Home தேசிய national tamil 500 வீரர்களுடன் அக்பரின் பெரும் படையை எதிர்க்கத் துணிந்தெழுந்த ராணி துர்காவதி

500 வீரர்களுடன் அக்பரின் பெரும் படையை எதிர்க்கத் துணிந்தெழுந்த ராணி துர்காவதி

14
0

SOURCE :- BBC NEWS

வெறும் 5000 வீரர்களுடன் பெரும் முகலாயப் படையை எதிர்க்கத் துணிந்தெழுந்த ராணி துர்காவதி

பட மூலாதாரம், Gopal Shoonya/BBC

3 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஒப்பீட்டளவில் குறைந்த வீரர்களைக் கொண்ட ஒரு துணிச்சலான ராணி, போர்க்களத்தில் முகலாயர்களுக்கு தோல்வியின் சுவையைக் காட்டினார்.

அந்த ராணி, இந்தியாவில் தனது பிடியை வலுப்படுத்திக் கொண்டிருந்த சக்திவாய்ந்த முகலாயப் பேரரசர் அக்பரின் மிகப்பெரிய படையை எதிர்த்துப் போராடினார்.

போர்க்களத்தில் தனது சிறிய படையுடன் அவர் போராடிய துணிச்சலும் போர்க்களத்தில் இருந்து பின்வாங்குவதற்குப் பதிலாகத் தனது உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருந்தமையும், இந்திய வரலாற்றில் ‘தனித்துவமான’ இடத்தைப் பிடித்தது.

முகலாய பேரரசர் அக்பரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய அபுல் ஃபசல் மற்றும் பிற பாரசீக எழுத்தாளர்கள் ராணி துர்காவதியையும் அவரது துணிச்சலையும் பாராட்டியுள்ளனர்.

அபுல் ஃபசலின் எழுத்துகள் ராணியை ‘அழகு, வீரம், தைரியம், துணிச்சல் ஆகியவற்றின் கலவை’ என்று விவரித்தன.

இந்தக் குறிப்புக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிட்டிஷ் கர்னல் ஸ்லிமேன் ராணி துர்காவதியை “கர்ஹா-கட்டங்காவின் இறையாண்மை கொண்ட ஆட்சியாளர்களில் மிகவும் மதிப்பிற்குரியவர்” என்று விவரித்தார்.

ராணியைப் பாராட்டிய அபுல் ஃபசலின் குறிப்பு, “ராணியின் நோக்கம் கிட்டத்தட்ட தவறவில்லை. துர்காவதி வேட்டையாடச் செல்வார். அந்த நேரத்தில் அவர் ஒரு புலியைக் கண்டால், அதைக் கொல்லும் வரை அவர் தண்ணீர் குடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது” என்று கூறுகிறது.

இந்திய வரலாற்றில் மரியாதைக்குரிய இடத்தைப் பிடித்துள்ள இந்த ராணியின் வாழ்க்கை மிகவும் புரட்சிகரமானதாகவும் ஊக்கமளிப்பதாகவும் கருதப்படுகிறது.

சண்டேலா வம்சத்தில் பிறந்த ராணி துர்காவதி

இந்திய கலாசாரம் பற்றிய தகவல்களை வழங்கும் இந்திய அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ராணி துர்காவதி மற்றும் அவரது வீர ஆட்சியின் கதை விவரிக்கப்பட்டுள்ளது. இந்த தரவுகளின் படி கீழ்க்கண்ட வரலாறு விவரிக்கப்படுகிறது.

வட-மத்திய இந்தியாவின் புகழ்பெற்ற சண்டேலா வம்சத்தில் ராணி துர்காவதி 1524இல் பிறந்தார். துர்காஷ்டமி நாளில் அவர் பிறந்ததால் அவரது பெற்றோர் அவருக்கு துர்கா எனப் பெயரிட்டனர்.

துர்காவதியின் மூதாதையர்களின் பெயர்களும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் முகமது கோரியின் படையெடுப்பைத் துணிச்சலுடன் எதிர்த்ததற்காகவும், கஜுராஹோ கோவில்களைக் கட்டியதற்காகவும் சண்டேலா வம்சம் நினைவுகூரப்படுகிறது.

இன்றைய மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் அமைந்துள்ள ராணி துர்காவதி பல்கலைக்கழகத்தின் இணைய பக்கத்தில், ராணி மற்றும் அவரது வம்சாவளியைப் பற்றிய உரையில் “ராணி துர்காவதி, தனது சாதனைகளால் தனது மூதாதையர்களின் துணிச்சல் மற்றும் கலையைப் பாதுகாக்கும் பாரம்பரியத்தின் மரபை மேலும் மேம்படுத்தினார்,” என்று எழுதப்பட்டுள்ளது.

துர்காவதி, 18 வயதில், கர்ஹா-கடங்காவின் கோண்டு மன்னரின் மகன் தல்பத் ஷாவை மணந்தார். இது சண்டேலா வம்சத்திற்கும் கோண்டு வம்சத்திற்கும் இடையிலான உறவை வலுப்படுத்தியது.

வெறும் 5000 வீரர்களுடன் பெரும் முகலாயப் படையை எதிர்க்கத் துணிந்தெழுந்த ராணி துர்காவதி

பட மூலாதாரம், indianculture.gov.in

தைமூரின் படையெடுப்புக்குப் பிறகு, டெல்லி சுல்தானகம் பலவீனப்படுத்தப்பட்ட பிறகு, யாதவ ராயர் கர்ஹா-கடங்கா (பின்னர் கர்ஹா-மண்டல்) ராஜ்ஜியத்தை கைப்பற்றி, அந்தப் பகுதியின் மீது டெல்லிக்கு இருந்த வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டை நீக்கித் தனது ஆட்சியை நிறுவினார்.

அதன் பெயர், அப்பகுதியின் முக்கிய நகரமான ‘கர்ஹா’ மற்றும் இன்றைய ஜபல்பூரில் இருந்து நான்கு மைல் தொலைவில் அமைந்துள்ள ‘கடங்கா’ கிராமத்தின் இணைப்பில் இருந்து உருவாக்கப்பட்டது.

இந்த மாநிலத்தில், மத்திய பிரதேசத்தில் உள்ள மண்டலா, ஜபல்பூர், நரசிங்பூர், ஹோஷங்காபாத், போபால், சாகர், தாமோ ஆகிய இன்றைய மாவட்டங்களும் சத்தீஸ்கரின் சில பகுதிகளும் அடங்கும். அடர்ந்த காடுகள், மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இது இருந்தது. அந்த நேரத்தில் இந்த ராஜ்ஜியத்தில் மொத்தம் 52 கோட்டைகள் இருந்தன.

கணவர் இறப்புக்குப் பிறகு தொடங்கிய ராணியின் ஆட்சி

கடந்த 1548ஆம் ஆண்டு தனது கணவர் இறந்த பிறகு, தனது மகன் பிர் நாராயண் மன்னராக அறிவிக்கப்பட்டாலும், மிகவும் இளம் வயதினராக இருந்த காரணத்தால், ராணி துர்காவதி, அதார் காயஸ்தா, மான் பிராமின் ஆகிய இரு அமைச்சர்களின் உதவியுடன் மகனுக்குப் பதிலாக ஒரு பிரதிநிதியாகச் செயல்பட்டு ராஜ்ஜியத்தை ஆட்சி செய்தார்.

அவரது ஆட்சிக் காலத்தில், மக்களின் மகிழ்ச்சி, ராஜ்ஜியத்தின் செழிப்பு ஆகியவை விவாதப் பொருளாக இருந்தன. குடிமக்கள் தங்க நாணயங்களில் வரி செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

தனது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நாட்டில் ராணிடல், செரிடல், அதார்டல் என்ற மூன்று நீர்த்தேக்கங்களைக் கட்டமைத்தார். மக்களின் நலனுடன், நாட்டைப் பாதுகாப்பதிலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.

நர்ஹி போருக்குத் தயாராகும் ராணி துர்காவதியின் படம் (ஓவியம்: பியோஹர் ராம்மனோஹர் சின்ஹா)

பட மூலாதாரம், indianculture.gov.in

ராஜ்ஜியத்திற்குள் வெடித்த கிளர்ச்சிகளைக் கண்டிப்புடன் அடக்குவதோடு, சக்திவாய்ந்த அண்டை ராஜ்ஜியங்களுக்கு எதிராகப் போராடுவதன் மூலம் தனது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்தார்.

அவரது ராஜ்ஜியம் பல நகரங்கள், குறுநகரங்கள், கிராமங்களைக் கொண்டிருந்தது. ராஜ்ஜியத்தின் மக்கள் பெரும்பாலும் கோண்டு பழங்குடிகளாக இருந்தனர். அவர்கள் ராஜ்ஜியத்தின் 23 ஆயிரம் கிராமங்களில் வாழ்ந்து வந்தனர். அவற்றில் 12 ஆயிரம் கிராமங்கள் ராணியின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்தன. மீதமிருந்த பகுதிகள் அவரது ஆதிக்கத்தின் கீழ் இருந்தன.

குதிரைப்படை, காலாட்படை, யானைப் படை உள்ளிட்ட நாட்டின் ராணுவ வலிமையும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அந்த நேரத்தில் முகலாய பேரரசர் அக்பரின் பேரரசு, மால்வா ஆட்சியாளர் பாஜ் பகதூரை தோற்கடித்து தனது ராஜ்ஜியத்தை விரிவாக்கியது.

முகலாய தளபதிகள் விரைவில் மால்வாவை கைப்பற்றி, அருகிலிருந்த ரேவா, பன்னா ஆகிய ராஜ்ஜியங்களையும் கைப்பற்றினர். ராணி துர்காவதியின் ராஜ்ஜியத்தின் மீது முகலாய தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

நட்புறவின் வேடத்தில் நடந்த தாக்குதல் ஏற்பாடுகள்

வரலாற்றுப் பதிவுகளின்படி, அண்டையில் இருந்த முகலாய பிராந்தியமான காரா-மணிக்பூரின் முகலாய ஆளுநரான ஆசப் கான், கர்ஹா-கடங்காவின் ராணுவ சக்தியை ஓரளவுக்குப் பெறவும், நாட்டில் ஓர் உளவு அமைப்பை நிறுவவும், ராணி துர்காவதியின் ராஜ்ஜியத்துடன் நட்பு கொண்டார். அதோடு, இரு பிராந்தியத்தில் இருந்த மக்களிடையே சுதந்திர வர்த்தகத்தை ஊக்குவித்தார்.

ஆனால்1564ஆம் ஆண்டின் ஒரு நாளில், அவர் ‘எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி’ ஆசப் கான் ராணியின் ராஜ்ஜியத்தின் மீது தாக்குதல் நடத்தினார்.

ஆசப் கான் திட்டங்களை அறியாமல் இருந்த ராணியின் ராணுவம், ராஜ்ஜியத்தின் பிற எல்லைகளில் நிறுத்தப்பட்டிருந்தன. எதிர்ப் பக்கத்தில் முகலாய தலைவர்கள் கர்ஹா-கடங்கா எல்லையில் ஏராளமான வீரர்களைத் திரட்டினர்.

வெறும் 5000 வீரர்களுடன் பெரும் முகலாயப் படையை எதிர்க்கத் துணிந்தெழுந்த ராணி துர்காவதி

பட மூலாதாரம், Getty Images

ராணி தனது அமைச்சரின் பரிந்துரைக்கு மாறாக, சுதந்திரத்தின் மீது தனது உயிரைவிட அதிகமான மதிப்பைக் கொண்டிருந்தார். அதோடு, வெறும் 500 வீரர்களுடன் போருக்குச் செல்ல முடிவு செய்தார்.

ராணி தனது சிறிய படையுடன் அடர்ந்த காட்டின் ஊடாக அணிவகுத்துச் சென்றபோது, நாட்டு மக்கள் அவருடன் இணைந்தனர். சிறிது நேரத்திலேயே 500 பேர் கொண்ட படை ஐந்தாயிரமாக வளர்ந்தது. இருப்பினும், இந்தப் படை ஆசப் கான் தலைமையிலான முகலாயர்களின் பெரிய, நன்கு பயிற்சி பெற்ற படைக்கு இணையாக இருக்கவில்லை. இந்த ஏற்றத்தாழ்வோ எண்ணிக்கையில் வெளிப்படையாகத் தெரிந்த வித்தியாசமோ எதுவுமே, ராணி மற்றும் அவரது நேர்மையான வீரர்களின் மன உறுதியை உடைக்க முடியவில்லை.

இறுதியாக ராணி முகலாயப் படையை எதிர்கொள்ள நர்ஹி கிராமத்தை அடைந்தார்.

மூலோபாய கண்ணோட்டத்தில் நர்ஹி மிகவும் நல்ல இடமாக இருந்தது. அனைத்துப் பக்கங்களிலும் மலைகளாலும், மறுபுறம் நர்மதா மற்றும் கோர் நதிகளாலும் சூழப்பட்ட அந்த இடத்தை அடைவதும் வெளியேறுவதும் மிகவும் சவாலானது.

துர்காவதியின் படை அங்கே நின்றது. இறுதியாக ராணி தனது வீரர்களை அவர்கள் விரும்பியபடி போர்க்களத்தை விட்டு வெளியேற அனுமதித்தார். ஆனால், ராணியின் சக்திவாய்ந்த வார்த்தைகளின் மந்திரத்தால் ஒரு வீரர்கூட போர்க்களத்தை விட்டு வெளியேறவில்லை.

ராணி துர்காவதியின் படை சார்பாக நர்ஹியின் மலைப் பாதையைக் காக்க நியமிக்கப்பட்ட தளபதி அர்ஜுன் தாஸ் பாய், சண்டையிட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ராணி தலைமையிலான கர்ஹா-கடங்கா படைக்கும் முகலாய படைக்கும் இடையே ஒரு கடுமையான போர் தொடங்கியது.

மலைப் பாதையில் தனது எதிரிப் படை மெதுவாக முன்னேறி வருவதற்கு அனுமதிக்கும்படி ராணி கட்டளையிட்டார். பிறகு, ராணி தலைமையிலான படை மலைப் பாதையின் நடுவில் முகலாயப் படையை அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தாக்கியது.

அன்று, ராணியின் போர் உத்தி பலன் தந்தது. ராணி துர்காவதி, தனது சிறிய படையுடன் சக்திவாய்ந்த முகலாயப் படையை தோற்கடிப்பதில் வெற்றி பெற்றார். திடீர் தாக்குதலால் தோற்கடிக்கப்பட்ட முகலாய ராணுவம் அன்று பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அன்றைய தினம் 300 முகலாய வீரர்கள் இறந்தனர். மீதம் இருந்தவர்கள் ராணியின் ராணுவத்தால் விரட்டப்பட்டனர்.

வெறும் 500 வீரர்களுடன் பெரும் முகலாயப் படையை எதிர்க்கத் துணிந்தெழுந்த ராணி துர்காவதி

பட மூலாதாரம், Getty Images

போரின் முதல் நாளில், ராணி துர்காவதியின் படை ஒரு முக்கியமான வெற்றியைப் பெற்றிருந்தது. அந்த வெற்றிக்குப் பிறகு, ராணி துணிச்சலான திட்டமொன்றை வகுத்தார். முகலாய படை முழுமையாகத் தயாராவதற்கு முன்பே, இரவில் அவர்களைத் தனது படை தாக்க வேண்டுமென்று அவர் விரும்பினார். இதன்மூலம், முகலாயர்கள் தங்களுடைய கனரக ஆயுதங்களை மறுநாள் போர்க்களத்திற்குக் கொண்டு வருவதைத் தடுப்பதே அவரது நோக்கமாக இருந்தது. ஆனால், அவரது தளபதிகள் இந்தத் திட்டத்துடன் உடன்படவில்லை.

போரின் இரண்டாவது நாளில், ராணியின் அச்சங்கள் உண்மையாகின. ஆசப் கான் தனது பெரிய ஆயுதங்களை போர்க்களத்திற்குக் கொண்டு வந்தார். இருப்பினும், இந்தத் துணிச்சலான ராணி அதை எதிர்கொள்ள முடிவு செய்தார்.

தனது கேடயத்தை அணிந்துகொண்டு, ராணி யானை மீது அமர்ந்து போர்க்களத்திற்கு வந்தார். மறுநாள் ராணியின் ராணுவம் முகலாய ராணுவத்தைக் குறைந்தது மூன்று முறை பின்னுக்குத் தள்ளியது.

ஆனால் பின்னர், அவரது மகன் பிர் நாராயண் படுகாயமடைந்து போர்க்களத்தில் இருந்து தூக்கிச் செல்லப்பட வேண்டியிருந்தது. ராணி துர்காவதியும் நெற்றியில் ஓர் அம்பும் கழுத்தில் ஓர் அம்பும் பாயும் வரை துணிச்சலுடன் போராடினார். காயத்தால் மயக்கமடைந்த ராணி சுயநினைவு திரும்பியபோது, தோல்வி உறுதியாகியிருந்ததை உணர்ந்தார்.

தான் நிச்சயமாக ‘எதிரியின்’ தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்று நம்பிய ராணி, பாதுகாப்பான இடத்திற்குச் செல்லலாம் என்ற பாகனின் யோசனையை நிராகரித்தார்.

அந்த நாளில், ஜூன் 24, 1564 அன்று, ராணி ஏமாற்றத்தையும் அவமானத்தையும் சந்திப்பதற்குப் பதிலாக மரணத்தைத் தழுவும் முடிவைத் தேர்வு செய்தார். ஜபல்பூரில் இருந்து 12 மைல் தொலைவிலுள்ள ஓர் இடத்தில் அவருடைய வீரர்கள் அவருக்கான இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

ராணி துர்காவதியின் வீரர்கள் பலர் முகலாயர்களிடம் சரணடைந்த போதிலும், கர்ஹா-கடங்காவை கைப்பற்ற ஆசப் கானுக்கு நேரம் பிடித்தது.

ராணியின் மகன் பிர் நாராயணும் போர்க்களத்தில் உயிரிழந்தார். வரலாற்றுக் குறிப்புகளின்படி, ராஜ்ஜியத்தில் இருந்த பெண்கள் ‘ஜோஹர்'(நெருப்பில் விழுந்து மரிப்பது) நிகழ்த்தினர்.

இறுதியாக, ஆசப் கான் ராஜ்ஜியத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தி, பெரும் கொள்ளையை நிகழ்த்தினார்.

போர்க்களத்தில் ராணி துர்காவதி வெளிப்படுத்திய வீரத்தின் நினைவாக அவர் ‘வீர்கதி’ அடைந்த இடத்தில், அதாவது இன்றைய ஜபல்பூரில் ஒரு நினைவுச் சின்னம் நிறுவப்பட்டுள்ளது.

அவர்களின் தலைநகரான சௌரகத் கோட்டை இன்று சுற்றுலா தலமாக மாற்றப்பட்டுள்ளது. 1983ஆம் ஆண்டில், ஜபல்பூர் பல்கலைக் கழகத்தின் பெயர் ராணி துர்காவதி பல்கலைக்கழகம் என்று மாற்றப்பட்டது. 1988ஆம் ஆண்டில், இந்திய அரசு அவரது நினைவாக ஓர் அஞ்சல் தலையை வெளியிட்டது.

இதுதவிர, இந்திய கடலோர காவல் படை, 2018ஆம் ஆண்டில், ‘ICGS ராணி துர்காவதி’ என்ற மூன்றாவது கடலோர ரோந்து கப்பலை இயக்கத் தொடங்கியது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU