Home தேசிய national tamil ‘4 குண்டுகளுடன் கைதான நல்லகண்ணு’ – காங்கிரசில் இயங்கியவர் கம்யூனிஸ்டானது எப்படி?

‘4 குண்டுகளுடன் கைதான நல்லகண்ணு’ – காங்கிரசில் இயங்கியவர் கம்யூனிஸ்டானது எப்படி?

5
0

SOURCE :- BBC NEWS

ஆர் நல்லகண்ணு காலமானார்

பட மூலாதாரம், HANDOUT

தமிழக இடதுசாரி இயக்கத்தில் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே தீவிரமாகச் செயல்பட்ட தலைவர்களில் ஆர். நல்லகண்ணுவும் ஒருவர். சுதந்திரப் போராட்டத்தில் தன் அரசியல் வாழ்வைத் துவங்கிய அவர், பிறகு சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம், முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், பண்ணையடிமை முறைக்கு எதிரான போராட்டம், சூழல் சுரண்டலுக்கு எதிரான போராட்டம் என வாழ்நாள் முழுவதையும் போராட்டங்களிலேயே கழித்தார். மக்களுக்காகப் போராடி, ஒன்பது ஆண்டுகள் சிறையில் கழித்த அவர், ஒரு நாள்கூட, அதிகாரத்தில் இருந்ததில்லை.

‘ஆர்.என்.கே. தோழர்’ அல்லது ‘தோழர் ஆர்.என்.கே’ என கட்சியினரால் மிகுந்த உள்ளன்புடன் அழைக்கப்பட்ட ஆர். நல்லகண்ணுவின் மறைவு, தமிழ்நாட்டு அரசியலில் ஒரு யுகத்தின் முடிவைக் குறிக்கிறது. இந்தியாவின் விடுதலைக்கு முன்பாக பொது வாழ்வைத் துவங்கி, அதற்குப் பிறகான முக்கால் நூற்றாண்டில் மக்களுக்காகப் போராடிய, குரல் கொடுத்த ஒரு தலைமுறையின் கடைசித் தலைவர் அவர்.

1925ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் மிக முக்கியமான ஆண்டு. அந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் பொதுவுடமை இயக்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் உருவானது. அதே ஆண்டில் இந்துத்துவக் கொள்கைகளுக்கென ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் துவங்கப்பட்டது. அதே ஆண்டில், தமிழ்நாட்டில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் சமூக சமத்துவத்துக்காகவும் சுயமரியாதை இயக்கம் துவங்கப்பட்டது.

சிறுவயதிலேயே அரசியல் ஆர்வம்

வெவ்வேறு நோக்கங்களைக் கொண்ட, அடுத்த நூற்றாண்டு முழுவதும் இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தைச் செலுத்தவிருந்த இந்த இயக்கங்கள் தோன்றிய கொந்தளிப்பு மிகுந்த வருடத்தில் அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தின் ஸ்ரீ வைகுண்டத்தில் (தற்போது தூத்துக்குடி) ராமசாமி – கருப்பாயி தம்பதியின் ஒன்பது குழந்தைகளில் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார் நல்லகண்ணு. ஸ்ரீவைகுண்டத்தில் இருந்த காரனேசன் உயர்நிலைப் பள்ளிப் படிப்பையும் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் இன்டர்மீடியட்டும் படித்தார். நல்லகண்ணுவின் மூத்த சகோதரரான முத்துராமலிங்கம் காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தவர் என்பதால், நல்லகண்ணுவுக்கும் அரசியல் ஆர்வம் சிறுவயதிலேயே தொற்றிக்கொண்டது.

பள்ளி நாட்களிலேயே அரசியல் தலைவர்களின் பேச்சைக் கேட்கும் அளவுக்கு ஆர்வம் இருந்தது. இதனால் மெல்ல மெல்ல அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்தார் நல்லகண்ணு. அவர் வசித்துவந்த பகுதியிலேயே இருந்த ஒரு பஞ்சாலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது அந்தப் பகுதியில் இருந்த ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அரிசி சேகரிக்கப்பட்டு, போராட்டக்காரர்களின் குடும்பத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் இருந்த சிறுவர்களும் இந்த வேலையைச் செய்தார்கள். அப்படி அரிசி சேகரிக்கும் குழுவில் ஒரு சிறுவனாகப் பங்கேற்றதாக, மூத்த பத்திரிகையாளர் பி. சாய்நாத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிடுகிறார் ஆர். நல்லகண்ணு.

1937ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாகாணத்திற்கு தேர்தல்கள் நடந்தன. அந்தத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஒரு இளைஞர் குழு மேளங்களை அடித்துக்கொண்டு பரப்புரையில் ஈடுபட்டது. அதில் ஒருவராக 12 வயதான நல்லகண்ணுவும் இருந்தார். அதற்கடுத்து, 1940ல் சத்யாகிரகம் நடந்தபோது, சத்தியாகிரகத்தில் ஈடுபடுவர்களுக்கு ஆதரவாகப் பணியாற்றினார் நல்லகண்ணு. ஆனால், விரைவிலேயே அவரது பார்வை மாற ஆரம்பித்தது. 1940களின் துவக்கத்தில் தூத்துக்குடியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பாளர்களுடன் சேர்ந்து இயங்க ஆரம்பித்தார் ஆர்.என்.கே.

ஒரு கட்டத்தில் தூத்துக்குடியில் இருந்து செயல்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினரோடு பரிச்சயம் ஏற்பட்டது. இதற்குப் பிறகு பால தண்டாயுதம், ஜீவா போன்ற தலைவர்களைச் சந்திக்க நேர்ந்தது, நல்லக்கண்ணுவுக்கு இடதுசாரிகள் மீது ஈர்ப்பு ஏற்பட காரணமாக அமைந்தது. “ஏழைகளுக்கு, விவசாயிகளின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கிறார்கள் என்பதால் அவர்கள் மீது மதிப்பு உண்டானது” என பேட்டி ஒன்றில் தெரிவித்தார் ஆர். நல்லகண்ணு. இரண்டாம் உலகப் போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில், அரசியல் ஆர்வம் தீவிரமடைய, படிப்பைக் கைவிட்டார் நல்லகண்ணு.

நல்லகண்ணு

பட மூலாதாரம், HANDOUT

போராட்ட குணம்

இந்த காலகட்டத்தில் விவசாயிகள் எதிர்கொண்ட துன்பங்களைப் பார்த்த நல்லகண்ணு, அவர்களுக்காக போராட வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தார். ஆனால், அவர் அரசியலுக்குச் செல்வதை அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை.

“நல்ல வசதியான நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்தவர் நல்லகண்ணு. அவரது தந்தை ஜூரியாக இருந்தவர். அவருடைய அண்ணன் கஸ்டம்ஸில் டெபுடி கலெக்டராக இருந்தார். இருந்தபோதும் வீட்டாரின் எதிர்ப்பை மீறி இடதுசாரிக் கட்சியில் முழு நேர ஊழியராக இணைந்தார் நல்லகண்ணு,” என்கிறார் நீண்ட காலம் இடதுசாரி இயக்கத்தில் ஆர். நல்லகண்ணுவுடன் இணைந்து செயல்பட்ட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி. மகேந்திரன்.

அந்த காலகட்டத்தில் திருமடங்களுக்கும் ஆதீனங்களுக்கும் பெரிய அளவில் விளைநிலங்கள் சொந்தமாக இருந்தன. இவற்றில் விவசாயம் செய்துவந்த விவசாயிகளின் நிலை மோசமாக இருந்ததால் நல்லகண்ணுவும் கட்சியின் பிற தோழர்களும் சேர்ந்து அந்த விவசாயத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்தனர். நிலச்சுவான்தார்களின் வீதிகளுக்குள் செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு இருந்த காலத்தில், அதனை மீறி எல்லா சாதியினரையும் திரட்டி ஊர்வலம் நடத்தினார்கள் இடதுசாரிகள்.

“சுதந்திரப் போராட்ட காலத்தில் பல அரசியல் தலைவர்களுக்கு ஆங்கிலேயர்களை வெளியேற்றுவது மட்டுமே போராட்டத்தின் நோக்கமாக இருந்தது, ஆனால், ஆர். நல்லகண்ணுவைப் பொறுத்தவரை மூன்று தளங்களில் போராட வேண்டும் எனக் கருதினார்: பிரிட்டிஷ் காலனித்துவம், நிலப் பிரபுத்துவம் மற்றும் சாதியப் பிரச்னைகள்.

நிலப்பிரபுக்கள் மேல்தட்டு சாதியினராகவும், தொழிலாளர்கள் தலித்துகளாகவும் இருந்ததால், நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டம் இருமுனை கொண்டதாக இருந்தது. விவசாயத்தில் இருந்த நிலப்பிரபுத்துவ முறையை எதிர்த்ததோடு, அதில் நிலவிய சாதிய ஒடுக்குமுறையையும் எதிர்த்துப் போராடினார்.

தமிழ்நாட்டின் விவசாய தொழிலாளர் இயக்கத்தை நிறுவியவர்களில் மிகச் சிறந்த ஒருவர் அவர். அந்தத் திசையில் 70, 80 ஆண்டுகள் உழைத்த வேறு யாரையும் என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை,” என்கிறார் பீப்பிள்ஸ் ஆர்கைவ்ஸ் ஆஃப் ரூரல் இந்தியாவின் (PARI) நிறுவனரும் மூத்த பத்திரிகையாளருமான பி. சாய்நாத்.

சிறையும் சித்ரவதைகளும்

இந்தியா சுதந்திரமைடைந்த பிறகு, கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட போது நல்லகண்ணு உள்ளிட்டவர்கள் தலைமறைவானார்கள். 1949ஆம் ஆண்டு ஒரு நாள் இரவில் காவல்துறை அவரைக் கைது செய்தது. அந்தத் தருணத்தில் அவருடைய வயது 23 தான்.

“ஒன்றுபட்ட இடதுசாரி இயக்கம் தடை செய்யப்பட்ட காலகட்டத்தில், இயக்கத்தின் பணிகளை முன்னெடுத்துச் சென்றவர்களில் முன்னணியில் இருந்தவர் ஆர். நல்லகண்ணு. இடதுசாரி இயக்கம் தலைமறைவு இயக்கமாக இருந்தது. தாமிரபரணி கரையில் உள்ள பகுதிகள், காவிரி டெல்டா, ராமநாதபுரம், கோயம்புத்தூர் போன்ற இடங்களில் இவர்கள் தீவிரமாகப் பணியாற்றினார்கள்.

பா. மாணிக்கம், பாலதண்டாயுதம், நல்லகண்ணு, நல்லசிவம் ஆகியோர் இந்த செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகித்தனர். இவர்கள் மீது நெல்லை சதி வழக்கு தொடரப்பட்டது. புலியூர் குறிச்சியில் அவர் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து நான்கு குண்டுகள் கைப்பற்றப்பட்டன. இடதுசாரிகளின் வலையமைப்பைக் கண்டுபிடிக்க அவர் கடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 110 பேர். இந்த வழக்குகளை பாளை சண்முகமும் வானமாமலையும் நடத்தினர். அந்த வழக்கறிஞர்களையும் பிடித்து சிறையில் அடைத்தார்கள். இந்த வழக்கில் நல்லகண்ணுவுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அவர் ஒன்றரை ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். விசாரணைக் கைதியாக ஒன்றரை ஆண்டுகள் இருந்தார். இதற்குப் பிறகு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

வெடிகுண்டு வைத்திருந்ததற்காக ஆறு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இருந்தபோதும் இந்த சிறை தண்டனையை அவர் தைரியமாக எதிர்கொண்டார். 1956-ல் விடுதலையானார் நல்லகண்ணு” என்கிறார் சி. மகேந்திரன்.

இரா. நல்லகண்ணு

பட மூலாதாரம், HANDOUT

மீசையைப் பொசுக்கிய காவல்துறை

நல்லகண்ணு விசாரணைக் கைதியாக இருந்தபோது ஒரு காவல்துறை அதிகாரி, சிகரெட்டால் மீசையைப் பொசுக்கியதை பல தருணங்களில் நினைவுகூர்ந்திருக்கிறார் நல்லகண்ணு.

இதற்கிடையில், 1952-ல் நடந்த பொதுத் தேர்தலில் மெட்ராஸ் மாகாணத்தில் இடதுசாரிக் கட்சி கணிசமான இடங்களைப் பிடித்து எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. இதற்குச் சில மாதங்களுக்குப் பிறகு, தங்களை விடுவிக்கும்படி கோரி சிறையில் இருந்த இடதுசாரிகள் 15 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பலரது தண்டனை தளர்த்தப்பட்டு விடுவிக்கப்பட்டாலும் நல்லகண்ணு மீது வெடிகுண்டு வழக்கு இருந்ததால், அவர் மேலும் ஐந்தாண்டுகள் சிறையில் இருக்க வேண்டியிருந்தது. ஒட்டுமொத்தமாக ஒன்பதாண்டுகள் சிறையில் இருந்தார் நல்லகண்ணு. சிறையிலிருந்து வெளிவந்து இரண்டாண்டுகள் கழித்து நல்லகண்ணு திருமணம் செய்துகொண்டார்.

இதற்குப் பிறகு, தொடர்ந்து விவசாயிகளுக்காக, தொழிலாளர்களுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராட்டங்களில் ஈடுபட்டார் ஆர். நல்லகண்ணு.

“கடனா நதிக்கு குறுக்கே அணையைக் கட்ட வேண்டுமெனக் கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார் நல்லகண்ணு. அவரது உண்ணாவிரதம் பத்து நாட்களைத் தாண்டிய நிலையில், அணைக்கு அனுமதி கொடுத்தது தமிழக அரசு. அந்த காலகட்டங்களில் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத விவசாயிகளின் ஆடு, மாடுகளை வங்கிகளைச் சேர்ந்தவர்கள் பிடித்துக்கொண்டு போவதை எதிர்த்துப் போராடினார். பிறகு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டங்களை நடத்தினார்.

பெரம்பலூரில் கொளப்பாடி என்று ஒரு ஊரில் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த குழந்தைகள் கிணற்றில் இறங்கியபோது, அதில் மின்சாரம் பாய்ச்சப்பட்டதில் நான்கு குழந்தைகள் கொல்லப்பட்டனர். குற்றவாளிகள் தப்பிவந்த நிலையில், அவர்களைப் பிடிக்க கடுமையான போராட்டம் நடத்தினார் நல்லகண்ணு.

தென் மாவட்டங்களில் இரு சாதியினர் இடையே கடுமையான மோதல் நடந்துவந்த தருணத்தில், நல்லகண்ணுவின் மாமனார் மற்றொரு சமூகத்தினரால் கொல்லப்பட்டார். அவரும் இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்தான். அவரும் இரு சமூகமும் அமைதியாக, ஒற்றுமையாக வாழ வேண்டுமெனப் போராடியவர். இருந்தபோதும் அவர் கொல்லப்பட்டார். இதையடுத்து, அவருடைய சமூகத்தைச் சார்ந்தவர்கள் பதில் நடவடிக்கையில் இறங்காத வண்ணம் களத்தில் இறங்கினார் நல்லகண்ணு. இடதுசாரி இயக்கத்தின் சார்பில் பாத யாத்திரை நடத்தப்பட்டது. அந்த பாத யாத்திரையை நல்லகண்ணு முன்னின்று நடத்தினார்” என்கிறார் சி. மகேந்திரன்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் நல்லகண்ணு

பட மூலாதாரம், HANDOUT

தாமிரபரணியை காக்க போராட்டங்கள்

நல்லகண்ணுவின் போராட்டங்களில், சமீப காலத்தில் மிக முக்கியமான போராட்டமாக பார்க்கப்படுவது தாமிரபரணியில் மணல் அள்ளுவதற்கு எதிரான போராட்டம்தான். கடந்த 2010ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் அரசு மற்றும் தனியார் மணல் அள்ளுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கில் மிகக் கடுமையாக வாதிட்டார் ஆர். நல்லகண்ணு. முடிவில் தாமிரபரணியில் ஐந்தாண்டுகளுக்கு மணல் அள்ள தடை விதிக்கப்பட்டது.

விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர், கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர், நிர்வாகக் குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், மாநிலச் செயலாளர் எனப் பல பொறுப்புகளை நல்லகண்ணு வகித்துள்ளார். ஆனால், தேர்தல்களில் அவருக்கு வெற்றி கிடைத்ததில்லை. 1980ஆம் ஆண்டில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்ட நல்லகண்ணு தோல்வியைத் தழுவினர். 1999ஆம் ஆண்டில் கோவை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, பா.ஜ.க. வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் தோல்வியடைந்தார்.

“தேர்தலில் போட்டியிடுவதில் அவருக்கு எப்போதுமே ஈடுபாடு இருந்ததில்லை. கட்சியின் வலியுறுத்தல் காரணமாகவே அவர் தேர்தல்களில் போட்டியிட்டார். தேர்தல் அரசியலில் கிடைக்கும் வெற்றி – தோல்வியை நல்லகண்ணு பொருட்படுத்தியதே இல்லை. மக்கள் அரசியல்தான் முக்கியம் என நினைத்தார்” என்கிறார் சி. மகேந்திரன்.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில், போருக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியதில் அவருடைய பங்களிப்பு முக்கியமானது என்கிறார் சி. மகேந்திரன். தவிர, எப்போதெல்லாம் ஒடுக்கப்பட்டோருக்கும் ஒடுக்கப்பட்டோருக்குமான அமைப்புகளுக்கும் நெருக்கடி ஏற்பட்டதோ, அப்போதெல்லாம் ஒடுக்கப்பட்டோர் பக்கமே நின்றார் நல்லகண்ணு. குறிப்பாக, பொடா சட்டத்திற்கு எதிரான முன்னணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.

களப்போராளியாக இருந்தாலும், வாசிப்பின் மீதும் அவருக்கு பெரும் ஈடுபாடு உண்டு. பல நூல்களை எழுதிய நல்லகண்ணு, 2,000க்கும் மேற்பட்ட நூல்களை சேகரித்தும் வைத்திருந்தார்.

பத்திரிகையாளர் சாய்நாத்

பட மூலாதாரம், P Sainath/Facebook

அடக்கமும் கண்ணியமும்

ஆர். நல்லகண்ணுவின் மற்றொரு முக்கியமான பண்பை பி. சாய்நாத் சுட்டிக்காட்டுகிறார்.

“நல்லகண்ணுவைப் பொறுத்தவரை அவர் எவ்வளவு அடக்கமானவராகவும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள விரும்பாதவராகவும் இருந்தார் என்பது முக்கியமானது. அவர் சுய விளம்பரத்தை ஒரு போதும் விரும்பவில்லை. தன்னுடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களிடமும், மற்ற அரசியல் கட்சிகளில் உள்ள நண்பர்களிடமும் அவர் காட்டிய அணுகுமுறை குறிப்பிடத்தக்கது. அவர் ஒருபோதும் வெறுப்புடனும் கோபத்துடனும் பதிலளித்ததில்லை; ஒரு அரசியல் ஆளுமையாகத் தனது கண்ணியத்தை அவர் ஒருபோதும் இழந்ததில்லை” என்கிறார் அவர்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக ஆர். நல்லகண்ணுவையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான என். சங்கரய்யாவையும் ஒன்றாக அமரவைத்து பேட்டி ஒன்றை எடுத்தார் பி. சாய்நாத்.

“அந்தப் பேட்டி தொடர்பாக எனக்கு நினைவிருக்கும் இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலாவதாக, தற்போதைய அரசியல் சூழலில் இவ்வளவு அமைதியாக இருப்பது எப்படி என்று அவர்களிடம் கேட்டேன். அவர்கள் இருவரும் ஒரே பதிலைச் சொன்னார்கள்: “நாங்கள் இதைவிட மோசமானவற்றைப் பார்த்திருக்கிறோம். இதையும் ஒரு சமூகமாக, மக்களாக நாம் வென்று வருவோம்” என்றார்கள். அடுத்ததாக, 60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே கட்சியில் தோழர்களாக இருந்து, பின்னர் கசப்புணர்வுடன் கூடிய பிளவு ஏற்பட்ட பிறகும், நீங்கள் இருவரும் இவ்வளவு நெருக்கமாகவும் நட்பாகவும் இருப்பது எப்படி என்று கேட்டேன். “நாங்கள் இருவரும் சந்திக்கும்போது, ஒரே கட்சிதான்” என்றார்கள். இதை என்னால் மறக்க முடியாது” என்கிறார் சாய்நாத்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

தனது எண்பதாவது வயதில் கட்சி தனக்கு வழங்கிய ஒரு கோடி ரூபாயையும் காரையும் மீண்டும் கட்சியின் தலைமையகமான பாலன் இல்லத்துக்கே வழங்கினார் நல்லகண்ணு. அதேபோல, 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தகைசால் தமிழர் விருதை அவருக்கு வழங்கியது.

“தமிழக அரசு அவருக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கியது முற்றிலும் சரியானது என்று நான் கருதுகிறேன். அவர் அந்த விருதை ஏற்றுக்கொண்டாலும், அதனுடன் வழங்கப்பட்ட 10 லட்சம் ரூபாயைத் திருப்பி அளித்ததுடன், தனது சொந்தப் பணத்திலிருந்து 5,000 ரூபாயைச் சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார். வாழ்நாள் முழுவதும் கட்சி முழுநேர ஊழியராக இருந்து, வருமானத்திற்கு வேறு வழிகள் இல்லாத நிலையில், 10 லட்சம் ரூபாயை வேண்டாம் என்று சொல்வது மிகவும் கடினமான விஷயம். அப்படியிருந்தும் அவர் அதைத் திருப்பித் தந்தார். இதுதான் அவர் எத்தகைய மனிதர் என்பதைக் காட்டுகிறது” என்கிறார் பி. சாய்நாத்.

தன்னுடைய பிறந்தநாளுடன், தான் அங்கம் வகிக்கும் பொதுவுடமைக் கட்சிக்கும் அது நூற்றாண்டு என்ற நிலையில் பேசிய நல்லகண்ணு, “நூறாண்டு என்பது அரசியல் கட்சிக்கு ஒரு வயதல்ல. ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களுக்காகத் தொடர்ந்து போராட வேண்டும்” என்றார்.

“ஆர். நல்லகண்ணு இல்லாத காலம் என்பது ஒரு தலைமுறையின் முடிவு. தங்களுக்கென எதையும் எடுத்துக்கொள்ளாத மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர்களின் தலைமுறையை தமிழ்நாடு இழந்திருக்கிறது. அவர்கள் அமைச்சர் பதவிகளுக்காகப் போராடவில்லை; அவர்கள் ஒருபோதும் சொத்துகளைச் சேர்க்கவில்லை. அவருடைய வாழ்க்கை முறை எவ்வளவு எளிமையானது. அவரும் அவருடைய தோழர்களும் எவ்வித சுயநலமுமற்ற அரசியல் தியாகத்தையும் போராட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள்” என்கிறார் பி. சாய்நாத்.

ஒருவகையில் பார்த்தால், இதுவே ஆர். நல்லகண்ணுவினுடைய வாழ்க்கையின் செய்தியாக இருந்தது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU