SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
நியூசிலாந்து – இன்னொரு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்திருக்கிறது. 2026 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் 96 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது அந்த அணி.
பெரிய போட்டிகள் என்று வரும்போது பொதுவாகவே நெருக்கடி அதிகமாக இருக்கும். அதனால், மற்ற போட்டிகளில் வருவது போல் அதிகமாக ரன்கள் வராது என்பார்கள். இந்த இறுதிப் போட்டியில் ஆமதாபாத்தில் இந்திய அணி களமிறங்கியபோது 180-190 ரன்களை இந்தியா டார்கெட் செய்ய வேண்டும் என்ற பேச்சுதான் எழுந்தது.
ஆனால், இந்திய அணியோ 20 ஓவர்களில் 255 ரன்கள் குவித்தது.
பட மூலாதாரம், Getty Images
ஒருமுறை கூட 4 ஓவர்களைக் கடக்காத இந்திய தொடக்க ஜோடி, இறுதி போட்டியில் நான்கு ஓவர்களின் முடிவிலேயே 50 ரன்களைக் கடந்து கம்பீரமாக விளையாடிக்கொண்டிருந்தது.
மேலும், பவர்பிளேவில் மட்டும் 92 ரன்கள் விளாசி சாதனை படைத்தது. சொல்லப்போனால், அந்த பவர்பிளே முடிவிலேயே கோப்பையில் ஒரு கை வைத்துவிட்டது இந்தியா.
இப்படி பவர்பிளேவுக்குள்ளாக நியூசிலாந்து பெரும் பின்னடைவை சந்தித்ததற்கு அந்த அணி எடுத்து முடிவுகள் முக்கியக் காரணமாகக் கூறப்படுகின்றன. குறிப்பாக கேப்டன் மிட்செல் சான்ட்னர் இரண்டாவது ஓவருக்குப் பின் எடுத்த முடிவுகள் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்ததாகவும் பலர் விமர்சித்திருக்கிறார்கள்.
சொல்லப்போனால், ஜனவரி மாதம் நடந்த ஒரு டி20 போட்டியில் கூட நியூசிலாந்தின் தோல்விக்குப் பிறகு சான்ட்னரின் இதே முடிவுகள் விமர்சிக்கப்பட்டன. நாமும் கூட இதைப் பற்றி விரிவாக அப்போது விவாதித்திருந்தோம்.
இப்போது, 44 நாள்கள் கழித்து அதே தவறுகளை சான்ட்னர் மறுபடியும் நிகழ்த்தியிருக்கிறாரா? நியூசிலாந்து கேப்டன் தன் முடிவுகளின் மூலம் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டாரா?
பட மூலாதாரம், Getty Images
மெக்கான்கீ எங்கே?
இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக ஆஃப் ஸ்பின்னுக்கு எதிரான இந்தியாவின் தடுமாற்றம் பெரிதாக விவாதிக்கப்பட்டது.
இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுபடி சூப்பர் 8 சுற்றில் ஆடிய 8 அணிகளில் ஆஃப் ஸ்பின்னுக்கு எதிராக குறைந்த சராசரி (15.87) வைத்திருந்த அணி இந்தியாதான். 20-கும் கீழ் சராசரி கொண்டிருந்த ஒரே அணி இந்தியா தான்.
இந்த உலகக் கோப்பையில் அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா போன்ற பேட்டர்களின் சராசரி ஆஃப் ஸ்பின்னுக்கு எதிராக 13 அல்லது அதற்கும் குறைவு தான்.
அதனால் நியூசிலாந்து அணியின் கோல் மெக்கான்கீ இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரோடு கிளென் ஃபிலிப்ஸும் ஆஃப் ஸ்பின் வீசக்கூடியவர் என்பதால் இந்தியா பெரும் சிக்கலைச் சந்திக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், நியூசிலாந்து வேறு திட்டங்கள் வைத்திருந்தது.
டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த சான்ட்னர், பிளேயிங் லெவனில் மெக்கான்கீ நீக்கப்பட்டு ஜேக்கப் டஃபி சேர்க்கப்பட்டதாகக் கூறினார்.
இந்தியாவின் பெரும் சவாலாக இருப்பார் என்று கருதப்பட்ட வீரர் அணியிலேயே இல்லாதது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.
ஆடுகளத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, அவர்கள் கூடுதல் வேகப்பந்துவீச்சாளர் வேண்டும் என்று நினைத்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இருந்தாலும் பல வல்லுநர்கள் அந்த முடிவு தங்களுக்கு ஆச்சர்யம் அளித்ததாகக் குறிப்பிட்டனர்.
பட மூலாதாரம், Getty Images
சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் யோ மஹேஷ், “மெக்கான்கீ இல்லை!! அபிஷேக் ஷர்மாவிற்கு சாதகமான சூழல் அமைகிறதா?அல்லது நியூசிலாந்து அணியினரிடம் ஏதேனும் ரகசியத் திட்டம் உள்ளதா?” என்று டாஸுக்குப் பிறகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
பத்திரிகையாளர் பரத் சுந்தரேசன், “இந்த தொடரில் இந்திய இன்னிங்ஸின் ஆரம்பத்தில் ஆஃப்-ஸ்பின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை கவனிக்கும்போது, நியூசிலாந்து கோல் மெக்கான்கீயை சேர்க்காதது சற்று ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை இன்று இரவு கிளென் ஃபிலிப்ஸுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படலாம்” என்று தன் எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இப்படி, மெக்கான்கீ சேர்க்கப்படாதது குறித்து பலரும் தங்கள் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியிருந்தார்கள்.
மாறிய ஸ்பெல், மாறிய ஆட்டம்
வழக்கம்போல், ‘நியூ பால் ஸ்பெஷலிஸ்ட்’ மேட் ஹென்றியோடு ஆட்டத்தைத் தொடங்கிய சான்ட்னர், இரண்டாவது ஓவரை கிளென் ஃபிலிப்ஸுக்குக் கொடுத்தார்.
இந்த இரண்டு ஓவர்களிலுமே இந்திய ஓப்பனர்கள் நிதானமாகத்தான் ஆடினார்கள். ஹென்றியின் வேகப்பந்துவீச்சை சாம்சன் கவனமாக எதிர்கொள்ள, கிளென் ஃபிலிப்ஸின் ஆஃப் ஸ்பின்னை கூடுதல் நிதானத்தோடு ஆடினார் அபிஷேக் ஷர்மா. 2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 12 ரன்கள் எடுத்திருந்தது.
நன்றாகத் தொடங்கிய அந்த இரு பௌலர்களின் ஸ்பெல் தொடரும் என்று நினைத்திருந்த நிலையில் தான் சான்ட்னர் ஒரு முடிவை எடுத்தார்.
மூன்றாவது ஓவரை ஜேக்கப் டஃபியிடமும், நான்காவது ஓவரை லாகி ஃபெர்குசனிடமும் கொடுத்தார் அவர். அந்த ஓவர்களில் முறையே 15, 24 ரன்கள் எடுக்கப்பட்டன.
இறுதிப் போட்டிக்கு முன்பாக இந்தியா ஆடிய 8 ஆட்டங்களில், இந்தியாவின் தொடக்க ஜோடி அதிகபட்சமாக ஆடியத 3.4 ஓவர்கள் தான். அதேபோல் அந்த எட்டில் 4 முறை ஒரு ஆஃப் ஸ்பின்னர் தான் இந்தியாவின் தொடக்க ஜோடியை வெளியேற்றியிருந்தார். ஒரு போட்டியில் இடது கை ஸ்பின்னராலும், 3 போட்டிகளில் வேகப்பந்துவீச்சாளராலும் இந்தியாவின் தொடக்க ஜோடி வெளியேற்றப்பட்டிருந்தது.
அரையிறுதியில் ஒரு வலது கை பேட்டர், ஒரு இடது கை பேட்டர் என்ற காம்பினேஷன் இருந்தும்கூட இங்கிலாந்து ஆஃப் ஸ்பின்னர் ஜேக்ஸை வைத்தே இந்த ஜோடியைப் பிரித்தது. குறிப்பாக அபிஷேக் ஷர்மா, இந்த உலகக் கோப்பையில் (இறுதிப் போட்டிக்கு முன்பு வரை) ஆஃப் ஸ்பின்னை எதிர்கொண்ட 5 இன்னிங்ஸ்களில் 3 முறை அதற்கே தன் விக்கெட்டை இழந்திருந்தார். அப்படியிருந்தும், ஃபிலிப்ஸை மீண்டும் பயன்படுத்தாதது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.
பட மூலாதாரம், Getty Images
ஃபிலில்ப்ஸுக்குக் கொடுக்காமல் டஃபிக்கும், ஃபெர்குசனுக்கும் சான்ட்னர் ஓவர் கொடுக்க, அந்த இரு பௌலர்களும் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்துக்கும் மேல் பந்துவீச, அது யோ மஹேஷ் சொன்னதுபோல் அபிஷேக் ஷர்மாவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.
வேகமான பந்துகளை விரும்பி ஆடும் அபிஷேக் ஷர்மா, இந்த உலகக் கோப்பையில் நல்ல ஃபார்மிலேயே இல்லாத அபிஷேக் ஷர்மா, தன் வழக்கமான ஆட்டத்தை ஆட அந்த இரண்டு ஓவர்கள் வித்திட்டன.
இதன் விளைவாக முதல் முறையாக இந்தத் தொடரில் இந்திய அணியின் தொடக்க ஜோடி 4 ஓவர்களைக் கடந்து விளையாடியது. முதல் முறையாக அரைசதமும் அடித்தது.
நியூசிலாந்தின் முடிவுகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் யோ மஹேஷ், “பவர்பிளேவில் முதலிரு ஓவர்களில் மேட் ஹென்றி, கிளென் ஃபிலிப்ஸ் இருவரும் நன்றாகவே தொடங்கியிருந்தார்கள். ஆனால், அதன்பிறகு அவர்களின் ஸ்பெல்லை தொடரவில்லை. அந்த பவர்பிளேவிலேயே வெளியே வெளியே போடத் தொடங்கிவிட்டார்கள். அபிஷேக் ஷர்மா நன்கு செட்டில் ஆகிவிட்டார். மெக்கான்கீ ஆடவில்லை என்றதுமே அவர் சந்தோஷமடைந்திருப்பார். நியூசிலாந்தைப் பொறுத்தவரை அவர்கள் சிறந்த லெவனும் ஆடவில்லை. அவர்கள் திட்டங்களும் சரியாக இருக்கவில்லை.” என்று கூறினார்.
அதேபோல், எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, “மிட்செல் சான்ட்னர் மிக விரைவாக பல விஷயங்களை முயற்சித்தது போல் தோன்றியது. முதல் இரண்டு ஓவர்கள் மிகவும் சிக்கனமாக இருந்தபோதிலும், முதல் நான்கு ஓவர்களிலேயே 4 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தினார்… ஒரு நல்ல வாய்ப்பை அவர் தவறவிட்டுவிட்டார். ஆனால் நாங்கள் (இந்தியா) புகார் கூறப்போவதில்லை” என்று பதிவிட்டார்.
அதுமட்டுமல்ல, தொடர்ந்து இந்தியாவின் இடது கை பேட்டர்கள் அடுத்தடுத்து வந்தபோதிலும், ஃபிலிப்ஸ் அதன்பிறகு பந்துவீசவே வரவில்லை. சான்ட்னர் அவருக்கு மறுபடியும் ஒரு ஓவர் கூடக் கொடுக்கவில்லை. இந்த உலகக் கோப்பையில், ஆஃப் ஸ்பின்னை எதிர்கொண்ட 6 போட்டிகளில் 5 முறை அதற்கே தன் விக்கெட்டை பறிகொடுத்திருந்த இஷான் கிஷன் இந்த இறுதிப் போட்டியில் ஆஃப் ஸ்பின்னரின் ஒரு பந்தைக் கூட எதிர்கொள்ளவில்லை.
பட மூலாதாரம், Getty Images
பவர்பிளேவுக்குள்ளேயே முடிந்துவிட்ட ஆட்டம்
அந்த மூன்றாவது மட்டும் நான்காவது ஓவரில் மொத்தம் 39 ரன்கள் சென்றுவிட்டதாலும், இரண்டு பேட்டர்களுமே நன்றாக ஆடியதாலும், அடுத்த வந்த நியூசிலாந்து பௌலர்களுமே பெரும் நெருக்கடியை சந்திக்கவேண்டியதாக இருந்தது.
ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரைப் பந்துவீச வந்த மேட் ஹென்றி, ‘ஸ்லோயர் பால்களாக’ தொடர்ந்து வீசினார். அதுவும் வைட் லைனிலேயெ அவர் தொடர்ச்சியாக முயற்சிசெய்தார். அதன் விளைவாக அந்த ஓவரில் 4 வைட்களும் வீசினார். மேலும், அவர் அதையே தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்க, அபிஷேக் ஷர்மா அதை நன்கு கணித்து வெளியே வந்து சிக்ஸர் அடித்தார். நீண்ட நேரம் சென்ற அந்த ஓவரிலும் 21 ரன்கள் எடுக்கப்பட்டன.
அப்போது வர்ணனையில் இருந்த நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டூல், “இங்கு ‘ஸ்லோயர் பால்கள்’ அதிகம் விக்கெட் எடுக்கின்றன, அதனால் நாம் அதையே வீசுவோம் என்று முடிவு செய்துவிட்டு வந்து அதை மட்டுமே செய்கின்றனர்” என்று குறிப்பிட்டார்.
மேலும், அவருக்கு மூன்றாவது ஓவர் கொடுக்காமல், ஐந்தாவது ஓவரில் பந்துவீச வைத்த முடிவையும் அவர் விமர்சித்தார். “பந்து ஓரளவு புதிதாக இருக்கும்போது ஹென்றி அதைப் பயன்படுத்தி நன்றாக வீசுவார். அப்படியிருக்கும்போது மூன்றாவது ஓவரை அவருக்குக் கொடுத்திருக்கவேண்டும். அது பெரிய தவறு” என்று வர்ணனையின்போது தெரிவித்தார் சைமன் டூல்.
இந்த உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக ஒவ்வொரு போட்டியிலும் மேட் ஹென்றியை முதல் மற்றும் மூன்றாவது ஓவரில் தான் பயன்படுத்தியிருந்தார் சான்ட்னர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான லீக் சுற்றுப் போட்டியில் மட்டும், ஹென்றி முதல் ஓவரில் 13 ரன்கள் கொடுத்துவிட, அவருக்கு மூன்றாவது ஓவர் கொடுக்காமல் நான்காவது ஓவர் கொடுத்து ‘பௌலிங் எண்ட்’ மாற்றினார்.
அதைத் தவிர்த்து ஹென்றி மூன்றாவது ஓவர் போடாத போட்டி இந்த ஃபைனல் தான். மேட் ஹென்றி மூன்றாவது ஓவரை வீசாத இரண்டு போட்டிகளுமே நியூசிலாந்து தோற்ற போட்டிகள்.
பட மூலாதாரம், Getty Images
இப்படி மூன்றாவது மற்றும் நான்காவது ஓவர்கள் ஏற்படுத்திய நெருக்கடியில் ஹென்றி ரன் கொடுக்க, அதே நெருக்கடியோடு வந்து ஆறாவது ஓவரிலும் 20 ரன்கள் கொடுத்தார் ஜேக்கப் டஃபி.
இப்படியாக பவர்பிளேவில் விக்கெட்டே இழக்காமல் 92 ரன்கள் எடுத்தது. அது இந்தியாவை ஆதிக்க நிலையில் கொண்டு சென்று நிறுத்தியது.
போட்டிக்குப் பின்பு பிபிசி தமிழிடம் பேசிய வர்ணனையாளர் பகவதி பிரசாத், “நியூசிலாந்து அணி எப்போதுமே தெளிவான திட்டமிடலோடு களமிறங்கும் அணி. ஆனால், இந்த இறுதிப் போட்டியில் அப்படி இருக்கவில்லை. மிட்செல் சான்ட்னரின் கேப்டன்சியும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். உதாரணமாக, ஏன் மெக்கான்கீ ஆடவில்லை என்ற கேள்விக்குறி எழுந்தது. ஏனெனில், இந்திய பேட்டர்களுக்கு எதிராக, குறிப்பாக அபிஷேக் ஷர்மாவுக்கு எதிராக ஆஃப் ஸ்பின்னர்கள் நன்றாக செயல்படும்போது அவரை ஆடவைத்திருக்கலாமோ என்று கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. மேலும், அவர் நல்ல பேட்டரும் கூட.”
”அதுமட்டுமல்லாமல், கிளென் ஃபிலிப்ஸ் நன்றாக செயல்பட்டிருக்கும்போது எதற்காக ஸ்பெல்லை மாற்றி வேகத்தைக் கொடுக்கவேண்டும்? இதுபோன்ற ஒரு சில இடங்களில் சான்ட்னரின் கேப்டன்சி இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். ஏனெனில், கோப்பையே ஆறு ஓவர்களில் கைவிட்டுப் போனதுபோல் இருந்தது. ஒரு பௌலராக அவர் இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். ஆனால், ஒரு கேப்டனாக அவரது சில முடிவுகள் தவறாக அமைந்துவிட்டன” என்று கூறினார்.

44 நாள்களுக்கு முன் நடந்த அதே தவறு
209 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி முதல் 7 பந்துகளிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இரண்டு ஓவர்கள் முடிந்தபோது ஸ்கோர் போர்டு 8/2 எனக் காட்டியது. 12 பந்துகளில் 9 டாட் பால்கள். சூர்யகுமார் யாதவ் 4 பந்துகளில் 1 ரன் எடுத்திருந்தார். இஷான் கிஷன் 2 பந்துகளில் 1 ரன் எடுத்திருந்தார். முதல் ஓவரை வீசிய மேட் ஹென்றி, இரண்டாவது ஓவரை வீசிய ஜேக்கப் டஃபி இருவருமே தலா 1 விக்கெட் வீழ்த்தியிருந்தனர்.
பட மூலாதாரம், Getty Images
விக்கெட் எடுத்து நன்றாகத் தொடங்கியிருந்த பௌலர்கள் தங்கள் ஸ்பெல்லைத் தொடர்ந்திருந்தால் இந்தியாவுக்குக் கூடுதல் நெருக்கடி ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை வீச ஜேக் ஃபோக்ஸ் கையில் பந்தைக் கொடுத்தார் சான்ட்னர்.
ஃபோக்ஸ் நோ பாலோடு அந்த ஓவரைத் தொடங்க, இஷான் கிஷன் அதிரடி காட்ட, அந்த ஓவரில் 24 ரன்கள் எடுக்கப்பட்டது. அடுத்த 3 ஓவர்களில் முறையே 10, 12, 21 என ரன்கள் வர, 8/2 என்ற நிலையில் இருந்த இந்திய அணி, பவர்பிளே முடிவில் 75/2 என்ற நல்ல நிலைக்குச் சென்றது.
இப்போது அபிஷேக் ஷர்மா செய்ததைப் போல், அந்தப் போட்டியின் பவர்பிளேவுக்குள்ளாகவே இஷான் கிஷன் அரைசதம் அடித்திருந்தார். அதன்பிறகு இந்தியாவின் அதிரடியைக் கட்டுப்படுத்த முடியாமல் போக, 15.2 ஓவர்களிலேயே சேஸ் செய்து 200-க்கும் மேற்பட்ட வெற்றி இலக்கை அதிவேகமாக சேஸ் செய்த அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்தது. அந்தப் போட்டியின்போதும் சான்ட்னர் எடுத்த முடிவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெகுவாக விமர்சித்திருந்தார்கள்.
அன்று ராய்ப்பூரில் நடந்த தவறு, 44 நாள்களுக்குப் பின் ஆமதாபாத்தில் மீண்டும் நடக்க, நியூசிலாந்துக்கு ஒரு கோப்பை வெல்வதற்கான வாய்ப்பையும் பறித்துவிட்டது.
சான்ட்னர் கூறியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு பேசிய நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர், “இந்த ஆடுகளத்தில் தொடக்கத்தில் சீம், ஸ்விங் எதுவும் அவ்வளவாகக் கிடைக்கவில்லை. அதனால், பேட்டர்கள் அடிக்கக்கூடிய இடங்களுக்கு வெளியே பந்துவீச முயற்சி செய்தோம். அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோர் எவ்வளவு சிறப்பாக ஆடக்கூடியவர்கள் என்று நமக்குத் தெரியும்.
எப்படி பார்த்தாலும், அவர்கள் ஆடிய விதத்துக்கு பெர்ஃபெக்டான திட்டமே எதுவும் கிடையாது. அவர்கள் ஆடிய விதத்துக்கு, அவர்களை நிறுத்துவது எளிதானதல்ல. சில வைட்கள், சில லெக் சைட் பந்துகள் என கிட்டத்தட்ட எல்லாமே முயற்சி செய்துவிட்டோம். அதேசமயம் அவர்கள் பவர்பிளே ஆடிய விதத்தை நிச்சயம் பாராட்டியாகவேண்டும். அவர்கள் அப்படி ஆடியபிறகு அங்கிருந்து தொடர்ந்து அதிரடி காட்டி ஒரு பெரிய ஸ்கோரை அடிக்க அது உதவி செய்துவிட்டது” என்று கூறினார்.
தமிழ்நாடு தேர்தல் 2026 – உங்கள் பகுதியில் உள்ள சாதிய பிரச்னைகளை பிபிசி தமிழுடன் பகிருங்கள்
தமிழ்நாடு தேர்தலை எதிர்கொள்ளும் இந்தத் தருணத்தில், உங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகளை வெளிக்கொண்டு வருவதற்கான தளத்தை பிபிசி தமிழ் வழங்குகிறது.
உங்கள் பகுதியில் சாதிய பாகுபாடா? தீண்டாமை பிரச்னை குறித்து குரல் எழுப்பியும் அரசு மற்றும் அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுக்கவில்லையா?
உங்கள் பிரச்னைகளை பிபிசி தமிழுடன் பகிருங்கள். அவற்றை செய்தியாக்கி அரசிடம் கொண்டு சேர்க்கலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்த தகவல்களை உள்ளீடு செய்யுங்கள்!
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



