Home தேசிய national tamil காதலியை கொன்று எரித்ததாக காதலன் கைது – ஓடையில் என்ன நடந்தது? இன்றைய டாப்5 செய்திகள்

காதலியை கொன்று எரித்ததாக காதலன் கைது – ஓடையில் என்ன நடந்தது? இன்றைய டாப்5 செய்திகள்

3
0

SOURCE :- BBC NEWS

இன்றைய செய்திகள், இந்தியா, அமலாக்கத்துறை, இலங்கை

பட மூலாதாரம், Getty Images

2 மணி நேரங்களுக்கு முன்னர்

இன்றைய (22/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் காதலியைக் கொன்று, உடலை எரித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின் படி, திண்டுக்கல் மாவட்டம் பன்றிமலையை அடுத்த அமைதிச்சோலை வனப்பகுதியில் உள்ள ஓடை அருகே, இளம்பெண் ஒருவர் உடல் எரிந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கன்னிவாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றினர். மேலும் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

அப்போது வழிநெடுகிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 12ஆம் தேதி ஒரு மோட்டார் சைக்கிளில் இளைஞருடன், இளம்பெண் ஒருவர் செல்வதும், பிறகு அந்த இளைஞர் மட்டும் தனியாக திரும்பி சென்ற காட்சியும் பதிவாகி இருந்தது.

வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து, அதன் உரிமையாளர் முகவரியை போலீசார் கண்டுபிடித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர், திண்டுக்கல் மாவட்டம் கைலாசம்பட்டியை சேர்ந்த பிரவீன் (வயது 23) என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-

“பிரவீனுடன் வந்த இளம்பெண், மதுரையில் உள்ள தனியார் ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்த மாரியம்மாள் (21). இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்று திண்டுக்கல்லில் இருந்து மோட்டார் சைக்கிளில் பிரவீனும், மாரியம்மாளும் அமைதிச்சோலை பகுதியில் உள்ள ஓடைக்கு வந்துள்ளனர். அப்போது மாரியம்மாள், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரவீனை வற்புறுத்தி உள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பிரவீன், மாரியம்மாளை கீழே தள்ளி விட்டார்.

பாறை மீது விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மாரியம்மாள் இறந்தார். காதலி இறந்ததைப் பார்த்து பிரவீன் அதிர்ச்சி அடைந்தார்.

மாரியம்மாளை கொலை செய்ததை யாருக்கும் தெரியாமல் மறைக்க முடிவு செய்து, மாரியம்மாள் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார்” என போலீசார் தெரிவித்தனர் என்று அந்தச் செய்தி கூறுகிறது.

கர்நாடக முன்னாள் டிஜிபி கொலையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

இன்றைய டாப்5 செய்திகள்

பட மூலாதாரம், Bangalore News Photos

‘பெங்களூரில் வசித்து வந்த முன்னாள் டி.ஜி.பி. ஓம்பிரகாசை, அவரது மனைவியே கொலை செய்தது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது’ என தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பெங்களூரு எச்.எஸ்.ஆர். லேஅவுட்டில் வசித்து வந்தவர் ஓம்பிரகாஷ் (வயது 68). இவர், முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. ஆவார். அவரது மனைவி பல்லவி. இந்த தம்பதிக்கு கார்த்திகேஷ் என்ற மகனும், கிருதி என்ற மகளும் உள்ளனர். கார்த்திகேசுக்கு திருமணமாகி விட்டது.

கடந்த ஞாயிறு அன்று (ஏப்ரல் 20) மாலை 4 மணியளவில் ஓம்பிரகாஷ் தனது மனைவி பல்லவியால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார் என்றும், இந்த கொலை சம்பவம் பெங்களூரு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் தினத்தந்தியின் செய்தி கூறுகிறது.

மேலும் அந்தச் செய்தியில், ‘குடும்ப பிரச்னை, சொத்து விவகாரத்தில் மனைவியுடன் தகராறு ஏற்பட்டு இருந்ததால், தனது தங்கையின் வீட்டுக்கு ஓம்பிரகாஷ் சென்றிருந்தார். 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் தனது வீட்டுக்கு வந்திருந்தார். ஆன்லைன் மூலமாக ஓட்டல்களில் உணவு ஆர்டர் செய்து அவர் சாப்பிட்டு வந்துள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் தான் மனைவிக்கும், அவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றவே முதலில் ஓம்பிரகாஷ் கண்ணில் மிளகாய் பொடி மற்றும் கொதிக்கும் எண்ணெயை பல்லவி ஊற்றியுள்ளார். பின்னர் போர்வையால் ஓம்பிரகாசின் முகத்தை சுற்றியதால், அவரால் எதுவும் செய்ய முடியாமல் தரையில் நிலைகுலைந்து விழுந்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் 10-க்கும் மேற்பட்ட முறை வயிறு, நெஞ்சு, கழுத்தில் குத்தி பல்லவி கொலை செய்தது தெரியவந்துள்ளது.’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கணவரை கொலை செய்வது எப்படி?, இந்த கொலையில் இருந்து சட்டப்பூர்வமாக எப்படி தப்பிப்பது என்பது பற்றி கூகுளில் பல்லவி தேடிய தகவல்களும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும், இதன் மூலமாக கடந்த சில நாட்களாக தனது கணவரை தீர்த்து கட்ட பல்லவி திட்டம் தீட்டி கொலையை அரங்கேற்றியதும் தெரியவந்துள்ளது என்றும் தினத்தந்தியின் செய்தி கூறுகிறது.

‘ரூ.15 ஆயிரம் கோடி சொத்துகளை திருப்பித்தர அமலாக்கத்துறை முடிவு’

இன்றைய செய்திகள், இந்தியா, அமலாக்கத்துறை, இலங்கை

பட மூலாதாரம், Getty Images

நடப்பு நிதியாண்டில் ரியல் எஸ்டேட், போன்சி மற்றும் பிற மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி சொத்துகளை திருப்பித்தர அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் செய்தி தெரிவிக்கிறது.

கடந்த 2019-2021 ஆண்டுகளுக்கு இடையே பிரபல தொழில் அதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோதி ஆகியோர் தொடர்புடைய 3 சட்டவிரோத பண பரிமாற்ற விவகாரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.15 ஆயிரத்து 201 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை திருப்பி அளித்தது.

பின்னர், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் கடந்த மாதம் வரை ரூ.15 ஆயிரத்து 261 கோடி மதிப்புள்ள சொத்துகள் திருப்பித்தரப்பட்டன. இந்த மாதம் ரூ.1,488 கோடி மதிப்புள்ள சொத்துகள் திருப்பி அளிக்கப்பட்டன. இதன்மூலம், இதுவரை ரூ.31 ஆயிரத்து 951 கோடி மதிப்புள்ள சொத்துகள் திருப்பி அளிக்கப்பட்டுள்ளன.

நடப்பு நிதியாண்டின் மீதி காலத்தில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகளை மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பித்தர அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. இது–தொ–டர்–பாக அமலாக்கத்துறையின் அனைத்து கிளைகளுக்கும் அதன் இயக்குனர் ராகுல் நவின் உத்தரவிட்டுள்ளார் என இந்து ஆங்கில நாளிதழின் செய்தி கூறுகிறது.

மேலும், பிரதமர் மோதி கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, ஏழைகளிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் அவர்களிடமே திருப்பித்தரப்படும் என்று கூறியிருந்தார் என்பதையும் அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.

‘இந்திய தேர்தல் ஆணையம் ‘சமரச’ அமைப்பாகிவிட்டது’- அமெரிக்காவில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இன்றைய செய்திகள், இந்தியா, அமலாக்கத்துறை, இலங்கை

பட மூலாதாரம், Getty Images

இந்திய தேர்தல் ஆணையம் சமரச அமைப்பாகிவிட்டது என்றும் அமைப்பில் மிகப் பெரிய தவறு உள்ளது என்றும் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார் என ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் செய்தி கூறுகிறது.

அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பாஸ்டன் நகரில் இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர், சமீபத்தில் நடந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் மோசடி நடந்ததாகவும், அதற்கு தேர்தல் ஆணையம் துணை போனதாகவும் குற்றம் சாட்டினார்.

“மகாராஷ்டிராவில் உள்ள மொத்த மக்களின் எண்ணிக்கையை விட வாக்களித்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இது ஒரு உண்மை. மாலை 5.30 மணியளவில் தேர்தல் ஆணையம் எங்களுக்கு ஒரு புள்ளிவிவரத்தை வழங்கியது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் அதாவது இரவு 7.30 மணியளவில், 65 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது உண்மையில் சாத்தியமற்றது.

தேர்தல் ஆணையம் சமரசம் செய்யப்பட்டுள்ளது என்பது எங்களுக்கு மிகவும் தெளிவாகத் தெரிகிறது. அமைப்பில் ஏதோ மிகப் பெரிய தவறு உள்ளது.” என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார் என அந்தச் செய்தி கூறுகிறது.

அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவு குறித்துப் பேசிய ராகுல் காந்தி, “அமெரிக்காவுடன் எங்களுக்கு (இந்தியாவுக்கு) ஒரு கூட்டுறவு உள்ளது. நாங்கள் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என்று நம்புகிறோம்.” என்று கூறினார்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் ஏற்கனவே மறுத்துள்ளது. வாக்காளர் பட்டியல் தேர்தலுக்கு முன்பே திருத்தப்பட்டது என்றும், 18 வயதை எட்டியவர்கள், தங்கள் தொகுதியை மாற்றியவர்கள் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

மேலும், இறந்த வாக்காளர்களின் பெயர்கள் மற்றும் நகல் வாக்காளர்களின் பெயர்களை நீக்கும் நடவடிக்கையும் இதில் அடங்கும் என்றும் அது கூறியுள்ளது என ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் செய்தி தெரிவிக்கிறது.

‘இலங்கை பின்னோக்கிச் செல்கிறது’- ரணில் விக்கிரமசிங்க

இன்றைய செய்திகள், இந்தியா, அமலாக்கத்துறை, இலங்கை

பட மூலாதாரம், Getty Images

“வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் வளர்ச்சியடைந்து செல்லும் நிலையில், இலங்கை பின்னோக்கிச் செல்கிறது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்” என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார் என வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் திங்கட்கிழமை (21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்தார்.

மேலும் குறிப்பிடுகையில், “தற்போதிருப்பது மிக பலமான ஜனநாயக அரசாங்கம் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். தாம் கடிதம் அனுப்பியதால் தான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரி அறிவீட்டை 3 மாதங்களுக்கு ஒத்தி வைத்துள்ளதாகக் கூறுகின்றனர்.

இவ்வாறான பொய்களுக்கு இனியும் ஏமாறக் கூடாது. பாராளுமன்றத் தேர்தலிலும் தமக்கு ஒரு வாய்ப்பினை வழங்குமாறு கோரினர். மக்கள் அதனையும் வழங்கினர். ஆனால் இன்று என்ன நடந்திருக்கிறது? ஊழல் ஒழிப்பு சட்டம் குறித்த நீதிமன்ற விசாரணைகள் இடம்பெறும் போது அது குறித்து பேச முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கின்றார்.

ஆனால் அவ்வாறு எந்தவொரு ஏற்பாடும் அதில் இல்லை. அவர் அந்த சட்டத்தை முழுமையாக படிக்கவில்லை என்பது இதிலிருந்தே தெளிவாகிறது. இதனை கடந்த டிசம்பரில் நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்திருந்த போதிலும், தேர்தல்கள் மற்றும் ஆட்சி மாற்றத்தால் அதனை செய்ய முடியாது போனது.

இந்த அரசாங்கம் இது தொடர்பில் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.” என்று குற்றம் சாட்டினார் என அந்தச் செய்தி கூறுகிறது.

இந்த அரசாங்கத்தால் ஊழலை முற்றாக ஒழிக்க முடியவில்லை என்று கூறிய ரணில் விக்கிரமசிங்க, “2024இல் தேசிய உற்பத்தி வருமானம் 5 சதவீதத்தால் அதிகரித்தது. ஆனால் உலக வங்கியின் அறிக்கைக்கு அமைய இது 3.5 சதவீதமாக வீழச்சியடைந்துள்ளது. டிரம்பின் வரி பிரச்னைக்கு முன்னதாகவே இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் வளர்ச்சியடைந்து செல்லும் நிலையில், இலங்கை பின்னோக்கிச் செல்கிறது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். இன்று எவரும் இது தொடர்பில் பேசுவதில்லை. ஊடகங்களும் இது தொடர்பில் பேசுவதற்கு அஞ்சுகின்றன” என்று தெரிவித்தார் என வீரகேசரியின் செய்தி கூறுகிறது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU