Home Latest news tamil சமீபத்திய செய்தி டைப்-5 நீரிழிவு என்ற புதிய வகை நீரிழிவு நோய் யாருக்கெல்லாம் வரக் கூடும்?

டைப்-5 நீரிழிவு என்ற புதிய வகை நீரிழிவு நோய் யாருக்கெல்லாம் வரக் கூடும்?

6
0

SOURCE :- BBC NEWS

டைப்-5 நீரிழிவு நோய், வேலூர் சிஎம்சி, உலக சுகாதார அமைப்பு

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், நித்யா பாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ், சென்னை
  • 15 ஏப்ரல் 2025, 03:03 GMT

    புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்

உடல் பருமனாக இருப்பவர்களுக்கே நீரிழிவு நோய் வரும் என்ற எண்ணம் பலரது மனதிலும் உள்ளது. மெலிந்த தேகம் கொண்டவர்கள் மத்தியில் எந்தவிதமான நோயும் வருவதில்லை என்ற எண்ணமும் நம்மிடம் உள்ளது.

ஆனால் குறைவான பி.எம்.ஐ கொண்டவர்கள் மத்தியிலும் நீரிழிவு நோய் ஏற்படும் என்றும் அது ஏற்கனவே மக்கள் மத்தியில் காணப்படும் டைப்-1, டைப்-2 நீரிழிவு நோய் அல்ல என்றும் சமீபத்தில் பாங்காங்கில் நடைபெற்ற நீரிழிவுக்கான உலகளாவிய மாநாட்டில் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். (பிஎம்ஐ- உடல் எடையையும், உயரத்தையும் கொண்டு கணக்கிடுவது. உலக சுகாதார நிறுவனம் 25 அல்லது அதற்கு மேற்பட்ட பிஎம்ஐ இருந்தால், அது உடல் பருமன் பிரச்னை என்கிறது)

இந்த வகை நீரிழிவு நோய் குறிப்பாக மத்திய மற்றும் குறை வருவாய் பிரிவில் உள்ள நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பருமனாக இல்லாத, அதே நேரத்தில் போதுமான அளவு இன்சுலின் சுரக்காத நபர்களிடம் ஏற்படும் நீரிழிவு நோயை டைப்-5 நீரிழிவு நோய் என்று வகைப்படுத்தி, அதற்கான ஆராய்ச்சியை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவித்துள்ளார் பேராசிரியர் மருத்துவர் பீட்டர் ஸ்வார்ஸ். அவர் சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

டைப்-5 நீரிழிவு நோய் யாருக்கு ஏற்படுகிறது? அது எவ்விதம் ஏற்படுகிறது? அதனை கட்டுக்குள் கொண்டு வர எத்தகைய நடவடிக்கைகள் தேவை என்பதை ஆய்வு செய்ய சர்வதேச அளவில் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

டைப்-5 நீரிழிவு நோய் என்றால் என்ன? முதன்முறையாக எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? எந்தெந்த சமூகக் குழுக்கள் மத்தியில் இந்த நோய் அதிகமாக பரவுகிறது? என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

டைப்-5 நீரிழிவு நோய் என்றால் என்ன?

<19 என்ற அளவில் குறைந்த பி.எம்.ஐ எண் கொண்டிருக்கும் மக்களிடம் காணப்படும் நீரிழிவு நோயே வகை ஐந்து நீரிழிவு நோய் என்று அழைக்கப்படுகிறது. இந்த நீரிழிவு உடல் பருமன் குறைவாக இருக்கும் மக்களிடம் ஏற்படுகிறது.

“டைப்-2 நீரிழிவு நோய் உடைய, உடல் பருமன் அதிகமாக இருக்கும் நோயாளிகளிடம், இன்சுலின் சுரந்தாலும் அவர்களின் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள அந்த இன்சுலின் சுரப்பு போதுமானதாக இருக்காது. அவர்களின் உடலில் இன்சுலின் எதிர்ப்பு அதிகப்படியாக இருக்கும்.

ஆனால், டைப்-5 நீரிழிவு நோயானது உடல் பருமன் குறைவாக உள்ள, அதாவது (<19) என்ற அளவில் பி.எம்.ஐ கொண்ட மக்களிடம் ஏற்படக்கூடியது. இவர்களின் உடலில் இன்சுலின் பற்றாக்குறை இருக்கும்.

ஆனால் டைப்- 2 நீரிழிவு நோய்க்கு ஊசி செலுத்துவது போன்று இல்லாமல், மாத்திரைகள் மூலமாகவே சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இயலும்,” என்று பிபிசி தமிழிடம் தெரிவிக்கிறார் மருத்துவர் ஃபெலிக்ஸ் ஜெபராஜ். இவர் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் உட்சுரப்பியல், நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றத்துறையில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.

டைப்-5 நீரிழிவு நோய், வேலூர் சிஎம்சி, உலக சுகாதார அமைப்பு

பட மூலாதாரம், Getty Images

யாருக்கெல்லாம் இத்தகைய நீரிழிவு நோய் வரக் கூடும்?

குறைவான மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டக் கூடிய நாடுகளில் இந்த நோய் இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • சிறுவயதில் இருந்தே ஊட்டச்சத்து பற்றாக்குறையால் அவதிப்பட்ட மக்கள்
  • கருவில் இருக்கும் போதே குறைவான பிஎம்ஐ கொண்ட பிரிவினர்
  • 30 வயதிற்கு உட்பட்டவர்கள்
  • ஆண்கள்
  • கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு இருந்தும் கேட்டோனூரியா அல்லது கேட்டோசிஸ் குறைபாடு உள்ளவர்கள்
  • நாள் ஒன்றுக்கு அதிக அளவு இன்சுலின் தேவைப்படும் நபர்கள்
டைப்-5 நீரிழிவு நோய், வேலூர் சிஎம்சி, உலக சுகாதார அமைப்பு

பட மூலாதாரம், Getty Images

டைப்-5 நீரிழிவு 1955-ல் கண்டுபிடிப்பு

குறைவான பி.எம்.ஐ. கொண்ட மக்களிடம் காணப்படும் நீரிழிவு நோயை ஹூக் – ஜோன்ஸ் 1955-ஆம் ஆண்டில் உறுதி செய்தார். ஜமைக்காவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் அவர்களுக்கு டைப்-1 மற்றும் டைப்-2 நீரிழிவு நோய் இல்லை என்பதையும் அவர் உறுதி செய்தார்.

குறைவான மற்றும் மத்திய வருவாய் ஈட்டக்கூடிய நாடுகளில் இந்த நோய் இருப்பது அப்போது கண்டறியப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், கொரியா, தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளிலும் எத்தியோபியா, நைஜீரியா, உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் இந்த வகை நீரிழிவு நோய் இருப்பது ஆவணப்படுத்தப்பட்டது.

உலக சுகாதார அமைப்பால் இந்த வகை நீரிழிவு நோய் 1985-ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. அதனை ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான நீரிழிவு நோய் (malnutrition-related diabetes mellitus (MRDM)) என்று வகைப்படுத்தியது உலக சுகாதார அமைப்பு.

டைப்-5 நீரிழிவு நோய், வேலூர் சிஎம்சி, உலக சுகாதார அமைப்பு

பட மூலாதாரம், Getty Images

WHO பட்டியலில் இருந்து டைப்-5 நீரிழிவு நீக்கப்பட்டது ஏன்?

பரவலாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நீரிழிவு நோய் பிரிவுகளை முதன்முறையாக 1980-ஆம் ஆண்டு வெளியிட்டது உலக சுகாதார அமைப்பு. 1985-ஆம் ஆண்டு அதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு வெளியிடப்பட்டது.

1980-ஆம் ஆண்டில் நிபுணர் குழு நீரிழிவு நோயின் இரண்டு பிரிவுகளான ஐ.டி.டி.எம் அல்லது டைப்-1 மற்றும் என்.ஐ.டி.டி.எம். அல்லது டைப்-2 நீரிழிவு நோயை பட்டியலில் இணைக்க பரிந்துரை செய்தது. 1985-ஆம் ஆண்டு ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக ஏற்படும் நீரிழிவு நோய் (MRDM) வகை பட்டியலில் இடம் பெற்றது.

ஆனால் 1999-ஆம் ஆண்டு ஊட்டச்சத்து குறைபாடு அல்லது புரத பற்றாக்குறை காரணமாக ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்படும் என்பதை நிரூபிக்க போதுமான சான்றுகள் ஏதும் இல்லை என்பதால் MRDM வகை நீரிழிவு நோயை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது உலக சுகாதார அமைப்பு.

ஊட்டச்சத்து பற்றாக்குறை காரணமாக நீரிழிவு நோயில் ஏற்பட்டிருக்கும் திரிபு என்று கூறி அந்த வகையை நீக்கியதோடு மட்டுமின்றி, அதனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

டைப்-5 நீரிழிவு நோய், வேலூர் சிஎம்சி, உலக சுகாதார அமைப்பு

பட மூலாதாரம், Getty Images

முக்கிய அறிவிப்புக்கு வழிவகுத்த ஆராய்ச்சி

கடந்த 2022-ஆம் ஆண்டு வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் குறைவான உடல் பருமன் கொண்ட, ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களிடம் காணப்படும் நீரிழிவு நோயானது டைப்-1, டைப்-2 நீரிழிவு நோய் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

1955-ல் முதன் முறையாக கண்டறியப்பட்ட, ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான நீரிழிவு நோயாக (MRDM) இது இருக்கலாம் என்பதையும் அவர்கள் ஆராய்ச்சி முடிவில் உறுதி செய்தனர்.

இது தொடர்பாக அதே ஆண்டு “An Atypical Form of Diabetes Among Individuals With Low BMI,” என்ற தலைப்பில் ஆராய்ச்சி முடிவுகளையும் வெளியிட்டனர். அதன்படி, பின்தங்கிய சமூக பொருளாதார பின்னணியில் இருந்து, குறைவாக உடல் பருமன் கொண்ட 73 இந்திய ஆண்களிடம் சோதனை செய்யப்பட்டது. அதில் 20 பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டது.

வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி உட்சுரப்பியல், நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றத்துறையில் பணியாற்றி வரும் மூத்த பேராசிரியரும் மருத்துவருமான நிஹல் தாமஸ், அமெரிக்காவின் நியூயார்க்கில் அமைந்திருக்கும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் மெரிடித் ஹாகின்ஸும், இதர துறை சார் நிபுணர்களும் சேர்ந்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

“இது தொடர்பான ஆராய்ச்சிகளை நடத்தி, அவர்களுக்கென பிரத்யேக சிகிச்சை வழங்க வேண்டிய தேவையை வலியுறுத்தும் வகையில் பிரகடனம் ஒன்று கடந்த ஜனவரி மாதம் வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற ‘வேலூர் எண்டோகிரைனாலஜி சர்வதேச மாநாட்டில்’ அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே சமீபத்திய அறிவிப்பு பாங்காங்கில் வெளியிடப்பட்டது,” என்று தெரிவிக்கிறார் மருத்துவர் ஃபெலிக்ஸ் ஜெபராஜ்.

வேலூரில் நடைபெற்ற மாநாட்டிற்கு பேராசிரியர்கள் நிஹல், மெரிடித் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். அமைப்பு செயலாளராக பேராசிரியர் ஃபெலிக்ஸ் ஜெபராஜ் செயல்பட்டார்.

டைப்-5 நீரிழிவு நோய், வேலூர் சிஎம்சி, உலக சுகாதார அமைப்பு

பட மூலாதாரம், Professor Peter Schwarz/Linkedin

டைப்-5 நீரிழிவு நோய் தொடர்பான ஆராய்ச்சி ஏன் அவசியமாகிறது?

“பொதுவாக இத்தகைய நபர்களுக்கு நீரிழிவு நோய் வராது என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் அவர்களுக்கும் நீரிழிவு நோய் ஏற்படும். அவர்களுக்கு, டைப்-1 மற்றும் டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பொதுவான சிகிச்சை முறையை கையாள்வது தீங்காக போய் முடியக்கூடும்.

இன்றைய காலத்தில் ஆதாரங்கள் அடிப்படையில்தான் மக்கள் எந்த ஒரு சிகிச்சையையும் ஏற்றுக் கொள்வார்கள். எனவே இது தொடர்பாக அதிக அளவு மக்களுக்கும், மருத்துவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், டைப்-5 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சிகிச்சை முறையை உருவாக்கவும் இத்தகைய ஆராய்ச்சிகளை தொடர்வது முக்கியமானது,” என்று மருத்துவர் ஃபெலிக்ஸ் ஜெபராஜ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC