SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், சாரதா உக்ரா
- பதவி, மூத்த விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்திக்காக
-
21 ஏப்ரல் 2025, 13:02 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
கடந்த வாரம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக தோனி மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருப்பார் என்கிற செய்தி வெளியானபோது சமூக ஊடகங்களில் தோனி மீண்டும் வைரல் ஆனார். கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் என அனைவரும் ஆர்ப்பரித்தனர்.
தோனி மீண்டும் கேப்டன் ஆனது சிஎஸ்கேவுக்குத் தேவைப்பட்ட புத்துணர்ச்சியை வழங்கும் எனப் பரவலாக நம்பப்பட்டது.
ஆனால் சிஎஸ்கே அணிக்கு இந்த சீசன் தற்போது வரை மிகவும் கடினமானதாகவே இருந்துள்ளது.
ஐந்து முறை சாம்பியனான சிஎஸ்கே அணி, முதல் ஐந்து போட்டிகளில் நான்கில் தோல்வி அடைந்தது. இந்நிலையில், ஏப்ரல் 11ஆம் தேதி கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோனி தலைமையில் மீண்டும் சிஎஸ்கே அணி களம் கண்டது.
சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதனால் அவர் போட்டியில் தொடர முடியவில்லை. இதனால் மீண்டும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி ஆனார்.
ஆனால் தோனி கேப்டன் ஆனப் பிறகும் கூட கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் நடந்தது பேசுபொருளானது.
ஐபிஎல் போட்டிகளின் 18 சீசன்களில் சிஎஸ்கே அணியின் கோட்டையாக இருந்த சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வி அடைவது இதுவே முதல் முறை.
கொல்கத்தா அணிக்கு எதிரான சிஎஸ்கே அணியின் தோல்வி, சிஎஸ்கே தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்த முதல் முறையாகும்.
ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே கடைசி இடத்தில் இருந்தாலும் அது அதிகம் பேசப்படும் அணியாக உள்ளது. செய்தி ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்கள் என எதுவானாலும், சிஎஸ்கே குறித்த விவாதங்கள் பெரும்பாலும் தோனியை சார்ந்ததாகவே இருக்கின்றன. அது இல்லையென்றால் தோனி பிராண்ட் அல்லது அவரின் கடந்த கால வெற்றிகள் பற்றிய பேச்சுக்களாகவே உள்ளன.
இருப்பினும் கடந்த காலத்தில் சிஎஸ்கே அணி வெற்றிக்கொடியை நாட்டியது போன்ற பெர்ஃபார்மன்ஸ் மீண்டும் திரும்பும் என்று சில தீவிர சிஎஸ்கே ரசிகர்கள் வாதிடுகின்றனர்.
சிஎஸ்கே அணி தோனி தலைமையின் கீழ் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
தோனியின் பெர்ஃபார்மன்ஸ்
2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக தோனி அறிவித்தார். அப்போதில் இருந்து தோனி ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.
சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்றதைத் தவிர்த்து மேலோட்டமாகப் பார்த்தால் கடந்த சில சீசன்களில் தோனியின் ஸ்ட்ரைக் ரேட் நன்றாக இருப்பதாகத் தோன்றலாம்.
தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் 106.54 ஆகவும், 2022-ல் 123.4 ஆகவும், 2023-ல் 182.45 ஆகவும், 2024-ல் 220.5 ஆகவும் மற்றும் இந்த சீசனில் தற்போது வரை 146.4 ஆகவும் இருக்கிறது.
ஆனால் புள்ளிவிவரங்கள் மற்றும் இந்தக் காலகட்டத்தில் தோனியிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் கருத்தில் கொள்ளவேண்டியது முக்கியமானதாக இருக்கிறது.
தற்போது தனது 40களில் உள்ள தோனி, தான் பேட்டிங் செய்வதை மிகவும் குறைத்துக் கொண்டுள்ளார்.
தோனி எந்த வரிசையில் பேட் செய்ய களமிறங்குவார் என்பதை என்பதை முடிவு செய்வது சாத்தியமற்றது. அது தோனியைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
தோனியின் ஸ்ட்ரைக் ரேட் என்னவாக இருந்தாலும் அவர் விளையாடும் பந்துகளின் எண்ணிக்கை ஒவ்வொரு சீசனுக்கும் குறைந்து கொண்டே வருகிறது.
2020 – 2021 முதல், தோனி ஒவ்வொரு சீசனிலும் 200 பந்துகளுக்கும் குறைவாகவே எதிர்கொண்டுள்ளார்.
கடந்த இரண்டு சீசன்களில், தோனி 100 பந்துகளுக்கும் குறைவாகவே விளையாடியுள்ளார். 2023 ஆம் ஆண்டில் தோனி 12 போட்டிகளில் 57 பந்துகளை விளையாடியுள்ளார். 2024 ஆம் ஆண்டில் 11 போட்டிகளில் 73 பந்துகளை விளையாடியுள்ளார்.
கடந்த மூன்று சீசங்களாக தோனி 26 முறை நாட் அவுட் ஆக இருந்துள்ளார். இது அவர் எவ்வளவு கீழ் வரிசை பேட்டராகவே விளையாட வருகிறார் மற்றும் எவ்வளவு தாமதமாக ஆட்டத்திற்குள் காலமிறங்குகிறார் என்பதை உணர்த்துகிறது.

பட மூலாதாரம், Getty Images
நடப்பு சீசனில் தோனி எவ்வாறு பேட் செய்துள்ளார்?
இந்த சீசனில் தோனி ஆறு போட்டிகளில் 71 பந்துகளைச் சந்தித்துள்ளார். இது ஒரு போட்டிக்கு 12 பந்துகளுக்கும் குறைவாகவே அவர் விளையாடியுள்ளார்.
இதில் 13 பந்துகளில் தோனி பவுண்டரி அடித்துள்ளார். அதில் ஆறு ஃபோர்களும் ஏழு சிக்ஸர்களும் அடங்கும். தோனி மீதமுள்ள 58 பந்துகளில் 38 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.
தோனி கீழ் வரிசை பேட்டராகவே விளையாட வருகிறார் என்பதுதான் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இரண்டு போட்டிகளில் தோனி 9வது இடத்தில் களம் இறங்கியுள்ளார். அந்த நேரத்தில் சிஎஸ்கே அணி ஏற்கனவே தோல்வியை நோக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தோனியின் பேட்டிங் பற்றி சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கும் குழப்பமான விளக்கம் ஒன்றை வழங்கியுள்ளார்.
“ஆம், இது எல்லாம் காலத்தைப் பொறுத்தது தான். தோனி அதைக் கணக்கிடுகிறார். அவரால் பத்து ஓவர்களுக்கு விளையாட முடியாது. எனவே அவரால் அணிக்கு என்ன செய்ய முடியும் என்பதை போட்டி நாளன்று மதிப்பிடுவார்” என்றார் பிளெமிங்.
ஒரு அணிக்கு முடிவுகள் சாதகமாக வந்து கொண்டிருந்தால், அனுபவம் வாய்ந்த ஒரு பேட்டரின் சில மோசமான ஆட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியும்.
இருப்பினும், வயதான தோனியும் அவரது பேட்டிங்கில் உள்ள சிரமமும் சிஎஸ்கே அணியில் இருக்க எந்த காரணமும் இல்லை.

பட மூலாதாரம், Getty Images
சிஎஸ்கே அணியில் தோனியின் முத்திரை
தோனியின் சிஎஸ்கே பிராண்ட் எந்த அளவு வலிமையானது என்றால் அவர் அந்த அணியில் விளையாடாமல் போனால் நிர்வாகத்தால் டிக்கெட்டுகளை விற்கவோ அல்லது மைதானத்தை நிரப்பவோ முடியாது என சென்னையில் உள்ள சில மக்கள் என்னிடம் கூறுகின்றனர்.
சிஎஸ்கே நிர்வாகம் 18 சீசன்களாக ஒருவரை நம்பி மட்டுமே மொத்த அணியை நடத்தி ஒன்றும் செய்யாமல் இருந்துள்ளது. உண்மையாக கிரிக்கெட்டை நேசிக்கும் சென்னை போன்ற நகரத்தில் இந்நிலையை நம்புவது சாத்தியமற்றது.
ஒரு நபரைச் சுற்றி மட்டுமே அதன் ரசிகர் பட்டாளம் நிலைத்திருக்க முடியுமா? மிகவும் துடிப்பான மற்றும் ஆற்றல் நிறைந்ததாக கருதப்படும் சிஎஸ்கே நிர்வாகம், அணியின் அடுத்தக் கட்டத்தை திட்டமிடாமல் புறந்தள்ளிவிட்டதா?
கடந்த சில ஆண்டுகளில் அது தெளிவாகத் தெரியாவிட்டாலும், 2025 ஆம் ஆண்டில், சிஎஸ்கே இப்போது தோனியின் ஆளுமையுடன் மிகவும் ஆழமாகப் பிணைந்துள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது, அவர்களால் இந்த பிடியிலிருந்து தப்பிக்க முடியாது.
சிஎஸ்கே தங்களது மெகா ஏல நிதியை, முந்தைய ஐபிஎல் காலகட்டத்தின் வீரர்களை வாங்க முதலீடு செய்தது. அவர்கள் டி20 கிரிக்கெட் வடிவத்தில் விளையாடுகிறார்கள். சிஎஸ்கே அணியின் உரிமையாளர்களும் கடந்த காலத்திலியே சிக்கியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
வேலை செய்யாத தோனி மந்திரம்
ஆட்டத்தை இறுதி ஓவர் வரை எடுத்துச் சென்று சிக்ஸர்கள் அடித்துப் போட்டியை முடிக்கும் தோனியின் பிரபலமான மந்திரம் இப்போது வேலை செய்வதில்லை.
தற்போது ஆட்டத்தின் எந்தக் கட்டத்திலும் சிக்ஸர்களுக்குப் பஞ்சம் இருப்பதில்லை. வர்பிளே ஸ்கோர்கள் வேகமாக உயர்ந்து வருகின்றன, மேலும் ஸ்ட்ரைக் ரேட்டும் அதிகரித்து வருகிறது. ஏனென்றால் இளம் வீரர்கள் 180 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்கிற இலக்குடன் வருகின்றனர்.
தோனியை உள்ளடக்கிய சிஎஸ்கே தலைமை அத்தகைய துடிப்பான பேட்ஸ்மேன்களை கண்டடையவோ, வளர்க்கவோ அல்லது அவர்களில் முதலீடு செய்யவோ இல்லை.
இந்த சீசனில் மற்ற எந்த ஐபிஎல் அணியை விடவும் அதிக டாட் பால்களை சிஎஸ்கே அணி விளையாடியுள்ளது.
முதல் ஆறு போட்டிகளில் வீசப்பட்ட 119.1 ஓவர்களில், அவர்கள் 245 டாட் பால்கள் அந்த அணி விளையாடியுள்ளது. அதாவது எந்த ரன்களும் அடிக்காமல் 40 ஓவர்களை விளையாடியுள்ளனர். சிஎஸ்கே அணிதான் அனைத்து அணிகளிலும் குறைவான சிக்ஸர்களை அடித்துள்ளது.
இந்தத் தொடர் முழுவதும் சராசரியாக ஒரு ஓவருக்கு எட்டு ரன்களுக்கும் குறைவாக எடுத்த ஒரே அணியும் சிஎஸ்கேதான்.
இந்த சீசனில் தோனியின் பெர்ஃபார்மன்ஸ் சிஎஸ்கே அணியின் ரிதமுக்கு ஏற்றவாறே உள்ளது. ஆனால் இது நிச்சயம் அணிக்கு உதவக்கூடியதாக இல்லை.
தோனி ஃபார்மில் இருந்தபோது ஒரு விக்கட் கீப்பராக, பேட்ஸ்மேனாக, கேப்டனாக சிஎஸ்கே அணிக்கு மாற்று இல்லாத வீரராக இருந்தார்.
இன்று தோனி ஒரு விக்கெட் கீப்பராக அவருடைய இடத்தை தக்கவைத்துக் கொள்ளலாம். போட்டியின் ஒரு சிறு பகுதியைக் கட்டுப்படுத்த அவரின் கேப்டன்சி திறன்களைக் காட்டலாம்.
ஆனால் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் தோனி வழிநடத்தும் சிஎஸ்கே அணி அனைத்துத் துறைகளிலும் சோர்வாகக் காணப்படுகிறது. தோனியிடமும் கூட இந்த சோர்வு தெரிகிறது.
ஆனால் அணியின் நட்சத்திர வீரரான தோனி சரியாக விளையாடவில்லை என்றாலும் கூட அவருக்கு ஓய்வு அளிக்கும் எந்த அவசரத்திலும் சிஎஸ்கே இருப்பதாகத் தெரியவில்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU