதிபர் ரவூல் காஸ்ட்ரோ இருவரும் இந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவியதற்காக போப் பிரான்சிஸுக்கு வெளிப்படையாக நன்றி தெரிவித்தனர்.

போப் இருவருக்கும் தனிப்பட்ட கடிதங்களை எழுதியதோடு, இந்த முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் வகையில் வாடிகனில் ஒரு ரகசிய உச்சிமாநாட்டையும் நடத்தியிருந்தார்.

பின்னர் டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின், அமெரிக்கா அந்த ஒப்பந்தத்தை திரும்பப் பெற்றது.

போப் மரணம், கத்தோலிக்க திருச்சபைகளின் செல்வாக்கு

பட மூலாதாரம், Getty Images

ஜனநாயக வளர்ச்சியை ஆதரிப்பதில் அதன் பங்கு

கடந்த 25 ஆண்டுகளில், ஜனநாயக வளர்ச்சியை ஆதரிப்பதிலும் பலப்படுத்துவதிலும் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் பங்களிப்பே அதன் மிக முக்கியமான சாதனையாக இருக்கிறது என்று அமெரிக்காவைச் சேர்ந்த மதம், அமைதி மற்றும் உலக விவகாரங்களுக்கான பெர்க்லி மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் டேவிட் ஹோலன்பாக் கூறுகிறார்.

1960களில் நடைபெற்ற இரண்டாவது வாடிகன் கவுன்சிலில், திருச்சபை தனது முக்கிய போதனைகள் மற்றும் வழிநடத்தல்களை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்தது. அப்போது, மனித உரிமைகள் மற்றும் மத சுதந்திரத்தின் பாதுகாப்புக்கு திருச்சபை அர்ப்பணிப்புடன் இருப்பதைக் கண்டது. இது “முக்கியமான திருப்புமுனை” என்றும் ஹோலன்பாக் கூறுகிறார்.

அரசியல் ஆய்வாளர் சாமுவேல் ஹண்டிங்டனின் ஆய்வை பேராசிரியர் ஹோலன்பாக் எடுத்துக்காட்டுகிறார்.

அதாவது, “இரண்டாம் ஜான்பால் காலத்திலிருந்து, போப் பிரான்சிஸ் காலத்தின் ஆரம்பம் வரை, சர்வாதிகார ஆட்சியிலிருந்து ஜனநாயகத்திற்கு மாறிய நாடுகளில், நான்கில் மூன்று நாடுகள் வலுவான கத்தோலிக்க செல்வாக்கு கொண்டவையாக இருந்தன”

“இது ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் பிராங்கோ மற்றும் சலாசரில் இருந்து தொடங்கி, பின்னர் லத்தீன் அமெரிக்காவிற்கு பரவியது. பின்னர் அது லத்தீன் அமெரிக்காவிலிருந்து பிலிப்பைன்ஸ் மற்றும் தென் கொரியா போன்ற வலுவான கத்தோலிக்க இருப்பைக் கொண்ட நாடுகளுக்கு பரவியது” என்று பேராசிரியர் ஹோலன்பாக், ஹண்டிங்டன் கூறியதை சுட்டிக்காட்டுகிறார்.

போப் இரண்டாம் ஜான் பாலின் பணி, அவரது சொந்த நாடான போலந்தில் ஜனநாயகத்தை உருவாக்க உதவியது. “இறுதியில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பல பகுதிகளில் ஜனநாயகம் பரவுவதற்கும் வழிவகுத்தது” என்கிறார் பேராசிரியர் ஹோலன்பாக்.

போப் மரணம், கத்தோலிக்க திருச்சபைகளின் செல்வாக்கு

பட மூலாதாரம், Getty Images

கடுமையான விமர்சனமும் உலக தலைவர்களின் பதிலும்

உலகத் தலைவர்களின் முடிவுகளில் செல்வாக்கு செலுத்துவதில் வாடிகனால் எப்போதும் வெற்றி பெற முடியாது.

ஒரு கத்தோலிக்கரான அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் , தனது அரசாங்கத்தின் குடியேற்றம் மீதான ஒடுக்குமுறையை நியாயப்படுத்த இறையியலைப் பயன்படுத்திய போது, போப் ‘இயேசுவே ஒரு அகதி’ என்று வாதிட்டு கடுமையான வார்த்தைகளைக் கொண்ட கடிதத்தை எழுதினார்.

இதற்கு மற்றொரு கத்தோலிக்கரான டாம் ஹோமன், “போப் கத்தோலிக்க திருச்சபையை சரி செய்வதோடு நின்று கொள்ள வேண்டும்,”என்று அதற்கு பதில் அளித்தார்.

2020 ஆம் ஆண்டில், போப் பிரான்சிஸ் அமேசானைப் பாதுகாக்க வாதிட்ட போது, ​​​​பிரேசிலின் முன்னாள் அதிபர் போல்சனாரோ அவரை விமர்சித்தார். “போப் அர்ஜென்டினியராக இருக்கலாம், ஆனால் கடவுள் பிரேசிலியன்” என்று போல்சனாரோ பதிலளித்தார்.

திருச்சபையின் சமூக செல்வாக்கு ஐரோப்பாவில் குறைந்து விட்டது. LGBT+ உரிமைகள், கருத்தடை மற்றும் கருக்கலைப்பு போன்ற சமூக பிரச்னைகளில் அதன் பழமைவாத நிலைப்பாடு 21ஆம் நூற்றாண்டிற்கு அப்பாற்பட்டது என்று பலர் வாதிடுகின்றனர்.

பெண்களை பாதிரியார்களாக அல்லது டீக்கன்களாகப் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது என்ற போப் பிரான்சிஸின் முடிவு, இதை எடுத்துக்காட்டுகிறது.

  போப் மரணம், கத்தோலிக்க திருச்சபைகளின் செல்வாக்கு

பட மூலாதாரம், Reuters

திருச்சபை பலவீனமடைகிறதா?

லத்தீன் அமெரிக்கா முழுவதும் கத்தோலிக்க திருச்சபை ஒரு பெரிய சக்தியாக இருந்தாலும், முன்பு திருச்சபைக்கு இருந்த அதிகாரம் பலவீனமடைந்துள்ளது.

திருச்சபை ஒரு காலத்தில் பிராந்தியம் முழுவதும் கட்டுப்பாடான கருக்கலைப்பு தடை சட்டங்களை வடிவமைத்து ஊக்குவித்தது, ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் உருகுவே, மெக்ஸிகோ, அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா ஆகியவை கத்தோலிக்க போதனைகளை மீறி கருக்கலைப்பு செய்வதற்கு ஆதரவாக உள்ளன.

சுவிசேஷ கிறிஸ்தவத்தை பின்பற்றுபவர்கள் இப்பகுதியில் அதிகரித்து வருகின்றனர். அதேபோல் அரசியல் செல்வாக்கையும் அது பெற்று வருகிறது.

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான கத்தோலிக்கர்களைக் கொண்ட நாடான பிரேசிலில், இன்னும் ஐந்து ஆண்டுகளில் கத்தோலிக்க மதம் பெரும்பான்மை மதமாக இருக்காது என்று சில ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். பாதிரியார்களின் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அதை மறைப்பதில் உள்ள திருச்சபையின் பங்கு ஆகியவை தொடர்ந்து வெளிவருவது உலகளவில் அதன் அந்தஸ்தை குறைத்துவிட்டது.

மற்ற உலகத் தலைவர்களைவிட போப் எப்போதும் தனித்துவமான செல்வாக்கையும் , அதிகாரத்தையும் செலுத்தக் கூடியவராகவே இருப்பார். போப் , கிறிஸ்துவ மதத்தின் மிகப்பெரிய கிளைக்கு தலைமை தாங்குவதுடன், சுதந்திர நாடான வாடிகனின் தலைவராகவும் இருப்பது தான் இதற்கு காரணம்.

தெற்கு சூடானில் முரண்படும் தலைவர்களின் பாதங்களை முத்தமிடுவது அல்லது கிரீஸில் உள்ள அகதிகளுக்கு ஆறுதல் கூறுவது போன்ற செயல்கள் மூலம் போப் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு ஆகியவை தொடர்ந்து உலகளாவிய உரையாடல்களை வடிவமைக்கும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU