SOURCE :- BBC NEWS
“என் இருப்பு ஒரு போராட்டம்…
என் பிறப்பு ஒரு போராட்டம்…
என் மூச்சு ஒரு போராட்டம்…
என் பேச்சு ஒரு போராட்டம்…”
அபிஷா, கவிசிக்கி, நேயா, ராகா காற்றலை ஆகிய நால்வரும் பெண்கள் இந்தச் சமூகத்தில் சந்திக்கும் பிரச்னைகள் குறித்துப் பாடிக் கொண்டிருந்தனர்.
இவர்கள் தமிழகத்தின் முதல் அனைத்து பெண்கள் ராக் இசைக் குழுவான சொல்லிசை சிஸ்டாஸ் குழுவைச் சேர்ந்தவர்கள். சென்னையின் ராப் இசைத்துறையில் தனித்துத் திகழும் துடிப்புமிக்க பெண்கள் குழு இது.
டிசம்பர் 2023ஆம் ஆண்டு இந்தக் குழுவை உருவாக்கிய இவர்கள் தங்கள் முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தை சமீபத்தில்தான் முடித்தனர்.
“ராப் இசை என்றால் ஆண்களும், பெண்களுக்கு எதிரான பாடல்களும் என்பதுதான் எழுதப்படாத விதியாக இருந்தது. இன்று நாங்கள் ஒரு குழுவாக இசை நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது பெண்களுக்கு எதிரான பாடல்களை முன்னெடுத்து வைக்கத் தயங்குகின்றனர்” என்று கூறுகிறார்கள் சொல்லிசை சிஸ்டாஸ் பெண்கள்.
“சில நேரங்களில் ஆரோக்கியமான விவாதத்திற்குப் பிறகு அதுபோன்ற பாடல்களில் இருக்கும் பிரச்னைகளை ஆண் கலைஞர்கள் உணர்ந்து கொள்கின்றனர்.”
தமிழகத்தின் ராப் அல்லது ஹிப்ஹாப் இசைத்துறையில் தனித்தனியாக இயங்கிக் கொண்டிருந்த இவர்கள் ஒன்றிணைந்து ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்கள் என்ன? தங்கள் எதிர்ப்பு மற்றும் போராட்டத்தின் குரலாக இவர்கள் ராப் இசையைத் தேர்வு செய்தது ஏன்?
பெண்களுக்கு எதிரான பாடல்கள்
“ஹிப்ஹாப் அல்லது ராப் இசை என்றவுடன் இன்று பலருக்கும் ஞாபகம் வருவது, பெண்களை விமர்சிக்கும் பாடல்கள்தான். திரைத்துறை பாடல்கள் என்று மட்டும் சொல்லிவிட இயலாது, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக சென்னையில் ஒரு ராப் நிகழ்ச்சிக்குச் செல்லும்போது அங்கே பெண் பங்கேற்பாளர்கள் என்று யாருமே இல்லை. பாடப்படும் பாடல்கள் பலவும் பெண்களுக்கு எதிராகவும், கொச்சையாகவும் இருப்பதை உணர்ந்திருக்கிறேன்.
இதுபோன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்க பதின்ம வயது சிறுவர்கள் வரும்போது, பெண்கள் குறித்து எத்தகைய எண்ணத்தை இந்தக் கலைஞர்கள் முன்வைக்கின்றனர் என்ற கேள்வி என்னிடம் இருந்தது. இது நமக்கான இடம்தானா என்ற சந்தேகம் ஏற்பட்டது,” என்று பெருமூச்சுடன் இந்த ராப் துறையில் அடியெடுத்து வைத்த நாட்கள் குறித்துப் பேசுகிறார் அபிஷா.
அபிஷா திருச்சியை பூர்வீகமாகக் கொண்டவர். சாதிய அடக்குமுறைகளுக்கும், பாலின அடக்குமுறைகளுக்கும் எதிராகத் தொடர்ந்து இயங்கி வரும் இவர் தன்னுடைய கருத்துகளை இசையின் மூலம் கூற விரும்புகிறார்.
“இசை அனைவருக்குமானது. இங்கு பெண்களை ஏளனம் செய்து பாடல்கள் இசைக்க வேண்டும் என்ற போக்கே அபத்தமாக இருந்தது. அதற்குப் பதிலடி தரும் வகையில் இதே துறையில் செயல்பட வேண்டும் என்று வரும்போது, ஒரே எண்ண ஓட்டம் கொண்ட பெண் கலைஞர்களை ராப் இசையில் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது,” என்றார் அபிஷா.
இசையால் இணைந்த பெண்கள்
செய்தியாளராகப் பணியாற்றும் கவிசிக்கி, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ராப் நிகழ்ச்சிகளுக்கான பாடல்களை எழுதி வருகிறார்.
“சமூக மற்றும் பாலின சமத்துவம், ஒடுக்கப்பட்டவர்களுக்கான விடுதலை போன்றவை, எழுத்துகள் மட்டுமின்றி பாடல்கள் மற்றும் இசையின் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் எங்களுக்கான பிரதிநிதிகளோ, ‘ரோல் மாடல்களோ’ அப்போது இல்லை.
பெண் ராப் கலைஞர்கள் இருந்தனர். ஆனால் ஒரு பெரிய ஆண்கள் குழுவில் ஒருவராகவோ, ஒரு ஆண் – ஒரு பெண் என்ற ஜோடியாகவோ பங்கேற்பார்கள். அங்கே பாலின சமத்துவம் குறித்தான பாடல்களுக்கும், கருத்துகளுக்கும் குறைவான இடமே இருப்பதை உணர்ந்தேன்” என்று கூறுகிறார் கவிசிக்கி. அவர் ஒரு ‘பீட்பாக்ஸ்’ இசைக்கலைஞரும்கூட.
இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள நான்கு பெண்களும் வெவ்வேறு பின்னணியைக் கொண்டவர்கள். அவர்களை இணைக்கும் ஒரே புள்ளி இசை. இந்தக் குழுவில் மிகவும் இளைய உறுப்பினராக இருப்பது சென்னையைச் சேர்ந்த நேயா.
“இந்தக் குழுவில் இருக்கும் மற்ற நபர்களை நான் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பார்த்துள்ளேன். ஆனால் ஒரு குழுவாகச் சேர்ந்து பணியாற்றலாம் எனக் கூறியபோது மிகவும் மகிழ்ச்சியாக இணைந்து கொண்டேன்” என்று கூறுகிறார் நேயா.
இசை ஒரு ஆயுதம்
வெவ்வேறு சாதிய, கலாசார, பிராந்திய, வர்க்கப் பின்னணிகளில் இருந்து வந்திருப்பதால், இங்கு ஒரு விவாதத்தை எவ்வாறு கொண்டு செல்ல முடிகிறது என்று கேட்டபோது, இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள ராகா காற்றலை, “இந்திய கலாசாரத்தில் எந்த சாதிய, வர்க்க பின்னணியைக் கொண்டிருந்தாலும் பெண்கள் ஒடுக்குமுறைக்குத்தான் ஆளாகிறோம். அதன் தாக்கத்தில் மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் தாக்கத்தை அனைவரும் உணர்ந்திருக்கிறோம்,” என்றார்.
அதனால்தான், பெண்கள் மீதான வன்முறை, பெண் உடல் மீதான அரசியல் என்று வரும்போது தங்களுக்குள் நடைபெறும் உரையாடல்கள் தங்கு தடையின்றிச் செல்வதாக பிபிசி தமிழிடம் அவர் கூறினார். டிஜேவாக பணியாற்றும் ராகா, முழு நேர இசைக்கலைஞராகச் செயல்பட்டு வருகிறார்.
“இன்றைய அரசியல் சூழலில் இசை எங்களுக்கான ஆயுதம்” என்று கூறுகின்றனர் சொல்லிசை சிஸ்டாஸ் குழுவினர். அம்பேத்கர், மணிப்பூர் கலவரம், பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் என்று அனைத்து சமகாலப் பிரச்னைகளுக்கும் இவர்கள் இசையை ஆயுதமாக்கித் தங்கள் பயணத்தைத் தொடர்கின்றனர்.
தமிழக அரசு மற்றும் உலக வங்கியின் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்ட சென்னை சிட்டி பார்ட்னர்ஷிப் என்ற திட்டத்தின் கீழ், நிர்பயா நிதியைப் பயன்படுத்தி 2022ஆம் ஆண்டு பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம் (Gender and Policy Lab) செயல்படத் தொடங்கியது.
அதற்காக, பொது இடங்களில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் சீண்டல்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் வகையில், ‘தப்புன்னு தெரிஞ்சா பட்டுன்னு கேளு’ என்ற பிரசாரத்திற்கான விழிப்புணர்வுப் பாடலையும் இக்குழுவினர் பாடியுள்ளனர்.
சவால்களும் தணிக்கைகளும்
இந்த அனைத்து பெண்கள் ராப் இசைக்குழுவானது தங்களின் தனித்தன்மை கொண்ட சமகால அரசியல் பேசும் பாடல்களை இசைக்கின்றனர்.
“ஆரம்பத்தில் ராப் போன்ற நிகழ்வுகளில் பெண்கள் தனியாகப் பாட வரும்போது, ‘அவளே, இவளே’ என்பதில் துவங்கி முன்னாள் காதலிகளை வசைபாடும் பாடல்கள் என அனைத்தும் இடம்பெறும். இதற்கு அஞ்சி நான் அங்கே செல்வதை நிறுத்துவதில்லை. நான் அங்கே ஒரு சில பாடல்களுக்கு முகம் சுளிக்கும்போது, அங்கிருக்கும் இசைக் கலைஞர்கள் அந்தப் பாடல்களில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று புரிந்துகொள்ள ஆரம்பித்தனர். தவறென்று தெரியும்போது எதிர்த்துக் கேட்கவும் ஆரம்பித்தேன்,” என்று கூறுகிறார் அபிஷா.
ஒரு கட்டத்தில், ஒரு பெண்ணின் இருப்பு அங்கே இருக்கிறது என்றால், பெண்களுக்கு எதிரான பாடல்களைப் பாடும் போக்குகளைப் பலர் குறைத்துக் கொண்டதாகவும் அவர் கூறுகிறார்.
கருத்தாக்கத்தில் மாற்றம் ஏற்படப் பல காலம் ஆகும் எனக் கூறும் அபிஷா, இருப்பினும் தாங்கள் குழுவாகச் செல்லும்போது பெண்களுக்கு எதிரான, மரியாதைக் குறைவான பாடல்கள் இடம் பெறாமல் இருப்பதே வெற்றிதான்.
தங்கள் பாடல்கள் அனைத்தும் சமகால அரசியல் என்று வரும்போது, ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது சில வார்த்தைகளை நீக்கச் சொல்லியும், சில வரிகளை நீக்க வலியுறுத்தியும் வேண்டுகோள் விடுத்த சம்பவங்களும் நடந்திருப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.
“பீரியட்ஸ் என்ற வார்த்தையை நீக்கவெல்லாம் கோரிக்கை வைத்துள்ளனர். பெண்களின் உடல் பற்றி, அவர்களின் வலிகள் மட்டுமல்ல அபிலாஷைகள் பற்றிப் பாடுவதைக்கூட ஒரு மாதிரியாகப் பார்க்கின்றனர். அரசியல் சார்ந்து சில பாடல்களைப் பாடலாம் என்றால், தயங்கியபடியே பாட அனுமதிக்கின்றனர்,” என்று கூறுகிறார் ராகா காற்றலை.
ஒடுக்குமுறையை எதிர்க்கும் இசை
கடந்த 1973ஆம் ஆண்டு தற்செயலாக ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உருவானதுதான் ஹிப்-ஹாப் அல்லது ராப். டி.ஜே.கூல் ஹெர்க், நியூயார்க் நகரத்தில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பல பாடல்களின் இசைt துணுக்குகளைச் சேர்த்துக் கோர்வையாக்கி இசைக்கத் துவங்கினார்.
இந்தச் சிறிய மாற்றமே பிறகு ஹிப்-ஹாப்பாக மாறியது. அன்று அவருக்கு வயது வெறும் 18. ஆனால் அவருடைய அந்தக் கண்டுபிடிப்பு பிற்காலத்தில் கறுப்பின மக்களின் நலனுக்கு இனவெறி எப்படி பிரச்னையாக மாறியது என்பதை வெளிப்படுத்தும் ஓர் ஆயுதமாக மாறியது.
கறுப்பின மக்களின் இன்னல்கள் குறித்து அதிகமாக இந்தப் பாடல்கள் பேசினாலும், இதில் அதிகமாக ஆண்களே கலந்துகொண்ட போக்கு இருந்துள்ளது. 1984ஆம் ஆண்டு, லாங் ஐலாண்ட் சிட்டியில் பிறந்த 14 வயதான ரோக்ஸான் ஷாண்டே தான் இந்தத் துறையில் தடம் பதித்த முதல் பெண் கலைஞர். அவரது படைப்புகள், ராப் இசை உலகில் இருக்கும் பாலின வேறுபாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது என்றும் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் மெக்டஃபி.
இந்தியாவின் இசை உலகில் ஹிப்-ஹாப், ராப் போன்ற இசைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகம் ஆனாலும், அதிலும் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கிறது. இந்தியாவின் முதல் அனைத்து பெண்கள் ஹிப்-ஹாப் கலைக்குழுவான வைல்ட் வைல்ட் வுமென் (Wild Wild Women) 2020ஆம் ஆண்டில்தான் செயல்படத் தொடங்கியது.
‘நம்பிக்கை கிடைத்துள்ளது’
“இன்று நாங்கள் கல்லூரிகள் உள்பட சில இடங்களுக்குச் சென்று பாடல்களைப் பாடும்போது, இளம் பெண்கள் எங்களிடம் வந்து நாங்களும் உங்களைப் போன்று ஒருநாள் இந்தத் துறைக்கு வருவோம் என்று கூறுவதைக் கேட்க மகிழ்ச்சியாக உள்ளது,” என்கிறார் கவிசிக்கி. இன்று நாங்கள் துவங்கி இருப்பதை, அவர்கள் பின்தொடர்வர்கள் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது என்கிறார் அவர்.
“கானா, ராப் இசை என்று வரும்போது அது உழைக்கும் மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை உணர்வுப்பூர்வமாக கடத்தும் ஓர் ஊடகமாக இருந்தது.
அமெரிக்காவில் ஆப்பிரிக்க – அமெரிக்க மக்களின், இனவெறிக்கு எதிரான போராட்டங்களின் ஓர் அம்சமாக ராப் இசை திகழ்ந்தது. இந்திய சூழலுக்கு அதை நாம் பயன்படுத்தும்போதும், ஒடுக்குமுறைக்கு எதிரான ஓர் அம்சமாகவே பயன்படுத்த விரும்புகிறோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
பெண்களின் அடையாளம் மற்றும் பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்தும் இந்தக் கலையை அனைவருக்குமானதாகக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் தங்களின் கனவு குறித்து இவர்கள் விவரிக்கின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU